Revised Common Lectionary (Complementary)
[a] தாவீதின் வேஷத்தைக் கண்டு அபிமெலேக்கு அவனைத் துரத்தியபோது தாவீது பாடியது. இவ்வாறு தாவீது அவனை விட்டுப் பிரிந்தான்.
34 நான் எந்த காலத்திலும் கர்த்தரை ஸ்தோத்தரிப்பேன்.
என் உதடுகள் எப்போதும் அவரைத் துதிக்கும்.
2 தாழ்மையான ஜனங்களே, செவிக்கொடுத்து மகிழுங்கள்.
என் ஆத்துமா கர்த்தரைக் குறித்துப் பெருமைகொள்ளும்.
3 தேவனுடைய மேன்மையை எனக்குக் கூறுங்கள்.
அவரது நாமத்தை என்னோடு சேர்ந்து துதியுங்கள்.
4 உதவிவேண்டி தேவனிடம் போனேன்.
அவர் கேட்டார், நான் அஞ்சிய எல்லாக் காரியங்களிலிருந்தும் அவர் என்னை மீட்டார்.
5 உதவிக்காக தேவனை நாடுங்கள்.
அவர் உங்களை ஏற்றுக்கொள்ளுவார். வெட்க மடையாதீர்கள்.
6 இந்த ஏழை உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டான்.
கர்த்தர் எனக்குச் செவிகொடுத்தார்.
என் தொல்லைகளிலிருந்து என்னை மீட்டார்.
7 கர்த்தரை நம்புவோரைச் சுற்றிலும் கர்த்தருடைய தூதன் ஒரு பாளையமிடுகிறான்.
கர்த்தருடைய தூதன் அவர்களைக் காத்து அவர்களுடைய துன்பங்களிலிருந்து விடுதலை அளிக்கிறான்.
8 கர்த்தரை நல்லவர் என்று ருசித்து அறியுங்கள்.
கர்த்தரைச் சார்ந்து வாழும் மனிதன் உண்மையாகவே சந்தோஷமடைவான்.
9 கர்த்தருடைய பரிசுத்த ஜனங்கள் அவரைத் தொழுதுகொள்ளட்டும்.
கர்த்தரைப் பின்பற்றுவோருக்கு வேறெந்த அடைக்கலமும் தேவையில்லை.
10 வல்லமையுள்ள ஜனங்கள் சோர்ந்து பசியடைவார்கள்.
ஆனால் தேவனிடம் உதவி வேண்டிச் செல்வோர் நல்லவற்றையெல்லாம் அடைவார்கள்.
11 பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்.
கர்த்தரை எப்படி மதிக்கவேண்டுமென்று உங்களுக்குப் போதிப்பேன்.
12 தன் வாழ்க்கையை நேசித்து, நீண்ட ஆயுளை விரும்பும்,
13 மனிதன் தீயவற்றைப் பேசக்கூடாது.
அம்மனிதன் பொய் பேசக்கூடாது.
14 தீமை செய்வதை அவன் விட்டுவிட வேண்டும்.
நல்லவற்றைச் செய். சமாதானத்திற்காகப் பாடுபடு.
அதை அடையும்வரை அதற்கென முயற்சி செய்.
15 நல்லோரை கர்த்தர் பாதுகாக்கிறார்.
அவர்கள் ஜெபங்களை அவர் கேட்கிறார்.
16 கர்த்தர் தீயோருக்கு எதிரானவராயிருந்து
அவர்களை முற்றிலும் அழிக்கிறார்.
17 கர்த்தரிடம் ஜெபியுங்கள்.
அவர் உங்கள் விண்ணப்பங்களைக் கேட்பார்.
உங்கள் எல்லாத் தொல்லைகளிலிருந்தும் உங்களைக் காப்பார்.
18 சிலருக்குத் தொல்லைகள் மிகுதியாகும்பொழுது அவர்கள் பெருமையை விட்டொழிப்பர்.
கர்த்தர் அவர்களருகே இருந்து தாழ்மையான அந்த ஜனங்களைக் காக்கிறார்.
19 நல்லோருக்குத் தொல்லைகள் பல நேரிட்டாலும்
அவர்கள் தொல்லைகளிலிருந்து கர்த்தர் அவர்களை மீட்பார்.
20 அவர்கள் எலும்புகளில் ஒன்றும் முறிந்து போகாதபடி
கர்த்தர் அவற்றைப் பாதுகாப்பார்.
21 தீயோரைத் தொல்லைகள் கொல்லும்.
நல்லோரின் பகைவர்கள் அழிக்கப்படுவார்கள்.
