Revised Common Lectionary (Complementary)
ஜனங்கள் நினைவுக்கு உதவும்படியாக இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.
70 தேவனே, என்னை மீட்டருளும்!
தேவனே விரைந்து எனக்கு உதவும்!
2 ஜனங்கள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள்.
அவர்கள் ஏமாற்றமடையச் செய்யும்!
3 ஜனங்கள் என்னை ஏளனம் செய்தார்கள்.
அவர்கள் விழுந்து வெட்கமடைவார்கள் என நம்புகிறேன்.
4 உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள் என நம்புகிறேன்.
உமது உதவியை வேண்டும் (நாடும்) ஜனங்கள் எப்போதும் உம்மைத் துதிக்க முடியும் என நம்புகிறேன்.
5 நான் ஏழையான, உதவியற்ற மனிதன்.
தேவனே, விரைந்து வந்து என்னை மீட்டருளும்!
தேவனே, நீர் மட்டுமே என்னைக் காப்பாற்ற முடியும்.
மிகவும் தாமதியாதேயும்!
இஸ்ரவேலுக்கான எச்சரிக்கை
3 இஸ்ரவேல் ஜனங்களே, இந்தச் செய்தியைக் கவனியுங்கள். இஸ்ரவேலே உங்களைபற்றி கர்த்தர் இவற்றைக் கூறினார். இந்த செய்தி நான் எகிப்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த எல்லாக் குடும்பங்களையும் (இஸ்ரவேல்) பற்றியது. 2 “பூமியில் அநேகக் குடும்பங்கள் இருந்தன. ஆனால் உன்னுடைய ஒரே குடும்பத்தைதான் சிறப்பான வழியில் அறிந்துகொள்ள நான் தேர்ந்தெடுத்தேன். நீ எனக்கு எதிராகத் திரும்பினாய். எனவே, நான் உனது எல்லா பாவங்களுக்காக உன்னைத் தண்டிப்பேன்.”
இஸ்ரவேலின் தண்டனைக்கான காரணம்
3 இரண்டு பேர் ஒத்துப்போனாலொழிய
ஒரே வழியில் நடக்க முடியாது.
4 காட்டிலுள்ள சிங்கம்,
ஒரு மிருகத்தைப் பிடித்த பிறகுதான் கெர்ச்சிக்கும்.
ஒரு இளஞ்சிங்கம் தன் குகையில் கெர்ச்சிக்கிறது என்றால்,
அது ஏதோ ஒன்றைப் பிடித்துவிட்டது என்று அர்த்தம்.
5 கண்ணிக்குள்ளே உணவு இல்லாவிட்டால்
ஒரு பறவை தரையிலுள்ள கண்ணிக்குள் பறக்காது.
கண்ணி மூடினால்
அது பறவையைப் பிடிக்கும்.
6 எக்காளம் எச்சரிக்கையாக ஊதினால்,
ஜனங்கள் நிச்சயம் பயத்தால் நடுங்குவார்கள்.
நகரத்திற்கு துன்பம் வந்தால்,
அதற்கு கர்த்தர் காரணமாவார்.
7 எனது கர்த்தராகிய ஆண்டவர் சிலவற்றைச் செய்ய முடிவுசெய்வார். ஆனால் அவர் எதையும் செய்யும் முன்னால் அவர் தனது தீர்க்கதரிசிகளிடம் சொல்வார். 8 ஒரு சிங்கம் கெர்ச்சித்தால் ஜனங்கள் பயப்படுவார்கள். கர்த்தர் பேசினால் தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்.
9-10 நீங்கள் அஸ்தோத்தின் கோபுரங்களுக்கும், எகிப்துக்கும் போய் இச்செய்தியைக் கூறுங்கள். “சமாரியாவின் மலைகளுக்கு வாருங்கள். நீங்கள் அங்கே பெருங்குழப்பத்தைக் காண்பீர்கள். ஏனென்றால் ஜனங்களுக்குச் சரியாக வாழ்வது எப்படி என்று தெரியாது. அந்த ஜனங்கள் மற்ற ஜனங்களிடம் கொடூரமாக இருந்தார்கள். அவர்கள் மற்றவர்களிடமிருந்து பொருட்களை எடுத்துத் தங்கள் கோபுரங்களில் ஒளித்து வைத்தார்கள். அவர்கள் போரில் எடுத்தப் பொருட்களால் அவர்களது கருவூலங்கள் நிறைந்திருக்கின்றன.”
