Revised Common Lectionary (Complementary)
தாவீதின் பாடல்.
23 கர்த்தர் என் மேய்ப்பர்.
எனக்குத் தேவையானவை எப்போதும் என்னிடமிருக்கும்.
2 அவர் பசுமையான புல்வெளிகளில் என்னை இளைப்பாறச் செய்கிறார்.
குளிர்ந்த நீரோடைகளருகே அவர் என்னை வழிநடத்துகிறார்.
3 அவர் நாமத்தின் நன்மைக்கேற்ப, என் ஆத்துமாவிற்குப் புது வலிமையைத் தருகிறார்.
அவர் நல்லவரெனக் காட்டும்படி, நன்மையின் பாதைகளில் என்னை நடத்துகிறார்.
4 மரணத்தின் இருண்ட பள்ளத்தாக்குகளில் நான் நடந்தாலும் எந்தத் தீமைக்கும் பயப்படமாட்டேன்.
ஏனெனில் கர்த்தாவே, நீர் என்னோடிருக்கிறீர்.
உமது கோலும் தடியும் எனக்கு ஆறுதல் நல்கும்.
5 கர்த்தாவே, என் பகைவர்களின் முன்னிலையில் என் பந்தியை ஆயத்தமாக்கினீர்.
என் தலையில் எண்ணெயை ஊற்றினீர். என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
6 என் ஆயுள் முழுவதும் உமது நன்மையும் இரக்கமும் என்னோடிருக்கும்.
நித்திய காலமாக நான் கர்த்தருடைய ஆலயத்தில் அமர்ந்திருப்பேன்.
எருசலேமிற்கு தேவனுடைய செய்தி
22 தரிசனப் பள்ளத்தாக்கைப் பற்றிய சோகமான செய்தி:
ஜனங்களே உங்களுக்கு என்ன தவறு ஏற்பட்டது?
உங்கள் வீட்டு மாடிகளில் ஏன் மறைந்துகொண்டிருக்கிறீர்கள்?
2 கடந்த காலத்தில் இந்நகரம் பரபரப்புடைய நகரமாக இருந்தது.
இந்த நகரம் ஆரவாரமும் மகிழ்ச்சியும் உடையதாக இருந்தது.
ஆனால் இப்போது அவை மாறியுள்ளன.
உனது ஜனங்கள் கொல்லப்பட்டிருக்கலாம் ஆனால் வாள்களினால் அல்ல.
ஜனங்கள் மரித்தனர்.
ஆனால் போரிடும்போது அல்ல.
3 உங்கள் தலைவர்கள் எல்லோரும் சேர்ந்து தூரத்துக்கு ஓடிப்போனார்கள்.
ஆனால் அவர்கள் அனைவரும் வில் இல்லாமல் கைது செய்யப்பட்டார்கள்,
தலைவர்கள் அனைவரும் சேர்ந்து தூர ஓடிப்போனார்கள்.
ஆனால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
4 எனவே, “என்னைப் பார்க்கவேண்டாம்!
என்னை அழ விடுங்கள்!
எருசலேமின் அழிவைப்பற்றி நான் வருந்தும்போது
எனக்கு ஆறுதல் சொல்ல வரவேண்டாம்.”
5 கர்த்தர் ஒரு விசேஷமான நாளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அந்த நாளில் அமளியும் குழப்பமும் ஏற்படும். தரிசனப் பள்ளத்தாக்கில் ஜனங்கள் ஒருவர் மீது ஒருவர் நடப்பார்கள். நகரச் சுவர்கள் கீழேத் தள்ளப்படும். பள்ளத்தாக்கில் உள்ள ஜனங்கள் நகரத்திலுள்ள மலை மேல் உள்ள ஜனங்களைப் பார்த்து ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறார்கள். 6 ஏலாமிலிருந்து வந்த குதிரை வீரர்கள் தங்கள் அம்புகள் நிரப்பப்பட்ட பைகளை எடுத்துக்கொண்டு போர் செய்யப்போவார்கள். கீர் நாட்டு ஜனங்கள் தங்கள் கேடயங்களோடு ஆரவாரம் செய்வார்கள். 7 உங்களது சிறப்பான பள்ளத்தாக்கில் படைவீரர்கள் சந்திப்பார்கள். பள்ளத்தாக்கானது இரதங்களால் நிறைந்துவிடும். குதிரை வீரர்களை நகர வாசலுக்கருகில் நிறுத்தி வைப்பார். 8 அந்த நேரத்தில், யூதாவிலுள்ள ஜனங்கள் தம் ஆயுதங்களைப் பயன்படுத்த விரும்புவார்கள். அவர்கள் அவற்றை பெத்-ஹ-யார்ல்[a] வைத்திருக்கிறார்கள். யூதாவைப் பாதுகாக்கும் சுவர்களைப் பகைவர்கள் இடித்துப்போடுவார்கள்.
