Revised Common Lectionary (Complementary)
தாவீதின் ஒரு பாடல்.
144 கர்த்தர் என் கன்மலை.
கர்த்தரைப் போற்றுங்கள்.
கர்த்தர் என்னைப் போருக்குப் பழக்கப்படுத்துகிறார்.
கர்த்தர் என்னை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
2 கர்த்தர் என்னை நேசித்து என்னைப் பாதுக்காக்கிறார்.
மலைகளின் உயரத்தில் கர்த்தரே என் பாதுகாப்பிடம்.
கர்த்தர் என்னை விடுவிக்கிறார்.
கர்த்தர் எனது கேடகம்.
நான் அவரை நம்புகிறேன்.
நான் என் ஜனங்களை ஆள்வதற்கு கர்த்தர் உதவுகிறார்.
3 கர்த்தாவே, நீர் ஏன் ஜனங்களை முக்கியமானவர்களாகக் கருதுகிறீர்?
நீர் ஏன் அவர்களைக் கண்ணோக்கிக்கொண்டு இருக்கிறீர்?
4 ஊதும் காற்றைப்போன்று ஒருவனின் வாழ்க்கை உள்ளது.
மறையும் நிழலைப் போன்றது மனித வாழ்க்கை.
5 கர்த்தாவே, வானங்களைக் கிழித்துக் கீழே வாரும்.
மலைகளைத் தொடும், அவற்றிலிருந்து புகை எழும்பும்.
6 கர்த்தாவே, மின்னலை அனுப்பி என் பகைவர்களை ஓடிவிடச் செய்யும்.
உமது “அம்புகளைச்” செலுத்தி அவர்கள் ஓடிப்போகச் செய்யும்.
7 கர்த்தாவே, பரலோகத்திலிருந்து இறங்கி வந்து என்னைக் காப்பாற்றும்!
பகைவர்களின் கடலில் நான் அமிழ்ந்துபோக விடாதேயும்.
இந்த அந்நியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
8 இப்பகைவர்கள் பொய்யர்கள்.
அவர்கள் உண்மையில்லாதவற்றைக் கூறுகிறார்கள்.
9 கர்த்தாவே, நீர் செய்யும் அற்புதமான காரியங்களைப்பற்றி நான் ஒரு புதிய பாடலைப் பாடுவேன்.
நான் உம்மைத் துதிப்பேன். பத்து நரம்பு வீணையை நான் மீட்டுவேன்.
10 ராஜாக்கள் போர்களில் வெற்றி காண, கர்த்தர் உதவுகிறார்.
பகைவர்களின் வாள்களிலிருந்து கர்த்தர் அவரது ஊழியனாகிய தாவீதைக் காப்பாற்றினார்.
11 இந்த அந்நியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
இப்பகைவர்கள் பொய்யர்கள்.
அவர்கள் உண்மையில்லாதவற்றைக் கூறுகிறார்கள்.
12 நம் இளகுமாரர்கள் பலத்த மரங்களைப் போன்றவர்கள்.
நம் இளகுமாரத்திகள் அரண்மனையின் அழகிய அலங்கார ஒப்பனைகளைப் போன்றிருக்கிறார்கள்.
13 நம் களஞ்சியங்கள் பலவகை தானியங்களால் நிரம்பியிருக்கின்றன.
நம் வயல்களில் ஆயிரமாயிரம் ஆடுகள் உள்ளன.
14 நம் வீரர்கள் பாதுகாப்பாயிருக்கிறார்கள்.
எந்தப் பகைவனும் உள்ளே நுழைய முயலவில்லை.
நாங்கள் போருக்குச் செல்லவில்லை.
ஜனங்கள் நம் தெருக்களில் கூக்குரல் எழுப்பவில்லை.
15 இத்தகைய காலங்களில் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
கர்த்தர் அவர்கள் தேவனாக இருக்கும்போது ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
27 அந்தக் காலத்திலேயே, கர்த்தர் லிவியாதான் என்னும் கோணலான பாம்பை நியாயந்தீர்ப்பார்.
