Revised Common Lectionary (Complementary)
புல்லாங்குழலில் வாசிக்க இசைக்குழுவின் தலைவனிடம் அளிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
5 கர்த்தாவே, என் வார்த்தைகளைக் கேளும்.
நான் சொல்ல முயற்சிப்பதை புரிந்துகொள்ளும்.
2 எனது தேவனாகிய ராஜாவே,
என் ஜெபத்தைக் கேளும்.
3 கர்த்தாவே, என் அன்பளிப்புகளை காலைதோறும் உமக்கு படைக்கிறேன்.
உம்மை உதவிக்காக நோக்குகிறேன், நீர் என் ஜெபங்களைக் கேளும்.
4 தேவனே, தீய ஜனங்கள் உம்மருகே வருவதை நீர் விரும்புகிறதில்லை.
தீய ஜனங்கள் உம்மை ஆராதிக்க முடியாது.
5 மூடர் உம்மிடம் வர இயலாது,
தீமை செய்யும் ஜனங்களை நீர் வெறுக்கிறீர்.
6 பொய் கூறும் ஜனங்களை நீர் அழிக்கிறீர்.
பிறரைத் தாக்குவதற்காக இரகசியமாகத் திட்டமிடுவோரை கர்த்தர் வெறுக்கிறார்.
7 கர்த்தாவே, உமது மிகுந்த இரக்கத்தினால் நான் உமது ஆலயத்திற்கு வருவேன்.
உமது பரிசுத்த ஆலயத்தை நோக்கித் தலை தாழ்த்தி அச்சத்தோடும், மரியாதையோடும் உம்மை வணங்குவேன்.
8 கர்த்தாவே, சரியான வாழ்க்கை வாழ உமது வழியைக்காட்டும்.
ஜனங்கள் எனது குறைகளைத் தேடுகிறார்கள்.
எனவே நான் எவ்வாறு வாழ நீர் விரும்புகிறீரோ, அவ்வழியை எனக்குக் காட்டும்.
9 அந்த ஜனங்கள் உண்மை பேசுவதில்லை அவர்கள் உண்மையைப் புரட்டும் பொய்யர்கள்.
அவர்கள் வாய்கள் திறந்த கல்லறைகளைப் போன்றவை.
அவர்கள் பிறரிடம் நயமான மொழிகளைச் சொல்வார்கள்.
ஆனால், அவர்கள் கண்ணியில் சிக்கவைப்பதற்காகவே அவ்வாறு செய்வார்கள்.
10 தேவனே, அவர்களைத் தண்டியும்.
அவர்கள் தங்கள் வலையிலேயே விழட்டும்.
அந்த ஜனங்கள் உமக்கெதிராகத் திரும்புகிறார்கள்.
எனவே அவர்களின் எண்ணிக்கையற்ற குற்றங்களுக்காக அவர்களைத் தண்டியும்.
11 ஆனால் தேவனை நம்பும் ஜனங்கள் களிகூரட்டும்.
என்றென்றும் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும்.
தேவனே, உமது நாமத்தை நேசிக்கும் ஜனங்களைப் பாதுகாத்து, பெலனைத் தாரும்.
12 கர்த்தாவே, நல்லோருக்கு நீர் நன்மை செய்தால்
அவர்களைக் காக்கும் பெருங்கேடகமாவீர்.
13 சீயோன் மகளே, நான் எதனோடு உன்னை ஒப்பிட முடியும்?
சீயோனின் கன்னிகையே, நான் உன்னை எதனோடு ஒப்பிடமுடியும்?
நான் உன்னை எப்படி ஆறுதல் செய்யமுடியும்?
உனது அழிவானது கடலைப்போன்று அவ்வளவு பெரிதாக இருக்கிறது.
எவரும் உன்னை குணப்படுத்த முடியும் என்று நான் நினைக்கவில்லை.
14 உனது தீர்க்கதரிசிகள் உனக்காகத் தரிசனம் கண்டார்கள்.
ஆனால் அவர்களது தரிசனங்கள் எல்லாம் பயனற்றவைகளாயின.
அவர்கள் உனது பாவங்களுக்கு எதிராகப் பேசவில்லை.
அவர்கள் காரியங்களைச் சரிபண்ண முயற்சி செய்யவில்லை.
அவர்கள் உனக்கு செய்திகளைப் பிரசங்கித்தனர்.
ஆனால் அவை உன்னை ஏமாற்றும் செய்திகள்.
15 சாலையில் உன்னைக் கடந்துபோகும் ஜனங்கள்
உன்னைப் பார்த்து கைதட்டுகிறார்கள்.
அவர்கள் பிரமித்து எருசலேம் குமாரத்தியைப் பார்த்து
தலையாட்டுகிறார்கள்.
அவர்கள், “இதுதானா, ‘முழுமையான அழகுடைய நகரம்’
‘பூமியிலே எல்லோருக்கும் மகிழ்ச்சியளிப்பது’ என்று ஜனங்களால் அழைக்கப்பட்ட நகரம்?”
என்று கேட்கிறார்கள்.
16 உனது எல்லா பகைவர்களும் உன்னைப் பார்த்து நகைப்பார்கள்.
அவர்கள் உன்னைப் பார்த்து பிரமித்து தம் பற்களைக் கடிக்கிறார்கள்.
அவர்கள், “நாங்கள் அவர்களை விழுங்கியிருக்கிறோம்!
