Revised Common Lectionary (Complementary)
ஒரு துதிப்பாடல்.
98 புதிய வியக்கத்தக்க காரியங்களைச் செய்ததால்
கர்த்தருக்கு புதுப்பாட்டைப் பாடுங்கள்.
அவரது பரிசுத்த வலது கை
மீண்டும் அவருக்கு வெற்றியைத் தரும்.
2 கர்த்தர் தமது மீட்பின் வல்லமையை தேசங்களுக்குக் காட்டினார்.
கர்த்தர் அவர்களுக்குத் தமது நன்மையைக் காட்டினார்.
3 இஸ்ரவேலரிடம் தேவன் காட்டிய உண்மையை அவரைப் பின்பற்றுவோர் நினைவு கூர்ந்தனர்.
தூர தேசத்து ஜனங்கள் நம் தேவனுடைய மீட்பின் வல்லமையைக் கண்டனர்.
4 பூமியிலுள்ள ஒவ்வொருவரும் கர்த்தரை நோக்கிக் களிப்போடு சத்தமிடுங்கள்.
துதிப்பாடல்களைப் பாடத் தொடங்குங்கள்.
5 சுரமண்டலங்களே, கர்த்தரைத் துதியுங்கள்.
சுரமண்டலங்களின் இசையே, அவரைத் துதியுங்கள்.
6 எக்காளங்களையும் மற்றும் கொம்புகளையும் ஊதுங்கள்.
எங்கள் ராஜாவாகிய கர்த்தரைக் களிப்போடு ஆர்ப்பரியுங்கள்.
7 கடலும், பூமியும்
அவற்றிலுள்ளவை யாவும் உரக்கப் பாடட்டும்.
8 ஆறுகளே, கைகளைத் தட்டுங்கள்.
எல்லா மலைகளும் இணைந்து பாடுங்கள்!
9 கர்த்தர் உலகை ஆளுகை செய்ய வருவதால் அவருக்கு முன்பாகப் பாடுங்கள்.
அவர் உலகை நியாயமாக ஆளுகை செய்வார்.
அவர் ஜனங்களை நன்மையோடு அரசாள்வார்.
19 பின்னர் நேபுகாத்நேச்சார் மிகவும் கோபங்கொண்டான். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கெதிரான கோபம் அவனது முகத்தில் வெளிப்பட்டது. அவன், வழக்கத்தை விடச் சூளையை ஏழு மடங்கு மிகுதியாகச் சூடாக்கும்படிக் கட்டளையிட்டான். 20 பிறகு நேபுகாத்நேச்சார் தனது வீரர்களில் மிகவும் பலமானவர்களிடம் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரை நன்றாகக் கட்டும்படி கட்டளையிட்டான். ராஜா சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரை அக்கினி சூளையிலே போடும்படி வீரர்களிடம் கட்டளையிட்டான்.
21 எனவே சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர் கட்டப்பட்டு அக்கினி சூளையிலே போடப்பட்டனர். அவர்கள் சால்வை, நிசார் தலைப்பாகை, மற்றும் ஆடைகளை அணிந்திருந்தனர். 22 ராஜா கட்டளையிடும்போது மிகவும் கோபமுடையவனாக இருந்தான். எனவே அவர்கள் சூளையைச் சீக்கிரமாக சூடாக்கினார்கள். அந்நெருப்பு பலமான வீரர்களையும் எரிக்கும் அளவில் மிகவும் சூடாக இருந்தது. அவர்கள் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரைத் தூக்கிச் சென்று அக்கினிச் சூளையில் போடுவதற்கு அருகில் சென்றபோது அவ்வீரர்களை நெருப்பு அழித்துப்போட்டது. 23 சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் இறுகக் கட்டப்பட்ட நிலையில் நெருப்பில் விழுந்தனர்.
24 பின்னர் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் குதித்து எழுந்தான். அவன் மிகவும் வியப்புற்று தனது ஆலோசகர்களிடம்: “நாம் மூன்றுபேரை மட்டுமே கட்டி நெருப்பில் போட்டோம். இது சரிதானா?” என்றான்.
அவனது ஆலோசகர்கள்: “ஆம் ராஜாவே” என்றனர்.
