Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 90:1-8

புத்தகம் 4

தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம்.

90 ஆண்டவரே, என்றென்றும் எப்போதும் நீரே எங்கள் புகலிடம்.
தேவனே, பர்வதங்கள் பிறக்கும்முன்பும், பூமியும் உலகமும் உருவாக்கப்படும் முன்பும் நீரே தேவன்.
    தேவனே, நீர் எப்போதும் இருந்தவர், நீர் எப்போதும் இருக்கும் தேவன்!

நீர் உலகில் ஜனங்களைக் கொண்டுவந்தீர்,
    நீர் அவர்களை மீண்டும் தூளாக மாற்றுகிறீர்.
ஓராயிரம் ஆண்டுகள் உமக்கு முந்திய நாளைப் போலவும்
    கடந்த இரவைப் போலவும் இருக்கும்.
நீர் எங்களைப் பெருக்கித் தள்ளுகிறீர்.
    எங்கள் வாழ்க்கை ஒரு கனவைப் போன்றது, காலையில் நாங்கள் மறைந்து போகிறோம்.
    நாங்கள் புல்லைப் போன்றவர்கள்.
காலையில் புல் வளரும்,
    மாலையில் அது காய்ந்து, வாடிப்போகும்.

தேவனே, நீர் கோபமாயிருக்கும்போது நாங்கள் அழிக்கப்படுவோம்.
    உமது கோபம் எங்களை அச்சுறுத்துகிறது!
எங்கள் பாவங்கள் அனைத்தையும் நீர் அறிகிறீர்.
    தேவனே, எங்கள் இரகசிய பாவங்கள் ஒவ்வொன்றையும் நீர் காண்கிறீர்.

சங்கீதம் 90:9-11

உமது கோபம் எங்கள் வாழ்க்கையை முடிவுறச் செய்யும்.
    காதில் இரகசியமாகச் சொல்லும் சொல்லைப்போன்று எங்கள் உயிர்கள் மறைந்துபோகும்.
10 நாங்கள் எழுபது ஆண்டுகள் வாழக்கூடும்.
    பலமுடையவர்களாயின் எண்பது ஆண்டுகள் வாழலாம்.
எங்கள் வாழ்க்கை கடும் உழைப்பினாலும், நோயினாலும் நிரம்பியவை.
    திடீரென, எங்கள் வாழ்க்கை முடிவுறும்!
    நாங்கள் பறந்து மறைவோம்.

11 தேவனே, உமது கோபத்தின் முழு வல்லமையையும் ஒருவரும் அறியார்.
    ஆனால் தேவனே, எங்கள் பயமும், உம்மிடம் நாங்கள் கொண்டுள்ள மதிப்பும் உமது கோபத்தைப்போன்று பெரியவை.

சங்கீதம் 90:12

12 நாங்கள் உண்மையிலேயே ஞானமுடையவர்களாகும்படி
    எங்கள் வாழ்க்கை எத்தனை குறுகியது என்பதை எங்களுக்குக் கற்பியும்.

