Revised Common Lectionary (Complementary)
புல்லாங்குழலில் வாசிக்க இசைக்குழுவின் தலைவனிடம் அளிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
5 கர்த்தாவே, என் வார்த்தைகளைக் கேளும்.
நான் சொல்ல முயற்சிப்பதை புரிந்துகொள்ளும்.
2 எனது தேவனாகிய ராஜாவே,
என் ஜெபத்தைக் கேளும்.
3 கர்த்தாவே, என் அன்பளிப்புகளை காலைதோறும் உமக்கு படைக்கிறேன்.
உம்மை உதவிக்காக நோக்குகிறேன், நீர் என் ஜெபங்களைக் கேளும்.
4 தேவனே, தீய ஜனங்கள் உம்மருகே வருவதை நீர் விரும்புகிறதில்லை.
தீய ஜனங்கள் உம்மை ஆராதிக்க முடியாது.
5 மூடர் உம்மிடம் வர இயலாது,
தீமை செய்யும் ஜனங்களை நீர் வெறுக்கிறீர்.
6 பொய் கூறும் ஜனங்களை நீர் அழிக்கிறீர்.
பிறரைத் தாக்குவதற்காக இரகசியமாகத் திட்டமிடுவோரை கர்த்தர் வெறுக்கிறார்.
7 கர்த்தாவே, உமது மிகுந்த இரக்கத்தினால் நான் உமது ஆலயத்திற்கு வருவேன்.
உமது பரிசுத்த ஆலயத்தை நோக்கித் தலை தாழ்த்தி அச்சத்தோடும், மரியாதையோடும் உம்மை வணங்குவேன்.
8 கர்த்தாவே, சரியான வாழ்க்கை வாழ உமது வழியைக்காட்டும்.
ஜனங்கள் எனது குறைகளைத் தேடுகிறார்கள்.
எனவே நான் எவ்வாறு வாழ நீர் விரும்புகிறீரோ, அவ்வழியை எனக்குக் காட்டும்.
9 அந்த ஜனங்கள் உண்மை பேசுவதில்லை அவர்கள் உண்மையைப் புரட்டும் பொய்யர்கள்.
அவர்கள் வாய்கள் திறந்த கல்லறைகளைப் போன்றவை.
அவர்கள் பிறரிடம் நயமான மொழிகளைச் சொல்வார்கள்.
ஆனால், அவர்கள் கண்ணியில் சிக்கவைப்பதற்காகவே அவ்வாறு செய்வார்கள்.
10 தேவனே, அவர்களைத் தண்டியும்.
அவர்கள் தங்கள் வலையிலேயே விழட்டும்.
அந்த ஜனங்கள் உமக்கெதிராகத் திரும்புகிறார்கள்.
எனவே அவர்களின் எண்ணிக்கையற்ற குற்றங்களுக்காக அவர்களைத் தண்டியும்.
11 ஆனால் தேவனை நம்பும் ஜனங்கள் களிகூரட்டும்.
என்றென்றும் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும்.
தேவனே, உமது நாமத்தை நேசிக்கும் ஜனங்களைப் பாதுகாத்து, பெலனைத் தாரும்.
12 கர்த்தாவே, நல்லோருக்கு நீர் நன்மை செய்தால்
அவர்களைக் காக்கும் பெருங்கேடகமாவீர்.
18 “ஆனால் அந்தப் பயங்கரமான நாட்கள் வரும்போது யூதாவே, நான் உன்னை முழுவதுமாக அழிக்கமாட்டேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். 19 “யூதாவிலுள்ள ஜனங்கள் உன்னிடம், ‘நமது தேவனாகிய கர்த்தர் இந்தத் தீயச்செயல்களை நமக்கு ஏன் செய்திருக்கிறார்?’ என்று கேட்டால், நீ அவர்களிடம், ‘யூதாவின் ஜனங்களாகிய நீங்கள் கர்த்தரை விட்டு விலகினீர்கள். உங்கள் சொந்த நாட்டில், அந்நிய நாட்டு விக்கிரகங்களுக்கு சேவை செய்திருக்கிறீர்கள். நீங்கள் அச்செயல்களைச் செய்தபடியால், இப்பொழுதும், உங்களுக்கு சொந்தமில்லாத நாட்டில் அந்நியருக்கு சேவைசெய்வீர்கள்’” என்று சொல்.
