Revised Common Lectionary (Complementary)
[a] தாவீதின் வேஷத்தைக் கண்டு அபிமெலேக்கு அவனைத் துரத்தியபோது தாவீது பாடியது. இவ்வாறு தாவீது அவனை விட்டுப் பிரிந்தான்.
34 நான் எந்த காலத்திலும் கர்த்தரை ஸ்தோத்தரிப்பேன்.
என் உதடுகள் எப்போதும் அவரைத் துதிக்கும்.
2 தாழ்மையான ஜனங்களே, செவிக்கொடுத்து மகிழுங்கள்.
என் ஆத்துமா கர்த்தரைக் குறித்துப் பெருமைகொள்ளும்.
3 தேவனுடைய மேன்மையை எனக்குக் கூறுங்கள்.
அவரது நாமத்தை என்னோடு சேர்ந்து துதியுங்கள்.
4 உதவிவேண்டி தேவனிடம் போனேன்.
அவர் கேட்டார், நான் அஞ்சிய எல்லாக் காரியங்களிலிருந்தும் அவர் என்னை மீட்டார்.
5 உதவிக்காக தேவனை நாடுங்கள்.
அவர் உங்களை ஏற்றுக்கொள்ளுவார். வெட்க மடையாதீர்கள்.
6 இந்த ஏழை உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டான்.
கர்த்தர் எனக்குச் செவிகொடுத்தார்.
என் தொல்லைகளிலிருந்து என்னை மீட்டார்.
7 கர்த்தரை நம்புவோரைச் சுற்றிலும் கர்த்தருடைய தூதன் ஒரு பாளையமிடுகிறான்.
கர்த்தருடைய தூதன் அவர்களைக் காத்து அவர்களுடைய துன்பங்களிலிருந்து விடுதலை அளிக்கிறான்.
8 கர்த்தரை நல்லவர் என்று ருசித்து அறியுங்கள்.
கர்த்தரைச் சார்ந்து வாழும் மனிதன் உண்மையாகவே சந்தோஷமடைவான்.
9 கர்த்தருடைய பரிசுத்த ஜனங்கள் அவரைத் தொழுதுகொள்ளட்டும்.
கர்த்தரைப் பின்பற்றுவோருக்கு வேறெந்த அடைக்கலமும் தேவையில்லை.
10 வல்லமையுள்ள ஜனங்கள் சோர்ந்து பசியடைவார்கள்.
ஆனால் தேவனிடம் உதவி வேண்டிச் செல்வோர் நல்லவற்றையெல்லாம் அடைவார்கள்.
11 பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்.
கர்த்தரை எப்படி மதிக்கவேண்டுமென்று உங்களுக்குப் போதிப்பேன்.
12 தன் வாழ்க்கையை நேசித்து, நீண்ட ஆயுளை விரும்பும்,
13 மனிதன் தீயவற்றைப் பேசக்கூடாது.
அம்மனிதன் பொய் பேசக்கூடாது.
14 தீமை செய்வதை அவன் விட்டுவிட வேண்டும்.
நல்லவற்றைச் செய். சமாதானத்திற்காகப் பாடுபடு.
அதை அடையும்வரை அதற்கென முயற்சி செய்.
15 நல்லோரை கர்த்தர் பாதுகாக்கிறார்.
அவர்கள் ஜெபங்களை அவர் கேட்கிறார்.
16 கர்த்தர் தீயோருக்கு எதிரானவராயிருந்து
அவர்களை முற்றிலும் அழிக்கிறார்.
17 கர்த்தரிடம் ஜெபியுங்கள்.
அவர் உங்கள் விண்ணப்பங்களைக் கேட்பார்.
உங்கள் எல்லாத் தொல்லைகளிலிருந்தும் உங்களைக் காப்பார்.
18 சிலருக்குத் தொல்லைகள் மிகுதியாகும்பொழுது அவர்கள் பெருமையை விட்டொழிப்பர்.
கர்த்தர் அவர்களருகே இருந்து தாழ்மையான அந்த ஜனங்களைக் காக்கிறார்.
19 நல்லோருக்குத் தொல்லைகள் பல நேரிட்டாலும்
அவர்கள் தொல்லைகளிலிருந்து கர்த்தர் அவர்களை மீட்பார்.
20 அவர்கள் எலும்புகளில் ஒன்றும் முறிந்து போகாதபடி
கர்த்தர் அவற்றைப் பாதுகாப்பார்.
21 தீயோரைத் தொல்லைகள் கொல்லும்.
நல்லோரின் பகைவர்கள் அழிக்கப்படுவார்கள்.
22 தமது ஊழியர்களின் ஆத்துமாக்களை கர்த்தர் மீட்கிறார்.
அவரைச் சார்ந்திருக்கும் ஜனங்களை அழியவிடமாட்டார்.
அவள் அவனோடு பேசுகிறாள்
10 நான் என் நேசருக்கு உரியவள்.
அவருக்கு நான் தேவை.
11 என் நேசரே வாரும்
வயல்வெளிகளுக்குப் போவோம்
இரவில் கிராமங்களில் தங்குவோம்.
12 அதிகாலையில் எழுந்து திராட்சைத் தோட்டங்களுக்குப் போவோம்.
திராட்சைக் கொடிகள் பூப்பதைப் பார்ப்போம்.
மாதளஞ் செடிகள் பூத்ததையும் பார்ப்போம்.
அங்கே என் நேசத்தை உமக்குத் தருவேன்.
