Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 80:7-15

சர்வ வல்லமையுள்ள தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.
    எங்களை ஏற்றருளும், எங்களைக் காப்பாற்றும்.

கடந்த காலத்தில் எங்களை முக்கியமான ஒரு தாவரத்தைப்போன்று நடத்தி வந்தீர்.
    நீர் உமது “திராட்சைக்கொடியை” எகிப்திலிருந்து கொண்டுவந்தீர்.
இத்தேசத்திலிருந்து பிறர் விலகிப்போகுமாறு கட்டாயப்படுத்தினீர்.
    உமது “திராட்சைக் கொடியை” நீர் இங்கு நட்டு வைத்தீர்.
“திராட்சைக்கொடிக்காக” நீர் நிலத்தைப் பண்படுத்தினீர்.
    அதன் வேர்கள் வேரூன்றிச் செல்வதற்கு நீர் உதவினீர்.
    உடனே அத் “திராட்சைக்கொடி” தேசமெங்கும் படர்ந்தது.
10 அது பர்வதங்களை மூடிற்று.
    அதன் இலைகள் பெரும் கேதுரு மரங்களுக்கு நிழல் தந்தன.
11 அதன் கொடிகள் மத்தியதரைக் கடல் வரைக்கும் படர்ந்தது.
    அதன் கிளைகள் ஐபிராத்து நதிவரைக்கும் சென்றது.

12 தேவனே, உமது “திராட்சைக்கொடி” யைப் பாதுகாக்கும் சுவர்களை ஏன் இடித்துத் தள்ளினீர்?
    இப்போது வழிநடந்து செல்பவன் ஒவ்வொருவனும் திராட்சைக் கனிகளைப் பறித்துச் செல்கிறான்.
13 காட்டுப்பன்றிகள் வந்து உமது “திராட்சைக் கொடியின்” மீது நடந்து செல்கின்றன.
    காட்டு மிருகங்கள் வந்து அதன் இலைகளைத் தின்கின்றன.

14 சர்வ வல்லமையுள்ள தேவனே, மீண்டும் வாரும்.
    பரலோகத்திலிருந்து கீழே உமது “திராட்சைக்கொடி” யைப் பார்த்து அதனைப் பாதுகாத்துக்கொள்ளும்.
15 தேவனே, உமது கைகளால் நட்ட “திராட்சைக் கொடியைப்” பாரும்.
    நீர் வளர்த்தெடுத்த இளமையான செடியை நீர் பாரும்.

எரேமியா 6:1-10

பகைவர் எருசலேமை சுற்றிவளைத்தனர்

பென்யமீன் ஜனங்களே! உங்கள் உயிருக்காக ஓடுங்கள்.
    எருசலேம் நகரத்தை விட்டுத் தூர ஓடுங்கள்!
தெக்கோவா நகரில் போர் எக்காளத்தை ஊதுங்கள்!
    பெத்கேரேம் நகரில் எச்சரிக்கை கொடியை ஏற்றுங்கள்!
நீங்கள் இவற்றை செய்யுங்கள்.
ஏனென்றால், வடக்கிலிருந்து பேரழிவானது வந்துகொண்டிருக்கிறது.
பயங்கரமான பேரழிவு உங்களுக்கு வந்துகொண்டிருக்கிறது.
சீயோனின் மகளே, நீ ஒரு அழகான மென்மையான
    பெண் போன்றுள்ளாய்.
மேய்ப்பர்கள் எருசலேமிற்கு வருகிறார்கள்,
    அவர்கள் தம் ஆட்டு மந்தையைக் கொண்டுவருகிறார்கள்.
எருசலேமைச் சுற்றி தங்கள் கூடாரங்களை அமைத்தனர்.
    ஒவ்வொரு மேய்ப்பனும், அவனது சொந்த மந்தையைக் கவனிக்கின்றனர்.

“எருசலேமிற்கு எதிராகப் போராடத் தயாராகுங்கள்.
    எழுந்திருங்கள்! நாம் மதிய நேரத்தில் நகரத்தைத் தாக்குவோம்;
ஆனால் ஏற்கனவே தாமதமாகிவிட்டது.
    மாலை நிழல் நீளமாக வளர்ந்துக்கொண்டிருக்கின்றது.
எனவே, புறப்படுங்கள்! இரவில் நகரத்தை நாம் தாக்குவோம்!
    எருசலேமைச் சுற்றியிருக்கின்ற உறுதியான சுவர்களை அழிப்போம்.”

சர்வ வல்லமையுள்ள கர்த்தர்,
    “எருசலேமை சுற்றியுள்ள மரங்களை வெட்டிப்போடுங்கள், அதன் சுவருக்கு எதிராக எடுசுவரை எழுப்புங்கள்.
இந்த நகரம் தண்டிக்கப்படவேண்டும்!
    இந்த நகரத்தின் உட்பகுதியில் கொடுமையைத் தவிர வேறு எதுவுமில்லை.
ஒரு கிணறு தனது தண்ணீரைப் புதிதாக சுரக்கிறது,
    இதுபோலவே எருசலேமும் தனது தீங்கை சுரக்கபண்ணுகிறது,
நகரத்திற்குள் எல்லா நேரத்திலும், கொடுமையும், வன்முறையும் நிகழ்வதை நான் கேள்விப்படுகிறேன்.
    எருசலேமிற்குள் எப்பொழுதும் துன்பமும், நோயும் இருப்பதைப் பார்க்கிறேன்.
எருசலேமே! இந்த எச்சரிக்கையை கவனி!
    நீ கவனிக்காவிட்டால், பிறகு நான் உனக்கு எனது முதுகைத் திருப்புவேன்,
உனது நாட்டை ஒரு வெறும் வனாந்தரமாக நான் செய்வேன்.
    அங்கு எவரும் வாழமுடியாமல் போகும்” என்று கூறுகிறார்.

