Revised Common Lectionary (Complementary)
இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்குரியவர்கள்
19 கர்த்தர் மோசேயிடம், 2 “அனைத்து இஸ்ரவேல் ஜனங்களுக்கும் நீ கூற வேண்டியதாவது: நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். நான் பரிசுத்தமானவர். எனவே, நீங்களும் பரிசுத்தமாய் இருக்கவேண்டும்.
15 “நீங்கள் நியாயத்தீர்ப்பில் நடுநிலையுடன் இருங்கள். ஒருவன் ஏழை என்பதினால் சிறப்பான சலுகையோ அல்லது ஒருவர் முக்கியமான மனிதர் என்பதினால் விசேஷ சலுகையோ செய்யக் கூடாது. உனது அயலானுக்குத் தீர்ப்பளிக்கும்போது நடுநிலையில் இருந்து சொல்ல வேண்டும். 16 மற்றவர்களைப்பற்றிய பொய்க் கதைகளைப் பரப்பிக்கொண்டு திரியக் கூடாது. அயலானின் வாழ்வுக்கு ஆபத்து ஏற்படும்படி நீ எதுவும் செய்யக்கூடாது. நானே கர்த்தர்!
17 “உன் மனதில் உன் சகோதரனை நீ வெறுக்கக் கூடாது. உனது அயலான் உனக்குக் கெடுதல் செய்தால் அதைப்பற்றி அவனிடம் பேசு, பின் அவனை மன்னித்துவிடு. 18 உனக்கு ஜனங்கள் செய்த தீமைகளை மறந்துவிடு. பழிவாங்க முயற்சி செய்யாதே. உனது அயலானையும் உன்னைப்போல நேசி. நானே கர்த்தர்!
புத்தகம் 1
1 தீய ஜனங்களின் அறிவுரையைக் கேளாமலும், பாவிகளைப்போன்று வாழாமலும்,
தேவனை மதிக்காத ஜனங்களோடு சேராமலும், இருக்கிற மனிதன் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பான்.
2 ஒரு நல்ல மனிதன் கர்த்தருடைய போதனைகளை நேசிக்கிறான்.
அவற்றைக் குறித்து அவன் இரவும் பகலும் தியானிக்கிறான்.
3 அம்மனிதன் நீரோடைகளின் கரையில் நடப்பட்ட ஒரு மரத்தைப்போன்று வலிமையுள்ளவனாக இருக்கிறான்.
தக்கசமயத்தில் பலன் தருகிற மரத்தைப்போல் அவன் காணப்படுகிறான்.
உதிராமலிருக்கிற இலைகளைக்கொண்ட மரத்தைப்போல் அவன் இருக்கிறான்.
அவன் செய்கின்ற செயல்கள் எல்லாவற்றிலும் அவன் வெற்றி பெறுவான்.
4 ஆனால் தீயோர் அப்படியிரார்கள்.
அத்தீய ஜனங்கள் காற்றில் பறக்கிற உமியைப் போன்றவர்கள்.
5 ஒரு நீதிமன்றத்தின் வழக்கை முடிவுகட்டுவதற்காக நல்ல ஜனங்கள் கூடியிருக்கும்போது தீயோர் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படுவார்கள்.
அந்தப் பாவிகள் குற்றமற்றவர்களாகக் கருதப்படமாட்டார்கள்.
6 ஏன்? கர்த்தர் நல்ல ஜனங்களைக் காப்பாற்றுகிறார்.
தீயோரை அவர் அழிக்கிறார்.
தெசலோனிக்கேயாவில் பவுலின் பணி
2 சகோதர சகோதரிகளே! உங்களை நாடி நாங்கள் வந்தது வீணாகவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். 2 உங்களிடம் வரும் முன்பு நாங்கள் பிலிப்பியில் துன்புற்றோம். அங்குள்ள மக்கள் எங்களுக்கு எதிராகக் கெட்டதாகப் பேசினார்கள். உங்களுக்கு அவை பற்றித் தெரியும். நாங்கள் உங்களிடம் வந்தபோது பலர் எதிர்த்தார்கள். ஆனால் தைரியமாக இருக்க தேவன் உதவினார். நற்செய்தியை உங்களிடம் கூறவும் உதவி செய்தார். 3 நாங்கள் மக்களுக்கு ஊக்கமூட்டுகிறோம். ஒருவரும் எங்களை முட்டாளாக்கவில்லை. நாங்கள் தீயவர்கள் அல்லர். மக்களிடம் நாங்கள் தந்திரம் செய்ய முயற்சிக்கவில்லை. 4 நாங்கள் நற்செய்தியைப் பரப்புகிறோம். ஏனென்றால் எங்களை சோதித்து அறிந்த பின் நற்செய்தியைச் சொல்லும் பொருட்டு தேவன் எங்கள் மேல் நம்பிக்கை வைத்துள்ளார். ஆகவே நாங்கள் மனிதர்களை திருப்பதிப்படுத்த விரும்பவில்லை. தேவனை திருப்திப்படுத்தவே விரும்புகிறோம். தேவன் ஒருவரே நம் இதயங்களைத் தொடர்ந்து சோதனை செய்ய வல்லவர்.
