Revised Common Lectionary (Complementary)
தாவீதின் ஒரு பாடல்.
28 கர்த்தாவே, நீர் என் பாறை.
உதவிக்காக உம்மை அழைத்துக்கொண்டிருக்கிறேன்.
என் ஜெபங்களுக்கு உமது காதுகளை மூடிக்கொள்ளாதிரும்.
உதவி கேட்கும் என் கூக்குரலுக்கு நீர் பதிலளிக்காதிருந்தால் கல்லறைக்குச் சென்ற பிணத்தைக் காட்டிலும் நான் மேலானவனில்லை என எண்ணுவேன்.
2 கர்த்தாவே, என் கரங்களை உயர்த்தி, உமது மகா பரிசுத்த இடத்திற்கு நேராக ஜெபம் செய்வேன்.
உம்மை நோக்கி நான் கூப்பிடும்போது செவிகொடும். எனக்கு இரக்கம் காட்டும்.
3 கர்த்தாவே, தீமை செய்யும் தீயோரைப் போல என்னை எண்ணாதேயும்.
“ஷாலோம்” என்று அவர்கள் தங்கள் அயலாரை வாழ்த்துவார்கள்.
ஆனால் அவர்களைக் குறித்துத் தீயவற்றைத் தங்கள் இருதயங்களில் எண்ணுகிறார்கள்.
4 கர்த்தாவே, அவர்கள் பிறருக்குத் தீய காரியங்களைச் செய்வார்கள்.
எனவே அவர்களுக்குத் தீங்கு வரச்செய்யும்.
அவர்களுக்குத் தக்க தண்டனையை நீர் கொடுத்தருளும்.
5 கர்த்தர் செய்யும் நல்லவற்றைத் தீயோர் புரிந்துகொள்வதில்லை.
தேவன் செய்யும் நல்ல காரியங்களை அவர்கள் பார்ப்பதில்லை.
அவர்கள் அதைப் புரிந்துகொள்வதில்லை.
அவர்கள் அழிக்க மட்டுமே முயல்வார்கள்.
6 கர்த்தரைத் துதிப்பேன்,
இரக்கம் காட்டுமாறு கேட்ட என் ஜெபத்தை அவர் கேட்டார்.
7 கர்த்தரே என் பெலன், அவரே என் கேடகம்.
அவரை நம்பினேன்.
அவர் எனக்கு உதவினார்.
நான் மிகவும் மகிழ்கிறேன்!
அவரைத் துதித்துப் பாடல்களைப் பாடுவேன்.
8 கர்த்தர் தாம் தேர்ந்தெடுத்தவனைக் காக்கிறார்.
கர்த்தர் அவனை மீட்கிறார். கர்த்தரே அவன் பெலன்.
9 தேவனே, உம் ஜனங்களை மீட்டருளும்.
உமது ஜனங்களை ஆசீர்வதியும்!
அவர்களை வழி நடத்தி என்றென்றும் கனப்படுத்தும்!
காசா என்னும் நகருக்கு சிம்சோன் செல்லுதல்
16 ஒரு நாள் சிம்சோன் காசா நகரத்திற்குச் சென்றான். அவன் அங்கு ஒரு வேசியைச் சந்தித்து, அன்றிரவு அவளோடு தங்கச் சென்றான். 2 காசா நகர ஜனங்களிடம், “சிம்சோன் இங்கு வந்திருக்கிறான்” என்று யாரோ தெரிவித்தனர். அவர்கள் அவனைக் கொல்ல எண்ணினார்கள். எனவே, அவன் இருந்த இடத்தை சூழ்ந்தனர். அவர்கள் மறைந்திருந்து சிம்சோனின் வரவுக்காக காத்திருந்தனர். அவர்கள் நகர வாயிலருகே இரவு முழுவதும் அமைதியாகத் தங்கியிருந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர், “காலையில் சிம்சோனைக் கொல்வோம்” என்று பேசிக்கொண்டனர்.
