Revised Common Lectionary (Complementary)
43 தேவனே, உம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் இருக்கிறான்.
அவன் வஞ்சகன், பொய்யன்.
தேவனே, நான் நீதிமான் என்பதை நிரூபியும், என்னைப் பாதுகாத்தருளும்.
அம்மனிதனிடமிருந்து என்னைத் தப்புவியும்.
2 தேவனே, நீர் என் பாதுகாப்பிடம்.
ஏன் என்னைக் கைவிட்டீர்?
பகைவரிடமிருந்து தப்பும் வழியை நீர் ஏன் எனக்குக் காட்டவில்லை?
3 தேவனே, உமது ஒளியும் உண்மையும் என் மேல் பிகாசிப்பதாக.
உமது பரிசுத்த மலைக்கு அவை வழிகாட்டும்.
உமது வீட்டிற்கு அவை என்னை வழிநடத்தும்.
4 நான் தேவனுடைய பலிபீடத்திற்கு வருவேன்.
என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கிற தேவனிடம் நான் வருவேன்.
தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் வாழ்த்துவேன்.
5 ஏன் நான் துக்கமாயிருக்க வேண்டும்?
ஏன் நான் கலக்கம் கொள்ளவேண்டும்?
நான் தேவனுடைய உதவிக்காகக் காத்திருப்பேன்.
அவரைத் துதிக்கும் வாய்ப்பு இன்னும் எனக்கு கிடைக்கும்.
அவர் என்னை மீட்பார்.
ஜனங்கள் தேவனை மதிப்பதில்லை
6 சர்வ வல்லமையுள்ள கர்த்தர், “பிள்ளைகள் தமது பெற்றோரை மதிப்பார்கள். வேலைக்காரர்கள் தம் எஜமானரை மதிப்பார்கள். நான் உனது தந்தை. நீ ஏன் என்னை மதிப்பதில்லை? நான் உனது ஆண்டவர். நீ ஏன் எனக்கு மரியாதை தருவதில்லை? ஆசாரியர்களாகிய நீங்கள் என் பெயரை மதிப்பதில்லை” என்றார்.
ஆனால் நீங்கள், “நாங்கள் உமது பெயருக்கு மரியாதை தரவில்லை என்று எச்செயல் மூலம் கூறுகின்றீர்?” எனக் கேட்கிறீர்கள்.
7 கர்த்தர், “நீங்கள் எனது பலிபீடத்திற்கு சுத்தமற்ற அப்பத்தைக் கொண்டு வருகிறீர்கள்” என்றார்.
ஆனால் நீங்கள், “அந்த அப்பத்தைச் சுத்தமற்றதாகச் செய்கிறது எது?” என்று கேட்கிறீர்கள்.
கர்த்தர், “நீங்கள் எனது மேஜைக்கு (பலிபீடம்) மரியாதை காட்டுவதில்லை. 8 நீங்கள் குருட்டு விலங்குகளைப் பலியாக கொண்டு வருகிறீர்கள். அது தவறு. நீங்கள் நோயுற்றதும் நொண்டியானதுமான விலங்குகளை பலியாக கொண்டுவருகிறீர்கள். அது தவறு. அந்நோயுற்ற விங்குகளை உங்கள் ஆளுநருக்கு அன்பளிப்பாகக் கொடுக்க முயலுங்கள். அவன் நோயுற்ற விலங்குகளை அன்பளிப்பாக ஏற்றுக்கொள்வானா? இல்லை. அவன் அந்த அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளமாட்டான்” என்றார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
9 “ஆசாரியர்களே, நீங்கள் எங்களிடம் நல்லவராக இருக்கும்படி கர்த்தரிடம் கேளுங்கள். ஆனால் அவர் நீங்கள் சொல்வதைக் கேட்கமாட்டார். இது எல்லாம் உங்களுடைய தவறு” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.
10 “உறுதியாக, ஆசாரியர்களுள் சிலர் ஆலய கதவுகளை அடைத்து சரியாக நெருப்பைக் கொளுத்த முடியும். நான் உங்களிடம் மகிழ்ச்சியாக இருக்கமாட்டேன். நான் உங்கள் அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளமாட்டேன்” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.
