Revised Common Lectionary (Complementary)
10 தேவன் மக்கள் செய்தவற்றைப் பார்த்தார். மக்கள் தீமைகள் செய்வதை நிறுத்தியதைப் பார்த்தார். எனவே தேவன் மாறித் தனது திட்டத்தைச் செயல்படுத்தவில்லை. தேவன் மக்களைத் தண்டிக்கவில்லை.
தேவனுடைய இரக்கம் யோனாவைக் கோபமடையச்செய்கிறது
4 தேவன் நகரத்தை காப்பாற்றியதைக் குறித்து யோனா மகிழ்ச்சி அடையவில்லை, யோனா கோபம் அடைந்தான். 2 யோனா கர்த்தரிடம் முறையிட்டு, “நான் இது நடக்குமென்று அறிவேன்! நான் எனது சொந்த நாட்டில் இருந்தேன். நீர் என்னை இங்கு வரச்சொன்னீர். அந்த நேரத்தில், இப்பாவ நகரத்திலுள்ள மக்களை நீர் மன்னிப்பீர் என்பதை நான் அறிவேன். எனவே நான் தர்ஷிசுக்கு ஓடிப்போக முடிவுசெய்தேன். நீர் இரக்கமுள்ள தேவன் என்பது எனக்குத் தெரியும்! நீர் இரக்கங்காட்டி மக்களைத் தண்டிக்கமாட்டீர் என்பதை நான் அறிவேன்! நீர் கருணை நிறைந்தவர் என்பதை அறிவேன். இம்மக்கள் பாவம் செய்வதை நிறுத்தினால், நீர் அவர்களை அழிக்கவேண்டும் என்னும் திட்டத்தை மாற்றிக்கொள்வீர் என்றும் நான் அறிவேன். 3 எனவே நான் இப்பொழுது உம்மை வேண்டுகிறேன், கர்த்தாவே, தயவுசெய்து என்னைக் கொன்றுவிடும், நான் உயிரோடு இருப்பதைவிட மரித்துப் போவது நல்லது!” என்றான்.
4 பிறகு, கர்த்தர், “நான் அம்மக்களை அழிக்கவில்லை என்பதற்காக நீ என்னிடம் கோபம் கொள்வது சரியென்று நினைக்கிறாயா?” என்று கேட்டார்.
5 யோனா இவை எல்லாவற்றுக்காகவும் கோபத்தோடு இருந்தான். எனவே அவன் நகரத்தை விட்டுப்போனான். யோனா, நகரத்திற்குக் கிழக்குப் பகுதியிலுள்ள ஒரு இடத்திற்குச் சென்று, தனக்கென்று ஒரு இருப்பிடத்தை அமைத்துக்கொண்டான். பிறகு அவன் அங்கே நிழலில் உட்கார்ந்து, நகரத்திற்கு என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கக் காத்துக்கொண்டிருந்தான்.
ஆமணக்குச் செடியும், ஒரு புழுவும்
6 கர்த்தர் ஒரு ஆமணக்குச் செடியை யோனாவுக்கு மேல் வேகமாக வளரச் செய்தார். இது யோனா உட்காருவதற்குரிய நல்ல குளிர்ந்த நிழலைத் தந்தது. இது யோனவிற்கு மேலும் வசதியாக இருக்க உதவியது. யோனா அந்தச் செடிக்காக மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.
7 மறுநாள் காலையில், தேவன் அச்செடியைத் தின்பதற்கு ஒரு புழுவை அனுப்பினார். அப்புழு செடியைத் தின்னத் தொடங்கியது, செடி செத்துப்போனது.
8 சூரியன் வானத்தில் உயரமாக வந்தபோது, தேவன் சூடான கிழக்குக் காற்று வீசச் செய்தார். சூரியன் யோனாவின் தலையை மிகச் சூடாக்கியது. யோனா மிகமிகப் பலவீனமானான், யோனா தன்னை மரிக்கவிடும்படி தேவனிடம் வேண்டினான். யோனா, “நான் உயிர் வாழ்வதைவிட மரிப்பதே நல்லது” என்றான்.