3 ஆனால் சிம்சோன் அவ்விலைமகளோடு நள்ளிரவுவரை மட்டுமே தங்கியிருந்தான். சிம்சோன் நள்ளிரவில் விழித்தெழுந்தான். சிம்சோன் நகரவாயில் கதவுகளை பிடித்து, மதிலிலிருந்து தளர்த்திப் பெயர்த்தெடுத்தான். சிம்சோன் கதவுகளையும், அவற்றின் இரண்டு தூண்களையும், கதவுகளை மூடும் இரும்புத் துண்டுகளையும் சேர்த்துத் தூக்கிக்கொண்டான். சிம்சோன் அதை தோளில் சுமந்துக்கொண்டு, எபிரோன் நகருக்கு அருகிலுள்ள மலையின்மீது ஏறினான்.
சிம்சோனும் தெலீலாளும்
4 பின்னர் சிம்சோன் தெலீலாள் என்னும் ஒரு பெண்ணை நேசித்தான். அவள் சோரேக் என்னும் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவள்.
5 பெலிஸ்திய ஜனங்களின் தலைவர்கள் தெலீலாளிடம் சென்றனர். அவர்கள், “சிம்சோனைப் பெலசாலியாக வைத்திருப்பது எதுவென்று நாங்கள் அறிய விரும்புகிறோம். அவனது இரகசியத்தை உனக்குத் தெரிவிக்குமாறு நீ ஏதேனும் தந்திரம் செய். அப்போது அவனைப் பிடித்துக் கட்டுவது எப்படியென்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். பிறகு அவனைக் கட்டுப்படுத்துவதும் எளிதாயிருக்கும். நீ இதைச் செய்தால் நாங்கள் ஒவ்வொரு வரும் உனக்கு 28 பவுண்டு எடையுள்ள வெள்ளியைக் கொடுப்போம்” என்றார்கள்.
6 எனவே தெலீலாள் சிம்சோனிடம், “நீங்கள் எதனால் பெலசாலியாக இருக்கிறீர்கள் என்பதைக் கூறுங்கள். எவ்வாறு உங்களைக் கட்டி பெலவீனப்படுத்த முடியும்?” என்று கேட்டாள்.
7 சிம்சோன் பதிலாக, “ஏழு பச்சையான உலராத வில் நாண்களால் என்னைக் கட்டவேண்டும். அவ்வாறு செய்தால் நான் பிறரைப் போன்று பெலனற்றவனாவேன்” என்றான்.
8 அப்போது பெலிஸ்தியரின் அதிகாரிகள் தெலீலாளிடம் ஏழு பச்சையான வில் நாண்களைக் கொண்டு வந்தனர். அவை இன்னும் உலர்ந்திருக்கவில்லை. அவற்றால் தெலீலாள் சிம்சோனைக் கட்டினாள். 9 சிலர் அடுத்த அறையில் ஒளித்திருந்தனர். தெலீலாள் சிம்சோனிடம், “சிம்சோன், உங்களைப் பெலிஸ்தியர்கள் பிடிக்கப் போகிறார்கள்!” என்றாள். ஆனால் சிம்சோன் எளிதாக அந்த வில் நாண்களை அறுத்துப்போட்டான். விளக்கில் எரியும் திரியிலுள்ள சாம்பலைப் போன்று அவைத் தெறித்து விழுந்தன. எனவே பெலிஸ்தியர்கள் சிம்சோனின் பெலத்தின் இரகசியத்தை அறிந்துகொள்ளவில்லை.
10 அப்போது தெலீலாள் சிம்சோனிடம், “நீங்கள் என்னிடம் பொய் சொன்னீர்கள்! என்னை முட்டாளாக்கினீர்கள். உண்மையைத் தயவுசெய்து எனக்குக் கூறுங்கள். எப்படி, யாரால் உங்களைக் கட்டிப்போட முடியும்?” என்று கேட்டாள்.
11 சிம்சோன், “யாராவது என்னை முன்னால் பயன்படுத்தப்படாத புதுக் கயிறுகளால் கட்டவேண்டும். அவ்வாறு யாரேனும் எனக்குச் செய்தால் நானும் பிற மனிதர்களைப் போன்று பெலமிழந்தவனாகிவிடுவேன்” என்றான்.
