Revised Common Lectionary (Complementary)
7 சர்வ வல்லமையுள்ள தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.
எங்களை ஏற்றருளும், எங்களைக் காப்பாற்றும்.
8 கடந்த காலத்தில் எங்களை முக்கியமான ஒரு தாவரத்தைப்போன்று நடத்தி வந்தீர்.
நீர் உமது “திராட்சைக்கொடியை” எகிப்திலிருந்து கொண்டுவந்தீர்.
இத்தேசத்திலிருந்து பிறர் விலகிப்போகுமாறு கட்டாயப்படுத்தினீர்.
உமது “திராட்சைக் கொடியை” நீர் இங்கு நட்டு வைத்தீர்.
9 “திராட்சைக்கொடிக்காக” நீர் நிலத்தைப் பண்படுத்தினீர்.
அதன் வேர்கள் வேரூன்றிச் செல்வதற்கு நீர் உதவினீர்.
உடனே அத் “திராட்சைக்கொடி” தேசமெங்கும் படர்ந்தது.
10 அது பர்வதங்களை மூடிற்று.
அதன் இலைகள் பெரும் கேதுரு மரங்களுக்கு நிழல் தந்தன.
11 அதன் கொடிகள் மத்தியதரைக் கடல் வரைக்கும் படர்ந்தது.
அதன் கிளைகள் ஐபிராத்து நதிவரைக்கும் சென்றது.
12 தேவனே, உமது “திராட்சைக்கொடி” யைப் பாதுகாக்கும் சுவர்களை ஏன் இடித்துத் தள்ளினீர்?
இப்போது வழிநடந்து செல்பவன் ஒவ்வொருவனும் திராட்சைக் கனிகளைப் பறித்துச் செல்கிறான்.
13 காட்டுப்பன்றிகள் வந்து உமது “திராட்சைக் கொடியின்” மீது நடந்து செல்கின்றன.
காட்டு மிருகங்கள் வந்து அதன் இலைகளைத் தின்கின்றன.
14 சர்வ வல்லமையுள்ள தேவனே, மீண்டும் வாரும்.
பரலோகத்திலிருந்து கீழே உமது “திராட்சைக்கொடி” யைப் பார்த்து அதனைப் பாதுகாத்துக்கொள்ளும்.
15 தேவனே, உமது கைகளால் நட்ட “திராட்சைக் கொடியைப்” பாரும்.
நீர் வளர்த்தெடுத்த இளமையான செடியை நீர் பாரும்.
14 “இஸ்ரவேல் ஜனங்கள் அடிமைகளாக மாறினார்களா?
அடிமையாகப் பிறந்த மனிதனைப்போன்று இருந்தார்களா?
இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து செல்வத்தை ஏன் ஜனங்கள் எடுத்துக்கொண்டனர்?
15 இஸ்ரவேலை நோக்கி இளஞ்சிங்கங்கள் (பகைவர்கள்) கெர்ச்சிக்கின்றன,
சிங்கங்கள் முழங்குகின்றன, இஸ்ரவேல் தேசத்தை சிங்கங்கள் அழித்திருக்கின்றன,
இஸ்ரவேல் நகரங்கள் எரிந்திருக்கின்றன,
அவர்களில் எவரும் மீதமில்லை.
16 நோப், தகபானேஸ் எனும் நகரங்களின் ஜனங்கள்
உன் உச்சந்தலையை நொறுக்கினார்கள்.
17 இந்த தொந்தரவு உனது சொந்தக் குற்றம்!
உங்கள் தேவனாகிய கர்த்தர் உன்னை நல்வழியில் நடத்தினார்,
ஆனால், அவரிடமிருந்து நீங்கள் விலகினீர்கள்.
18 யூத ஜனங்களே, இதை நினையுங்கள்:
எகிப்துக்குப் போக இது உதவுமா?
நைல் நதியில் தண்ணீர் குடிக்க இது உதவுமா? இல்லை!
அசீரியாவிற்குச் செல்ல இது உதவுமா?
ஐபிராத்து ஆற்று தண்ணீரைக் குடிக்க இது உதவுமா? இல்லை!
19 நீங்கள் தீயவற்றைச் செய்தீர்கள்,
அத்தீயவை உங்களுக்குத் தண்டனையைமட்டும் கொண்டு வரும். துன்பம் உங்களுக்கு வரும்.
அத்துன்பம் உனக்குப் பாடத்தைக் கற்பிக்கும்.
இதைப்பற்றி சிந்தி!
பிறகு உன் தேவனிடமிருந்து விலகுவது எவ்வளவு கெட்டது என்பதை நீ புரிந்துகொள்வாய்;
என்னை மதிக்காததும் எனக்குப் பயப்படாததும் தவறு!”
இச்செய்தி எனது ஆண்டவராகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து வந்தது.
