Revised Common Lectionary (Complementary)
ஜனங்கள் நினைவுக்கு உதவும்படியாக இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.
70 தேவனே, என்னை மீட்டருளும்!
தேவனே விரைந்து எனக்கு உதவும்!
2 ஜனங்கள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள்.
அவர்கள் ஏமாற்றமடையச் செய்யும்!
3 ஜனங்கள் என்னை ஏளனம் செய்தார்கள்.
அவர்கள் விழுந்து வெட்கமடைவார்கள் என நம்புகிறேன்.
4 உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள் என நம்புகிறேன்.
உமது உதவியை வேண்டும் (நாடும்) ஜனங்கள் எப்போதும் உம்மைத் துதிக்க முடியும் என நம்புகிறேன்.
5 நான் ஏழையான, உதவியற்ற மனிதன்.
தேவனே, விரைந்து வந்து என்னை மீட்டருளும்!
தேவனே, நீர் மட்டுமே என்னைக் காப்பாற்ற முடியும்.
மிகவும் தாமதியாதேயும்!
முன்னுரை
1 இது ஆமோஸின் செய்தி, ஆமோஸ் தெக்கோவா நகரைச் சேர்ந்த மேய்ப்பர்களில் ஒருவன். ஆமோஸ் இஸ்ரவேலைப்பற்றி, யூதாவின் ராஜாவாக உசியா இருந்த காலத்திலும் இஸ்ரவேலின் ராஜாவாக யோவாசின் குமாரன் யெரொபெயாமின் காலத்திலும் தரிசனங்களைக் கண்டான். இது பூமி அதிர்ச்சி ஏற்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
சீரியாவிற்கு எதிரான தண்டனை
2 ஆமோஸ் சொன்னான்:
கர்த்தர் சீயோனில் ஒரு சிங்கத்தைப் போன்று சத்தமிடுவார்.
அவரது உரத்த சப்தம் எருசலேமிலிருந்து கெர்ச்சிக்கும்.
மேய்ப்பர்களின் பசுமையான மேய்ச்சல் இடம் வறண்டு மடியும்.
கர்மேல் மலையும் காய்ந்து போகும்.
3 கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “நான் தமஸ்குவின் ஜனங்களை அவர்கள் செய்த பல குற்றங்களுக்காக நிச்சயம் தண்டிப்பேன். ஏனென்றால் அவர்கள் கீலேயாத் ஜனங்களை இரும்பு ஆயுதங்களினால் நசுக்கினார்கள். 4 எனவே நான் ஆசகேலின் வீட்டில் நெருப்பை பற்றவைப்பேன். அந்த நெருப்பு பெனாதாதின் மிகப்பெரிய அரண்மனைகளை அழிக்கும்.
5 “நான் தமஸ்குவின் வாசலில் போடப்பட்டுள்ள தாழ்ப்பாளை உடைப்பேன். நான் ஆவேன் பள்ளதாக்கின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருப்பவனை அழிப்பேன். நான் பெத்ஏதேனிலிருந்து வல்லமையின் சின்னத்தை விலக்கிப்போடுவேன். சீரியாவின் ஜனங்கள் தோற்றகடிக்கப்படுவார்கள். ஜனங்கள் அவர்களைக் கீர் நாட்டுக்குக் கொண்டு செல்வார்கள்” என்று கர்த்தர் கூறினார்.
பெலிஸ்தியர்களுக்கான தண்டனை
6 கர்த்தர் இதனைக் கூறுகிறார்: “நான் நிச்சயமாக காத்சா ஜனங்களை அவர்களின் பல குற்றங்களுக்காகத் தண்டிப்பேன். ஏனென்றால் அவர்கள் நாட்டு ஜனங்களையெல்லாம் சிறைபிடித்து ஏதோமுக்குக் கைதிகளாகக் கொண்டுபோனார்கள். 7 எனவே நான் காத்சாவின் மதிலுக்குள் நெருப்பை அனுப்புவேன். இந்த நெருப்பு காத்சாவின் உயர்ந்த கோபுரங்களை அழிக்கும். 8 நான் அஸ்தோத்தின் சிங்காசனத்தில் இருப்பவனை அழிப்பேன். நான் அஸ்கலோனின் செங்கோலைத் தாங்கியிருப்பவனை அழிப்பேன். நான் எக்ரோன் ஜனங்களைத் தண்டிப்பேன் பிறகு மீதமுள்ள பெலிஸ்தியர்களும் மரிப்பார்கள்” தேவனாகிய கர்த்தர் கூறினார்.