11 எனவே கர்த்தர் சொல்கிறார்: “ஒரு பகைவன் அந்த நாட்டிற்கு வருவான். அந்தப் பகைவன் உன் பலத்தை எடுத்துப்போடுவான். நீ உயர்ந்த கோபுரங்களில் ஒளித்து வைத்த பொருட்களை அவன் எடுப்பான்.”
12 கர்த்தர் கூறுகிறார்,
“ஒரு சிங்கம் ஒரு ஆட்டுக் குட்டியை தாக்கலாம்.
மேய்ப்பன் அந்த ஆட்டைக் காப்பாற்ற முயற்சி செய்யலாம்.
ஆனால் மேய்ப்பன் ஆட்டுக்குட்டியின் ஒரு பகுதியைத்தான் காப்பாற்றுவான்.
அவன் சிங்கத்தின் வாயிலிருந்து இரண்டு கால்கள்
அல்லது காதின் ஒரு பகுதியை மட்டும் பிடுங்க முடியும்.
அவ்வாறே இஸ்ரவேலின் பெரும் பாலான ஜனங்கள் காப்பாற்றப்படமாட்டார்கள்.
சமாரியாவில் வாழ்கிற ஜனங்கள் படுக்கையின் ஒரு மூலையையோ
அல்லது ஒரு மஞ்சத்தின் மேலிருக்கும் துணியின் ஒரு துண்டையோ காப்பாற்றிக்கொள்வார்கள்.”
ஆறாவது எக்காள தொனி
13 ஆறாவது தேவதூதன் தன் எக்காளத்தை ஊதினான். அப்போது தேவனுக்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலுமிருந்து ஒரு சத்தம் வருவதைக் கேட்டேன். 14 பிறகு அச்சத்தம் அந்த ஆறாம் தூதனிடம் “ஐபிராத் என்னும் நதிக்கரையில் கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்து விடு” என்று சொல்லக் கேட்டேன். 15 எனவே, அந்த ஆண்டுக்கும், அந்த மாதத்துக்கும், நாளுக்கும், மணிக்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் விடுவிக்கப்பட்டார்கள். உலகில் உள்ள மக்களில் மூன்றில் ஒரு பங்கினரைக் கொல்லும்படிக்கு அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். 16 அவர்களது படையில் குதிரைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்று நான் கேள்விப்பட்டேன். அவை இருபது கோடி ஆகும்.
17 குதிரைகளையும் அதன்மேல் வீற்றிருந்தவர்களையும் நான் எனது தரிசனத்தில் கண்டேன். அவர்கள் நெருப்பைப்போல சிவந்த நிறமும், நீல நிறமும், கந்தகம் போன்ற மஞ்சள் நிறமுமான மார்புக் கவசங்களை அணிந்திருந்தனர். அக்குதிரைகளின் தலைகள் சிங்கத்தின் தலைகளைப் போன்று விளங்கின. அக்குதிரைகளின் வாயில் இருந்து நெருப்பும், புகையும், கந்தகமும் வெளி வந்தன. 18 குதிரையின் வாயில் இருந்து வெளி வந்த புகையாலும் நெருப்பாலும், கந்தகத்தாலும் உலகில் உள்ள மூன்றில் ஒரு பங்கு மக்கள் கொல்லப்பட்டார்கள். 19 அக்குதிரைகளின் பலமானது அவற்றின் வாயிலும் வாலிலும் இருந்தது. அவற்றின் வால்கள் பாம்புகளைப் போன்று இருந்தது. அவற்றில் மனிதரைக் கடிக்கும் தலைகளும் இருந்தன.
20 பிறகு எஞ்சிய மனிதர்கள் கைகளால் அவர்கள் செய்த விக்கிரகங்கள் பற்றி தம் மனதை மாற்றிக்கொள்ளவில்லை. பொன் வெள்ளி, செம்பு, கல், மரம் போன்றவற்றால் செய்யப்பட்ட, பார்க்கவோ, கேட்கவோ, நடக்கவோ செய்யாத பேய்களையும் விக்கிரகங்களையும் வழிபடுவதை அவர்கள் நிறுத்தவில்லை. (அவ்வுருவங்கள் பார்க்கவோ கேட்கவோ நடக்கவோ முடியாதவைகள்). 21 இம்மக்கள் தம் இதயத்தையும், வாழ்வையும் மாற்றிக்கொள்ளவில்லை. இவர்கள் மற்றவர்களைக் கொல்லும் வழக்கத்தையும் விடவில்லை. தம் தீயமந்திரங்கள், பாலியல் பாவங்கள், திருட்டு வேலைகள் போன்றவற்றையும் விடவில்லை.
2008 by World Bible Translation Center