நாங்கள் உண்மையிலேயே இந்த நாளுக்காகவே நம்பிக்கொண்டிருந்தோம்.
நாங்கள் இறுதியாக இது நிகழ்வதைப் பார்த்திருக்கிறோம்” என்பார்கள்.
17 கர்த்தர் தான் திட்டமிட்டபடியே செய்தார்.
அவர் எதைச் செய்வேன் என்று சொன்னாரோ அதையே செய்திருக்கிறார்.
நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே அவர் எதை கட்டளையிட்டாரோ அதைச் செய்திருக்கிறார்.
அவர் அழித்தார், அவரிடம் இரக்கம் இல்லை.
உனக்கு ஏற்பட்டவற்றுக்காக அவர் உனது பகைவர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்.
அவர் உனது பகைவர்களைப் பலப்படுத்தினார்.
விசேஷ அழைப்பு
13 அந்தியோகியா சபையில் சில தீர்க்கதரிசிகளும் போதகர்களும் இருந்தனர். அவர்கள் பர்னபாஸ், சிமியோன் (நீகர் எனவும் அழைக்கப்பட்டான்), லூகி (சிரேனே பட்டணத்தைச் சேர்ந்தவன்), மானாயீன் (ஆட்சியாளனான ஏரோதுவோடு வளர்ந்தவன்), சவுல் ஆகியோர். 2 இம்மனிதர்கள் எல்லோரும் கர்த்தருக்கு சேவை செய்யவும் உபவாசமிருக்கவும் செய்தனர். பரிசுத்த ஆவியானவர் அவர்களை நோக்கி, “பர்னபாவையும் சவுலையும் எனக்காக ஒரு சிறப்பான வேலைக்காகத் தனித்து விடுங்கள். இந்த வேலையைச் செய்ய நான் அவர்களைத் தேர்ந்துள்ளேன்” என்றார்.
3 எனவே சபை உபவாசமிருந்து பிரார்த்தனை செய்தது. பர்னபாவின் மீதும் சவுலின் மீதும் தங்கள் கரங்களை வைத்து வெளியே அனுப்பினர்.
சீப்புருவில் பர்னபாவும் சவுலும்
4 பரிசுத்த ஆவியானவரால் பர்னபாவும் சவுலும் அனுப்பப்பட்டனர். செலூக்கியா நகரத்திற்கு அவர்கள் சென்றனர். பின் செலூக்கியாவிலிருந்து சீப்புரு தீவிற்குக் கடல் வழியாகச் சென்றனர். 5 சாலமி என்னும் நகரத்திற்கு பர்னபாவும் சவுலும் வந்தபோது தேவனுடைய செய்தியை அவர்கள் யூத ஜெப ஆலயங்களில் போதித்தனர். (யோவான் மாற்கும் ஓர் உதவியாளனாக அவர்களோடிருந்தான்).
6 அவர்கள் தீவைக் கடந்து பாப்போ நகர்வரைக்கும் சென்றனர். பாப்போவில் மந்திர தந்திரங்கள் செய்த ஒரு யூத மனிதனை அவர்கள் சந்தித்தனர். அவன் பெயர் பர்யேசு, அவன் ஒரு போலித் தீர்க்கதரிசி. 7 ஆளுநர் செர்கியு பவுல் என்பவரோடு பர்யேசு எப்போதும் இருந்தான். செர்கியு பவுல் ஒரு ஞானவான். அவன் பர்னபாவையும் சவுலையும் சந்திக்க விரும்பினான். 8 ஆனால் எலிமாஸ் என்னும் மந்திரவாதி பர்னபாவுக்கும் சவுலுக்கும் எதிரியாக இருந்தான். (பர்யேசு என்பதின் கிரேக்க மொழியாக்கம் எலிமாஸ்) செர்கியுபவுல் இயேசுவை நம்பாதபடி தடுக்க பர்யேசு முயன்றான். 9 பவுல் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டான். (சவுலின் மற்றொரு பெயர் பவுல்) பவுல் எலிமாஸைப் பார்த்து, 10 “பிசாசின் மகனே! நீதிக்கெல்லாம் நீ எதிரி. நீ தீய தந்திரங்களாலும் பொய்களாலும் நிரப்பப்பட்டிருக்கிறாய். கர்த்தரின் உண்மைகளைப் பொய்களாக திரித்துக் கூற எப்போதும் முயல்கிறாய்! 11 இப்போது கர்த்தர் உன்னைத் தொடுவார். நீ குருடனாவாய். சில காலம் வரைக்கும் உன்னால் எதையும் பார்க்க முடியாது. சூரியனிலிருந்து வரும் ஒளியைக் கூடப் பார்க்க முடியாது” என்றான்.
அப்போது எலிமாஸுக்கு எல்லாம் இருண்டு போயின. பார்க்க முடியாதபடி அங்குமிங்கும் தடுமாறினான். கையால் பிடித்து அவனை வழி நடத்துகிற ஒருவனைக் கண்டு பிடிக்க முயற்சிசெய்துகொண்டிருந்தான். 12 ஆளுநர் இதைப் பார்த்தபோது நம்பிக்கை வைத்தான். கர்த்தரைக் குறித்துப் போதிக்கப்படுபவற்றைக் கேட்டு அவன் வியப்புற்றான்.
2008 by World Bible Translation Center