20 கர்த்தர் என்னிடம், “யாக்கோபின் குடும்பத்தாரையும்,
யூதா நாட்டினரையும் நோக்கி:
21 நீங்கள் மதிகேடர்கள்,
உங்களுக்குக் கண்கள் இருக்கின்றன,
ஆனால் நீங்கள் பார்க்கிறதில்லை!
உங்களுக்குக் காதுகள் இருக்கின்றன ஆனால் நீங்கள் கேட்கிறதில்லை!
22 நிச்சயமாக நீங்கள் எனக்குப் பயப்படுகிறீர்கள்” என சொல் என்றார்.
“எனக்கு முன்னால் நீங்கள் பயத்தால் நடுங்கவேண்டும்.
கடலுக்குக் கரைகளை எல்லையாக உண்டாக்கியவர் நானே.
இந்த வழியில் என்றென்றைக்கும் தண்ணீரானது அதனுடைய இடத்தில் இருக்குமாறு செய்தேன்.
கரையை அலைகள் தாக்கலாம்.
ஆனால் அவை அதனை அழிக்க முடியாது.
அலைகள் இரைந்துக்கொண்டு வரலாம்.
ஆனால் அது கரையைக் கடந்து போக முடியாது.
23 மறுபடியும் யூதாவின் ஜனங்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள்.
எனக்கு எதிராகத் திரும்ப அவர்கள் எப்பொழுதும் திட்டம் தீட்டுகிறார்கள்.
அவர்கள் என்னிடமிருந்து திரும்பி என்னை விட்டு விலகிவிட்டார்கள்.
24 யூதாவின் ஜனங்கள் தங்களுக்குள் இவ்வாறு சொல்லமாட்டார்கள்.
‘எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு பயப்படுவோம், மரியாதை செய்வோம்.
நமக்கு அவர் சரியான காலங்களில் மழையையும், முன்மாரியையும், பின்மாரியையும் கொடுக்கிறார்.
நாம் சரியான காலத்தில் அறுவடையைப் பெறுவோம்’ என்று அவர் உறுதி செய்கிறார்.
25 யூதாவின் ஜனங்களே! நீங்கள் தவறு செய்திருக்கிறீர்கள்.
எனவே மழையும் அறுவடையும் வரவில்லை.
கர்த்தரிடமிருந்து வரும் அந்த நன்மையை அனுபவிக்க உங்கள் பாவங்கள் தடுத்துவிட்டன.
26 என்னுடைய ஜனங்களிடையில் கெட்ட மனிதரும் இருக்கின்றனர்.
அந்தக் கெட்ட மனிதர்கள் பறவைகளைப் பிடிக்க வலைகளைச் செய்பவர்களை போன்றவர்கள்.
இந்த மனிதர்கள் தமது கண்ணிகளை வைப்பார்கள்.
ஆனால் அவர்கள் பறவைகளுக்குப் பதிலாக மனிதர்களைப் பிடிப்பார்கள்.
27 கூண்டுக்குள்ளே பறவைகள் இருப்பதுபோன்று,
இத்தீய ஜனங்களின் வீடுகளில் கபடங்கள் நிறைந்திருக்கும்.
அவர்களின் கபடங்கள் அவர்களை செல்வந்தர்களாகவும், வலிமையுள்ளவர்களாகவும் ஆக்கின.
28 அவர்கள் தாம் செய்த தீமைகளால் பெரிதாக வளர்ந்து கொழுத்துப்போயிருக்கிறார்கள்.
அவர்கள் செய்யும் தீமைகளுக்கு முடிவே இல்லை.
பெற்றோர்கள் இல்லாதிருக்கிற பிள்ளைகளின் வழக்கில் பரிந்து பேசுவதில்லை.
அந்த அனாதைகளுக்கு அவர்கள் உதவுவதில்லை.
ஏழை ஜனங்கள் நியாயமான தீர்ப்புப்பெற விடுவதில்லை.
29 இவற்றையெல்லாம் செய்துக்கொண்டிருக்கிற யூதாவின் ஜனங்களை நான் தண்டிக்கவேண்டுமா?”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
“இது போன்ற ஒரு தேசத்தாரை நான் தண்டிக்கவேண்டும், என்று உங்களுக்குத் தெரியும்.