25 ராஜா அவர்களிடம், “பாருங்கள், நான்குபேர் நெருப்பிற்குள் நடமாடுவதை நான் பார்க்கிறேன். அவர்கள் கட்டப்பட்டிருக்கவில்லை. அவர்கள் நெருப்பால் எரிக்கப்படவில்லை. நான்காவது ஆள் ஒரு தேவபுத்திரனைப் போன்று இருக்கிறார்” என்றான்.
26 பிறகு நேபுகாத்நேச்சார் அக்கினிச் சூளையின் வாசலருகே சென்று உரத்தகுரலில், “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே வெளியே வாருங்கள்! உன்னதமான தேவனுடைய பணியாட்களே, வெளியே வாருங்கள்” என்றான்.
எனவே சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர் நெருப்பிலிருந்து வெளியே வந்தனர். 27 அவர்கள் வெளியே வரும்போது, அவர்களைச் சுற்றி தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், ராஜாவின் மந்திரிகளும் சூழ்ந்து நின்றனர். நெருப்பானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரைச் சுடாமலிருந்ததை அவர்களால் பார்க்க முடிந்தது. அவர்களின் உடல்கள் வெந்துபோகவில்லை. அவர்களின் தலைமயிர் கருகவில்லை. அவர்களின் சால்வைகள் எரிக்கப்படவில்லை அவர்கள்மேல் அக்கினியின் மணம் வீசவில்லை.
28 பிறகு நேபுகாத்நேச்சார்: “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரின் தேவனைப் போற்றுங்கள். அவர்களின் தேவன், தூதனை அனுப்பி அவர்களைக் காப்பாற்றிவிட்டார். இந்த மூன்று பேரும் அவர்களின் தேவனை நம்பினார்கள். அவர்கள் எனது கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். அவர்கள் மற்ற தெய்வங்களுக்குப் பணிவிடைச் செய்து தொழுவதைவிட மரித்துப்போகத் தயாராக இருந்தனர். 29 எனவே, நான் இப்போது இந்தச் சட்டத்தை ஏற்படுத்துகிறேன். எந்த தேசத்தினராகவும், மொழியினராகவும் உள்ள என் ஜனங்கள் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரின் தேவனுக்கு எதிராக ஏதாவது சொன்னால் அவர்களைத் துண்டு துண்டாக வெட்டுவேன். அவர்களது வீட்டை எருக்களமாகிப் போடுவேன். வேறு எந்த தேவனும் தம் ஜனங்களை இதுபோல் காப்பாற்ற முடியாது” என்றான். 30 பிறகு ராஜா சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரைப் பாபிலோன் மாகாணத்தின் முக்கிய அதிகாரிகளாக்கினான்.
21 அப்போது சக்திமிக்க தூதன் ஒருவன் ஒரு பெரும் பாறையைத் தூக்கி வந்தான். அது ஒரு பெரிய எந்திரக்கல்லைப்போல இருந்தது. கடலில் அப்பாறையைப் போட்டு விட்டு தூதன் சொன்னான்:
“இவ்வாறுதான் பாபிலோன் நகரமும் தூக்கி எறியப்படும்.
அந்நகரம் மீண்டும் ஒருக்காலும் காணப்படாமல் போகும்.
22 சுரமண்டலங்களையும் மற்ற இசைக் கருவிகளையும் நாதசுரங்களையும் எக்காளங்களையும் மக்கள் வாசித்து எழுப்பும் இசை ஒருபோதும் இனி உன்னிடத்தில் கேட்காது.
எந்தத் துறையின் தொழிலாளியும் இனி உன்னிடத்தில் காணப்படமாட்டான்.
எந்திரங்களின் ஓசை இனி உன்னிடம் கேட்கப்படுவதில்லை.
23 இனி விளக்குகளின் ஒளி உன்னிடம் பிரகாசிக்காது.
மணமகன் மணமகள் ஆகியோரின் சத்தங்கள் இனி உன்னிடம் கேட்காது.
உன் வியாபாரிகள் உலகில் சிறந்தவர்களாக இருந்தார்கள்.
உலக நாடுகள் எல்லாம் உன் மாயத்தால் மோசம் செய்யப்பட்டன.
24 தீர்க்கதரிசிகள், தேவனுடைய பரிசுத்த மக்கள் மற்றும் பூமியின்மேல் கொல்லப்பட்டிருக்கிற மக்கள் அனைவருடையதுமான இரத்தத்தால்
அவள் குற்ற உணர்வோடு இருக்கிறாள்.”
2008 by World Bible Translation Center