20 “யூதாவே, நீண்ட காலத்திற்கு முன்பு உன் நுகத்தை எறிந்தாய்,
நீ கயிறுகளை அறுத்து எறிந்தாய், (அதனை உன்னைக் கட்டுப்படுத்த வைத்திருந்தேன்) ‘நான் உனக்கு சேவை செய்ய மாட்டேன்!’ என்று நீ சொன்னாய்.
நீ வேசியைப்போன்று
மலைகளின் மேலும் ஒவ்வொரு பச்சையான மரங்களின் கீழும் அலைந்தாய்.
21 யூதாவே, நான் உன்னைச் சிறப்பான திராட்சையைப்போன்று நட்டேன்.
நீங்கள் அனைவரும் நல்ல விதைகளைப் போன்றிருந்தீர்கள்,
நீங்கள் தீய பழத்தைக்கொடுக்கும் வேறுபட்ட திராட்சையாக எப்படி மாறினீர்கள்?
22 நீ உன்னை உவர்மண்ணால் கழுவினாலும்,
நீ மிகுதியான சவுக்காரத்தைப் பயன்படுத்தினாலும் நான் உனது குற்றத்தின் கறையைக் காணமுடியும்”
என்று தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
மனிதனின் சட்டத்தைப் பின்பற்றாதீர்கள்
16 ஆகையால், உண்பதைப் பற்றியும், குடிப்பதைப் பற்றியும், பண்டிகைகள், பௌர்ணமிகள், ஓய்வு நாட்கள் ஆகிய யூதர்களின் பழக்க வழக்கங்களைக் குறித்தும் எவரும் சட்டங்கள் உருவாக்க நீங்கள் அனுமதிக்காதீர்கள். மனித விதிமுறைகளைப் பின்பற்றாதீர்கள் 17 கடந்த காலத்தில், இவை நிழலாக இருந்து எதிர்காலத்தில் வருவதைச் சுட்டிக் காட்டியது. ஆனால் புதிதாக வந்தவை கிறிஸ்துவில் காணப்படுகின்றன. 18 சிலர் தாழ்மையுள்ளவர்கள் போல் நடிப்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்கள் தேவ தூதர்களை வழிபட விரும்புவர். அவர்கள் எப்பொழுதும் தாங்கள் கண்ட தரிசனங்களையும், கனவுகளையும் பற்றியே பேசிக்கொண்டிருப்பர். அவர்கள் “நீங்கள் தவறானவர்கள், உங்களால் எதுவும் செய்ய முடியாது” என்று கூறுவர். எனவே அவர்களை எதுவும் சொல்ல அனுமதிக்காதீர்கள். அவர்களுக்கு எப்பொழுதும் முட்டாள்தனமான பெருமிதமே இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் மனிதர்களின் எண்ணங்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறார்களே ஒழிய தேவனுடைய எண்ணங்களைப் பற்றி சிந்திப்பதில்லை. 19 அவர்கள், தலையாகிய கிறிஸ்துவின் அதிகாரத்துக்குள் தம்மைக் கட்டுப்படுத்திக்கொள்வதில்லை. முழு சரீரமும் கிறிஸ்துவைச் சார்ந்துள்ளது. அவரால் நம் சரீரத்தின் எல்லா உறுப்புகளும் ஒன்றுக்கொன்று அக்கறை கொள்கிறது. மேலும் அவை ஒன்றுக்கொன்று உதவியும் செய்கிறது. இது சரீரத்தை வலிமைப்படுத்தி ஒன்றாய்ச் சேர்க்கிறது. தேவன் விரும்புகிற விதத்திலேயே சரீரம் வளருகின்றது.
20 நீங்கள் கிறிஸ்துவோடு இறந்தீர்கள். உலகத்தின் பயனற்ற சட்டதிட்டங்களில் இருந்தும் விடுதலை பெற்றீர்கள். எனினும் நீங்கள் இந்த உலகத்தைச் சார்ந்தவர்களைப் போன்று நடித்து வருகிறீர்கள். 21 “இதனை உண்ணக்கூடாது.” “அதனைச் சுவைபார்க்கக்கூடாது” “அதனைத் தொடக்கூடாது” என்கிறீர்கள். 22 ஏன் இன்னும் இது போன்ற சட்ட திட்டங்களைப் பின்பற்றுகிறீர்கள்? இவை பயன்படுத்தப்பட்டவுடன் போய்விடும். இச்சட்டதிட்டங்கள் பூலோகத்தைப் பற்றியவை. இவை மனிதர்களின் கட்டளைகளும், போதனைகளுமேயாகும். தேவனுடையவை அல்ல. 23 இவை புத்திசாலித்தனமாய்த் தோன்றலாம். ஆனால் இச்சட்டங்கள் போலிப் பணிவும் சரீரத்தைத் தண்டிக்கக் கூடியதுமான மனிதரால் உருவாக்கப்பட்ட மதத்தின் சட்டங்கள் மட்டுமே ஆகும். ஆனால் இவை மக்கள் பாவத்தில் இருந்து விடுபட உதவாது.
2008 by World Bible Translation Center