Revised Common Lectionary (Complementary)
7 சர்வ வல்லமையுள்ள தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.
எங்களை ஏற்றருளும், எங்களைக் காப்பாற்றும்.
8 கடந்த காலத்தில் எங்களை முக்கியமான ஒரு தாவரத்தைப்போன்று நடத்தி வந்தீர்.
நீர் உமது “திராட்சைக்கொடியை” எகிப்திலிருந்து கொண்டுவந்தீர்.
இத்தேசத்திலிருந்து பிறர் விலகிப்போகுமாறு கட்டாயப்படுத்தினீர்.
உமது “திராட்சைக் கொடியை” நீர் இங்கு நட்டு வைத்தீர்.
9 “திராட்சைக்கொடிக்காக” நீர் நிலத்தைப் பண்படுத்தினீர்.
அதன் வேர்கள் வேரூன்றிச் செல்வதற்கு நீர் உதவினீர்.
உடனே அத் “திராட்சைக்கொடி” தேசமெங்கும் படர்ந்தது.
10 அது பர்வதங்களை மூடிற்று.
அதன் இலைகள் பெரும் கேதுரு மரங்களுக்கு நிழல் தந்தன.
11 அதன் கொடிகள் மத்தியதரைக் கடல் வரைக்கும் படர்ந்தது.
அதன் கிளைகள் ஐபிராத்து நதிவரைக்கும் சென்றது.
12 தேவனே, உமது “திராட்சைக்கொடி” யைப் பாதுகாக்கும் சுவர்களை ஏன் இடித்துத் தள்ளினீர்?
இப்போது வழிநடந்து செல்பவன் ஒவ்வொருவனும் திராட்சைக் கனிகளைப் பறித்துச் செல்கிறான்.
13 காட்டுப்பன்றிகள் வந்து உமது “திராட்சைக் கொடியின்” மீது நடந்து செல்கின்றன.
காட்டு மிருகங்கள் வந்து அதன் இலைகளைத் தின்கின்றன.
14 சர்வ வல்லமையுள்ள தேவனே, மீண்டும் வாரும்.
பரலோகத்திலிருந்து கீழே உமது “திராட்சைக்கொடி” யைப் பார்த்து அதனைப் பாதுகாத்துக்கொள்ளும்.
15 தேவனே, உமது கைகளால் நட்ட “திராட்சைக் கொடியைப்” பாரும்.
நீர் வளர்த்தெடுத்த இளமையான செடியை நீர் பாரும்.
23 “யூதாவே, நீ என்னிடம், ‘நான் தீட்டாகவில்லை,
நான் பாகால் விக்கிரகங்களை தொழுதுகொள்ளவில்லை’ என்று எப்படிக் கூறமுடியும்?
பள்ளத்தாக்குகளில் நீ செய்தவற்றைப்பற்றி எண்ணு,
நீ இடத்திற்கு இடம் வேகமாக ஓடுகிற பெண் ஒட்டகத்தைப் போன்றவள்.
24 நீ வனாந்தரத்திலே வாழ்கிற ஒரு கழுதையைப் போன்றவன்.
அது காமத்தின்போது மோப்பம் பிடிக்கக்கூடியது,
அது ஆசையோடு இருக்கும்போது, அதன் போக்கை மாற்ற யாராலும் திருப்பிக் கொண்டு வரமுடியாது.
காமத்தின்போது ஒவ்வொரு கழுதையும் தான்விரும்பும் பெண் கழுதையை அடையும்,
அதனைக் கண்டுபிடிப்பது எளிது.
25 யூதாவே, விக்கிரகங்களின் பின்னால் ஓடுவதைவிடு!
அந்த தெய்வங்களுக்காகத் தாகமாயிருப்பதை நிறுத்து.
ஆனால் நீ, ‘இதனால் பயனில்லை என்னால் அமைதியாக இருக்கமுடியாது,
அந்த அந்நிய தெய்வங்களை நான் நேசிக்கிறேன்,
அவற்றை நான் தொழுதுகொள்ள விரும்புகிறேன்’ என்கிறாய்.
26 “ஒரு திருடன் பிடிபட்டபோது,
வெட்கப்படுகிறான், அதைப்போன்று, இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் வெட்கப்படுகிறார்கள்.
ராஜாக்களும் தலைவர்களும் வெட்கப்படுகிறார்கள்.
ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் வெட்கப்படுகிறார்கள்.
27 அந்த ஜனங்கள் மரத்துண்டுகளோடு பேசுகிறார்கள்!
அவர்கள், ‘நீ என் தந்தை’ என்கிறார்கள்.
அந்த ஜனங்கள் பாறையோடு பேசுகிறார்கள்.
அந்த ஜனங்கள், ‘நீ எனக்குப் பிறப்பைக் கொடுத்தாய்’ என்றனர்.
அவர்கள் அனைவரும் வெட்கப்படுவார்கள்.
அந்த ஜனங்கள் என்னைப் பார்க்கமாட்டார்கள்.
அவர்கள் எனக்குத் தம் முதுகைக் காட்டினார்கள்.
ஆனால் யூதாவின் ஜனங்கள் துன்பம் அடையும்போது, அவர்கள் என்னிடம் வந்து,
‘எங்களைக் காப்பாற்றும்!’ என்பார்கள்.
28 அந்த விக்கிரகங்கள் வந்து உன்னைக் காப்பாற்றட்டும்! நீங்களாகச் செய்த அந்த விக்கிரகங்கள் எங்கே?
நீங்கள் துன்பப்படும்போது அந்த விக்கிரகங்கள் வந்து உங்களைக் காப்பாற்றுகிறதா என்று பார்க்கலாம்!
யூதாவே, உனது எண்ணற்ற நகரங்களைப் போன்றே நிறைய விக்கிரகங்களைப் பெற்றுள்ளாய்!
29 “ஏன் என்னோடு நீ வாதாடுகிறாய்?
நீங்கள் அனைவரும் எனக்கு எதிராக உள்ளீர்கள்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
30 “யூதாவின் ஜனங்களே, நான் உங்களைத் தண்டித்தேன்.
ஆனால் அது உதவவில்லை.
நீங்கள் தண்டிக்கப்பட்டபோது
என்னிடம் திரும்பி வரவில்லை.
உங்களிடம் வந்த தீர்க்கதரிசிகளை வாளால் கொன்றீர்கள். நீங்கள் ஆபத்தான சிங்கத்தைப் போன்றவர்கள்.
நீங்கள் தீர்க்கதரிசிகளைக் கொன்றீர்கள்.”
31 இத்தலைமுறையில் உள்ளவர்களே, கர்த்தருடைய செய்தியில் கவனம் செலுத்துங்கள்!
“இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் வனாந்தரத்தைப்போல் இருந்திருக்கிறேனா?
நான் அவர்களுக்கு இருண்டதும் பயங்கரமானதுமான நிலமாக இருந்திருக்கிறேனா?
ஏன் என் ஜனங்கள், ‘நாங்கள் எங்கள் வழியில் போக சுதந்தரம் உள்ளவர்கள்.
கர்த்தாவே, நாங்கள் உம்மிடம் வரமாட்டோம்!’ என்றனர்.
ஏன் அவற்றை அவர்கள் சொன்னார்கள்?
32 ஒரு இளம் பெண்ணால் தன் நகைகளை மறக்க முடியாது.
ஒரு மணமகள் தனது ஆடைகளை மறக்க முடியாது.
ஆனால் என் ஜனங்கள் பலமுறை என்னை மறந்துவிட்டார்கள், அவைகள் எண்ண முடியாதவை.
33 “யூதாவே, உனக்கு நேசர்களை (பொய்த் தெய்வங்கள்) எவ்வாறு விரட்டிப்பிடிப்பது என்று தெரியும்.
நீங்கள் உண்மையில் தீமை செய்யக் கற்றிருக்கிறீர்கள்.
34 உங்கள் கைகளில் இரத்தம் இருக்கிறது!
இது ஏழைகளின் இரத்தம்; அப்பாவிகளின் இரத்தம்.
உங்கள் வீட்டை உடைத்தவர்களை நீ பிடிக்கவில்லை!
எவ்விதக் காரணமும் இல்லாமல் அவர்களைக் கொன்றாய்!
35 ஆனால் இன்றும் நீ, ‘நான் அப்பாவி.
தேவனுக்கு என்மீது கோபமில்லை’ என்று சொல்லுகிறாய்.
எனவே நானும் உன்னைப் ‘பொய்யன்’ எனக் குற்றம்சாட்டுவேன்.