அவர்களுக்குப் பொருத்தமான தண்டனைகளையே நான் தரவேண்டும்.”
30 கர்த்தர், “யூதா நாட்டிலே ஒரு பயங்கரமான
நடுங்கத்தக்க செயல் நடந்திருக்கிறது.
31 தீர்க்கதரிசிகள், பொய்களைக் கூறுகிறார்கள்.
ஆசாரியர்கள் எதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ அச்செயல்களைச் செய்வதில்லை.
என்னுடைய ஜனங்கள் இந்நிலையை விரும்புகிறார்கள்!
ஆனால், உங்கள் தண்டனை வரும்போது
நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று சொல்லுகிறார்.
13 நீங்கள் நற்செய்தியை ஏற்றுக்கொண்ட விதத்திற்காக நாங்கள் தேவனுக்குத் தொடர்ந்து நன்றி செலுத்துகிறோம். எங்களிடமிருந்து நீங்கள் நற்செய்தியைக் கேட்டீர்கள். அது மனிதர்களின் வார்த்தையன்று. தேவனுடைய வார்த்தை என்றும் ஏற்றுக்கொண்டீர்கள். அது உண்மையில் தேவனுடைய செய்திதான். அது விசுவாசமுள்ள உங்களிடம் பலன் தருகிறது. 14 சகோதர சகோதரிகளே! நீங்கள் யூதேயாவில் உள்ள கிறிஸ்துவுக்குள் இருக்கும் சபைகளைப் போன்றிருக்கிறீர்கள். யூதேயாவில் உள்ள தேவனுடைய மக்கள் மற்ற யூதர்களால் மிகவும் துன்புறுத்தப்பட்டார்கள். நீங்களும் உங்கள் சொந்த நாட்டு மக்களால் அதேவிதமாக துன்புறுத்தப்பட்டீர்கள் 15 அந்த யூதர்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைக் கொன்றார்கள். மேலும் அவர்கள் தீர்க்கதரிசிகளையும் கொன்றார்கள். எங்களை யூதேயாவை விட்டு வெளியேறும்படி அவர்கள் வற்புறுத்தினார்கள். தேவன் அவர்களுடன் மகிழ்ச்சியாயில்லை. அவர்கள் மக்களனைவருக்கும் எதிராக உள்ளனர். 16 யூதர்கள் அல்லாதவர்களுக்கு நாங்கள் போதனை செய்வதை அவர்கள் தடுக்க முயற்சிக்கிறார்கள். யூதர் அல்லாதவர்கள் இரட்சிக்கப்படும்பொருட்டு நாங்கள் அவர்களுக்குப் போதிக்கிறோம். ஆனால் அந்த யூதர்களோ தாம் ஏற்கெனவே செய்த பாவங்களோடு மேலும், மேலும் பாவம் செய்துகொண்டிருக்கிறார்கள். இப்போது தேவனுடைய கோபம் முழுமையாக அவர்கள் மீது வந்துள்ளது.
மீண்டும் அவர்களைப் பார்க்க விருப்பம்
17 சகோதர சகோதரிகளே! கொஞ்ச காலமாக நாங்கள் உங்களிடம் இருந்து பிரிக்கப்பட்டிருந்தோம். (அங்கே நாங்கள் உங்களோடு இல்லாவிட்டாலும் எங்கள் நினைவுகள் உங்களோடு இருந்தன.) உங்களைப் பார்க்க நாங்கள் மிகவும் விரும்பினோம். அதற்காக மிகவும் கடுமையாய் முயற்சி செய்தோம். 18 ஆம், உங்களிடம் வர நாங்கள் விரும்பினோம். உண்மையில் பவுலாகிய நான் பலமுறை வர முயன்றேன். ஆனால் சாத்தான் எங்களைத் தடுத்துவிட்டான். 19 நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது நாங்கள் பெருமைப்படக் கூடிய எங்களது நம்பிக்கையும், மகிழ்ச்சியும், கிரீடமும் நீங்கள் தானே. 20 உண்மையில் நீங்களே எங்கள் மகிழ்ச்சியும் மகிமையும் ஆவீர்கள்.
2008 by World Bible Translation Center