Revised Common Lectionary (Complementary)
யூதாவின் பாலைவனத்தில் இருந்தபோது தாவீது பாடிய ஒரு பாடல்.
63 தேவனே, நீரே என் தேவன்.
நீர் எனக்கு மிகவும் தேவையானவர்.
நீரற்று உலர்ந்து பாழாய்போன தேசத்தைப்போன்று
என் ஆத்துமாவும் சரீரமும் உமக்காகத் தாகமாயிருக்கிறது.
2 உமது ஆலயத்தில் நான் உம்மைக் கண்டேன்.
நான் உமது வல்லமையையும் மகிமையையும் கண்டேன்.
3 ஜீவனைக் காட்டிலும் உமது அன்பு சிறந்தது.
என் உதடுகள் உம்மைத் துதிக்கும்.
4 என் வாழ்நாளில் நான் உம்மைத் துதிப்பேன்.
உமது நாமத்தைக் கூறி ஜெபத்தோடு என் கைகளை உயர்த்துவேன்.
5 சுவையான உணவு வகைகளை உண்டது போல் நான் திருப்தியடைவேன்.
மகிழ்ச்சி நிறைந்த உதடுகளுள்ள என் வாய் உம்மைத் துதிக்கும்.
6 என் படுக்கையில் நான் உம்மை நினைவு கூருவேன்.
நள்ளிரவிலும் உம்மை நான் நினைவு கூருவேன்.
7 நீர் உண்மையாகவே எனக்கு உதவினீர்!
நீர் என்னைப் பாதுகாத்ததால் நான் மகிழ்கிறேன்.
8 என் ஆத்துமா உம்மைப் பற்றிக்கொள்கிறது.
நீர் என் கைகளைப் பிடித்துக்கொள்கிறீர்.
9 சில ஜனங்கள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள்.
ஆனால் அவர்கள் அழிக்கப்படுவார்கள்.
அவர்கள் தங்கள் கல்லறைக்குள்ளேபோவார்கள்.
10 அவர்கள் பட்டயத்தால் கொல்லப்படுவார்கள்.
அவர்கள் பிணங்களைக் காட்டு நாய்கள் தின்னும்.
11 ஆனால் ராஜாவோ அவரது தேவனோடு மகிழ்ச்சியாயிருப்பார்.
அவருக்குக் கீழ்ப்படிவதாக உறுதி தந்த ஜனங்கள் தேவனைத் துதிப்பார்கள்.
ஏனெனில் அவர் எல்லாப் பொய்யர்களையும் தோற்கடித்தார்.
7 கர்த்தர் ஒரு வாக்குறுதி செய்தார். அவர் யாக்கோபின் பெருமை, என்ற தமது நாமத்தை, பயன்படுத்தி இந்த வாக்குறுதியைச் செய்தார்.
“நான் அந்த ஜனங்கள் செய்தவற்றை மறக்கமாட்டேன்.
8 அவற்றால் முழு நாடும் நடுங்கும்.
இந்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும்
மரித்துப்போனவர்களுக்காக அழுவார்கள்.
முழு நாடும் எகிப்திலுள்ள நைல் நதியைப் போன்று உயர்ந்து தாழும்.
இந்த நாடு தடுமாறிப் போகும்.”
9 கர்த்தர் இவற்றையும் கூறினார்:
“அந்த வேளையில் நான் சூரியனை நடுப்பகலில் மறையச் செய்வேன்.
நான் பகல் வேளையில் பூமியை இருளச் செய்வேன்.
10 நான் உங்கள் விடுமுறை நாட்களை மரித்தவர்களுக்காக ஒப்பாரி வைக்கும் நாளாக்குவேன்.
உங்கள் பாடல்கள் எல்லாம் மரித்த ஜனங்களுக்காகப் பாடப்படும் சோகப் பாடல்களாகும்.
நான் ஒவ்வொருவர் மீதும் துக்கத்திற்கான ஆடையை அணிவிப்பேன்.
நான் எல்லாத் தலைகளையும் வழுக்கையாக்குவேன்.
நான், மரித்துப்போன ஒரே மகனுக்காக அழும் ஒப்பாரியைப் போன்று ஆக்குவேன்.
இது ஒரு மிகவும் கசப்பான முடிவாயிருக்கும்.”
