Revised Common Lectionary (Complementary)
43 தேவனே, உம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் இருக்கிறான்.
அவன் வஞ்சகன், பொய்யன்.
தேவனே, நான் நீதிமான் என்பதை நிரூபியும், என்னைப் பாதுகாத்தருளும்.
அம்மனிதனிடமிருந்து என்னைத் தப்புவியும்.
2 தேவனே, நீர் என் பாதுகாப்பிடம்.
ஏன் என்னைக் கைவிட்டீர்?
பகைவரிடமிருந்து தப்பும் வழியை நீர் ஏன் எனக்குக் காட்டவில்லை?
3 தேவனே, உமது ஒளியும் உண்மையும் என் மேல் பிகாசிப்பதாக.
உமது பரிசுத்த மலைக்கு அவை வழிகாட்டும்.
உமது வீட்டிற்கு அவை என்னை வழிநடத்தும்.
4 நான் தேவனுடைய பலிபீடத்திற்கு வருவேன்.
என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கிற தேவனிடம் நான் வருவேன்.
தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் வாழ்த்துவேன்.
5 ஏன் நான் துக்கமாயிருக்க வேண்டும்?
ஏன் நான் கலக்கம் கொள்ளவேண்டும்?
நான் தேவனுடைய உதவிக்காகக் காத்திருப்பேன்.
அவரைத் துதிக்கும் வாய்ப்பு இன்னும் எனக்கு கிடைக்கும்.
அவர் என்னை மீட்பார்.
ஏலியின் குடும்பத்தைப் பற்றிய பயங்கரமான தீர்க்கதரிசனம்
27 தேவனுடைய மனிதன் ஒருவன் ஏலியிடம் வந்தான். அவன், “கர்த்தர் இவற்றைச் சொன்னார், ‘உன் முற்பிதாக்கள் எகிப்தில் பார்வோனின் அடிமைகளாய் இருந்தார்கள். அந்த காலத்தில் நான் உன் முற்பிதாக்களுக்குத் தோன்றினேன். 28 நான் உன் கோத்திரத்தை மற்ற எல்லா இஸ்ரவேல் கோத்திரங்களிலிருந்தும் தேர்ந்தெடுத்தேன். உனது சந்ததியை எனது ஆசாரியர்களாகத் தேர்ந்தெடுத்தேன். அவர்களை என் பலிபீடத்திற்குப் பலி செலுத்துகிறவர்களாகத் தேர்ந்தெடுத்தேன். அவர்களை நான் ஏபோத் அணியவும் நறுமணப் பொருட்களை எரிக்கவும் தேர்ந்தெடுத்தேன். இஸ்ரவேலர், எனக்குத் தரும் பலிகளிலிருந்து இறைச்சியை உங்கள் கோத்திரம் உண்ணும்படியும் செய்தேன். 29 இவ்வாறு இருக்க நீங்கள் ஏன் எனது அன்பளிப்புகளையும் பலி பொருட்களையும் மதிப்பதில்லை? நீ என்னைவிட உன் குமாரர்களையே அதிகம் உயர்த்துகிறாய். இஸ்ரவேலர், இறைச்சியை எனக்காக கொண்டு வரும்போது, அதன் நல்ல பாகங்களையெல்லாம் தின்று நீங்கள் கொழுத்துப்போய் இருக்கிறீர்கள்.’
30 “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், உங்கள் தந்தையின் குடும்பமே, எல்லா காலத்திலும் சேவை செய்யும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால் இப்போது கர்த்தர் சொல்கிறார், ‘அது அவ்வாறு நடக்காது! என்னை கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம்பண்ணுவேன். என்னை அசட்டை செய்பவர்களுக்கு தீமை ஏற்படும். 31 உனது சந்ததிகளையெல்லாம் அழிக்கின்ற காலம் வந்துவிட்டது. உன் குடும்பத்தில் உள்ள யாரும் முதிய வயதுவரை வாழமாட்டார்கள். 32 இஸ்ரவேல் ஜனங்களுக்கு நன்மைகள் ஏற்படும், ஆனால் உன் வீட்டில் மட்டும் தீமை ஏற்படுவதைக் காண்பாய். உன் குடும்பத்தில் யாரும் முதுமைவரை வாழமாட்டார்கள். 33 நான் ஒருவனை மாத்திரம் ஆசாரியனாக என் பலிபீடத்தில் சேவை செய்யப் பாதுகாப்பேன். அவன் முதுமைவரை வாழ்வான். அவன் கண்பார்வை போகு மட்டும், சக்தியெல்லாம் ஓயுமட்டும் வாழ்வான். உன் சந்ததிகள் எல்லோரும் வாளால் மரித்துப் போவார்கள். 34 இவைகள் உண்மையில் நிறைவேறும் என்பதற்கும் ஒரு அடையாளம் காட்டுவேன். உனது குமாரர்களான ஓப்னியும் பினெகாசம் ஒரே நாளில் மரித்து போவார்கள். 35 நான் எனக்காக ஒரு உண்மையுள்ள ஆசாரியனைத் தேர்ந்தெடுத்துக்கொள்வேன். அவன் எனக்குச் செவிகொடுத்து நான் சொல்லுகிறபடி செய்வான். நான் அந்த ஆசாரியனின் குடும்பத்தைப் பலமுள்ளதாகச் செய்வேன். அவன் அபிஷேகம் செய்யப்பட்ட எனது ராஜாவின் முன்னிலையில் எப்போதும் சேவை செய்வான். 36 பிறகு உன் குடும்பத்தில் மீதியான எல்லோரும் வந்து அந்த ஆசாரியன் முன்பு பணிந்து, வணங்கி நிற்பார்கள். அவர்கள் ஒரு துண்டு ரொட்டிக்காகவும், சில்லறை காசுகளுக்காகவும் பிச்சை எடுப்பார்கள். அப்போது அவர்கள், “தயவு செய்து எனக்கு ஆசாரியன் வேலை தாரும். அதனால் நான் உண்ண உணவை பெறுவேன் என்று வேண்டுவார்கள்”’” என்று கூறினான்.