9 ஆனால் தேவன் யோனாவிடம், “இந்தச் செடி செத்ததற்காக நீ என் மீது கோபப்படுவது சரியென்று நினைக்கிறாயா?” என்று கேட்டார். யோனா, “ஆம், நான் கோபப்படுவது சரிதான், நான் சாகிற அளவிற்குக் கோபமாக இருக்கிறேன்!” என்றார்.
10 கர்த்தர், “நீ அச்செடிக்காக எதுவும் செய்யவில்லை! நீ அதனை வளரச்செய்யவில்லை. அது இரவில் வளர்ந்தது, மறுநாள் அது செத்தது. இப்பொழுது நீ அச்செடியைப்பற்றி துக்கப்படுகிறாய். 11 நீ ஒரு செடிக்காகக் கவலைப்படுவதானால், நிச்சயமாக நான் நினிவே போன்ற பெரிய நகரத்திற்காக வருத்தப்படலாம். நகரத்தில் ஏராளமான மனிதர்களும் மிருகங்களும் இருக்கிறார்கள். அந்த நகரத்தில் தாங்கள் தீமை செய்து கொண்டிருந்ததை அறியாத 1,20,000 க்கும் மேலான மக்கள் இருக்கிறார்கள்!” என்றார்.
தாவீதின் ஜெபங்களுள் ஒன்று.
145 என் தேவனும் ராஜாவுமாகிய உம்மைத் துதிக்கிறேன்.
உமது நாமத்தை நான் என்றென்றும் எப்போதும் போற்றுகிறேன்.
2 நான் ஒவ்வொரு நாளும் உம்மைத் துதிக்கிறேன்.
நான் உமது நாமத்தை என்றென்றும் எப்போதும் துதிக்கிறேன்.
3 கர்த்தர் பெரியவர்.
ஜனங்கள் அவரை அதிகம் துதிக்கிறார்கள்.
அவர் செய்கிற பெருங்காரியங்களை நாம் எண்ணமுடியாது.
4 கர்த்தாவே, நீர் செய்யும் காரியங்களுக்காக ஜனங்கள் உம்மை என்றென்றும் எப்போதும் துதிப்பார்கள்.
நீர் செய்யும் உயர்ந்த காரியங்களைக் குறித்து அவர்கள் சொல்வார்கள்.
5 உமது பெருமைக்குரிய தோற்றமும் மகிமையும் அற்புதமானவை.
உமது அதிசயங்களைப் பற்றி நான் சொல்வேன்.
6 கர்த்தாவே, நீர் செய்யும் வியக்கத்தக்க காரியங்களைப்பற்றி ஜனங்கள் சொல்வார்கள்.
நீர் செய்யும் மேன்மையான காரியங்களைப்பற்றி நான் சொல்வேன்.
7 நீர் செய்யும் நல்ல காரியங்களைப்பற்றி ஜனங்கள் சொல்வார்கள்.
உமது நன்மையைப்பற்றி ஜனங்கள் பாடுவார்கள்.
8 கர்த்தர் தயவும் இரக்கமுமுள்ளவர்.
கர்த்தர் பொறுமையும் மிகுந்த அன்புமுள்ளவர்.
