Revised Common Lectionary (Complementary)
தேவனைத் துதிக்கும் ஒரு பாடல்
25 கர்த்தாவே, நீர் எனது தேவன்.
நான் உம்மை கனம்பண்ணி, உமது நாமத்தைத் துதிக்கிறேன்.
நீர் அதிசயமானவற்றை செய்திருக்கிறீர்.
நீண்ட காலத்துக்கு முன்னால் நீர் சொன்னவை, அனைத்தும் முழுமையாக உண்மையாகியுள்ளது.
இப்படி இருக்கும் என்று நீர் சொன்ன ஒவ்வொன்றும், சரியாக நீர் சொன்னபடியே ஆயிற்று.
2 நீர் நகரத்தை அழித்திருக்கிறீர். அந்த நகரமானது பலமான சுவர்களால் பாதுகாக்கப்பட்டது.
ஆனால் இப்போது அது மண்மேடாயிற்று.
அயல்நாட்டு அரண்மனை அழிக்கப்பட்டிருக்கிறது.
அது மீண்டும் கட்டப்படமாட்டாது.
3 வல்லமை மிக்க தேசங்களிலுள்ள ஜனங்கள் உம்மை மதிப்பார்கள்.
பலமான நகரங்களில் உள்ள வல்லமையுள்ள ஜனங்கள் உமக்குப் பயப்படுவார்கள்.
4 கர்த்தாவே, நீர் பாதுகாப்புத் தேவைபடுகிற ஏழை ஜனங்களுக்குப் பாதுகாப்பான இடம்.
இந்த ஜனங்களைத் தோற்கடிக்க பல பிரச்சனைகள் தொடங்கும்.
ஆனால் நீர் அவர்களைப் பாதுகாப்பீர்.
கர்த்தாவே, நீர் வெள்ளத்திலிருந்தும், வெப்பத்திலிருந்தும் ஜனங்களைக் காப்பாற்றும் வீடுபோல இருக்கிறீர்.
தொல்லைகள் எல்லாம், பயங்கரமான காற்று மற்றும் மழைபோன்று இருக்கும். மழை சுவரைத் தாக்கி கீழே விழச்செய்யும்.
ஆனால் வீட்டிற்குள் உள்ள ஜனங்கள் பாதிக்கப்படமாட்டார்கள்.
5 பகைவன் சத்தமிட்டு ஆரவாரத்தை ஏற்படுத்துவான்.
பயங்கர பகைவன் சத்தமிட்டு சவால்விடுவான்.
ஆனால் தேவனாகிய நீர் அவர்களைத் தடுப்பீர்.
கோடை காலத்தில் வனாந்தரத்தில் செடிகள் வாடி தரையில் விழும்.
அடர்த்தியான மேகங்கள் கோடை வெப்பத்தைத் தடுக்கும்.
அதே வழியில், நீர் பயங்கரமான பகைவர்களின் சத்தங்களை நிறுத்துவீர்.
தேவன் அவரது ஊழியர்களுக்கு அமைத்த விருந்து
6 அந்த நேரத்தில், சர்வ வல்லமையுள்ள கர்த்தர், இந்த மலையில் உள்ள ஜனங்களுக்கு ஒரு விருந்து தருவார். அந்த விருந்தில் சிறந்த உணவும், திராட்சை ரசமும் தரப்படும். மாமிசமானது புதிதாகவும் சிறந்ததாகவும் இருக்கும்.
7 ஆனால் இப்போது, எல்லா தேசங்களின் மேலும் ஜனங்களின் மேலும் ஒரு முக்காடு கவிழ்ந்திருக்கிறது. அந்த முக்காடு “மரணம்” என்று அழைக்கப்படுகிறது. 8 ஆனால் மரணமானது எக்காலத்திற்கும் அழிக்கப்படும். கர்த்தராகிய எனது ஆண்டவர், ஒவ்வொரு முகத்திலும் வடியும் கண்ணீரைத் துடைப்பார். கடந்த காலத்தில், அவரது ஜனங்கள் எல்லாரும் துக்கமாயிருந்தார்கள். ஆனால், பூமியிலிருந்து தேவன் அந்தத் துக்கத்தை எடுத்துவிடுவார். இவையெல்லாம் நிகழும். ஏனென்றால், இவ்வாறு நிகழும் என்று கர்த்தர் கூறினார்.
9 அந்த நேரத்தில், ஜனங்கள்,
“இங்கே எங்கள் தேவன் இருக்கிறார்.
அவர், நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற ஒருவர்,
நம்மைக் காப்பாற்றுவதற்காக அவர் வந்திருக்கிறார்.
