Revised Common Lectionary (Complementary)
தாவீதின் ஒரு பாடல்.
144 கர்த்தர் என் கன்மலை.
கர்த்தரைப் போற்றுங்கள்.
கர்த்தர் என்னைப் போருக்குப் பழக்கப்படுத்துகிறார்.
கர்த்தர் என்னை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
2 கர்த்தர் என்னை நேசித்து என்னைப் பாதுக்காக்கிறார்.
மலைகளின் உயரத்தில் கர்த்தரே என் பாதுகாப்பிடம்.
கர்த்தர் என்னை விடுவிக்கிறார்.
கர்த்தர் எனது கேடகம்.
நான் அவரை நம்புகிறேன்.
நான் என் ஜனங்களை ஆள்வதற்கு கர்த்தர் உதவுகிறார்.
3 கர்த்தாவே, நீர் ஏன் ஜனங்களை முக்கியமானவர்களாகக் கருதுகிறீர்?
நீர் ஏன் அவர்களைக் கண்ணோக்கிக்கொண்டு இருக்கிறீர்?
4 ஊதும் காற்றைப்போன்று ஒருவனின் வாழ்க்கை உள்ளது.
மறையும் நிழலைப் போன்றது மனித வாழ்க்கை.
5 கர்த்தாவே, வானங்களைக் கிழித்துக் கீழே வாரும்.
மலைகளைத் தொடும், அவற்றிலிருந்து புகை எழும்பும்.
6 கர்த்தாவே, மின்னலை அனுப்பி என் பகைவர்களை ஓடிவிடச் செய்யும்.
உமது “அம்புகளைச்” செலுத்தி அவர்கள் ஓடிப்போகச் செய்யும்.
7 கர்த்தாவே, பரலோகத்திலிருந்து இறங்கி வந்து என்னைக் காப்பாற்றும்!
பகைவர்களின் கடலில் நான் அமிழ்ந்துபோக விடாதேயும்.
இந்த அந்நியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
8 இப்பகைவர்கள் பொய்யர்கள்.
அவர்கள் உண்மையில்லாதவற்றைக் கூறுகிறார்கள்.
9 கர்த்தாவே, நீர் செய்யும் அற்புதமான காரியங்களைப்பற்றி நான் ஒரு புதிய பாடலைப் பாடுவேன்.
நான் உம்மைத் துதிப்பேன். பத்து நரம்பு வீணையை நான் மீட்டுவேன்.
10 ராஜாக்கள் போர்களில் வெற்றி காண, கர்த்தர் உதவுகிறார்.
பகைவர்களின் வாள்களிலிருந்து கர்த்தர் அவரது ஊழியனாகிய தாவீதைக் காப்பாற்றினார்.
11 இந்த அந்நியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
இப்பகைவர்கள் பொய்யர்கள்.
அவர்கள் உண்மையில்லாதவற்றைக் கூறுகிறார்கள்.
12 நம் இளகுமாரர்கள் பலத்த மரங்களைப் போன்றவர்கள்.
நம் இளகுமாரத்திகள் அரண்மனையின் அழகிய அலங்கார ஒப்பனைகளைப் போன்றிருக்கிறார்கள்.
13 நம் களஞ்சியங்கள் பலவகை தானியங்களால் நிரம்பியிருக்கின்றன.
நம் வயல்களில் ஆயிரமாயிரம் ஆடுகள் உள்ளன.
14 நம் வீரர்கள் பாதுகாப்பாயிருக்கிறார்கள்.
எந்தப் பகைவனும் உள்ளே நுழைய முயலவில்லை.
நாங்கள் போருக்குச் செல்லவில்லை.
ஜனங்கள் நம் தெருக்களில் கூக்குரல் எழுப்பவில்லை.
15 இத்தகைய காலங்களில் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
கர்த்தர் அவர்கள் தேவனாக இருக்கும்போது ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
எருசலேம் பெண்கள் பேசுகிறார்கள்
5 இந்த பெண் யார்?
