Revised Common Lectionary (Complementary)
43 தேவனே, உம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் இருக்கிறான்.
அவன் வஞ்சகன், பொய்யன்.
தேவனே, நான் நீதிமான் என்பதை நிரூபியும், என்னைப் பாதுகாத்தருளும்.
அம்மனிதனிடமிருந்து என்னைத் தப்புவியும்.
2 தேவனே, நீர் என் பாதுகாப்பிடம்.
ஏன் என்னைக் கைவிட்டீர்?
பகைவரிடமிருந்து தப்பும் வழியை நீர் ஏன் எனக்குக் காட்டவில்லை?
3 தேவனே, உமது ஒளியும் உண்மையும் என் மேல் பிகாசிப்பதாக.
உமது பரிசுத்த மலைக்கு அவை வழிகாட்டும்.
உமது வீட்டிற்கு அவை என்னை வழிநடத்தும்.
4 நான் தேவனுடைய பலிபீடத்திற்கு வருவேன்.
என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கிற தேவனிடம் நான் வருவேன்.
தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் வாழ்த்துவேன்.
5 ஏன் நான் துக்கமாயிருக்க வேண்டும்?
ஏன் நான் கலக்கம் கொள்ளவேண்டும்?
நான் தேவனுடைய உதவிக்காகக் காத்திருப்பேன்.
அவரைத் துதிக்கும் வாய்ப்பு இன்னும் எனக்கு கிடைக்கும்.
அவர் என்னை மீட்பார்.
13 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 2 “மனுபுத்திரனே, நீ எனக்காக இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளிடம் பேச வேண்டும். அத்தீர்க்கதரிசிகள் உண்மையில் எனக்காகப் பேசவில்லை, அவர்கள் தாம் சொல்ல விரும்புவதையே சொல்கிறார்கள். எனவே நீ அவர்களிடம் பேசவேண்டும். அவர்களிடம் இவற்றைப் பேசு, ‘கர்த்தரிடமிருந்து வந்த இச்செய்தியைக் கேளுங்கள்! 3 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார். மூடத் தீர்க்கதரிசிகளே, உங்களுக்குத் தீயவை ஏற்படும். நீங்கள் உங்களது சொந்த ஆவிகளைப் பின்பற்றுகிறீர்கள். நீங்கள் உண்மையில் எவற்றைத் தரிசிக்கிறீர்களோ அவற்றை ஜனங்களிடம் கூறுவதில்லை.
4 “‘இஸ்ரவேலே, உங்கள் தீர்க்கதரிசிகள் வனாந்தரங்களிலும் பாழடைந்த கட்டிடங்களிலும் வாழும் நரிகளுக்கு ஒப்பானவர்கள். 5 நீங்கள் நகரத்தின் உடைந்த சுவர்களுக்கு அருகில் படை வீரர்களை நிறுத்தி வைக்கவில்லை. நீங்கள் இஸ்ரவேல் வம்சத்தாரைப் பாதுகாப்பதற்காக சுவர்களைக் கட்டியிருக்கவில்லை. எனவே கர்த்தர் உங்களைத் தண்டிக்கும் காலம் வரும்போது நீங்கள் போரை இழப்பீர்கள்!
6 “‘பொய்த் தீர்க்கதரிசிகள் தரிசனங்களைக் கண்டதாகக் கூறினார்கள். அவர்கள் தம் மந்திரங்களைச் செய்தார்கள். அவர்கள் எதிர்காலத்தைக் குறித்து தீர்க்கதரிசனம் சொன்னார்கள். ஆனால் அவர்கள் பொய் சொன்னார்கள். அவர்கள் தம்மை கர்த்தர் அனுப்பியதாகச் சொன்னார்கள். ஆனால் அவர்கள் பொய் சொன்னார்கள். அவர்கள் இன்னும் தாம் கூறிய பொய்கள் உண்மையாவதற்காக காத்திருக்கிறார்கள்.
7 “‘பொய்த் தீர்க்கதரிசிகளே, நீங்கள் கண்ட தரிசனங்களெல்லாம் உண்மையல்ல. நீங்கள் உங்கள் மந்திரங்களைச் செய்தீர்கள். சில நிகழும் என்றீர்கள். ஆனால் நீங்கள் பொய் சொன்னீர்கள்! கர்த்தர் அவற்றைக் கூறியதாக நீங்கள் சொன்னீர்கள். ஆனால் நான் உங்களிடம் பேசவில்லை!’”
