Revised Common Lectionary (Complementary)
106 கர்த்தரைத் துதியுங்கள்!
கர்த்தர் நல்லவர், எனவே அவருக்கு நன்றி கூறுங்கள்!
தேவனுடைய அன்பு என்றென்றைக்குமுள்ளது!
2 உண்மையாகவே கர்த்தர் எவ்வளவு பெரியவர் என்பதை ஒருவரும் விவரிக்க முடியாது.
ஒருவரும் போதுமான அளவு தேவனை துதித்துவிட இயலாது.
3 தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்படிகிற ஜனங்கள் மகிழ்ச்சியானவர்கள்.
எப்போதும் அந்த ஜனங்கள் நல்ல காரியங்களையே செய்கிறார்கள்.
4 கர்த்தாவே, உம்முடைய ஜனங்களிடம் இரக்கமாயிருக்கும்போது
என்னை நினைவுகூர்ந்து இரட்சியும்.
5 கர்த்தாவே, நீர் தேர்ந்தெடுத்த உமது ஜனங்களுக்கு
நீர் செய்யும் நன்மைகளை நானும் பகிர்ந்துக்கொள்ளச் செய்யும்.
என்னையும் உம் ஜனங்களோடு மகிழ்ச்சியாய் இருக்கும்படி செய்யும்.
உம்மைப் புகழ்வதில் என்னையும் உம் ஜனங்களோடு இணையச் செய்யும்.
6 எங்கள் முற்பிதாக்கள் பாவம் செய்ததுப்போல் நாங்களும் பாவம் செய்தோம்.
நாங்கள் தவறு செய்தோம், நாங்கள் தீயவற்றைச் செய்தோம்.
7 கர்த்தாவே எகிப்திலுள்ள எங்கள் முற்பிதாக்கள் நீர் செய்த அதிசயங்களிலிருந்து எதையும் கற்கவில்லை.
செங்கடலின் அருகே எங்கள் முற்பிதாக்கள் உமக்கெதிராகத் திரும்பினார்கள்.
8 ஆனால் தேவன் நம் முற்பிதாக்களை அவரது சொந்த நாமத்தின் காரணமாகக் காப்பாற்றினார்.
அவரது மிகுந்த வல்லமையைக் காட்டும் பொருட்டு தேவன் அவர்களைக் காப்பாற்றினார்.
9 தேவன் கட்டளையிட்டார், செங்கடல் வறண்டு போனது.
ஆழமான கடலினூடே, பாலைவனத்தைப் போன்ற உலர்ந்த தரையின்மேல் தேவன் நம் முற்பிதாக்களை வழிநடத்தினார்.
10 தேவன் நமது முற்பிதாக்களை அவர்கள் பகைவர்களிடமிருந்து காப்பாற்றினார்.
அவர்கள் பகைவரிடமிருந்து தேவன் அவர்களைப் பாதுகாத்தார்.
11 தேவன் அவர்கள் பகைவர்களைக் கடலால் மூடினார்.
அவர்கள் பகைவர்களில் ஒருவன் கூட தப்பவில்லை.
12 அப்போது நம் முற்பிதாக்கள் தேவனை நம்பினார்கள்.
அவர்கள் அவருக்குத் துதிகளைப் பாடினார்கள்.
யாக்கோபு ஈசாக்கை ஏமாற்றியது
27 ஈசாக்கு வயோதிபன் ஆனான். அவனது கண்கள் பலவீனமாகி அவனால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. ஒரு நாள் தன் மூத்த குமாரன் ஏசாவை அழைத்து “மகனே” என்றான்.
ஏசா “இங்கே இருக்கிறேன்” என்றான்.
2 ஈசாக்கு அவனை நோக்கி, “எனக்கு வயதாகிவிட்டது. விரைவில் நான் செத்துப் போகலாம். 3 எனவே, உன் வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டு வேட்டைக்குப் போ. நான் உண்பதற்காக ஒரு மிருகத்தைக் கொன்று வா. 4 நான் விரும்புகிற அந்த உணவைத் தயாரித்து வா. அதை நான் உண்ண வேண்டும். மரிப்பதற்கு முன் உன்னை ஆசீர்வதிப்பேன்” என்றான். 5 எனவே ஏசா வேட்டைக்குப் போனான்.
ஈசாக்கு ஏசாவிடம் கூறுவதை ரெபெக்காள் கேட்டுக்கொண்டிருந்தாள். 6 இதனை அவள் யாக்கோபிடம் கூறினாள். “கவனி! உன் தந்தை உன் சகோதரனிடம் கூறுவதைக் கேட்டேன். 7 அவர் ‘நான் உண்பதற்கு ஒரு மிருகத்தைக் கொன்று, எனக்கு உணவை சமைத்து வா, நான் உண்பேன். பிறகு நான் மரிப்பதற்கு முன் உன்னை ஆசீர்வதிப்பேன்’ என்றார். 8 எனவே மகனே நான் சொல்வதைக் கவனித்து அதன்படி செய். 9 நீ நமது ஆட்டு மந்தைக்குப் போ இரண்டு இளம் ஆட்டுக் குட்டிகளைக் கொண்டு வா. உன் தந்தை விரும்புவதுபோல நான் சமைத்து தருவேன். 10 பிறகு அதனை உன் தந்தைக்குக் கொடு. அவர் உன்னைத் தான் மரிப்பதற்கு முன்னர் ஆசீர்வதிப்பார்” என்றாள்.