பொனிசியாவின் தண்டனை
9 கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்: “நான் நிச்சயமாக தீரு ஜனங்களை அவர்களது பல குற்றங்களுக்காகத் தண்டிப்பேன். ஏனென்றால் அவர்கள் ஒரு நாடு முழுவதையும் சிறைபிடித்து ஏதோமுக்கு அடிமைகளாக அனுப்பினார்கள். அவர்கள் தம் சகோதரர்களோடு (இஸ்ரவேல்) செய்த உடன்படிக்கையை நினைவு கொள்ளவில்லை. 10 எனவே நான் தீருவின் சுவர்களில் நெருப்பைப் பற்றவைப்பேன். அந்த நெருப்பு தீருவின் உயர்ந்த கோபுரங்களை அழிக்கும்.”
ஏதோமியர்களுக்கான தண்டனை
11 கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “நான் ஏதோம் ஜனங்களை அவர்களின் பல குற்றங்களுக்காக நிச்சயம் தண்டிப்பேன். ஏனென்றால் ஏதோம் தன் சகோதரன் இஸ்ரவேலை வாளோடு துரத்தினான். ஏதோம் இரக்கம் காட்டவில்லை. ஏதோமின் கோபம் இடைவிடாமல் தொடர்ந்து காட்டு மிருகங்களைப்போல இஸ்ரவேலர்களைக் கிழித்துக் கொண்டிருந்தான். 12 எனவே, நான் தேமானில் நெருப்பைப் பற்ற வைப்பேன். அந்நெருப்பு போஸ்றாவின் உயர்ந்த கோபுரங்களை எரித்துப்போடும்.”
அம்மோனியர்களுக்கான தண்டனை
13 கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “நான் நிச்சயமாக அம்மோன் ஜனங்களை அவர்கள் செய்த பல குற்றங்களுக்காகத் தண்டிப்பேன். ஏனென்றால் அவர்கள் கீலேயாத் நாட்டில் கர்ப்பிணிப் பெண்களைக் கொன்றார்கள். அம்மோனியர்கள் இதனைச் செய்து தங்கள் நாட்டு எல்லைகளை விரித்தார்கள். 14 எனவே நான் ரப்பாவின் மதிலில் நெருப்பைப் பற்றவைப்பேன். அந்நெருப்பு ரப்பாவின் உயர்ந்த கோபுரங்களை எரித்து அழிக்கும். அவர்களின் நாட்டிற்குள் துன்பமானது சுழல்காற்றைப்போன்று வரும். 15 பிறகு அவர்களின் ராஜாவும் தலைவர்களும் சிறைபிடிக்கப்படுவார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றாகப் பிடிக்கப்படுவார்கள்.” என்று கர்த்தர் கூறினார்.
மோவாபின் தண்டனை
2 கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “நான் நிச்சயமாக மோவாப் ஜனங்களை அவர்கள் செய்த பல குற்றங்களுக்காகத் தண்டிப்பேன். ஏனென்றால் மோவாபியர், ஏதோம் ராஜாவின் எலுப்புகளைச் சுண்ணாம்பில் எரித்தார்கள். 2 எனவே நான் மோவாப் நாட்டில் நெருப்பைப் பற்றவைப்பேன். அந்த நெருப்பு கீரியோத்தின் உயர்ந்த கோபுரங்களை அழிக்கும். அங்கே பயங்கர சத்தமும் எக்காளச் சத்தமும் கேட்க அவர்கள் மரிபார்கள். 3 எனவே நான் மோவாபின் ராஜாக்களுக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவேன். நான் மோவாபின் அனைத்துத் தலைவர்களையும் கொல்வேன்” கர்த்தர் இதனைக் கூறினார்.