5 உங்களைப் பற்றி உங்களுக்குப் பிடித்த வகையில் முகஸ்துதி செய்து திருப்திப்படுத்த நாங்கள் ஒருபோதும் முயலவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். நாங்கள் உங்கள் பணத்தையும் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யவில்லை. உங்களிடம் மறைக்கத்தக்க சுயநலம் எதுவும் எங்களிடம் இருந்ததில்லை. இது உண்மை என்பது தேவனுக்குத் தெரியும். 6 எவ்வித பாராட்டையும் மக்களிடம் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. உங்களிடமிருந்தோ வேறு யாரிடமிருந்தோ நாங்கள் எந்தப் பாராட்டையும் எதிர்பார்க்கவில்லை.
7 நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலர். எனவே நாங்கள் உங்களோடு இருக்கும்போது சில காரியங்களை நீங்கள் செய்யும் பொருட்டு உங்கள் மீது அதிகாரம் செலுத்தி இருக்ககூடும். எனினும் நாங்கள் மென்மையாகவே நடந்துகொண்டோம். ஒரு தாய் தன் குழந்தையைப் பாதுகாப்பது போன்று இருந்தோம். 8 உங்களை நாங்கள் பெரிதும் நேசித்தோம். எனவே, தேவனுடைய நற்செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைந்தோம். அதோடு மட்டுமல்லாமல், எங்கள் வாழ்க்கையையும் உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ந்தோம்.
எந்தக் கட்டளை மிக முக்கியமானது
(மாற்கு 12:28-34; லூக்கா 10:25-28)
34 சதுசேயர்களால் வாதிட இயலாதபடி இயேசு பதில் அளித்தார் என்று பரிசேயர்கள் அறிந்தனர். எனவே, பரிசேயர்கள் ஒன்று கூடினார்கள். 35 ஒரு பரிசேயன் மோசேயின் சட்டத்தை நன்கு கற்றவன். அவன் இயேசுவைச் சோதிக்க ஒரு கேள்வி கேட்டான், 36 “மோசேயின் சட்டங்களில் எது மிக முக்கியமானது?” என்று அந்தப் பரிசேயன் கேட்டான்.
37 இயேசு அதற்கு, “‘உன் தேவனாகிய கர்த்தரை நேசிக்க வேண்டும். முழு இதயத்தோடும் ஆத்துமாவோடும் முழு மனதோடும் அவரை நேசிக்க வேண்டும்.’(A) 38 இது தான் முதலாவது மிக முக்கியமானதுமான கட்டளை. 39 இரண்டாவது கட்டளையும் முதலாவது கட்டளைப் போன்றதே ‘நீ உன்னை நேசிப்பதைப்போலவே மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்.’(B) 40 எல்லா கட்டளைகளும், தீர்க்கதரிசிகளின் எழுத்துக்களும் இந்த இரண்டு கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டவைதான்” என்றார்.
பரிசேயர்களிடம் கேள்வி
(மாற்கு 12:35-37; லூக்கா 20:41-44)
41 பரிசேயர்கள் ஒன்றாய் கூடியிருந்த பொழுது, இயேசு அவர்களை ஒரு கேள்வி கேட்டார். 42 “கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய குமாரன்?” என்றார்.
அதற்குப் பரிசேயர்கள், “கிறிஸ்து தாவீதின் குமாரன்.” என்றனர்.
43 பின் இயேசு பரிசேயர்களிடம் கூறினார், “பின் எதற்காக தாவீது அவரை ‘ஆண்டவரே’ என்றழைத்தார்? தாவீது பரிசுத்த ஆவியின் வல்லமையாலே பேசினார். தாவீது சொன்னது இதுவே:
44 “‘கர்த்தர் (தேவன்) எனது ஆண்டவரிடம் (கிறிஸ்து) கூறினார்:
எனது வலது பக்கத்தின் அருகில் உட்காரும்;
உம் எதிரிகளை உம் கட்டுக்குள் வைப்பேன்!’(C)
45 தாவீது ‘ஆண்டவர்’ என கிறிஸ்துவை அழைக்கிறார். எனவே கிறிஸ்து எப்படி தாவீதின் குமாரனாக முடியும்?” என்று கேட்டார் இயேசு.
46 பரிசேயர்கள் ஒருவராலும் இயேசுவின் கேள்விகளுக்குப் பதில் கூற முடியவில்லை. அந்த நாளிலிருந்து இயேசுவை ஏமாற்றி கேள்வி கேட்க முயற்சி செய்யும் துணிவு யாருக்கும் வரவில்லை.
2008 by World Bible Translation Center