தன் நேசரின்மேல் சார்ந்து கொண்டு வனாந்திரத்திலிருந்து வருகிறாள்.
அவள் அவனிடம் பேசுகிறாள்
கிச்சிலி மரத்தடியில் உம்மை எழுப்பினேன்.
அங்கே உம்மை உமது தாய் பெற்றாள்.
அங்கே உம் தாய் உம்மை துன்பப்பட்டுப் பெற்றாள்.
6 என்னை உமதருகில் வைத்துக்கொள்ளும்.
உம் இதயத்தின்மேல் ஒரு முத்திரையைப்போல் கையில் அணிந்துகொள்ளும்.
நேசமானது மரணத்தைப்போன்று வலிமையானது.
நேச ஆசையானது கல்லறையைப்போன்று வலிமையானது.
அதன் பொறிகள் சுவாலை ஆகின்றன.
பின் அது பெரிய நெருப்பாக வளர்கின்றது.
7 ஒரு வெள்ளம் அன்பை அழிக்க முடியாது.
ஒரு ஆறு அன்பை இழுத்துச் செல்லமுடியாது.
ஒருவன் தன்னுடைய எல்லா சொத்துக்களையும் அன்பிற்காகக் கொடுத்துவிட்டால்
ஜனங்கள் அவனை இழிவாகவோ அல்லது மட்டமாகவோ கருதுவார்களா?
அவளது சகோதரர்கள் பேசுகிறார்கள்
8 எங்களுக்கு ஒரு சிறிய சகோதரி இருக்கிறாள்
அவளது மார்பகங்கள் இன்னும் வளரவில்லை.
ஒருவன் அவளை மணக்க வரும்போது
எங்கள் சகோதரிக்காக நாங்கள் என்ன செய்வோம்?
9 அவள் ஒரு மதில் சுவராக இருந்தால்
நாங்கள் அதைச்சுற்றி வெள்ளிக் கோட்டையைக் கட்டுவோம்.
அவள் ஒரு கதவாக இருந்தால்
அவளைச் சுற்றி கேதுருமரப் பலகைகளை இணைப்போம்.
அவள் சகோதரர்களுக்குப் பதில் கூறுகிறாள்
10 நான் ஒரு சுவர்.
எனது மார்பகங்களே என்னுடைய கோபுரங்கள்.
அவர் என்னில் திருப்தி அடைகிறார்.
அவன் பேசுகிறான்
11 சாலொமோனுக்குப் பாகால் ஆமோனில் ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது.
அத்தோட்டத்தின் காவலுக்காக அவன் சிலரை நியமித்தான்.
ஒவ்வொருவரும்
1,000 வெள்ளிகாசு பெறுமான திராட்சைப் பழங்களைக் கொண்டுவந்தான்.
12 சாலொமோனே, நீர் உமது 1,000 வெள்ளி காசுகளையும் வைத்துக்கொள்ளலாம்.
ஒவ்வொருவனுக்கும் அவன் கொண்டுவந்த திராட்சைகளுக்காக 200 வெள்ளிகள் கொடும்.
ஆனால் எனது சொந்தத் திராட்சைத் தோட்டத்தை நானே கவனித்துக்கொள்வேன்.
அவன் அவளிடம் பேசுகிறான்
13 தோட்டத்தில் அமர்ந்திருக்கிறவளே,
உன் குரலை நண்பர்கள் கேட்கின்றார்கள்
நானும் அதைக் கேட்கவிடு.
அவள் அவனிடம் பேசுகிறாள்
14 என் நேசரே வேகமாக வாரும்.
மணப் பொருட்கள் நிறைந்த மலைகளின்மேல் திரியும் வெளிமானைப்போலவும்,
மரைகளின் குட்டிகளைப்போலவும் இரும்.