நமது கர்த்தருக்காக நாம் காத்துக்கொண்டிருந்தோம்.
கர்த்தர் நம்மைக் காப்பாற்றும்போது, நாம் கொண்டாடுவோம், மகிழ்ச்சி அடைவோம்.”
தாவீதின் பாடல்.
23 கர்த்தர் என் மேய்ப்பர்.
எனக்குத் தேவையானவை எப்போதும் என்னிடமிருக்கும்.
2 அவர் பசுமையான புல்வெளிகளில் என்னை இளைப்பாறச் செய்கிறார்.
குளிர்ந்த நீரோடைகளருகே அவர் என்னை வழிநடத்துகிறார்.
3 அவர் நாமத்தின் நன்மைக்கேற்ப, என் ஆத்துமாவிற்குப் புது வலிமையைத் தருகிறார்.
அவர் நல்லவரெனக் காட்டும்படி, நன்மையின் பாதைகளில் என்னை நடத்துகிறார்.
4 மரணத்தின் இருண்ட பள்ளத்தாக்குகளில் நான் நடந்தாலும் எந்தத் தீமைக்கும் பயப்படமாட்டேன்.
ஏனெனில் கர்த்தாவே, நீர் என்னோடிருக்கிறீர்.
உமது கோலும் தடியும் எனக்கு ஆறுதல் நல்கும்.
5 கர்த்தாவே, என் பகைவர்களின் முன்னிலையில் என் பந்தியை ஆயத்தமாக்கினீர்.
என் தலையில் எண்ணெயை ஊற்றினீர். என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
6 என் ஆயுள் முழுவதும் உமது நன்மையும் இரக்கமும் என்னோடிருக்கும்.
நித்திய காலமாக நான் கர்த்தருடைய ஆலயத்தில் அமர்ந்திருப்பேன்.
செய்யத்தக்க சில
4 என்னுடைய அன்பான சகோதர சகோதரிகளே! நான் உங்களை நேசிக்கிறேன். உங்களைப் பார்க்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தீர்கள். உங்களைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். நான் சொன்னதைப் போன்று நீங்கள் கர்த்தரைத் தொடர்ந்து பின்பற்றி வாழுங்கள்.
2 கர்த்தருக்குள் ஒரே சிந்தையாய் இருக்க எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் புத்தி சொல்லுகிறேன். 3 ஏனென்றால் நீங்கள் என்னோடு உண்மையாய்ப் பணிபுரிகிறீர்கள். எனது நண்பர்களே! அப்பெண்களுக்கு உதவுமாறு உங்களை வேண்டிக்கொள்கிறேன். அவர்கள் நற்செய்தியை மக்களிடம் பரப்பிட உதவினார்கள். அவர்கள் கிலேமந்தோடும் மற்றவர்களோடும் சேர்ந்து எனக்கு உதவினார்கள். அவர்களின் பெயர்கள் ஜீவ புஸ்தகத்தில்[a] எழுதப்பட்டுள்ளன.
4 எப்பொழுதும் கர்த்தருக்குள் முழுமையான மகிழ்ச்சியோடு இருங்கள். நான் மீண்டும் கூறுகிறேன். முழு மகிழ்ச்சியோடு இருங்கள்.
5 நீங்கள் சாந்தமும் கருணையும் கொண்டவர்கள் என்பதை மக்கள் எல்லாரும் தெரிந்துகொள்ளட்டும். கர்த்தர் விரைவில் வருவார். 6 நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு வேண்டிய எல்லாவற்றுக்காகவும் தேவனிடம் பிரார்த்தனை செய்து கேளுங்கள். நீங்கள் பிரார்த்தனை செய்யும் பொழுதெல்லாம் நன்றி செலுத்துங்கள். 7 தேவனுடைய சமாதானம், உங்கள் இதயத்தையும் மனதையும் இயேசு கிறிஸ்துவுக்குள் பாதுகாக்கும். தேவன் தரும் சமாதானம் மிக உயர்ந்தது. நம்மால் புரிந்துகொள்ள முடியாதது.
8 இப்போது சகோதர சகோதரிகளே! தொடர்ந்து உங்கள் மனதில் உண்மையும், பெருமையும், நீதியும், தூய்மையும், அன்பும், அழகும், மரியாதையும், உயர்வும் கொண்ட எல்லாவற்றையும் சிந்தித்துக்கொள்ளுங்கள். 9 என்னிடமிருந்து நீங்கள் கற்றவற்றையும், பெற்றவற்றையும், கண்டவற்றையும், கேட்டவற்றையும் மட்டும் நீங்கள் செய்யுங்கள். சமாதானம் கொடுக்கிற தேவன் உங்களோடிருப்பார்.