11 “உலகைச் சுற்றிலும் உள்ள ஜனங்கள் எனது நாமத்தை மதிக்கிறார்கள். உலகைச் சுற்றிலும் உள்ள ஜனங்கள் எனக்கு நல்ல அன்பளிப்புகளைக் கொண்டு வருவார்கள். அவர்கள் எனக்கு நறுமணப் பொருட்களை அன்பளிப்பாக எரிக்கிறார்கள். ஏனென்றால் எனது நாமம் அந்த ஜனங்கள் அனைவருக்கும் மிக முக்கியமானது” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
12 “ஆனால் நீங்கள் என் நாமத்தை மதிப்பதில்லை. கர்த்தருடைய மேசை (பலிபீடம்) சுத்தமற்றதாக உள்ளது என்று நீங்கள் சொல்கிறீர்கள். 13 நீங்கள் அந்த மேசையில் உள்ள உணவை விரும்புவதில்லை. நீங்கள் அந்த உணவை நுகர்ந்து பார்த்து அதனை உண்ண மறுப்பீர்கள். அது கெட்டது என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் அது உண்மை இல்லை. பிறகு நீங்கள் நோயுள்ளதும், நொண்டியானதும், களவாடப்பட்டதுமான மிருகங்களை என்னிடம் கொண்டு வருகிறீர்கள். நீங்கள் எனக்கு நோயுற்ற விலங்குகளைப் பலியாகக் கொடுக்க முயல்கிறீர்கள். நான் உங்களிடமிருந்து அந்நோயுற்ற விலங்குகளை ஏற்றுக்கொள்ளமாட்டேன். 14 சில ஜனங்கள் நல்ல ஆண் மிருகங்களை வைத்திருப்பார்கள். அவர்களால் அவற்றை பலியாக கொடுக்கமுடியும். ஆனால் அவர்கள் அந்நல்ல மிருகங்களை எனக்குப் பலியாக கொடுக்கமாட்டார்கள். சிலர் எனக்கு நல்ல மிருகங்களைக் கொண்டு வருவார்கள். அவர்கள் அந்த ஆரோக்கியமான மிருகங்களை எனக்குத் தருவதாக வாக்குறுதியளிப்பார்கள். ஆனால் அவர்கள் ரகசியமாக அந்நல்ல மிருகங்களை மாற்றிவிட்டு எனக்கு நோயுற்ற மிருகங்களைத் தருவார்கள். அந்த ஜனங்களுக்குத் தீமைகள் ஏற்படும். நானே பேரரசன். நீங்கள் என்னை மதிக்க வேண்டும். உலகம் முழுவதுமுள்ள ஜனங்கள் என்னை மதிக்கின்றனர்!” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.
ஆசாரியர்களுக்கான விதிகள்
2 “ஆசாரியர்களே, இந்த விதி உங்களுக்குரியது. என்னைக் கவனியுங்கள்! நான் சொல்கின்ற வற்றில் கவனம் செலுத்துங்கள்! எனது பேரைக் கனம்பண்ணுங்கள். 2 நீங்கள் என் நாமத்தை மதிக்காவிட்டால் பிறகு உங்களுக்குத் தீமை ஏற்படும். நீங்கள் ஆசீர்வாதம் சொல்வீர்கள். ஆனால் அவை சாபங்களாகும். நான் உங்களுக்குத் தீமை ஏற்படும்படிச் செய்வேன். ஏனென்றால் நீங்கள் என் நாமத்திற்கு மரியாதை செய்யவில்லை!” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
3 “பாருங்கள். நான் உங்கள் சந்ததிகளைத் தண்டிப்பேன். விடுமுறையில் உங்கள் ஆசாரியர்கள் எனக்குப் பலி கொடுக்கிறார்கள். நீங்கள் மரித்த மிருகங்களின் சாணத்தையும் மற்ற பகுதிகளையும் எடுத்து வெளியே எறிகிறீர்கள். நான் அந்தச் சாணத்தை உங்கள் முகத்தில் இறைப்பேன். நீங்கள் அதனோடு வெளியே எறியப்படுவீர்கள். 4 பின்னர் நான் ஏன் இந்தக் கட்டளையைக் கொடுத்தேன் என்பதைக் கற்றுக் கொள்வாய். நான் இவற்றை உனக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். லேவியோடு நான் கொண்ட எனது உடன்படிக்கைத் தொடரும்” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