22 தமது ஊழியர்களின் ஆத்துமாக்களை கர்த்தர் மீட்கிறார்.
அவரைச் சார்ந்திருக்கும் ஜனங்களை அழியவிடமாட்டார்.
தண்டனை ஜனங்களை அழிக்கும்
5 எனது சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய ஆண்டவர் பூமியைத் தொட அது உருகும்.
பிறகு நாட்டில் உள்ள ஜனங்கள் எல்லோரும் மரித்துப்போன ஜனங்களுக்காக அழுவார்கள்.
நாடானது எகிப்தின் நைல் நதி போன்று உயர்ந்து தாழும்.
6 கர்த்தர் ஆகாயங்களுக்கு மேல் தனது உயர்ந்த அறைகளைக் கட்டினார்.
அவர் பூமிக்குமேல் தன் ஆகாயத்தை வைத்தார்.
அவர் கடலின் தண்ணீரை அழைத்து
பூமியின் மேல் மழையாக அதனைக் கொட்டுகிறார்.
யேகோவா என்பது அவரது நாமம்.
இஸ்ரவேல் அழியும் என்று கர்த்தர் வாக்குறுதியளிக்கிறார்
7 கர்த்தர் இதனைச் சொல்கிறார்:
“இஸ்ரவேலே நீ எனக்கு எத்தியோப்பியர்களைப் போன்றிருக்கிறாய்.
நான் இஸ்ரவேலரை எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்தேன்.
நான் கப்தோரிலிருந்து பெலிஸ்தியரைக் கொண்டு வந்தேன்.
கீரிலிருந்து சீரியரைக்கொண்டு வந்தேன்.”
8 எனது கர்த்தராகிய ஆண்டவர் பாவமுள்ள இராஜ்யத்தை (இஸ்ரவேல்) கவனித்துக் கொண்டிருக்கிறார். கர்த்தர் சொன்னார்:
“பூமியின் முகத்திலிருந்து இஸ்ரவேலர்களைத் துடைப்பேன்.
ஆனால் நான் யாக்கோபின் குடும்பத்தை முழுமையாக அழிக்கமாட்டேன்.
9 நான் இஸ்ரவேல் நாட்டை அழிப்பதற்குக் கட்டளை கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
நான் இஸ்ரவேல் ஜனங்களை அனைத்து நாடுகளிலும் சிதறவைப்பேன்.
ஆனால் இது ஒருவன் மாவை ஜல்லடையில் சலிப்பது போன்றது.
அவன் ஜல்லடையில் சலிக்கும்போது, நல்ல மாவு கீழே விழுந்துவிடும்,
ஆனால் கோதுமை உமி பிடிபடும். யாக்கோபின் குடும்பத்திற்கும் இவ்விதமாகவே இருக்கும்.
10 “என் ஜனங்களிலுள்ள பாவிகள்,
‘நமக்கு எந்தக் கேடும் ஏற்படாது’ என்கிறார்கள்.
ஆனால் அந்த ஜனங்கள் அனைவரும் வாளால் கொல்லப்படுவார்கள்.”
இராஜ்யத்தை மீண்டும் நிறுவுவதாக தேவன் வாக்குறுதியளிக்கிறார்
11 “தாவீதின் கூடாரம் விழுந்திருக்கிறது.
ஆனால் அந்நேரத்தில், நான் மீண்டும் அவன் கூடாரத்தை அமைப்பேன்.
நான் சுவர்களில் உள்ள துவாரங்களைச் சரிசெய்வேன்.
நான் அழிந்துபோன கட்டிடங்களை மீண்டும் கட்டுவேன். நான் அவற்றை முன்பு இருந்தது போன்று கட்டுவேன்.
12 பிறகு ஏதோமில் உயிருடன் விடப்பட்டவர்களும்,
என் நாமத்தால் அழைக்கப்பட்ட எல்லோரும் கர்த்தரிடம் உதவிக்காக வருவார்கள்.”
கர்த்தர் அவற்றைச் சொன்னார்,
அவர் அவை நடக்கும்படிச் செய்வார்.
13 கர்த்தர் கூறுகிறார்: “நிலத்தை உழுகிறவன்,
அறுவடை செய்பவனை முந்திச் செல்லும் காலம் வரும்.
திராட்சை ஆலையை வைத்திருப்பவன் திராட்சை பயிரிட்டு பழங்களைப் பறிப்பவனைத் தேடிவரும் காலம் வரும்.
இனிய மதுவானது குன்றுகளிலும்
மலைகளிலும் கொட்டும்.
14 இஸ்ரவேலே நான் என் ஜனங்களை
அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வருவேன்.