யூதாவுக்கான தண்டனை
4 கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “நான் நிச்சயமாக யூதாவை அவர்களது பல குற்றங்களுக்காகத் தண்டிப்பேன். ஏனென்றால் அவர்கள் கர்த்தருடைய கட்டளைகளுக்கு அடிபணிய மறுத்தார்கள். அவர்கள் அவரது கட்டளைகளைக் கைக்கொள்ளவில்லை. அவர்கள் முற்பிதாக்கள் பொய்களை நம்பினார்கள். அதே பொய்கள் யூதாவின் ஜனங்கள் தேவனைப் பின்பற்றுவதை நிறுத்தக் காரணமாயிருந்தது. 5 எனவே. நான் யூதாவில் நெருப்பை பற்றவைப்பேன். அந்த நெருப்பு எருசலேமிலுள்ள உயர்ந்த கோபுரங்களை அழிக்கும்.”
ஏழு தூதர்களும் தம் எக்காளங்களை ஊதுதல்
6 பிறகு ஏழு தூதர்களும் தம் ஏழு எக்காளங்களையும் ஊதத் தயாரானார்கள்.
7 முதல் தூதன் தன் எக்காளத்தை ஊதினான். அப்போது இரத்தம் கலந்த கல் மழையும் நெருப்பும் உண்டாகி பூமியிலே விழுந்தன. இதனால் மூன்றில் ஒரு பங்கு பூமியும், மூன்றில் ஒரு பங்கு மரங்களும் எரிந்துபோயின. பசும்புற்களெல்லாம் கரிந்து போயின.
8 இரண்டாம் தூதன் தன் எக்காளத்தை ஊதினான். அதனால் நெருப்பு பற்றி எரிகின்ற மலை போன்ற ஒன்று கடலில் எறியப்பட்டது. எனவே கடலின் மூன்றில் ஒரு பகுதி இரத்தமாயிற்று. 9 கடலில் உயிர் வாழ்கின்ற உயிர்களில் மூன்றில் ஒரு பகுதி செத்துப்போனது. கப்பல்களில் மூன்றில் ஒரு பகுதி அழிந்துபோயிற்று.
10 மூன்றாம் தூதன் தன் எக்காளத்தை ஊதினான். பிறகு வானில் உள்ள ஒரு பெரிய நட்சத்திரம் தீப்பந்தம்போல எரிந்து விழுந்தது. அது ஆறுகளில் மூன்றில் ஒரு பகுதி மீதும் நீரூற்றுகளின் மீதும் விழுந்தது. 11 அந்த நட்சத்திரத்தின் பெயர் எட்டி. அதனால் தண்ணீரில் மூன்றில் ஒரு பகுதி எட்டியைப் போன்று கசப்பாயிற்று. அவற்றைக் குடித்த ஏராளமான மக்கள் இறந்துபோயினர்.
12 நான்காம் தூதன் தன் எக்காளத்தை எடுத்து ஊதினான். அதனால் மூன்றில் ஒரு பகுதியான சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும் சேதப்பட்டன. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு இருண்டது. இரவிலும், பகலிலும் மூன்றில் ஒரு பாகம் வெளிச்சம் இல்லாமல் போனது.
13 நான் கவனித்துக்கொண்டிருக்கும் போது வானில் பறந்துகொண்டிருந்த ஒரு கழுகின் சத்தத்தைக் கேட்டேன். அது உரத்த குரலில், “ஆபத்து, ஆபத்து, பூமியில் உயிருடன் வாழ்பவர்களுக்கு ஆபத்து. எஞ்சிய மற்ற மூன்று தேவதூதர்கள் தம் எக்காளங்களை ஊதும்போது ஆபத்து நேரும்” என்றது.