5 கர்த்தர், “நான் அந்த உடன்படிக்கையை லேவியோடு செய்தேன். நான் அவனுக்கு வாழ்வையும், சமாதானத்தையும் கொடுப்பதாக வாக்குறுதியளித்தேன். நான் அவனுக்கு அவற்றைக் கொடுத்தேன். லேவி என்னை மதித்தான். அவன் எனது நாமத்திற்கு மரியாதைச் செலுத்தினான். 6 லேவி சத்திய வேதத்தைப் போதித்தான். அவன் பொய்யானவற்றை போதிக்கவில்லை. லேவி நேர்மையானவன். அவன் சமாதானத்தை நேசித்தான். லேவி என்னைப் பின் தொடர்ந்தான். அநேகர் தங்கள் பாவ வழிகளை விட்டுவிலகச் செய்தான். அவர்களைக் காப்பாற்றினான். 7 ஒரு ஆசாரியன் தேவனுடைய போதனைகளை கற்றிருக்கவேண்டும். ஜனங்கள் ஆசாரியனிடம் சென்று தேவனுடைய போதனைகளை கற்றுக்கொள்ளவேண்டும். ஒரு ஆசாரியன் தேவனுடைய தூதுவனாக ஜனங்களுக்கு இருக்க வேண்டும்” என்றார்.
8 கர்த்தர், “ஆசாரியர்களாகிய நீங்கள் என்னைப் பின்பற்றுவதை நிறுத்தினீர்கள். நீங்கள் பலர் தவறு செய்வதற்காக போதனைகளைப் பயன்படுத்தினீர்கள். நீங்கள் வேவியோடு செய்த உடன்படிக்கையை அழித்தீர்கள்” என்றார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார். 9 “நீங்கள் நான் சொன்ன வழியில் வாழவில்லை. நீங்கள் என் போதனைகளை ஜனங்களுக்குப் போதிக்கையில் பட்சபாதம் காண்பித்தீர்கள். எனவே நான் உங்களை முக்கியமற்றவர்களாகச் செய்வேன். ஜனங்கள் உங்களுக்கு மரியாதை செலுத்தமாட்டார்கள்.”
13 “வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடுகாலம். நீங்கள் மாயமானவர்கள். பரலோக இராஜ்யத்தின் நுழைவாயிலை நீங்கள் அடைக்கிறீர்கள். நீங்களும் நுழைவதில்லை, நுழைய முயற்சிக்கும் மற்றவர்களையும் தடுக்கிறீர்கள். 14 [a]
15 “வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். நீங்கள் மாயமானவர்கள். கடல் கடந்தும் பல நாடுகளில் பயணம் செய்தும் உங்களுக்கு ஒரு சீஷனைத் தேடுகிறீர்கள். நீங்கள் அவனைக் கண்டடைந்து அவனை உங்களை விட மோசமானவனாக மாற்றுகிறீர்கள். மேலும் நரகத்திற்கு உரிய நீங்கள் மிகவும் பொல்லாதவர்களே.
16 “வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். மற்றவர்களை வழி நடத்தும் நீங்கள் குருடர்கள். நீங்கள் கூறுகிறீர்கள், ‘ஒருவன் தேவாலயத்தின் பெயரால் சத்தியம் செய்தால் அதனால் ஒன்றுமில்லை ஆனால், தேவாலயத்தில் உள்ள தங்கத்தின் பெயராலே சத்தியம் செய்தால், அவன் அதைக் காப்பாற்ற வேண்டும்!’ 17 நீங்கள் அறிவற்ற குருடர்கள். தங்கம் பெரிதா தேவாலயம் பெரிதா? தங்கத்தைப் பரிசுத்தமாக்குவது தேவாலயமே! எனவே, தேவாலயமே பெரியது.