விருந்துக்கு அழைக்கப்பட்டோர்
(லூக்கா 14:15-24)
22 இயேசு மேலும் சிலவற்றை உவமைகளின் மூலம் மக்களுக்கு எடுத்துக் கூறினார். 2 “பரலோக இராஜ்யமானது தன் மகனது திருமண விருந்துக்கு ஏற்பாடு செய்த மன்னன் ஒருவனுக்கு ஒப்பாகும். 3 அம்மன்னன் விருந்துண்ண சிலரை அழைத்தான். விருந்து தயாரானபொழுது தன் வேலைக்காரர்களை அனுப்பி அவர்களை அழைத்துவரச் சொன்னான். ஆனால் அவர்களோ மன்னனது விருந்துக்கு வர மறுத்து விட்டார்கள்.
4 “பின் மன்னன் மேலும் சில வேலைக்காரர்களை அனுப்பினான். தன் வேலைக்காரர்களிடம் மன்னன் இவ்வாறு சொல்லியனுப்பினான். ‘நான் ஏற்கெனவே அவர்களை விருந்துண்ண அழைத்துவிட்டேன். எனவே, அவர்களிடம், என்னிடமிருந்த சிறந்த காளைகளையும் கன்றுகளையும் உண்பதற்காக அடித்துள்ளேன். எல்லாம் தயாராக உள்ளன. திருமண விருந்துண்ண வாருங்கள்! என்று கூறுங்கள்’ என்றான்.
5 “வேலைக்காரர்கள் சென்று அவர்களை அழைத்தார்கள். ஆனால் அவர்களோ வேலைக்காரர்களின் அழைப்பைப் பொருட்படுத்தவில்லை. வேறு வேலைகளைக் கவனிக்க அவர்கள் சென்று விட்டார்கள். ஒருவன் தன் வயலில் வேலை செய்யவும் மற்றொருவன் தன் வியாபாரத்தைக் கவனிக்கவும், சென்றனர். 6 வேறு சிலரோ வேலைக்காரர்களைப் பிடித்து அடித்துக் கொன்றுவிட்டனர். 7 கோபமடைந்த மன்னன் தன் வேலைக்காரர்களைக் கொன்றவர்களைக் கொல்வதற்காகத் தனது படையை அனுப்பினான். மன்னனது படை அவர்களது நகரத்தையே எரித்தது.
8 “அதன் பிறகு, மன்னன் தன் வேலைக்காரர்களைப் பார்த்து, ‘திருமண விருந்து தயாராக உள்ளது. நான் அவர்களை விருந்துக்கு அழைத்தேன். ஆனால் அவர்களோ எனது விருந்துக்கு வருமளவிற்கு நல்லவரல்லர். 9 ஆகவே, தெரு முனைகளுக்குச் செல்லுங்கள். உங்கள் கண்ணில் படுகிறவர்கள் அனைவரையும் விருந்துக்கு அழையுங்கள். எனது விருந்துக்கு வரச் சொல்லுங்கள்’ என்று சொன்னான். 10 எனவே, மன்னனது வேலைக்காரர்கள் தெருக்களுக்குச் சென்று கண்ணில் பட்டவர்களை அழைத்து வந்தனர். வேலைக்காரர்கள் நல்லவர்களையும் தீயவர்களையும் திருமணவிருந்து தயாராகவிருந்த இடத்துக்கு அழைத்து வந்தார்கள். அந்த இடம் விருந்தினர்களால் நிரம்பியது.
11 “மன்னன் விருந்தினர் அனைவரையும் காண்பதற்காக வந்தான். திருமணத்திற்கு வர ஏற்றதாக உடையணிந்திராத ஒருவனை மன்னன் கண்டான். 12 மன்னன் அவனிடம், ‘நண்பனே, நீ எப்படி உள்ளே வந்தாய்? திருமணத்திற்கு வர ஏற்றதாக நீ உடை அணிந்திருக்கவில்லையே?’ என்று கேட்டான். ஆனால் அம்மனிதனோ எதுவும் பேசவில்லை. 13 எனவே, மன்னன் தன் வேலைக்காரர்களிடம், ‘இவனது கையையும் காலையும் கட்டுங்கள். இவனை இருளில் எறியுங்கள். அங்கு, மக்கள் வேதனையால் பற்களைக் கடித்துக் கொள்வார்கள்’ என்று சொன்னான்.
14 “ஆம், பலர் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் சிலர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்” என்று இயேசு சொன்னார்.
2008 by World Bible Translation Center