தேவனுடைய வார்த்தை கிடைக்காத கொடிய பஞ்சம் வந்துகொண்டிருக்கிறது
11 கர்த்தர் கூறுகிறார்:
“பார், தேசத்தின் மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்.
ஜனங்கள் அப்பத்துக்காகப் பசித்திருக்கமாட்டார்கள்.
தண்ணீருக்காகத் தவித்திருக்கமாட்டார்கள்.
இல்லை, கர்த்தரிடமிருந்து வரும் வார்த்தைகளுக்காக ஜனங்கள் பசியோடு இருப்பார்கள்.
12 ஜனங்கள் சவக்கடலிலிருந்து மத்தியத் தரைக் கடலுக்கும்
வடக்கிலிருந்து கிழக்குக்கும் அலைவார்கள்.
ஜனங்கள் கர்த்தருடைய வார்த்தைகளுக்காக
அங்கும் இங்கும் அலைவார்கள்.
ஆனால் அவர்கள் அதைக் கண்டு கொள்ளமாட்டார்கள்.
13 அந்த நேரத்தில் அழகான ஆண்களும் பெண்களும் தாகத்தால்
பலவீனம் அடைவார்கள்.
14 அந்த ஜனங்கள் சமாரியாவின் பாவத்தின் பேரில் வாக்குறுதி செய்தனர்.
அவர்கள், ‘தாணே, உன் தேவனுடைய உயிரின் மேல் வாக்குறுதி அளிக்கிறோம்’ என்றார்கள்.
மேலும் அவர்கள்,
‘பெயர்செபாவின் தேவனுடைய உயிரின்மேல் நாங்கள் வாக்குறுதி அளிக்கிறோம்’ என்றார்கள்.
ஆனால் அந்த ஜனங்கள் வீழ்வார்கள்.
அவர்கள் மீண்டும் எழமாட்டார்கள்.”
20 சகோதர சகோதரிகளே, குழந்தைகளைப் போல யோசிக்காதீர்கள். தீய காரியங்களில், குழந்தைகளைப்போல இருங்கள். ஆனால் சிந்திக்கும்போது மனிதரைப்போல சிந்தியுங்கள்.
21 “வெவ்வேறு மொழிகளைப் பேசும் மனிதர்களையும்,
வேற்று மக்களின் மொழிகளையும் பயன்படுத்தி இந்த மக்களோடு பேசுவேன்.
அப்போதும் இந்த மக்கள்
எனக்குக் கீழ்ப்படிய மாட்டார்கள்”(A)
என்று எழுதப்பட்டிருக்கிறது. இவ்வாறு கர்த்தர் சொல்கிறார்.
22 எனவே, வெவ்வேறு மொழிகளில் பேசும் வரம் விசுவாசமற்ற மக்களுக்கு நிரூபணத்தின் ஒரு அடையாளமாகும், விசுவாசமுள்ள மக்களுக்கு அல்ல. தீர்க்கதரிசனம் விசுவாசமுள்ள மக்களுக்கேயொழிய, விசுவாசமற்ற மக்களுக்கல்ல. 23 சபையினர் எல்லோரும் கூடி இருக்கையில் நீங்கள் அனைவரும் வெவ்வேறு மொழிகளில் பேசுவதாக வைத்துக்கொள்வோம். விசுவாசமற்றவர்களோ, உங்களைப் புரிந்துகொள்ள முடியாதவர்களோ அப்போது வந்தால் அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களாகக் கருதுவர். 24 ஆனால், நீங்கள் தீர்க்கதரிசனம் உரைக்கும்போது விசுவாசமற்றவனோ, புரிந்துகொள்ளும் தன்மை இல்லாத மனிதனோ அங்கு வந்தால் அந்த மனிதனின் பாவம் அவனுக்கு உணர்த்தப்படும். நீங்கள் கூறும் காரியங்களின்படியே அவன் நியாயம் தீர்க்கப்படுவான். 25 அவன் உள்ளத்தின் இரகசியங்கள் அவனுக்குத் தெரிவிக்கப்படும். எனவே அந்த மனிதன் தலை குனிந்து வீழ்ந்து தேவனை வணங்குவான். “உண்மையாகவே, தேவன் உங்களோடு இருக்கிறார்” என்று அவன் கூறுவான்.
2008 by World Bible Translation Center