அவர்கள் அழிந்த நகரங்களை மீண்டும் கட்டுவார்கள்.
அவர்கள் அந்நகரங்களில் வாழ்வார்கள்.
அவர்கள் திராட்சைகளைப் பயிரிடுவார்கள்.
அவர்கள் அவற்றிலிருந்து வரும் மதுவை குடிப்பார்கள்.
அவர்கள் தோட்டங்களைப் பயிரிடுவார்கள்.
அவர்கள் அவற்றிலுள்ள அறுவடையை உண்பார்கள்.
15 நான் என் ஜனங்களை அவர்கள் நிலத்தில் நாட்டுவேன்.
அவர்கள் மீண்டும் பிடுங்கப்படமாட்டார்கள்.
அவர்கள் நான் கொடுத்த நாட்டிலேயே இருப்பார்கள்”
என்று உங்கள் தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்.
13 சகோதர சகோதரிகளே! இன்னும் அந்த இலக்கை நான் அடையவில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் எப்பொமுதும் நான் ஒன்றை மட்டும் செய்து வருகிறேன். அதாவது கடந்த காலத்தில் உள்ளவற்றை நான் மறந்துவிடுகிறேன். என முன்னால் உள்ள குறிக்கோளை அடைய எவ்வளவு முயல முடியுமோ அவ்வளவு முயலுகிறேன். 14 குறிக்கோளை அடைந்து பரிசு பெறுவதற்கான முயற்சியையும் விடாமல் தொடர்ந்து நான் கைக்கொண்டு வருகிறேன். அது என்னுடையது. ஏனென்றால் அத்தகைய வாழ்வுக்குத்தான் இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவன் என்னை அழைத்திருக்கிறார்.
15 ஆன்மீகத்தில் வளர்ந்து முழுமை அடைந்துள்ள நாம் அனைவரும் இத்தகைய வழியில் எண்ண வேண்டும். நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் மேற்கூறிய விஷயங்களில் ஏதேனும் இருந்தால் தேவன் அதை உங்களுக்குத் தெளிவுபடுத்துவார். 16 ஆனாலும் நாம் ஏற்கெனவே செய்வது போல நாம் அடைந்த உண்மையைப் பின் தொடர்வதைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.
17 சகோதர சகோதரிகளே! நீங்கள் அனைவரும் என்னைப் போன்று வாழ முயல வேண்டும். நாங்கள் காட்டிய சட்டங்களை மேற்கொண்டு வாழ்பவர்களை அப்படியே பின்பற்ற முயலுங்கள். 18 இயேசுவின் சிலுவைக்கு விரோதமாகப் பலர் வாழ்ந்து வருகின்றனர். இத்தகையவர்களைப் பற்றி நான் அடிக்கடி கூறி வருகிறேன். இப்பொழுதும் அவர்களைப் பற்றிக் கூறுவதை எண்ணும்போது எனக்கு அழுகையே வருகிறது. 19 இத்தகையோரின் வாழ்க்கை முறை இவர்களை அழிவின் பாதைக்கே அழைத்துச் செல்லும். அவர்கள் தேவனுக்குச் சேவை செய்வதில்லை. அவர்கள் தம்மைத் திருப்திப்படுத்திக்கொள்வதற்காகவே வாழ்கிறார்கள். அவர்கள் வெட்கப்படத்தக்க செயல்களை செய்வதோடு அதைப் பற்றி பெருமைப்பட்டுக்கொள்ளவும் செய்கிறார்கள். அவர்கள் பூமியில் உள்ளவற்றைப் பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். 20 ஆனால், நம் குடியிருப்போ பரலோகத்தில் உள்ளது. நம்முடைய இரட்சகர் பரலோகத்தில் இருந்து வருவார். அவருக்காகவே நாம் காத்திருக்கிறோம். நமது இரட்சகர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே. 21 அவர் இத்தகைய நமது அற்பமான சரீரங்களை மாற்றி தம்முடைய மகிமை மிக்க சரீரம்போல ஆக்கிவிடுவார். அவர் இதனைத் தம் வல்லமையால் செய்வார். அந்த வல்லமையால் அவர் எல்லாவற்றையும் ஆளத்தக்கவர்.
செய்யத்தக்க சில
4 என்னுடைய அன்பான சகோதர சகோதரிகளே! நான் உங்களை நேசிக்கிறேன். உங்களைப் பார்க்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தீர்கள். உங்களைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். நான் சொன்னதைப் போன்று நீங்கள் கர்த்தரைத் தொடர்ந்து பின்பற்றி வாழுங்கள்.
2008 by World Bible Translation Center