எசேக்கியேல் 6

பின்னர் கர்த்தருடைய வார்த்தை மீண்டும் என்னிடம் வந்தது. அவர் சொன்னார், “மனுபுத்திரனே, இஸ்ரவேலின் மலைகளை நோக்கித் திரும்பு! எனக்காக அவற்றுக்கு எதிராகப் பேசு. அம்மலைகளிடம் இவற்றைக் கூறு: ‘இஸ்ரவேலின் மலைகளே, எனது கர்த்தராகிய ஆண்டவரிடமிருந்து வந்த செய்தியைக் கேளுங்கள். எனது கர்த்தராகிய ஆண்டவர் இந்த மலைகளிடமும், குன்றுகளிடமும் மலைச்சந்துகளிடமும் பள்ளதாக்கிடமும் கூறுவது இதுதான். பாருங்கள்! தேவனாகிய நான், உனக்கு எதிராகச் சண்டையிட பகைவரைக் கொண்டுவருகிறேன். நான் உனது உயர்ந்த மேடைகளை அழிப்பேன். உனது பலிபீடங்கள் துண்டு துண்டாக உடைக்கப்படும்! உனது நறுமணப் பீடங்கள் நொறுக்கப்படும்! நான் உனது மரித்த உடல்களை நரகலான சிலைகளுக்கு முன்னால் எறிவேன். நான் இஸ்ரவேல் ஜனங்களின் மரித்த உடல்களை உங்களது நரகலான சிலைகளுக்கு முன்னால் போடுவேன். உங்களது பலிபீடங்களைச் சுற்றிலும் உங்கள் எலும்புகளைப் போடுவேன். உங்களது ஜனங்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தீமை ஏற்படும். அவர்களது நகரங்கள் கற்களின் குவியலாகும். அவர்களது மேடைகள் அழிக்கப்படும். ஏனென்றால், வழிபாட்டிற்குரிய அவ்விடங்கள் மீண்டும் பயன்படக் கூடாது. அப்பலிபீடங்கள் எல்லாம் அழிக்கப்படும். ஜனங்கள் நரகலான அச்சிலைகளை மீண்டும் வழிபடமாட்டார்கள். அச்சிலைகள் தகர்க்கப்படும். நீ செய்த அனைத்தும் அழிக்கப்படும்! உங்கள் ஜனங்கள் கொல்லப்படுவார்கள். பிறகு, நான் கர்த்தர் என்று நீ அறிவாய்!’”

தேவன் கூறினார்: “ஆனால் நான் உங்கள் ஜனங்களில் சிலரைத் தப்பிக்க வைப்பேன், அவர்கள் கொஞ்சக் காலத்திற்கு வெளிநாட்டில் வாழ்வார்கள். அவர்களை வேறுநாடுகளில் சிதறி வாழும்படி நான் வற்புறுத்துவேன். பின்னர் தப்பிப்போன அவர்கள் சிறைபிடிக்கப்படுவார்கள். அவர்கள் வேறு நாடுகளில் வாழும்படி கட்டாயப்படுத்தப்படுவார்கள். ஆனால் தப்பிப்போன அவர்கள் என்னை ஞாபகப்படுத்திக்கொள்வார்கள். நான் அவர்களின் ஆத்துமாவை உடைத்தேன். அவர்கள் தாம் செய்த தீமைக்காகத் தம்மையே வெறுப்பார்கள். கடந்த காலத்தில், அவர்கள் என்னைவிட்டு விலகிப் போனார்கள். அவர்கள் தம் நரகலான சிலைகளைத் துரத்திச் சென்றனர். அவர்கள் தம் கணவனை விட்டு, விட்டு இன்னொருவனோடு சோரம்போகிற பெண்களைப் போன்றவர்கள். அவர்கள் பல பயங்கரமானவற்றைச் செய்தனர். 10 ஆனால் நான்தான் கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்! நான் சொன்னால் சொன்னபடி செய்வேன் என்பதை அவர்கள் அறிவார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட எல்லாத் தீமைகளுக்கும் நானே காரணம் என்பதை அறிவார்கள்.”