21 கிறிஸ்துவை என் வாழ்வின் ஜீவனாக நம்புகிறேன். இதனால் நான் இறந்து போனாலும் எனக்கு லாபம்தான். 22 இந்த சரீரத்தில் நான் தொடர்ந்து வாழ்ந்தால் கர்த்தருக்குத் தொண்டு செய்ய என்னால் முடியும். ஆனால் வாழ்வு, சாவு என்பவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது? எனக்குத் தெரியவில்லை. 23 வாழ்வு, சாவு இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுப்பது கடினமானது. இந்த வாழ்க்கையை விட்டுவிட்டு நான் கிறிஸ்துவோடு வாழ விரும்புகிறேன். அது சிறந்தது. 24 ஆனால் நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு மிக அவசியம். 25 உங்களுக்கு நான் தேவையானவன் என்பதை அறிவேன். அதனால் உங்களோடு இருக்க நான் விரும்புகிறேன். உங்கள் நம்பிக்கையில் நீங்கள் மகிழ்ச்சியுடன் வளரவும் நான் உதவுவேன். 26 மீண்டும் உங்களோடு நான் இருக்கும்போது நீங்கள் கிறிஸ்துவாகிய இயேசுவுக்குள் மிகவும் மகிழ்ச்சியாய் இருப்பீர்கள்.
27 நற்செய்திக்குப் பொருந்துகிற வாழ்வை வாழ்வது பற்றி உறுதி செய்துகொள்ளுங்கள். பிறகு உங்களைப் பார்வையிட நான் வந்தாலோஅல்லது உங்களை விட்டு நான் தூரம் போனாலோ உங்களைப் பற்றி நான் நல்ல செய்திகளையே கேள்விப்படுவேன். நற்செய்தியிலிருந்து வரும் நம்பிக்கைக்காக நீங்கள் தொடர்ந்து பலத்தோடு பொது நோக்கத்துக்காக ஒன்று சேர்ந்து குழுவாகப் பணியாற்றுகிறீர்கள் என்று நான் கேள்விப்படுவேன். 28 உங்களுக்கு எதிரான மக்களைப் பற்றி நீங்கள் அச்சப்பட வேண்டாம். உங்கள் பகைவர்கள் இழப்புக்குள்ளாவர். நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். இச்சான்றுகள் தேவனிடமிருந்து வந்தன. 29 ஏனென்றால் கிறிஸ்துவினிடத்தில் நம்பிக்கை செலுத்துவதற்கு மாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுவதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. 30 நான் உங்களோடு இருந்தபோது நற்செய்திக்கு எதிராக இருந்த மக்களுடன் நான் எதிர்கொள்ள நேர்ந்த போராட்டங்களை நீங்கள் பார்த்தீர்கள். இப்போது நான் எதிர்கொண்டுவரும் போராட்டங்களைப் பற்றியும் நீங்கள் கேள்விப்படுகிறீர்கள். நீங்களும் இது போன்ற போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்களைப் பற்றிய உவமை
20 “பரலோக இராஜ்யமானது சிறிது நிலம் வைத்திருந்த ஒருவனைப் போன்றது, அவன் தனது நிலத்தில் திராட்சை விளைவித்தான். ஒரு நாள் காலை தன் தோட்டத்தில் வேலை செய்ய ஆட்களைத் தேடிப் போனான். 2 ஒரு நாள் வேலைக்கு ஒரு வெள்ளிக்காசு கூலி தர அவன் ஒத்துக்கொண்டான். பிறகு வேலை ஆட்களைத் தன் திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்ய அனுப்பினான்.
3 “சுமார் ஒன்பது மணிக்கு அம்மனிதன் சந்தைப் பக்கமாகப் போனான். அங்கு சிலர் வேலை ஏதுமின்றி வெறுமனே நின்றுகொண்டிருப்பதைக் கண்டான். 4 எனவே அவன் அவர்களிடம், ‘நீங்கள் சென்று என் தோட்டத்தில் வேலை செய்தால், நீங்கள் செய்யும் வேலைக்குத் தகுந்தாற்போல உங்களுக்கு ஊதியம் தருகிறேன்’ என்றான். 5 எனவே, அவர்களும் அவன் தோட்டத்தில் வேலை செய்யச் சென்றார்கள்.
