Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 1

புத்தகம் 1

தீய ஜனங்களின் அறிவுரையைக் கேளாமலும், பாவிகளைப்போன்று வாழாமலும்,
    தேவனை மதிக்காத ஜனங்களோடு சேராமலும், இருக்கிற மனிதன் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பான்.
ஒரு நல்ல மனிதன் கர்த்தருடைய போதனைகளை நேசிக்கிறான்.
    அவற்றைக் குறித்து அவன் இரவும் பகலும் தியானிக்கிறான்.
அம்மனிதன் நீரோடைகளின் கரையில் நடப்பட்ட ஒரு மரத்தைப்போன்று வலிமையுள்ளவனாக இருக்கிறான்.
    தக்கசமயத்தில் பலன் தருகிற மரத்தைப்போல் அவன் காணப்படுகிறான்.
உதிராமலிருக்கிற இலைகளைக்கொண்ட மரத்தைப்போல் அவன் இருக்கிறான்.
    அவன் செய்கின்ற செயல்கள் எல்லாவற்றிலும் அவன் வெற்றி பெறுவான்.

ஆனால் தீயோர் அப்படியிரார்கள்.
    அத்தீய ஜனங்கள் காற்றில் பறக்கிற உமியைப் போன்றவர்கள்.
ஒரு நீதிமன்றத்தின் வழக்கை முடிவுகட்டுவதற்காக நல்ல ஜனங்கள் கூடியிருக்கும்போது தீயோர் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படுவார்கள்.
    அந்தப் பாவிகள் குற்றமற்றவர்களாகக் கருதப்படமாட்டார்கள்.
ஏன்? கர்த்தர் நல்ல ஜனங்களைக் காப்பாற்றுகிறார்.
    தீயோரை அவர் அழிக்கிறார்.

நீதிமொழிகள் 24:23-34

மேலும் ஞானமொழிகள்

23 இவை ஞானம் உள்ளவர்களின் வார்த்தைகள்.

ஒரு நீதிபதி நேர்மையாக இருக்கவேண்டும். ஒருவன் தெரிந்தவன் என்பதற்காக அவனுக்கு சார்பாக இருக்கக்கூடாது. 24 ஒரு நீதிபதி தவறு செய்தவனை விடுதலை செய்து தீர்ப்பு அளித்தால், ஜனங்கள் அவனுக்கு எதிராக மாறுவார்கள். மற்ற நாட்டு ஜனங்களும்கூட அவனை இழிவாகக் கூறுவார்கள். 25 ஆனால் ஒரு நீதிபதி தவறு செய்தவனைத் தண்டித்தால் அதற்காக ஜனங்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

26 ஒரு நேர்மையான பதில் ஜனங்கள் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும். அது உதடுகளில் இடுகிற முத்தத்தைப் போன்றது.

27 உனது வயலில் நடுவதற்கு முன்னால் வீடு கட்டாதே. வாழ்வதற்கான வீட்டைக் கட்டும் முன்னால் உணவுக்காகப் பயிர் செய்வதற்கான உறுதியான ஏற்பாடுகளைச் செய்துக்கொள்.

28 சரியான காரணம் இல்லாமல் ஒருவனுக்கு எதிராகப் பேசாதே. பொய் சொல்லாதே.

29 “அவன் என்னைக் காயப்படுத்தினான். எனவே அதுபோல் நானும் அவனைக் காயப்படுத்துவேன். அவன் எனக்குச் செய்ததற்காக நான் அவனைத் தண்டிப்பேன்” என்று சொல்லாதே.

30 சோம்பேறியான ஒருவனுக்குச் சொந்தமான வயலைக் கடந்து நான் நடந்து சென்றேன். ஞானம் இல்லாத ஒருவனுக்குச் சொந்தமான திராட்சைத் தோட்டத்தின் வழியாக நான் நடந்து சென்றேன். 31 அனைத்து இடங்களிலும் முட்செடிகள் வளர்ந்திருந்தன. தரையில் பயனற்ற புதர்களும் வளர்ந்திருந்தன. தோட்டத்தைச் சுற்றுலுமிருந்த சுவர்கள் உடைந்து விழுந்துகிடந்தன. 32 நான் இவற்றைப் பார்த்து அதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். பின் நான் இவற்றிலிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டேன். 33 ஒரு சிறு தூக்கம், ஒரு சிறு ஓய்வு, கைகளை மடக்கிக்கொண்டு சிறு தூக்கம் எனலாமா? 34 இதுபோன்ற செயல்கள் விரைவில் உன்னை ஏழையாக்கிவிடும். உன்னிடம் ஒன்றும் இருக்காது. ஒரு திருடன் கதவை உடைத்துவந்து வீட்டிலுள்ள அனைத்தையும் எடுத்துப்போனதுபோல் இருக்கும்.

யோவான் 5:39-47

39 நீங்கள் வேதவாக்கியங்களைக் கவனமாகப் படித்துப் பாருங்கள். அவை நித்திய ஜீவனை உங்களுக்குக் கொடுக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்கள். அந்த வாக்கியங்களே என்னைப்பற்றி கூறுகின்றன. 40 ஆனால் அந்த நித்திய ஜீவனைப் பெற விரும்பும் நீங்கள், என்னிடம் வர மறுக்கின்றீர்கள்.

41 “நான் மனிதர்களிடமிருந்து பாராட்டைப் பெற விரும்பவில்லை. 42 ஆனால் நான் உங்களை அறிவேன். தேவனுடைய அன்பு உங்களில் இல்லை என்பதையும் அறிவேன். 43 நான் என் பிதாவிடமிருந்து வந்திருக்கிறேன். நான் அவருக்காகப் பேசுகிறேன். ஆனால் என்னை நீங்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிறீர்கள். வேறொருவன் வந்து அவன் தனக்காகவே பேசினால் அவனை ஏற்றுக்கொள்கிறீர்கள். 44 நீங்கள் உங்களில் ஒருவரை ஒருவர் பாராட்டுவதில் விருப்பம்கொள்கிறீர்கள். நீங்கள் தேவனுடைய பாராட்டைப் பெற முயற்சி செய்வதில்லை. ஆகையால் நீங்கள் எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியும்? 45 நான் பிதாவின் முன்னால் நின்று உங்களைக் குற்றம் சொல்வேன் என்று நினைக்கவேண்டாம். மோசேதான் உங்கள் குறைகளைச் சொல்கிறவன். மோசே மட்டுமே உங்களைக் காப்பாற்ற முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்கள். 46 நீங்கள் உண்மையிலேயே மோசேயை நம்பினீர்களானால் என்னிலும் நம்பிக்கை வைத்திருப்பீர்கள். ஏனென்றால் மோசே என்னைப்பற்றித்தான் எழுதியிருக்கிறான். 47 ஆனால் நீங்கள் மோசே எழுதினவைகளை நம்பமாட்டீர்கள். ஆகையால் நான் சொல்வதையும் உங்களால் நம்பமுடியாது” என்று கூறினார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center