11 பிறகு, எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறினார், “உங்கள் கைகளைத் தட்டுங்கள், கால்களை உதையுங்கள். இஸ்ரவேல் ஜனங்கள் செய்த கொடூரமான காரியங்களைப்பற்றிப் பேசுங்கள். அவர்கள் நோயாலும் பசியாலும் கொல்லப்படுவார்கள் என்று எச்சரிக்கை செய். அவர்கள் போரில் கொல்லப்படுவார்கள் என்று சொல். 12 தொலை தூரங்களில் ஜனங்கள் நோயால் மரிப்பார்கள். இந்த இடத்திற்கு அருகில் உள்ள ஜனங்கள் வாள்களால் கொல்லப்படுவார்கள். இந்நகரத்தில் மீதியாக தங்கும் ஜனங்கள் பட்டினியால் மரிப்பார்கள். பிறகுதான் நான் என் கோபத்தை நிறுத்துவேன். 13 பிறகுதான், நான் கர்த்தர் என்பதை நீ அறிவாய். உங்களது மரித்த உடல்கள் நரகலான சிலைகளுக்கு முன்னாலும் பலிபீடங்களுக்கு அருகிலும் கிடக்கும்போது நீ அறிவாய். அந்த உடல்கள், உங்களது ஒவ்வொரு வழிபாட்டு இடங்களிலும், உயர்ந்த குன்றுகளிலும், மலைகளிலும், ஒவ்வொரு பச்சை மரங்கள் மற்றும் இலைகளுடனுள்ள ஓக் மரங்களின் அடியிலும், கிடக்கும். அந்த இடங்களில் எல்லாம் நீ பலிகளைச் செலுத்தினாய். அங்கே, அவை உன்னுடைய, நரகலான சிலைகளுக்கு இனிய வாசனையை வெளிப்படுத்தியது. 14 ஆனால் ஜனங்களாகிய உங்கள்மேல் என் கரத்தை உயர்த்தி நீங்கள் எங்கு குடியிருந்தாலும் தண்டிப்பேன்! உங்கள் நாட்டை அழிப்பேன்! அது திப்லாத் வனாந்தரத்தைவிட மிகவும் வெறுமையாக இருக்கும். பிறகு நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்!”

வெளி 16:1-7

தேவ கோபத்தின் கிண்ணங்கள்

16 பிறகு, நான் ஆலயத்தில் இருந்து ஒரு பெரிய சத்தத்தைக் கேட்டேன். அக்குரல் ஏழு தேவ தூதர்களிடம் “தேவனுடைய கோபத்தை பூமியின் மீது சென்று ஊற்றுங்கள்” என்றது.

முதல் தேவதூதன் போனான். அவன் தன் கிண்ணத்தில் இருந்ததை பூமியில் ஊற்றினான். பிறகு மிருகத்தின் அடையாளத்தை உடையவர்களும் அதன் உருவச்சிலையை வணங்கியவர்களுமாகிய மக்கள் அனைவருக்கும் அசிங்கமானதும் வேதனைமிக்கதுமான கொப்புளங்கள் உண்டாயின.

இரண்டாவது தேவதூதன் தன் கிண்ணத்தில் இருந்ததைக் கடலில் வீசினான். உடனே கடல் இறந்து போனவனின் இரத்தத்தைப் போலானது. கடலில் இருந்த ஒவ்வொரு உயிரினமும் இறந்தது.

மூன்றாவது தேவதூதன் தன் கிண்ணத்தில் இருந்ததை நதிகளிலும், நீர் ஊற்றுக்களிலும் வீசி எறிந்தான். அதனால் நதிகளும், நீர் ஊற்றுகளும் இரத்தமாயிற்று. நீரின் தூதன் தேவனிடம் கூறுவதைக் கேட்டேன்: அவன்,

“எப்பொழுதும் இருக்கிறவரும் இருந்தவரும் நீர் ஒருவரே.
    பரிசுத்தமான ஒருவரும் நீரே.
    நீர் செய்த இந்நியாயத்தீர்ப்புகளில் நீர் நீதிமானாக இருக்கிறீர்.
உம்முடைய பரிசுத்தவான்களின் இரத்தத்தையும் உம்முடைய தீர்க்கதரிசிகளின் இரத்தத்தையும் மக்கள் சிந்தினர்.
அதனால் இப்பொழுது அவர்கள் குடிக்க இரத்தத்தையே கொடுத்தீர்கள்.
    அவர்களுக்குத் தகுதியானது இதுவே”

என்று கூறினான்.

அதற்கு பலிபீடமானது,

“ஆம், சர்வவல்லமைமிக்க தேவனாகிய கர்த்தாவே,
    உம் நியாயத்தீர்ப்புகள் உண்மையும் நீதியுமானவை”

என்று சொல்வதைக் கேட்டேன்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center