யூதத்தலைவர்களின் சதித்திட்டம்
(மத்தேயு 26:1-5; மாற்கு 14:1-2; லூக்கா 22:1-2)
45 மரியாளைப் பார்ப்பதற்காக ஏராளமான யூதர்கள் வந்திருந்தனர். இயேசு செய்ததை அவர்கள் பார்த்தார்கள். அவர்களில் பலர் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தனர். 46 ஆனால், சிலர் பரிசேயர்களிடம் சென்றனர். இயேசு செய்ததை அவர்கள் பரிசேயர்களிடம் சொன்னார்கள். 47 பிறகு ஆசாரியர்களும் பரிசேயர்களும் யூதர்களின் ஆலோசனைச் சபையைக் கூட்டினர். “இனி என்ன செய்யலாம்? இயேசு பல அற்புதங்களைச் செய்து வருகிறான். 48 அவனை இவ்வாறு தொடர்ந்து செய்ய அனுமதித்தால் பிறகு மக்கள் அனைவரும் அவனை நம்ப ஆரம்பித்துவிடுவார்கள். பின் ரோமானியர்கள் வந்து நமது ஆலயத்தையும், நாட்டையும் அபகரித்துக்கொள்வார்கள்” என்று பேசிக்கொண்டனர்.
49 அங்கே அவர்களில் ஒருவன் காய்பா. அவன் அந்த ஆண்டின் தலைமை ஆசாரியன். அவன் “உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. 50 நாடு முழுவதும் அழிவதைவிட மக்களுக்காக ஒருவன் இறந்துபோவது நல்லது அல்லவா? இதை ஏன் நீங்கள் எண்ணிப்பார்க்கவில்லை?” என்று சொன்னான்.
51 காய்பா இவற்றைச் சொந்தமாகச் சிந்தித்துச் சொல்லவில்லை. அவன் அந்த ஆண்டின் தலைமை ஆசாரியன். இயேசு யூத நாட்டுக்காக மரிக்கப்போகிறார் என்பதை அவன் உண்மையில் தீர்க்கதரிசனமாகவே கூறினான். 52 ஆம். இயேசு யூதர்களுக்காகவே மரிக்கப் போகிறார். உலகில் சிதறிக் கிடக்கிற மக்களையெல்லாம் ஒன்று திரட்டி, அவர்களை ஒரே மக்களாக்க அவர் மரிக்கப் போகிறார்.
53 அன்றிலிருந்து யூதத்தலைவர்கள் இயேசுவைக் கொலைசெய்யத் திட்டம் தீட்டினர். 54 ஆகையால் இயேசு யூதர்களின் மத்தியில் வெளிப்படையாக நடமாடுவதை நிறுத்தினார். இயேசு எருசலேமை விட்டு வனாந்தரத்திற்கு அருகிலுள்ள இடத்துக்கு சென்றார். இயேசு எப்பிராயீம் என்று அழைக்கப்படுகிற நகரத்துக்குச் சென்றார். அங்கே அவர் தம் சீஷர்களோடு தங்கினார்.
55 யூதருடைய பஸ்கா பண்டிகை நெருங்கிக்கொண்டிருந்தது. பஸ்கா பண்டிகைக்கு முன்பே நாட்டிலுள்ள மக்களில் பலர் எருசலேமிற்குச் சென்றனர். அங்கு அவர்கள் தம்மை சுத்தப்படுத்திக்கொள்வதற்கான சடங்குகளைச் செய்வர். 56 மக்கள் இயேசுவை எதிர்ப்பார்த்தனர். அவர்கள் ஆலயத்தில் நின்றுகொண்டு “இயேசு பண்டிகைக்கு வரமாட்டாரா? நீ என்ன நினைக்கிறாய்?” என ஒருவரை ஒருவர் விசாரித்துக்கொண்டனர். 57 ஆனால் தலைமை ஆசாரியரும் பரிசேயரும் இயேசுவைப்பற்றிய ஒரு புதிய கட்டளையைக் கொடுத்திருந்தனர். எவராவது இயேசு எங்கே இருக்கிறார் என்று தெரிந்துகொண்டால் உடனே வந்து தெரிவிக்க வேண்டும். பிறகு, தலைமை ஆசாரியர்களும் பரிசேயரும் இயேசுவைக் கைதுசெய்ய முடியும்.
2008 by World Bible Translation Center