Revised Common Lectionary (Complementary)
புத்தகம் 4
தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம்.
90 ஆண்டவரே, என்றென்றும் எப்போதும் நீரே எங்கள் புகலிடம்.
2 தேவனே, பர்வதங்கள் பிறக்கும்முன்பும், பூமியும் உலகமும் உருவாக்கப்படும் முன்பும் நீரே தேவன்.
தேவனே, நீர் எப்போதும் இருந்தவர், நீர் எப்போதும் இருக்கும் தேவன்!
3 நீர் உலகில் ஜனங்களைக் கொண்டுவந்தீர்,
நீர் அவர்களை மீண்டும் தூளாக மாற்றுகிறீர்.
4 ஓராயிரம் ஆண்டுகள் உமக்கு முந்திய நாளைப் போலவும்
கடந்த இரவைப் போலவும் இருக்கும்.
5 நீர் எங்களைப் பெருக்கித் தள்ளுகிறீர்.
எங்கள் வாழ்க்கை ஒரு கனவைப் போன்றது, காலையில் நாங்கள் மறைந்து போகிறோம்.
நாங்கள் புல்லைப் போன்றவர்கள்.
6 காலையில் புல் வளரும்,
மாலையில் அது காய்ந்து, வாடிப்போகும்.
7 தேவனே, நீர் கோபமாயிருக்கும்போது நாங்கள் அழிக்கப்படுவோம்.
உமது கோபம் எங்களை அச்சுறுத்துகிறது!
8 எங்கள் பாவங்கள் அனைத்தையும் நீர் அறிகிறீர்.
தேவனே, எங்கள் இரகசிய பாவங்கள் ஒவ்வொன்றையும் நீர் காண்கிறீர்.
9 உமது கோபம் எங்கள் வாழ்க்கையை முடிவுறச் செய்யும்.
காதில் இரகசியமாகச் சொல்லும் சொல்லைப்போன்று எங்கள் உயிர்கள் மறைந்துபோகும்.
10 நாங்கள் எழுபது ஆண்டுகள் வாழக்கூடும்.
பலமுடையவர்களாயின் எண்பது ஆண்டுகள் வாழலாம்.
எங்கள் வாழ்க்கை கடும் உழைப்பினாலும், நோயினாலும் நிரம்பியவை.
திடீரென, எங்கள் வாழ்க்கை முடிவுறும்!
நாங்கள் பறந்து மறைவோம்.
11 தேவனே, உமது கோபத்தின் முழு வல்லமையையும் ஒருவரும் அறியார்.
ஆனால் தேவனே, எங்கள் பயமும், உம்மிடம் நாங்கள் கொண்டுள்ள மதிப்பும் உமது கோபத்தைப்போன்று பெரியவை.
12 நாங்கள் உண்மையிலேயே ஞானமுடையவர்களாகும்படி
எங்கள் வாழ்க்கை எத்தனை குறுகியது என்பதை எங்களுக்குக் கற்பியும்.
7 பின்னர் கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. 2 அவர் சொன்னார்: “இப்பொழுது, மனுபுத்திரனே, இதைச் சொல்: எனது கர்த்தராகிய ஆண்டவரிடமிருந்து ஒரு செய்தி வந்திருக்கிறது. இச்செய்தி இஸ்ரவேல் நாட்டுக்குரியது!
“முடிவு வந்திருக்கிறது.
நாடு முழுவதும் அழிக்கப்படுகிறது.
3 இப்பொழுது உன் முடிவு வந்துகொண்டிருக்கிறது!
நான் உன் மீது எவ்வளவு கோபத்தோடு இருக்கிறேன் என்பதைக் காட்டுவேன்.
நீ செய்த தீமைகளுக்காக நான் உன்னைத் தண்டிப்பேன்.
நீ செய்த பயங்கரமானவற்றுக்கெல்லாம் உன்னை விலை கொடுக்கும்படிச் செய்வேன்.
4 நான் உன்னிடம் எவ்வித இரக்கமும் காட்டமாட்டேன்.
நான் உனக்காக வருத்தப்படமாட்டேன்.
நீ செய்த தீமைகளுக்காக நான் உன்னைத் தண்டிக்கிறேன்.
நீ அத்தகைய பயங்கரமானவற்றைச் செய்திருக்கிறாய்.
இப்பொழுது நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்.”
5 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: “ஒரு கேட்டிற்குப் பின் இன்னொரு கேடு ஏற்படும்! 6 முடிவு வருகிறது, அது விரைவில் நிகழும்! 7 இஸ்ரவேலில் குடியிருக்கும் ஜனங்களே மகிழ்ச்சியின் குரலைக் கேட்டிருக்கிறீர்களா? பகைவன் வருகிறான், தண்டனைக் காலம் மிக விரைவில் வருகிறது! பகைவரின் சத்தம் மலைகளில் மேலும், மேலும் அதிகரிக்கிறது. 8 இப்பொழுது மிக விரைவில் நான் எனது கோபத்தைக் காட்டுவேன். உனக்கு எதிரான எனது கோபம் முழுவதையும் நான் காட்டுவேன். நீ செய்த தீயவற்றுக்காக நான் உன்னைத் தண்டிப்பேன். நீ செய்த பயங்கர செயலுக்காக விலை கொடுக்கச் செய்வேன். 9 நான் எவ்வித இரக்கமும் காட்டமாட்டேன். நான் உனக்காக வருத்தப்படமாட்டேன். நீங்கள் அத்தகைய பயங்கரங்களைச் செய்திருக்கிறீர்கள். இப்பொழுது, உங்களை அடிக்கும், நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
8 நான்காவது தேவதூதன் தன் கிண்ணத்தில் இருந்ததைச் சூரியன் மீது போட்டான். அதனால் சூரியன் மக்களை நெருப்பாய் எரிக்கும் சக்தியைப் பெற்றது. 9 மக்கள் பெரு வெப்பத்தால் எரிக்கப்பட்டனர். அவர்கள் தேவனுடைய பெயரை சபித்தார்கள். இது போன்ற துன்பங்களை எல்லாம் கட்டுப்படுத்தக் கூடியவர் தேவன் ஒருவரே ஆவார். ஆனால் மக்களோ தங்கள் இதயத்தையும் வாழ்வையும் மாற்றி தேவனுக்கு மகிமை செலுத்த மறுத்தனர்.