சர்வ வல்லமையுள்ள கர்த்தர்,
“தங்கள் தேசத்தில் விடப்பட்டிருந்த இஸ்ரவேல் ஜனங்களை ஒன்று சேருங்கள்,
    நீங்கள் திராட்சைத் தோட்டத்தில் இறுதியில்
பழுத்த பழங்களை சேகரிப்பதுபோன்று
    அவர்களை ஒன்று சேருங்கள்.
ஒரு வேலைக்காரன் ஒவ்வொரு திராட்சைப் பழத்தையும் பறிக்குமுன்
    சோதிப்பதுபோன்று சோதியுங்கள்” என்று கூறுகிறார்.
10 நான் யாரோடு பேசுவேன்?
    நான் யாரை எச்சரிக்க முடியும்?
    நான் சொல்வதை யார் கேட்பார்கள்?
இஸ்ரவேல் ஜனங்கள் தம் காதுகளை மூடிக்கொண்டார்கள்.
    எனவே, எனது எச்சரிக்கைகளை அவர்களால் கேட்கமுடியாது.
ஜனங்கள் கர்த்தருடைய போதனைகளை விரும்புகிறதில்லை,
    அவரது செய்தியை அவர்கள் கேட்க விரும்பவில்லை.

யோவான் 7:40-52

இயேசுவைப் பற்றி மக்களின் விவாதம்

40 இயேசு சொன்ன இக்காரியங்களை மக்கள் கேட்டனர். சிலர், “இந்த மனிதர் உண்மையான தீர்க்கதரிசிதான்” என்றனர்.

41 வேறு சிலரோ, “இவர்தான் கிறிஸ்து” என்றனர். மற்றும் சிலரோ, “கிறிஸ்து கலிலேயாவிலிருந்து வரமாட்டார். 42 வேதவாக்கியங்கள், தாவீதின் குடும்பத்திலிருந்து தான் கிறிஸ்து வரப்போகிறார் என்று கூறுகின்றன. அத்துடன் தாவீது வாழ்ந்த பெத்லகேமிலிருந்துதான் கிறிஸ்து வருவார் என்றும் கூறுகின்றன” என்றனர். 43 எனவே, இயேசுவைப் பற்றிய கருத்துக்களில் ஒருவருக்கொருவர் ஒத்துக்கொள்ளவில்லை. 44 சிலர் அவரைக் கைதுசெய்ய விரும்பினர். ஆனால் ஒருவரும் உண்மையில் அவர் மேல் கை வைக்கவில்லை.

யூததலைவர்களின் அவிசுவாசம்

45 தேவாலயச் சேவகர்கள் தலைமை ஆசாரியர்களிடமும் பரிசேயர்களிடமும் திரும்பிப் போனார்கள். “ஏன் இயேசுவைக் கொண்டுவரவில்லை?” என்று அவர்கள் கேட்டனர்.

46 தேவாலயச் சேவகர்களோ, “எந்த ஒரு மனிதனும் அவரைப்போல் கருத்துக்களைக் கூறியதில்லை” என்றனர்.

47 இதற்குப் பரிசேயர்கள், “அப்படியானால் இயேசு உங்களையும் முட்டாளாக்கிவிட்டார். 48 எந்தத் தலைவராவது இயேசுவின்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்களா? இல்லை. எந்தப் பரிசேயராவது அவனை நம்புகிறார்களா? இல்லை. 49 ஆனால் அவரை நம்புகிற மக்கள் மோசேயின் சட்டத்தைப்பற்றி ஒன்றும் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தேவனின் சாபத்திற்கு ஆளாவார்கள்” என்றார்கள்.

50 ஆனால் அந்தக் கூட்டத்தில் நிக்கொதேமுவும் இருந்தான். நிக்கொதேமுவும் இயேசுவைக் காண்பதற்காகப் போனவர்களில் ஒருவன்.[a] 51 அவன், “ஒரு மனிதனைப் பற்றி முழுவதும் கேட்டறிவதற்கு முன்னால் தண்டிப்பதற்கு நம் சட்டம் இடம் கொடுப்பதில்லை. அவன் என்னென்ன செய்திருக்கிறான் என்பதைத் தெரிந்துகொள்ளும்வரை நாம் தீர்ப்பளிக்க முடியாது” என்றான்.

52 யூதத் தலைவர்கள் அவனிடம், “நீயும் கலிலேயாவிலிருந்துதான் வந்திருக்கிறாயா? வேதவாக்கியங்களைப் படித்துப் பார். கலிலேயாவிலிருந்து எந்தவொரு தீர்க்கதரிசியும் வர முடியாது என்று நீ அறிந்துகொள்வாய்” என்றனர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center