ஐந்தாம் எக்காளம் முதலாவது ஆபத்தை ஆரம்பித்து வைக்கிறது
9 ஐந்தாம் தூதன் தன் எக்காளத்தை ஊதினான். அப்போது ஒரு நட்சத்திரம் ஆகாயத்திலிருந்து மண்ணில் விழுந்ததைக் கண்டேன். அதற்குப் பாதாள உலகத்துக்குச் செல்லும் வழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது. 2 அந்த நட்சத்திரம் பாதாள உலகத்தின் வழியைத் திறந்தது. பெரிய சூளையில் இருந்து புகை வருவது போன்று பாதாளத்தில் இருந்து புகை வந்தது. அப்புகையால் சூரியனும் ஆகாயமும் இருண்டது.
3 அப்புகையில் இருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டு பூமியின் மேல் பறந்து வந்தன. அவற்றுக்குத் தேளுக்கு ஒப்பான வல்லமை கொடுக்கப்பட்டது. 4 பூமியில் உள்ள புல்லையோ செடி கொடிகளையோ, மரத்தையோ சேதமாக்கக்கூடாது என்று வெட்டுக்கிளிகளுக்கு ஆணை இருந்தது. தேவனுடைய முத்திரையைத் தம் நெற்றியில் தாங்காத மனிதர்களை மாத்திரம் சேதப்படுத்த அவ்வெட்டுக் கிளிகளுக்கு உத்தரவு இருந்தது. 5 மக்களுக்கு ஐந்து மாதங்கள் தொந்தரவு தருமாறு வெட்டுக்கிளிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. அவற்றுக்கு மனிதரைக் கொல்லும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை. மக்களுக்கு ஏற்பட்ட வலியானது தேளால் கொட்டப்பட்ட மக்கள் பெறும் வலிபோன்றிருந்தது. 6 அத்தகைய நாட்களில் மக்கள் செத்துப்போவதற்குரிய வழியைத் தேடுவார்கள். ஆனால் அவர்களால் முடியாது. அவர்கள் சாக விரும்பினாலும் சாவானது அவர்களிடமிருந்து ஒளிந்துகொள்ளும்.
7 வெட்டுக்கிளிகள், போருக்குத் தயார் செய்யப்பட்ட குதிரைகளைப்போல இருந்தன. அவற்றின் தலைகளின் மேல் பொன்மயமான கிரீடங்கள் போன்றவை இருந்தன. அவை மனித முகங்களையும், 8 பெண்களின் கூந்தலைப்போல நீண்ட தலை மயிரையும், சிங்கத்தினுடையதைப் போன்ற பற்களையும் கொண்டிருந்தன. 9 அவற்றின் மார்புகள் இரும்புக் கவசங்களைப்போல் இருந்தன. அவற்றின் சிறகுகளிலிருந்து புறப்படும் ஓசையானது யுத்தகளத்தில் நுழையும் குதிரைகள் பூட்டிய ரதங்களின் இரைச்சலைப்போல இருந்தது. 10 அந்த வெட்டுக்கிளிகளுக்குத் தேள்களுக்கிருப்பதைப் போன்ற கொடுக்குகள் இருந்தன. ஐந்து மாத காலத்து வலியுண்டாகக் காரணமாக இருக்கும் சக்தி, அவற்றின் வால்களில் இருந்தது. 11 பாதாளத்தின் தூதனை அவை ராஜாவாகக் கொண்டிருந்தன. அவனுடைய பெயரானது எபிரேய மொழியில் அபெத்தோன்[a] என்று அழைக்கப்படுகிறது. கிரேக்க மொழியில் அவன் பெயர் அப்பொல்லியோன் என்று அழைக்கப்படுகிறது.
12 முதலாம் ஆபத்து கடந்துபோயிற்று. ஆனாலும் எச்சரிக்கையாயிருங்கள். இன்னும் இரண்டு ஆபத்துக்கள் வர இருக்கின்றன.
2008 by World Bible Translation Center