12 எனவே தெலீளாள் சில புதுக்கயிறுகளை எடுத்து சிம்சோனைக் கட்டினாள். சில ஆட்கள் அடுத்த அறையில் ஒளித்துக்கொண்டிருந்தனர். தெலீலாள் அவனை அழைத்து, “சிம்சோன், பெலிஸ்திய ஆட்கள் உங்களைப் பிடிக்கபோகிறார்கள்!” என்றாள். ஆனால் அவன் கயிறுகளை எளிதாக அறுத்துவிட்டான். நூலை அறுத்தாற்போன்று அவன் கயிறுகளை அறுத்தெறிந்தான்.
13 பின்பு தெலீலாள் சிம்சோனை நோக்கி, “நீங்கள் என்னிடம் மீண்டும் பொய் சொல்லிவிட்டீர்கள்! என்னை முட்டாள் ஆக்கிவிட்டீர்கள். இப்போது உங்களை ஒருவன் எவ்வாறு கட்டக்கூடும் என்பதைக் கூறுங்கள்” என்றாள்.
சிம்சோன், “நீ என் தலைமயிரின் 7 ஜடைகளையும் நெசவு தறியால் நெய்து அதனைப் பின்னலிட்டு இறுகக் கட்டினால் நானும் பிற மனிதரைப்போல் பெலமற்றவனாவேன்” என்றான்.
14 பின் சிம்சோன் உறங்கப்போனான். தெலீலாள் நெசவுத் துணியின் நூலைப் பயன்படுத்தி அவனது தலைமயிரின் 7 ஜடைகளையும் நெய்தாள். பின் தறியை நிலத்தில் ஒரு கூடார ஆணியால் அடித்தாள். அவள் மீண்டும் சிம்சோனை அழைத்து, “சிம்சோன், பெலிஸ்திய ஆட்கள் உங்களைப் பிடிக்கப் போகிறார்கள்!” என்றாள். சிம்சோன் கூடார ஆணியையும், தறியையும், பாவையும் பிடுங்கி எடுத்துக் கொண்டு எழுந்தான்!
15 பின் தெலீலாள் சிம்சோனைப் பார்த்து, “முற்றிலும் என்மேல் நம்பிக்கையற்றவராக இருக்கும்போது ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும்? உங்கள் இரகசியத்தை சொல்ல மறுக்கிறீர்கள்? மூன்றாவதுமுறை நீங்கள் என்னை முட்டாளாக்கிவிட்டீர்கள். உங்களது பேராற்றலின் இரகசியத்தை நீங்கள் இன்னும் எனக்குக் கூறவில்லை” என்றாள். 16 தினந்தோறும் அவள் சிம்சோனைத் தொந்தரவுச் செய்துக்கொண்டேயிருந்தாள். அவனது இரகசியத்தைப்பற்றி அவள் கேட்டதினால் அவன் ஆத்துமா மிகவும் சோர்ந்து, வாழ்க்கையை வெறுத்தான். 17 இறுதியில் சிம்சோன் தெலீலாளுக்கு எல்லாவற்றையும் கூறினான். அவன், “நான் எனது தலைமயிரைச் சிரைத்ததில்லை. நான் பிறக்கும் முன்னரே தேவனுக்கென்று அர்ப்பணிக்கப்பட்டவன். யாராவது எனது தலை மயிரை நீக்கினால் எனது பலத்தை இழந்துவிடுவேன். நான் வேறெந்த மனிதனைப் போன்றும் பலவீனனாய் காணப்படுவேன்” என்றான்.
18 சிம்சோன் அவளிடம் இரகசியத்தைக் கூறிவிட்டான் என்பதைத் தெலீலாள் கண்டு கொண்டாள். பெலிஸ்தியரின் தலைவர்களுக்கு அவள் செய்தியைச் சொல்லியனுப்பினாள். அவள், “மீண்டும் இங்கே வாருங்கள். சிம்சோன் என்னிடம் எல்லாவற்றையும் கூறிவிட்டான்” என்றாள். எனவே பெலிஸ்தியரின் தலைவர்கள் தெலீலாளிடம் வந்தார்கள். அவளுக்குக் கொடுப்பதாக வாக்களித்திருந்த பணத்தை அவர்கள் கொண்டு வந்திருந்தார்கள்.