11 ஆனால் அவன் தாயிடம், “என் சகோதரனோ உடல் முழுவதும் முடி உள்ளவன். நான் அவ்வாறில்லை. 12 என் தந்தை என்னைத் தொட்டுப் பார்த்தால் நான் ஏசா இல்லை என்பதைத் தெரிந்துகொள்வார். பின் அவர் என்னை ஆசீர்வதிக்கமாட்டார்; சபித்துவிடுவார். நான் ஏமாற்றியதை அறிந்துகொள்வாரே” என்றான்.
13 அதனால் ரெபெக்காள் அவனிடம், “ஏதாவது தவறு ஏற்பட்டால் அதற்கான சாபம் என்மேல் விழட்டும், நீ போய் எனக்காக இரண்டு ஆட்டுக் குட்டிகளைக் கொண்டு வா” என்றாள்.
14 அதனால் யாக்கோபு வெளியே போய் இரண்டு ஆட்டுக் குட்டிகளைக் கொண்டு வந்தான். அவள் அதனை ஈசாக்கு விரும்பும் வகையில் சிறப்பான முறையில் சமைத்தாள். 15 பின்னர் ரெபெக்காள் ஏசா விரும்பி அணியும் ஆடைகளை தேர்ந்தெடுத்து யாக்கோபுக்கு அணிவித்தாள். 16 ஆட்டுத் தோலை யாக்கோபின் கைகளிலும் கழுத்திலும் கட்டினாள். 17 பிறகு அவள் குமாரன் யாக்கோபிடம் அவள் செய்த ரொட்டியையும் சுவையான உணவையும் கொடுத்து அனுப்பி வைத்தாள்.
18 யாக்கோபு தன் தந்தையிடம் போய், “அப்பா” என்று அழைத்தான்.
அவன் தந்தையோ, “மகனே, நீ யார்?” என்று கேட்டான்.
19 யாக்கோபு தன் தந்தையிடம், “நான் ஏசா, உங்கள் மூத்த குமாரன். நீங்கள் சொன்னபடி செய்துள்ளேன். இப்போது உட்கார்ந்து நான் வேட்டையாடிக் கொண்டு வந்த இறைச்சியை உண்ணுங்கள். பிறகு என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள்” என்றான்.
20 ஆனால் ஈசாக்கு தன் மகனிடம், “இவ்வளவு வேகமாக நீ எவ்வாறு வேட்டையாடி மிருகத்தைக் கொன்றாய்?” என்று கேட்டான்.
இதற்கு யாக்கோபு, “உங்கள் தேவனாகிய கர்த்தர் விரைவாக வேட்டையாடி மிருகத்தைக் கொல்ல எனக்கு உதவினார்” என்று சொன்னான்.
21 பிறகு ஈசாக்கு யாக்கோபிடம், “என் அருகிலே வா. உன்னைத் தொட்டுப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நீ என் குமாரன் ஏசாவா இல்லையா என்று தெரிந்துகொள்ள முடியும்” என்றான்.
22 யாக்கோபு அவனது அருகிலே போனான். ஈசாக்கு அவனைத் தொட்டுப் பார்த்துவிட்டு, “உனது சத்தம் யாக்கோபினுடையதுபோல் உள்ளது. ஆனால் உனது கைகள் ஏசாவின் கைகள் போல் முடி நிறைந்ததாய் இருக்கிறது” என்றான். 23 ஈசாக்கினால் அவனை யாக்கோபு என்று கண்டுகொள்ள முடியவில்லை. எனவே, அவனை ஆசீர்வதித்தான்.
24 எனினும் ஈசாக்கு, “உண்மையில் நீ என்னுடைய குமாரன் ஏசாதானா?” என்று கேட்டான்.
யாக்கோபு, “ஆமாம்” என்று பதில் சொன்னான்.
யாக்கோபிற்கு ஆசீர்வாதம்
25 பிறகு ஈசாக்கு, “அந்த உணவைக் கொண்டு வா. அதனை உண்டு விட்டு உன்னை ஆசீர்வதிக்கிறேன்” என்றான். எனவே யாக்கோபு உணவைக் கொடுத்தான். அவனும் அதை உண்டான். பின் யாக்கோபு கொஞ்சம் திராட்சை ரசத்தைக் கொடுத்தான். அதையும் அவன் குடித்தான்.
26 பிறகு ஈசாக்கு அவனிடம், “மகனே அருகில் வந்து என்னை முத்தமிடு” என்றான். 27 எனவே யாக்கோபு அருகிலே போய் தந்தையை முத்தமிட்டான். ஈசாக்கு அவனது ஆடையை நுகர்ந்து பார்த்து அவனை ஏசா என்றே நம்பி ஆசீர்வதித்தான்.
“என் குமாரன் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட வயலைப் போன்று மணக்கிறான்.