தேவனுடைய மந்தை
5 உங்கள் குழுவிலுள்ள முதியோருக்கு இப்பொழுது நான் சிலவற்றைக் கூறவேண்டும். நானும் ஒரு முதியவன். நான் கிறிஸ்துவின் துன்பங்களை நேரில் கண்டிருக்கிறேன். நமக்குக் காட்டப்படும் மகிமையிலும் நான் பங்கு கொள்வேன். 2 ஒரு ஆட்டு மந்தையைக் கவனித்துக்கொள்கிற மேய்ப்பர்கள்போல உங்கள் பொறுப்பில் இருக்கிற மக்களின் கூட்டத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டுமென நான் உங்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் தேவனுடைய கூட்டத்தினர். விருப்பத்தோடு அவர்களைக் கவனித்துக்கொள்ளுங்கள். எவ்விதமான நிர்ப்பந்தத்தின் காரணமாகவும் அப்படிச் செய்ய வேண்டாம். நீங்கள் அதை விருப்பத்தோடு செய்ய வேண்டுமென தேவன் விரும்புகிறார். பணத்துக்காகப் பேராசை பிடித்திருப்பதால் கண்காணிப்பாளர்களைப்போல சேவை செய்யாதீர்கள். சேவை செய்யும் வாஞ்சை இருப்பதால் சேவை செய்யுங்கள். 3 நீங்கள் பொறுப்பேற்றுள்ள மக்களிடம் கொடுமையான அதிகாரியாக நடந்துகொள்ளாதீர்கள். ஆனால் அம்மக்களுக்கு முன்மாதிரியாக இருங்கள். 4 அப்போது, தலைமை மேய்ப்பர் வரும்போது நீங்கள் கிரீடம் பெறுவீர்கள். அக்கிரீடம் மகிமை நிரம்பியதாகவும், ஒருபோதும் அழகு குன்றாததாகவும் இருக்கும்.
5 இளைஞர்களே, நான் உங்களுக்கும் சிலவற்றைச் சொல்லவேண்டும். முதியோரின் அதிகாரத்திற்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும். ஒருவருக்கொருவர் தாழ்மையோடு சேவை புரிந்துகொள்ள வேண்டும்.
“அகம்பாவம்மிக்க மனிதருக்கு தேவன் எதிரானவர்.
ஆனால் தாழ்மையுள்ள மனிதருக்கு தேவன் கிருபை அளிக்கிறார்.”(A)
இறுதி வாழ்த்துக்கள்
12 சில்வானுவின் உதவியோடு இந்தச் சிறிய நிருபத்தை உங்களுக்கு எழுதினேன். அவன் நம்பிக்கைக்குத் தகுதியான கிறிஸ்தவ சகோதரன் என்பதை நான் அறிவேன். உங்களை உற்சாகப்படுத்தவும் உங்களுக்கு உறுதிப்படுத்தவும், இதுவே தேவனுடைய உண்மையான கிருபை என்பதை எழுதி இருக்கிறேன். அந்தக் கிருபையில் உறுதியாக நில்லுங்கள்.
13 பாபிலோனில் இருக்கும் சபை உங்களை வாழ்த்துகிறது. அம்மக்களும் உங்களைப் போலவே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கிறிஸ்துவில் எனது குமாரனாகிய மாற்கும் உங்களை வாழ்த்துகிறான். 14 நீங்கள் சந்திக்கும்போது ஒருவருக்கொருவர் அன்பினால் முத்தமிடுங்கள்.
கிறிஸ்துவிலுள்ள உங்கள் எல்லோருக்கும் சமாதானம் உண்டாகட்டும்.
2008 by World Bible Translation Center