ஏனென்றால் நீ, ‘நான் எவ்விதத் தப்பும் செய்யவில்லை’ என்று சொல்லுகிறாய்.
36 உன் மனதை மாற்றிக்கொள்வது உனக்கு மிக எளிதாகலாம்.
அசீரியா உன்னை அதிருப்திப்படுத்தினான், எனவே அசீரியாவை விட்டு விலகினாய்.
உதவிக்காக எகிப்திடம் போனாய்.
ஆனால் எகிப்தும் உன்னை அதிருப்திப்படுத்தும்.
37 எனவே நீ இறுதியாக எகிப்தையும் விட்டுப் போய்விடுவாய்.
உன் முகத்தை வெட்கத்திற்குள் மறைத்துக்கொள்வாய்.
நீ அந்த நாடுகளை நம்பினாய்,
ஆனால் கர்த்தர் அந்நாடுகளை வெறுத்தார், எனவே அவர்களால் உன் வெற்றிக்கு உதவ முடியாது.
14 முறுமுறுப்பு அல்லது வாக்குவாதம், இல்லாமல் எல்லாவற்றையும் செய்யுங்கள். 15 அப்போதுதான் எதுவுமறியாதவர்களாகவும், எந்தத் தவறும் இல்லாதவர்களாகவும் இருப்பீர்கள். நீங்கள் தேவனுடைய குற்றமற்ற பிள்ளைகளாக இருப்பீர்கள். ஆனால் உங்களைச் சுற்றிலும் உள்ள பாவம் செய்கிற கெட்டவர்களோடு நீங்கள் வாழ்கிறீர்கள். அவர்களுக்கு மத்தியில் இருட்டின் நடுவில் விளக்குபோன்று பிரகாசிக்கிறீர்கள். 16 வாழ்வைக் கொடுக்கும் போதனையை அந்த மக்களுக்கும் நீங்கள் வழங்குங்கள். கிறிஸ்து மீண்டும் வரும்போது இது பற்றி நான் மிகவும் பெருமை அடைவேன். எனது பணி வீணாகவில்லை என்றும் நான் பெருமைகொள்வேன். ஏனென்றால் பந்தயத்தில் ஓடி நான் வென்றவனாவேன்.
17 தேவனுக்கு ஊழியம் செய்து உங்கள் வாழ்வைத் தியாகம் செய்ய உங்கள் விசுவாசம் தூண்டும். உங்கள் தியாகத்தோடு என் இரத்தத்தையும் தரத் தயாராக உள்ளேன். ஆனால் அது நடந்தேறினால் நான் முழுமையாக மகிழ்வேன். நான் உங்களோடு பெரிதும் மகிழ்ச்சி அடைவேன். 18 மகிழ்ச்சியாக இருங்கள். என்னோடு முழு மகிழ்ச்சி அடையுங்கள்.
கிறிஸ்துவே முக்கியமானவர்
3 இப்போதும் என் சகோதர சகோதரிகளே! கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருங்கள். அவற்றையே மீண்டும் எழுதுவதில் எனக்கு எவ்விதமான தொந்தரவும் இல்லை. ஆனால் இது நீங்கள் ஆயத்தமாக இருக்க உதவியாக இருக்கும்.
2 பாவம் செய்கிற மக்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள். அவர்கள் நாய்களைப் போன்றவர்கள். அவர்கள் நீங்கள் விருத்தசேதனம் செய்யும்படி பலவந்தப்படுத்துவார்கள். 3 ஆனால் உண்மையில் நாம் விருத்தசேதனம் உள்ளவர்கள். நாம் தேவனை அவரது ஆவியின் மூலம் வழிபட்டு வருகிறோம். நாம் இயேசு கிறிஸ்துவுக்குள் இருப்பதில் பெருமைப்படுகிறோம். நம் மீதோ, நமது செயல்களின் மீதோ நாம் நம்பிக்கை வைப்பதில்லை. 4 என் மீது நான் நம்பிக்கை வைக்க முடியும் என்றாலும் நான் நம்பிக்கை வைப்பதில்லை. வேறு யாராவது ஒருவர் தன் மீது நம்பிக்கை வைக்கக் காரணம் இருக்கும் என்று கருதினால், எனக்கும் என் மீது நம்பிக்கை வைக்க நிறைய காரணங்கள் உள்ளன.
2008 by World Bible Translation Center