யூதர்களும் நியாயப்பிரமாணமும்
17 நீ என்ன செய்யப்போகிறாய்? நீ யூதனென்று சொல்லிக்கொள்கிறாய். நீ நியாயப் பிரமாணத்தில் விசுவாசம் வைத்து தேவனுக்கு நெருக்கமாய் இருப்பதாகப் பெருமையோடு சொல்லிக்கொள்கிறாய். 18 தேவன் உனக்கு என்ன செய்ய விரும்புகிறார் என்று உனக்குத் தெரியும். நீ நியாயப்பிரமாணத்தைக் கற்றவனாதலால் உனக்கு எது முக்கியமானது என்றும் தெரியும். 19 என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிற மக்களுக்கு நீங்களே வழிகாட்டி என எண்ணிக்கொள்கிறீர்கள். பாவ இருட்டில் உள்ள மக்களுக்கு நீங்களே வெளிச்சம் என்று நினைத்துக்கொள்கிறீர்கள். 20 அறிவற்ற மக்களுக்குச் சரியானதைக் காட்ட முடியும் என்று கருதுகிறீர்கள். இன்னும் கற்கவேண்டிய அவசியம் உள்ளவர்களுக்கு நீங்களே குரு என்றும் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களிடம் நியாயப்பிரமாணம் இருப்பதால் எல்லாம் உங்களுக்குத் தெரியும் என்றும், எல்லா உண்மைகளும் உங்களிடம் இருப்பதாகவும் எண்ணுகிறீர்கள். 21 நீங்கள் மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறீர்கள். நீங்கள் ஏன் கற்றுக்கொள்ளக் கூடாது? நீங்கள் மற்றவர்களிடம் களவு செய்யக்கூடாது என்று கூறுகிறீர்கள். ஆனால் நீங்களே களவு செய்கிறீர்கள். 22 நீங்கள் மற்றவர்களிடம் விபச்சாரம் செய்யக் கூடாது என்று கூறுகிறீர்கள். ஆனால் நீங்களே அதே பாவத்தைச் செய்யும் பாவிகளாக இருக்கிறீர்கள். சிலைகளை நீங்கள் வெறுக்கிறீர்கள். ஆனால் அதே கோவில்களைக் கொள்ளையடிக்கிறீர்கள். 23 நீங்கள் தேவனுடைய நியாயப்பிரமாணம் பற்றிப் பெருமையாகப் பேசுகிறீர்கள். ஆனால் அதை மீறி நடந்து தேவனுக்கு அவமானத்தை உருவாக்குகிறீர்கள். 24 “யூதர்களால்தான் யூதர் அல்லாதவர்கள் தேவனைப் பற்றி இழிவாகப் பேசுகிறார்கள்”(A) என்று வேத வாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது.
25 நீங்கள் நியாயப்பிரமாணத்தைக் கடைபிடித்தால்தான் விருத்தசேதனம் செய்துகொண்டதில் பொருள் உண்டு. நீங்கள் சட்ட விதிகளை மீறுவீர்களேயானால் நீங்கள் விருத்தசேதனம் செய்தும் அது பயனற்றதாகிறது. 26 யூதர் அல்லாதவர்கள் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்களே. எனினும் அவர்கள் சட்டவிதிகளின்படி வாழ்வார்களேயானால் அவர்களும் விருத்தசேதனம் செய்துகொண்டவர்களாகவே கருதப்படுவர். 27 யூதர்களாகிய உங்களுக்கு எழுதப்பட்ட சட்டவிதிகளும், விருத்தசேதனமும் உள்ளன. ஆனால் அவற்றை நீங்கள் மீறுகிறீர்கள். எனவே தம் சரீரங்களில் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்களாக இருந்தும் கூட சட்ட விதிகளை மதித்து நடப்பவர்கள் உங்கள் குற்றத்தை நிரூபித்து விடுகிறார்கள்.
28 சரீரத்தால் யூதனாகப் பிறந்தவன் எவனும் உண்மையில் யூதன் அல்லன். உண்மையான விருத்தசேதனம் என்பது சரீரத்தளவில் செய்யப்படுவது அல்ல. 29 மனத்தளவில் யூதனாக இருப்பவனே உண்மையான யூதன். உண்மையான விருத்தசேதனம் இருதயத்தில் செய்யப்படுவது. அது ஆவியால் செய்யப்படுவது. அது எழுதப்பட்ட ஆணைகளால் செய்யப்படுவதல்ல. ஆவியின் மூலம் இதயத்தில் விருத்தசேதனம் செய்யப்படும் ஒருவன் மக்களால் புகழப்படாவிட்டாலும் தேவனால் புகழப்படுவான்.
2008 by World Bible Translation Center