13 தூதாயீம் பழத்தின் மணம் வீசும் எல்லா வகைப் பூக்களும்
நம் வாசலருகில் உள்ளன.
ஆம் என் அன்பரே உமக்காக நான் பல மகிழ்ச்சியான பொருட்களை சேர்த்து வைத்திருக்கிறேன்.
அவை பழையதும் புதியதுமாக அருமையாக உள்ளன.
8 நீர் என் தாயிடம் பால் குடித்த என் இளைய சகோதரனைப்போன்று
இருந்தால்
நான் உம்மை வெளியில் சந்திக்கும்போது உம்மை முத்தமிட முடியும்.
இதனைத் தவறு என்று எவரும் சொல்லமாட்டார்கள்.
2 நான் உம்மை என் தாயின் வீட்டிற்கு அழைத்துச் செல்வேன்.
என் தாய் எனக்குக் கற்பித்த அறைக்கும் அழைத்துச் செல்வேன்.
நான் உமக்கு மாதளம் பழரசத்தைக் குடிக்கக் கொடுப்பேன்.
கந்தவர்க்கமிட்ட திராட்சைரசத்தையும் கொடுப்பேன்.
அவள் பெண்களிடம் பேசுகிறாள்
3 அவரது இடதுகை என் தலைக்குக்கீழ் இருக்கும்.
அவரது வலதுகை என்னை அணைத்துக்கொள்ளும்.
4 எருசலேம் பெண்களே! வாக்குறுதி கொடுங்கள்.
நான் தயாராகும்வரை என் அன்பை விழிக்கச் செய்து எழுப்பவேண்டாம்.
ஜீவ அப்பமான இயேசு
25 கடலின் அக்கரையில் இயேசுவை மக்கள் கண்டுபிடித்தனர். அவர்கள், “போதகரே, நீங்கள் இங்கு எப்பொழுது வந்தீர்கள்?” என்று கேட்டனர்.
26 “ஏன் என்னைத் தேடுகிறீர்கள்? எனது வல்லமையை வெளிப்படுத்தும் எனது அற்புதங்களைப் பார்த்தீர்கள். அதற்காகவா என்னைத் தேடுகிறீர்கள்? இல்லை. நான் உண்மையைக் கூறுகிறேன். நீங்கள் அப்பத்தை உண்டீர்கள், திருப்தியாக உண்டீர்கள், அதனால் என்னைத் தேடுகிறீர்கள். 27 பூமியிலுள்ள உணவுகள் கெட்டு அழிந்துபோகும். ஆகையால் அத்தகைய உணவுக்காக நீங்கள் வேலை செய்யவேண்டாம். ஆனால் எப்பொழுதும் நன்மையையும் நித்திய வாழ்வையும் தருகிற உணவுக்காக வேலை செய்யுங்கள். மனித குமாரனே உங்களுக்கு அத்தகைய உணவினைத் தருவார். தேவனாகிய பிதா, தான் மனித குமாரனோடு இருப்பதைக் காட்டிவிட்டார்” என்று இயேசு கூறினார்.
28 “நாங்கள் எத்தகைய செயல்களைச் செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்?” என்று மக்கள் இயேசுவிடம் கேட்டனர்.
29 “தேவனால் அனுப்பப்பட்ட ஒருவரை நீங்கள் நம்பவேண்டும். இதுவே நீங்கள் செய்யத்தக்கது என்று தேவன் விரும்புகிறார்” என இயேசு பதிலுரைத்தார்.
30 “தேவனால் அனுப்பப்பட்டவர் நீர்தான் என்பதை நிரூபிக்க என்ன அற்புதத்தை நீர் செய்யப் போகிறீர். நீர் செய்யும் அற்புதத்தைப் பார்க்க முடியுமெனில், அதற்குப் பின்னர் நாங்கள் உம்மை நம்புவோம். என்ன செய்யப் போகிறீர்? 31 நமது மூதாதையர்கள் வனாந்தரத்தில் தேவன் கொடுத்த மன்னாவை (உணவு) உண்டார்கள். இது ‘தேவன் பரலோகத்தில் இருந்து அவர்களுக்கு உண்பதற்கு அப்பத்தைக் கொடுத்தார்,’(A) என்று எழுதப்பட்டிருக்கிறது” என்று மக்கள் கேட்டனர்.
32 “நான் உண்மையைச் சொல்லுகிறேன். பரலோகத்திலிருந்து அப்பத்தை உங்களுக்கு கொடுத்தது மோசே அல்ல. ஆனால் என்னுடைய பிதா பரலோகத்திலிருந்து உண்மையான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார். 33 தேவனின் அப்பம் என்பது என்ன? பரலோகத்திலிருந்து பூமிக்கு வந்து உலகத்துக்காக ஜீவனைத் தருகிற ஒருவர்தான் தேவனின் அப்பம்” என்றார் இயேசு.
34 “ஆண்டவரே, எப்பொழுதும் அந்த அப்பத்தை எங்களுக்குத் தாரும்” என்றனர் மக்கள்.
35 “நான்தான் உங்களுக்கு ஜீவனளிக்கும் அப்பம். என்னிடம் வருகிற மனிதன் என்றென்றைக்கும் பசியோடு இருப்பதில்லை. என்மீது நம்பிக்கை வைக்கிற எவனும் எப்பொழுதும் தாகமாய் இருப்பதில்லை.
2008 by World Bible Translation Center