19 சிம்சோன் அவள் மடியில் படுத்திருந்தபோதே அவனைத் தெலீலாள் உறங்க வைத்தாள். பின்பு அவள் சவரம் செய்யும் ஒருவனை அழைத்து அவனது தலைமயிரின் 7 ஜடைகளையும் சிரைத்துவிடச் செய்தாள். அப்போது சிம்சோன் தனது பெலத்தை இழந்தான். சிம்சோனின் பலம் அவனை விட்டு நீங்கியது. 20 அப்போது தெலீலாள் அவனை அழைத்து, “சிம்சோன், பெலிஸ்தியர் உன்னைப் பிடிக்கப் போகிறார்கள்!” என்றாள். அவன் எழுந்து, “நான் எப்போதும் போல் என்னை விடுவித்து தப்பிவிடுவேன்” என்று நினைத்தான். கர்த்தர் அவனை விட்டு நீங்கிச்சென்றதை அவன் அறியவில்லை.
21 பெலிஸ்திய ஆட்கள் சிம்சோனைச் சிறைபிடித்தனர். அவர்கள் அவனது கண்களைப் பிடுங்கி, அவனைக் காசா நகரத்திற்கு அழைத்துச் சென்றனர். அவன் ஓடிவிடாதபடிக்கு அவனுக்கு விலங்கிட்டுக் கட்டினார்கள். அவர்கள் சிம்சோனைச் சிறையில் அடைத்து, அவனைத் தானியம் அரைக்குமாறு செய்தனர். 22 ஆனால் சிம்சோனின் தலைமயிர் மீண்டும் வளர ஆரம்பித்தது.
15 கிறிஸ்துவைப் பற்றிச் சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள், என்றாலும் அவர்கள் பொறாமையும், கசப்புணர்வும் கொண்டவர்களாக உள்ளார்கள். இன்னும் சிலர் உதவி செய்யும் விருப்பத்தோடு கிறிஸ்துவைப் பற்றி பிரச்சாரம் செய்கிறார்கள். 16 இவர்கள், அன்பினால் கிறிஸ்துவைப்பற்றி பிரச்சாரம் செய்கின்றனர். தேவன் எனக்கு இந்தப் பணியை நற்செய்தியைப் பாதுகாப்பதற்காகத் தந்துள்ளார் என்பதை இவர்கள் அறிவர். 17 மற்றவர்களோ தன்னலம் காரணமாக கிறிஸ்துவைப் பற்றி பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களின் பிரச்சார நோக்கம் தவறானது. சிறைக்குள் எனக்குத் தொல்லைகளை உருவாக்க அவர்கள் விரும்புகின்றனர். 18 அவர்கள் எனக்குத் தொல்லை கொடுத்தால் அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. மக்களிடம் அவர்கள் இயேசுவைப் பற்றிக் கூறுகிறார்கள் என்பதுதான் முக்கியமான விஷயம். நானும் இயேசுவைப் பற்றி அவர்கள் மக்களிடம் சொல்ல வேண்டும் என்றே விரும்புகிறேன். அவர்கள் அதைச் சரியான நோக்கத்தோடு செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் தவறான நோக்கத்தோடு போலியாகப் பிரச்சாரம் செய்தாலும் கூட நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் அவர்கள் கிறிஸ்துவைப் பற்றிப் பேசுகிறார்கள்.
இதனால் தொடர்ந்து நான் மகிழ்ச்சியடைவேன். 19 எனக்காக நீங்கள் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறீர்கள். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த ஆவியானவர் எனக்கு உதவுகிறார். ஆகையால் இந்தத் துன்பங்கள் எனக்கு விடுதலையைத் தரும் என்று எனக்குத் தெரியும். 20 எதிலும் நான் கிறிஸ்துவிடம் தவறமாட்டேன். இதுவே நான் விரும்புவதும், நம்புவதும் கூட. இந்த உலகத்தில் என் வாழ்வில் நான் இயேசுவின் உயர்வைக் காட்ட வேண்டும். அதனை வெளிப்படுத்தும் தைரியத்தை எப்போதும் போல இப்போதும் பெறுவேன் என்று நான் நம்புகிறேன். நான் வாழ்ந்தாலும் சரி, மரித்தாலும் சரி, இதைச் செய்ய விரும்புகிறேன். 21 கிறிஸ்துவை என் வாழ்வின் ஜீவனாக நம்புகிறேன். இதனால் நான் இறந்து போனாலும் எனக்கு லாபம்தான்.
2008 by World Bible Translation Center