Revised Common Lectionary (Complementary)
யூதாவின் பாலைவனத்தில் இருந்தபோது தாவீது பாடிய ஒரு பாடல்.
63 தேவனே, நீரே என் தேவன்.
நீர் எனக்கு மிகவும் தேவையானவர்.
நீரற்று உலர்ந்து பாழாய்போன தேசத்தைப்போன்று
என் ஆத்துமாவும் சரீரமும் உமக்காகத் தாகமாயிருக்கிறது.
2 உமது ஆலயத்தில் நான் உம்மைக் கண்டேன்.
நான் உமது வல்லமையையும் மகிமையையும் கண்டேன்.
3 ஜீவனைக் காட்டிலும் உமது அன்பு சிறந்தது.
என் உதடுகள் உம்மைத் துதிக்கும்.
4 என் வாழ்நாளில் நான் உம்மைத் துதிப்பேன்.
உமது நாமத்தைக் கூறி ஜெபத்தோடு என் கைகளை உயர்த்துவேன்.
5 சுவையான உணவு வகைகளை உண்டது போல் நான் திருப்தியடைவேன்.
மகிழ்ச்சி நிறைந்த உதடுகளுள்ள என் வாய் உம்மைத் துதிக்கும்.
6 என் படுக்கையில் நான் உம்மை நினைவு கூருவேன்.
நள்ளிரவிலும் உம்மை நான் நினைவு கூருவேன்.
7 நீர் உண்மையாகவே எனக்கு உதவினீர்!
நீர் என்னைப் பாதுகாத்ததால் நான் மகிழ்கிறேன்.
8 என் ஆத்துமா உம்மைப் பற்றிக்கொள்கிறது.
நீர் என் கைகளைப் பிடித்துக்கொள்கிறீர்.
9 சில ஜனங்கள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள்.
ஆனால் அவர்கள் அழிக்கப்படுவார்கள்.
அவர்கள் தங்கள் கல்லறைக்குள்ளேபோவார்கள்.
10 அவர்கள் பட்டயத்தால் கொல்லப்படுவார்கள்.
அவர்கள் பிணங்களைக் காட்டு நாய்கள் தின்னும்.
11 ஆனால் ராஜாவோ அவரது தேவனோடு மகிழ்ச்சியாயிருப்பார்.
அவருக்குக் கீழ்ப்படிவதாக உறுதி தந்த ஜனங்கள் தேவனைத் துதிப்பார்கள்.
ஏனெனில் அவர் எல்லாப் பொய்யர்களையும் தோற்கடித்தார்.
போருக்காக ஆயத்தப்படுதல்
9 நாடுகளுக்கு இவற்றை அறிவியுங்கள்.
போருக்குத் தயாராகுங்கள்.
வலிமையுள்ளவர்களை எழுப்புங்கள்.
போர்வீரர்கள் எல்லோரும் நெருங்கி வரட்டும்.
அவர்கள் மேலே வரட்டும்.
10 உங்கள் மண்வெட்டிகளை வாள்களாக அடியுங்கள்.
உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகச் செய்யுங்கள்.
பலவீனமான மனிதன்
“நான் வலிமையான போர்வீரன்” என்று சொல்லட்டும்.
11 அனைத்து நாட்டினரே, விரையுங்கள்.
அந்த இடத்திற்குச் சேர்ந்து வாருங்கள்.
கர்த்தாவே உமது வலிமையுள்ள வீரர்களைக் கொண்டுவாரும்.
12 நாடுகளே எழும்புங்கள்.
யோசபாத்தின் பள்ளத்தாக்குக்கு வாருங்கள்.
சுற்றியுள்ள அனைத்து நாடுகளையும் நியாந்தீர்க்க
நான் அங்கே உட்காருவேன்.
13 அரிவாளைக் கொண்டுவாருங்கள்.
ஏனென்றால் அறுவடை தயாராகிவிட்டது.
வாருங்கள், திராட்சைகளை மிதியுங்கள்.
ஏனென்றால் திராட்சை ஆலை நிரம்பியுள்ளது.
தொட்டிகள் நிரம்பி வழிகின்றன.
ஏனென்றால் அவர்களின் தீமை பெரியது.
14 நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே ஏராளமான ஜனங்கள் இருக்கிறார்கள்.
கர்த்தருடைய சிறப்புக்குரிய நாள்
விரைவில் வரும்.
இது நியாயத்தீர்ப்பின் பள்ளதாக்கில் நடைபெறும்.
15 சூரியனும் சந்திரனும் இருண்டுவிடும்.