கர்த்தர் தனது கடினமும் வல்லமையும் கொண்ட பெரிய வாளை,
லிவியாதான் என்னும் நீண்ட பாம்பைத் தண்டிக்கப் பயன்படுத்துவார்.
கடலில் உள்ள பெரிய பிராணியை கர்த்தர் கொல்வார்.
2 அந்தக் காலத்திலே,
ஜனங்கள் நல்ல திராட்சைத் தோட்டத்தைப்பற்றிப் பாடுவார்கள்.
3 “கர்த்தராகிய நான், அத்தோட்டத்தைக் கவனித்துக்கொள்வேன்.
சரியான காலத்தில் நான் தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றுவேன்.
இரவும் பகலும் நான் தோட்டத்தைக் காவல் செய்வேன்.
எவரும் தோட்டத்தை அழிக்க முடியாது.
4 நான் கோபமாக இல்லை.
ஆனால் போர் இருந்தால், ஒருவர் முள்புதரால் சுவர் எழுப்பினால்,
பிறகு, நான் அதனை நோக்கிப்போய் அதனை எரிப்பேன்.
5 ஆனால், எவராவது பாதுகாப்புக்காக என்னிடம் வந்தால்,
என்னோடு சமாதானமாயிருக்க விரும்பினால் அவர்களை வரவிடுங்கள்.
அவர்கள் என்னோடு சமாதானம் கொள்ளட்டும்.
6 ஜனங்கள் என்னிடம் வருவார்கள்.
அந்த ஜனங்கள் யாக்கோபுக்கு உதவிசெய்து அவனை நல்ல வேர்கள் கொண்ட செடியைப்போல் பலமுள்ளதாக்குவார்கள்.
அந்த ஜனங்கள், இஸ்ரவேலை பூக்க ஆரம்பிக்கும் செடிபோல் வளரச் செய்வார்கள். பிறகு, செடிகளின் பழங்களைப்போல நாடு குழந்தைகளால் நிறைந்திருக்கும்.”
17 எவராவது கிறிஸ்துவுக்குள் இருந்தால் அவன் புதிதாகப் படைக்கப்பட்டவனாகிறான். பழையவை மறைந்தன. அனைத்தும் புதியவை ஆயின. 18 இவை அனைத்தும் தேவனிடமிருந்து வந்தன. கிறிஸ்துவின் மூலம் தேவன் அவருக்கும் நமக்கும் இடையில் சமாதானத்தை உருவாக்கினார். மக்களை சமாதானத்திற்குள் கொண்டு வந்து சேர்க்கும் பணியை எங்களுக்குக் கொடுத்திருக்கிறார். 19 தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்தார். அவருக்கும் உலகத்துக்கும் இடையில் சமாதானத்தை உருவாக்கினார் என்று சொல்கிறேன். கிறிஸ்துவுக்குள், தம் பாவங்கள் குறித்து குற்ற உணர்ச்சி கொண்ட மக்களை தேவன் குற்றவாளிகளாக நிறுத்துவதில்லை. இச்சமாதானச் செய்தியை மக்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டு எங்களுக்குக் கொடுத்தார். 20 எனவே, கிறிஸ்துவுக்காகப் பேச நாங்கள் அனுப்பப்பட்டிருக்கிறோம். எங்கள் மூலம் தேவன் உங்களை அழைக்கிறார். நாங்கள் கிறிஸ்துவுக்காகப் பேசுகிறோம். நீங்கள் அனைவரும் தேவனோடு சமாதானமாக இருக்க வேண்டுகிறோம். 21 கிறிஸ்துவிடம் பாவம் இல்லை. ஆனால் தேவன் நமக்காக அவரைப் பாவம் ஆக்கினார். நாம் கிறிஸ்துவுக்குள் தேவனுக்கு ஏற்றவர்களாக இருக்கவேண்டும் என்பதற்காக தேவன் இதைச் செய்தார்.
2008 by World Bible Translation Center