18 “மேலும், நீங்கள் கூறுகிறீர்கள், ‘ஒருவன் தேவாலயத்திலுள்ள பலிபீடத்தின் பெயரால் சத்தியம் செய்தால் அதனால் ஒன்றுமில்லை. ஆனால், ஒருவன் பலிபீடத்திலுள்ள பலிப்பொருளின் பெயரால் சத்தியம் செய்தால், அவன் அதைக் காப்பாற்ற வேண்டும்!’ 19 நீங்கள் குருடர்கள், உங்களுக்கு எதுவும் புரிவதில்லை. படைத்த பொருள் பெரிதா? பலிபீடம் பெரிதா? படைத்த பொருளை பரிசுத்தப்படுத்துவது பலிபீடமே. ஆகவே பலிபீடமே பெரியது. 20 பலிபீடத்தின் பெயராலே சத்தியம் செய்கிறவன் உண்மையில் பலிபீடத்தையும் அதில் உள்ள அனைத்துப் பொருளையும் பயன்படுத்துகிறான். 21 மேலும் தேவாலயத்தின் பெயரால் சத்தியம் செய்கிறவன், உண்மையில் தேவாலயத்தையும் அதில் வாசம் செய்பவரையும் பயன்படுத்துகிறான். 22 பரலோகத்தின் பெயரால் சத்தியம் செய்கிறவன் தேவனின் அரியாசனத்தின் பெயராலும் அதில் அமர்கிறவரின் பெயராலும் சத்தியம் செய்கிறான்.
23 “வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். நீங்கள் மாயமானவர்கள். உங்கள் உடமைகள் அனைத்திலும் பத்தில் ஒரு பாகம் கர்த்தருக்குக் காணிக்கையாக்குகிறீர்கள். புதினா, வெந்தயம் மற்றும் சீரகத்திலும் கூட. ஆனால் கட்டளைகளில் மிக முக்கியமானவற்றை நீங்கள் பின்பற்றுவதில்லை. அதாவது, நியாயமாகவும் கருணையுடனும் நேர்மையாகவும் விளங்கவேண்டும் என்பதை விட்டுவிடுகிறீர்கள். இவைகளே நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய செயல்கள். மேலும் மற்ற நற்செயல்களையும் தொடர்ந்து செய்து வர வேண்டும். 24 நீங்கள் மற்றவர்களை வழிநடத்துகிறீர்கள். ஆனால், நீங்களோ குருடர்கள். பானத்திலிருந்து ஒரு சிறு ஈயை எடுத்து எறிந்துவிட்டு, ஒட்டகத்தை விழுங்குகிறவனைப் போன்றவர்கள் நீங்கள்.
25 “வேதபாரகர்களே! பரிசேயர்களே! நீங்கள் மாயமானவர்கள். உங்கள் கோப்பைகளையும் பாத்திரங்களையும் வெளிப்புறம் நன்கு கழுவுகிறீர்கள். (சுத்தம் செய்கிறீர்கள்) ஆனால் அவற்றின் உள்ளே நீங்கள் மற்றவர்களை ஏமாற்றி உங்கள் விருப்பத்தின்படி சேர்த்த பொருட்களால் நிரம்பியுள்ளது. 26 பரிசேயர்களே, நீங்கள் குருடர்கள். முதலில் கோப்பையின் உள்ளே சுத்தம் செய்யுங்கள், பின், கோப்பையின் வெளிப்புறம் உண்மையிலேயே சுத்தமாகும்.
27 “வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். நீங்கள் மாயமானவர்கள். நீங்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளைப் போன்றவர்கள். அக்கல்லறைகளின் வெளிப்புறம் நன்றாக இருக்கிறது. ஆனால், உள்ளே முழுவதும், இறந்தவர்களின் எலும்புகளும், அசுத்தங்கள் பலவும் இருக்கின்றன. 28 அதே போலத்தான் நீங்களும், உங்களைக் காண்கிறவர்கள் உங்களை நல்லவர்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால், உள்ளுக்குள் நீங்கள் (முழுக்கவும்) மாயமும் தீமையும் நிறைந்தவர்கள்.
2008 by World Bible Translation Center