நட்சத்திரங்கள் ஒளி வீசாமல் போகும்.
16 தேவனாகிய கர்த்தர் சீயோனிலிருந்தும் எருசலேமிலிருந்தும் சத்தமிடுவார்.
ஆகாயமும் பூமியும் நடுங்கும்.
ஆனால் தேவனாகிய கர்த்தர் அவரது ஜனங்களுக்குப் பாதுகாப்பின் இடமாக இருப்பார்.
அவர் இஸ்ரவேல் ஜனங்களுக்குப் பாதுகாப்பான இடமாக இருப்பார்.
17 “பின்னர் நீங்கள் நானே உங்கள் தேவனாகிய கர்த்தர் என்பதை அறிவீர்கள்.
நான் சியோனில் வசிக்கிறேன். அது எனது பரிசுத்தமான மலை.
எருசலேம் பரிசுத்தமாகும்.
அந்நியர்கள் மீண்டும் அந்நகரத்தை ஊடுருவிச் செல்லமாட்டார்கள்.
யூதாவிற்கு ஒரு புதிய வாழ்க்கை வாக்களிப்பப்பட்டது
18 “அந்த நாளில் மலைகள்
இனிய திரட்சைரசத்தைப் பொழியும்.
குன்றுகளில் பால் வழிந்து ஓடும்.
யூதாவின் வெறுமையான ஆறுகளில் தண்ணீர் நிரம்பி ஓடும்.
கர்த்தருடைய ஆலயத்தில் இருந்து நீரூற்று பெருக்கெடுக்கும்.
அது அகாசியா பள்ளத்தாக்குக்கு தண்ணீரைக் கொடுக்கும்.
19 எகிப்து வெறுமையாகும்.
ஏதோம் வெறுமையான பாலைவனமாகும்.
ஏனென்றால் அவை யூதா ஜனங்களுக்குக் கொடுமை செய்தன.
அவை அவர்கள் நாட்டில் அப்பாவிகளைக் கொன்றார்கள்.
20 ஆனால் யூதாவில் எப்பொழுதும் ஜனங்கள் வாழ்வார்கள்.
ஜனங்கள் எருசலேமில் பல தலை முறைகளுக்கு வாழ்வார்கள்.
21 அந்த ஜனங்கள் எனது ஜனங்களைக் கொன்றார்கள்.
எனவே அந்த ஜனங்களை நான் உண்மையில் தண்டிப்பேன்!”
தேவனாகிய கர்த்தர் சீயோனில் வாழ்வார்.
29 “அந்த நாட்களின் துன்பம் தீர்ந்தவுடன் கீழ்க்கண்டது நடக்கும்:
“‘சூரியன் இருளாக மாறும்,
சந்திரன் ஒளியைக் கொடுக்காது.
வானிலிருந்து நட்சத்திரங்கள் உதிரும்,
வானில் அனைத்தும் மாறும்.’[a]
30 “அப்பொழுது மனித குமாரனின் வருகையை அறிவிக்கும் அடையாளம் வானில் தெரியும். உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் கதறுவார்கள், வானத்து மேகங்களின் மீது மனித குமாரன் வருவதைக் காண்பார்கள். மகத்தான வல்லமையுடனும் மிகுந்த மகிமையுடனும் மனிதகுமாரன் வருவார். 31 அவர், ஒரு எக்காளத்தைச் சத்தமாய் ஊதி அதன் மூலம் தம் தூதர்களை எல்லாத் திசைகளுக்கும் அனுப்புவார். உலகின் எல்லா பகுதியிலிருந்தும் தேவதூதர்கள் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பார்கள்.
32 “அத்திமரம் நமக்கு ஒரு பாடத்தைப் போதிக்கிறது. அத்தி மரத்தின் கிளைகள் பசுமையடைந்து இலைகள் துளிர்விட்டு வளரும்பொழுது கோடை காலம் அருகில் உள்ளது என அறிகிறீர்கள்.
33 “அதே போலத்தான் நான் நடக்கப் போவதாகக் கூறிய செயல்களைப் பொறுத்தவரையிலும், அவை நடக்கும்பொழுது காலம் நெருங்கிவிட்டதை அறியலாம். 34 நான் உண்மையைச் சொல்கிறேன், இன்றைய மனிதர்கள் வாழும் காலத்திலேயே அவை அனைத்தும் நடக்கும். 35 உலகம் முழுவதும் வானமும் பூமியும் உள்ளாக அழியும். ஆனால் எனது வார்த்தைகள் அழியாது.
2008 by World Bible Translation Center