28 கர்த்தர் உனக்கு மிகுதியாக மழையைத் தரட்டும். அதனால் நீ பூமியின் செல்வத்தைப் பெறுவாய்.
29 எல்லா ஜனங்களும் உனக்குச் சேவை செய்யட்டும்.
நாடுகள் உனக்கு அடிபணியட்டும்.
உன் சகோதரர்களையும் நீ ஆள்வாய்.
உன் தாயின் குமாரர்கள் உனக்கு அடிபணிந்து கீழ்ப்படிவார்கள்.
“உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்படுவார்கள்.
உன்னை ஆசீர்வதிப்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்” என்று கூறினான்.
பவுலின் இறுதி வார்த்தைகள்
16 நம்முடைய சகோதரி பெபெயாளைக் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கெங்கிரேயா ஊர் சபையில் அவள் விசேஷ ஊழியக்காரி. 2 கர்த்தரில் அவளை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். தேவனுடைய பிள்ளைகளின் வழியில் அவளையும் ஏற்றுக்கொள்க. உங்களிடமிருந்து அவளுக்கு உதவிகள் தேவையென்றால் செய்யுங்கள். அவள் எனக்குப் பலமுறை உதவி செய்திருக்கிறாள். அவள் மற்றவர்ளுக்கும் உதவியாக இருந்திருக்கிறாள்.
3 பிரிஸ்கில்லாவுக்கும், ஆக்கில்லாவுக்கும் என் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள். இயேசு கிறிஸ்துவுக்குள் இவர்கள் இருவரும் என்னோடு பணியாற்றினர். 4 எனது உயிரைக் காப்பாற்ற தங்கள் உயிரைப் பணயம் வைத்தனர். நான் அவர்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன். யூதரல்லாதவர்களின் அனைத்து சபைகளுக்கும் நன்றிக் கடன்பட்டுள்ளேன்.
5 அவர்களுடைய வீட்டிலே கூடும் சபையையும் வாழ்த்துங்கள்.
ஆசியாவிலே முதலில் கிறிஸ்துவைப் பின்பற்றியவனாகிய எப்பனெத் என்ற அந்த நண்பனையும் வாழ்த்துங்கள்.
6 மரியாளையும் வாழ்த்துங்கள். அவள் உங்களுக்காகப் பெரிதும் உழைத்தாள்.
7 அன்றோனீக்கையும் யூனியாவையும் வாழ்த்துங்கள். அவர்கள் எனது உறவினர்கள். என்னோடு சிறையில் இருந்தவர்கள். தேவனுடைய மிக முக்கியமான தொண்டர்களுள் எனக்கு முன்னரே கிறிஸ்துவை நம்பியவர்கள்.
8 அம்பிலியாவை வாழ்த்துங்கள். அவன் கர்த்தருக்குள் எனக்கு மிகவும் அன்பானவன். 9 உர்பானை வாழ்த்துங்கள். அவன் என்னோடு கிறிஸ்துவுக்காகப் பணி செய்தவன்.
எனது அன்பான நண்பனாகிய ஸ்தாக்கியை வாழ்த்துங்கள். 10 அல்பெல்லேயை வாழ்த்துங்கள். அவனது உண்மையான கிறிஸ்தவ பக்தி சோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
அரிஸ்தோபூலுவின் குடும்பத்திலிலுள்ள அனைவரையும் வாழ்த்துங்கள். 11 எரோதியோனை வாழ்த்துங்கள். அவன் எனது உறவினன்.
நர்கீசுவின் குடும்பத்திலுள்ள அனைவரையும் வாழ்த்துங்கள். அவர்கள் கிறிஸ்துவுக்குட்பட்டவர்கள். 12 திரிபேனாளையும், திரிபோசாளையும் வாழ்த்துங்கள். ஏனெனில் அவர்கள் கர்த்தருக்காகக் கடினப்பட்டு உழைத்துக்கொண்டிருக்கின்றனர்.
எனது அன்புமிக்க தோழியாகிய பெர்சியாளை வாழ்த்துங்கள். அவளும் கர்த்தருக்காகக் கஷ்டப்பட்டு உழைத்தாள்.
13 ரூபஸை வாழ்த்துங்கள். அவன் கர்த்தருக்குள் சிறந்த மனிதன். அவனது தாயையும் வாழ்த்துங்கள். அவள் எனக்கும் தாய்தான்.
14 அசிங்கிரீத்து, பிலெகோன், எர்மே, பத்திரொபா, எர்மா மற்றும் அவர்களோடு இருக்கிற சகோதரர்களையும் வாழ்த்துங்கள்.
15 பிலொலோகஸ், ஜூலியா, நேரெஸ், அவனது சகோதரி, மற்றும் ஒலிம்பாஸ் ஆகியோரையும் வாழ்த்துங்கள். அவர்களோடிருக்கிற விசுவாசிகள் அனைவரையும் வாழ்த்துங்கள்.
16 ஒருவரையொருவர் பார்க்கும்பொழுது பரிசுத்தமான முத்தத்தால் வாழ்த்துங்கள்.
கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகின்றனர்.
2008 by World Bible Translation Center