8 எனவே இப்போது, எனது கர்த்தராகிய ஆண்டவர் உண்மையிலேயே பேசுவார்! அவர் கூறுகிறார்: “நீங்கள் பொய்களைச் சொன்னீர்கள். நீங்கள் உண்மையற்ற தரிசனங்களைப் பார்த்தீர்கள். எனவே நான் (தேவன்) இப்பொழுது உங்களுக்கு எதிராக இருக்கிறேன்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இதனைச் சொன்னார். 9 கர்த்தர் கூறுகிறார்: “பொய்த் தரிசனங்களைப் பார்த்து பொய் சொன்ன தீர்க்கதரிசிகளை நான் தண்டிப்பேன். அவர்களை என் ஜனங்களிடமிருந்து விலக்குவேன். இஸ்ரவேல் வம்சத்தாரின் பட்டியலில் அவர்களின் பெயர்கள் இருக்காது. அவர்கள் மீண்டும் இஸ்ரவேல் நாட்டிற்கு வரமாட்டார்கள். பிறகு, நான்தான் கர்த்தராகிய ஆண்டவர் என்றும், நீங்கள் அறிவீர்கள்!
10 “மீண்டும், மீண்டும் அந்தப் பொய்த் தீர்க்கதரிசிகள் என் ஜனங்களிடம் பொய் சொல்கிறார்கள். சமாதானம் இருக்கிறது என்று தீர்க்கதரிசிகள் சொன்னார்கள். ஆனால் அங்கே சமாதானம் இல்லை. ஜனங்களுக்கு சுவரை நிர்மாணித்து போர் செய்ய தயாராகிட அவசியம் இருந்தது. ஆனால் அவர்கள் உடைந்த சுவரின் மேல் ஒரு மெல்லிய பூச்சை மட்டுமே பூசினார்கள். 11 நான் கல்மழையையும் பெருமழையையும் (பகைவர் படை) அனுப்புவேன் என்று அம்மனிதர்களிடம் சொல். காற்று கடுமையாக அடிக்கும். புயல் காற்றும் வரும். 12 பிறகு அந்தச் சுவர் கீழே விழும். ஜனங்கள் தீர்க்கதரிசிகளிடம், ‘சுவரில் நீங்கள் பூசிய பூச்சு என்னவாயிற்று?’ என்று கேட்பார்கள்.” 13 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “நான் கோபமாக இருக்கிறேன். நான் உனக்கு எதிராகப் பலமான புயல் காற்றை அனுப்புவேன். நான் கோபமாக இருக்கிறேன். நான் உனக்கு எதிராகப் பெருமழையை அனுப்புவேன். நான் கோபமாக இருக்கிறேன். நான் வானத்திலிருந்து பெருங்கல் மழையைப் பொழியச் செய்து உன்னை முழுமையாக அழிப்பேன்! 14 நீங்கள் அவற்றில் பூச்சு பூசினீர்கள். ஆனால் நான் முழுச் சுவற்றையும் அழித்துவிட்டேன். அதைத் தரையிலே விழப்பண்ணுவேன். அச்சுவர் உன்மீது விழும். பிறகு, நான்தான் கர்த்தர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். 15 நான் சுவருக்கும் சாந்து பூசினவர்களுக்கும் எதிரான எனது கோபத்தை முடிப்பேன். பிறகு நான் சொல்லுவேன்; ‘சுவரும் இல்லை, சாந்து பூசின வேலைக்காரர்களும் இல்லை.’
16 “இஸ்ரவேலில் உள்ள பொய்த் தீர்க்கதரிசிகளுக்கு இவை எல்லாம் ஏற்படும். அத்தீர்க்கதரிசிகள் எருசலேம் ஜனங்களிடம் பேசுகிறார்கள். அத்தீர்க்கதரிசிகள் சமாதானம் உண்டென்று சொல்கிறார்கள். ஆனால் சமாதானம் இல்லை” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைச் சொன்னார்.
போலிப் போதகர்கள்
2 கடந்த காலத்தில் தேவனுடைய மக்கள் மத்தியில் போலியான தீர்க்கதரிசிகளும் இருந்தனர். அதே வழியில், உங்கள் குழுவிலும் போலிப் போதகர்கள் கூட இருப்பார்கள். யாரும் பார்க்காத வகையில் இப்போலிப் போதகர்கள் மோசமான போதனைகளை அறிமுகப்படுத்துவார்கள். தங்களை மீட்டுக்கொண்டவரும், தங்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தந்தவருமான எஜமானரை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள். எனவே அவர்கள் விரைவில் தங்களை அழித்துக்கொள்வார்கள். 2 அவர்கள் செய்கிற தீய செயல்களில் பலரும் அவர்களைப் பின்பற்றுவார்கள். அம்மக்களினால் பிற மக்கள் உண்மை வழியைக் குறித்து தீயவற்றைப் பேசுவர். 3 அவர்களின் பேராசையால் அந்தப் போலிப் போதகர்கள் உண்மையற்ற போலியான போதனைகள் மூலம் உங்களைப் பயன்படுத்திக்கொள்வார்கள். வெகு காலத்திற்கு முன்பே தேவன் அவர்களுக்குத் தண்டனையை அறிவித்தார். இது வெறும் அச்சமூட்டத்தக்க பேச்சு அல்ல, அவர்களின் அழிவு தயாராகக் காத்திருக்கிறது.
2008 by World Bible Translation Center