10 ஐந்தாவது தேவதூதன் தன் கிண்ணத்தில் இருந்தவற்றை மிருகத்தின் சிம்மாசனத்தின்மீது எறிந்தான். அதனால் மிருகத்தின் இராஜ்யம் இருண்டுபோனது. மக்கள் வேதனையால் தங்கள் நாவுகளைக் கடித்துக்கொண்டனர். 11 மக்கள் தம் வலியின் நிமித்தமாகவும் தம் கொப்புளங்களின் நிமித்தமாகவும் பரலோகத்தின் தேவனை சபித்தார்கள். ஆனால் அவர்கள் தங்கள் மனதை மாற்றிக்கொள்ளவோ, தங்கள் தீய செயல்களில் இருந்து விலகவோ விரும்பவில்லை.
12 ஆறாம் தேவதூதன் தன் கிண்ணத்தில் இருந்ததை ஐபிராத்து என்னும் பெரிய ஆற்றில் எறிந்தான். அதிலுள்ள நீர் வற்றிப்போனது. அதனால் கீழ்நாட்டில் உள்ள ராஜாக்கள் வர வழி தயார் ஆயிற்று. 13 பின்பு நான், தவளைபோல தோற்றம் அளித்த மூன்று அசிங்கமான கெட்ட ஆவிகளைக் கண்டேன். இராட்சச பாம்பின் வாயிலிருந்தும், மிருகத்தின் வாயிலிருந்தும், போலித் தீர்க்கதரிசியின் வாயில் இருந்தும் அவை வெளி வந்தன. 14 இந்தக் கெட்ட ஆவிகளே பிசாசுகளின் ஆவிகள். அவை அற்புதங்களைச் செய்யும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. அவை உலகிலுள்ள அத்தனை ராஜாக்களிடமும் செல்கின்றன. சர்வவல்லமையுள்ள தேவனின் மாபெரும் நாளின் யுத்தத்திற்கு ராஜாக்களை ஒன்று திரட்ட அவை வெளியே செல்கின்றன.
15 “கவனியுங்கள். ஒரு திருடனைப்போல நான் வருவேன். எவன் விழித்துக்கொண்டும், தன்னுடன் தன் ஆடைகளை வைத்துக்கொண்டும் இருக்கிறானோ அவன் மகிழ்ச்சியாய் இருப்பான். பிறகு அவன் நிர்வாணமாக அலையமாட்டான். மற்றவர்கள் பார்வையில் வெட்கப்படாமல் இருப்பான்.”
16 கெட்ட ஆவிகள் ராஜாக்களை ஓரிடத்தில் ஒன்று சேர்த்தன. அந்த இடத்தின் பெயர் எபிரேய மொழியில் அர்மெகதோன் என்று அழைக்கப்படுகிறது.
17 ஏழாவது தேவதூதன் தன் கிண்ணத்தில் இருந்தவற்றைக் காற்றில் தூவினான். அதனால் ஆலயத்திலுள்ள சிம்மாசனத்தில் இருந்து ஒரு பெரும் குரல் ஒலித்தது. அது, “அது முடிந்தது” என்று சொன்னது. 18 பிறகு மின்னல்கள் மின்னின, ஓசைகள் எழுந்தன, இடி முழங்கியது. பூமி அதிர்ந்தது. பூமியில் மனிதர்கள் படைக்கப்பட்ட பிறகு உருவான நில அதிர்ச்சியிலேயே இதுதான் மிக மோசமான நில அதிர்ச்சி. 19 மிகப் பெரிய அந்த நகரம் மூன்றாகப் பிளந்துபோயிற்று. நாடுகளில் உள்ள நகரங்கள் அழிந்துபோயின. தேவன் மகா நகரமாகிய பாபிலோனைத் தண்டிக்க மறக்கவில்லை. அந்த நகரத்துக்கு அவர் தனது கடுமையான கோபமாகிய மது நிறைந்த கோப்பையைக் கொடுத்தார். 20 எல்லா தீவுகளும் மறைந்தன. மலைகள் எல்லாம் இல்லாமல் போயின. 21 இராட்சசத்தனமான கல்மழை வானில் இருந்து மக்கள் மீது பெய்தது. ஒவ்வொரு மழைக்கல்லும் ஒரு உப்பு மூட்டையினைப் போன்று கனத்திருந்தது. இந்தப் பெருந்துன்பத்தால் மக்கள் தேவனை மேலும் சபித்தார்கள். இத்துன்பம் மகா துன்பமாய் இருந்தது.
2008 by World Bible Translation Center