“மீண்டும் அவன் பன்னிரண்டு மணி அளவிலும் மூன்றுமணி அளவிலும் வெளியில் சென்று, ஒவ்வொரு முறையும் மேலும் சிலரைத் தன் தோட்டத்தில் வேலை செய்ய அழைத்து வந்தான். 6 மீண்டும் ஐந்து மணி அளவில் சந்தைவெளிக்குச் சென்றான். மேலும் சிலர் அங்கே நின்றிருப்பதைக் கண்டு அவர்களிடம், ‘ஏன் நாள் முழுக்க வேலை எதுவும் செய்யாமல் இங்கே நின்றிருந்தீர்கள்’ என்று கேட்டான்.
7 “அதற்கு அவர்கள், ‘எங்களுக்கு யாரும் வேலை தரவில்லை’ என்றார்கள்.
“அதற்கு அந்த திராட்சைத் தோட்டக்காரன், ‘அப்படியானால், நீங்கள் என் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்யலாம்’ என்றான்.
8 “அன்று மாலை திராட்சைத் தோட்டக்காரன் வேலைக்காரர்களைக் கவனிக்கும் மேற்பார்வையாளனிடம், ‘வேலைக்காரர்கள் அனைவரையும் அழைத்து அவர்களுக்குப் பணம் கொடுத்துவிடு. நான் கடைசியாக அழைத்து வந்தவர்களுக்கு முதலில் பணம் கொடு. இப்படியே அனைவருக்கும் நான் முதலில் அழைத்து வந்தவன் வரைக்கும் பணம் கொடு’ என்றான்.
9 “மாலை ஐந்து மணிக்கு அமர்த்தப்பட்ட வேலைக்காரர்கள் தங்கள் கூலியை வாங்க வந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு வெள்ளி நாணயம் கிடைத்தது. 10 பின்னர் முதலில் வேலைக்கு அமர்த்தப்பட்ட ஆட்கள் தங்கள் கூலியைப் பெற வந்தபொழுது, தங்களுக்கு அதிகக் கூலி கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களுக்கும் தலைக்கு ஒரு வெள்ளி நாணயமே கிடைத்தது. 11 அவர்கள் ஒரு வௌ்ளி நாணயம் மட்டுமே கூலியாகக் கிடைத்தபொழுது, தோட்டத்துச் சொந்தக்காரனிடம் புகார் செய்தார்கள். 12 அவர்கள், ‘கடைசியாக வேலைக்கு வந்தவர்கள், ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். ஆனால், நாங்கள் நாள் முழுவதும் வெயிலில் கடுமையாக உழைத்துள்ளோம். ஆனால், எங்களுக்குச் சமமாக அவர்களுக்கும் கூலி கொடுத்துள்ளீர்கள்’ என்று புகார் கூறினார்கள்.
13 “ஆனால் தோட்டக்காரனோ அந்த ஆட்களில் ஒருவனிடம், ‘நண்பனே, நான் உனக்கு சரியாகவே கூலி கொடுத்துள்ளேன். ஒரு வெள்ளி நாணயத்திற்கு வேலை செய்ய ஒப்புக்கொண்டாய். சரிதானே? 14 எனவே, உன் கூலியைப் பெற்றுக்கொண்டு செல். நான் கடைசியாக வேலைக்கு அமர்த்தியவர்களுக்கும் உனக்கும் சமமாகவே கூலி கொடுக்க விரும்புகிறேன். 15 நான் என் பணத்தில் என் விருப்பப்படி செய்யலாம். நான் அவர்களிடம் பெருந்தன்மையுடன் நடந்துகொள்கிறேன் என்பதால் உனக்குப் பொறாமையா?’ என்று கூறினான்.
16 “ஆகவே, இப்பொழுது கடைசி ஸ்தானத்தில் இருப்பவர்கள் எதிர்காலத்தில் முதல் ஸ்தானத்திற்குச் செல்வார்கள். மேலும் இப்பொழுது முதல் ஸ்தானத்தில் இருப்பவர்கள் எதிர்காலத்தில் கடைசி ஸ்தானத்திற்குச் செல்வார்கள்” என்றார்.
2008 by World Bible Translation Center