Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 133

ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கென தாவீது அளித்த பாடல்களுள் ஒன்று.

133 சகோதரர்கள் ஒருமித்து உட்கார்ந்து உண்மையாகவே ஒன்றுபடுவது
    மிகவும் நல்லதும் இன்பமுமானது.
அது ஆரோனின் தலையிலிருந்து ஊற்றபட்டு,
    கீழே அவன் தாடியிலும் பிறகு அவன் விசேஷ ஆடைகளிலும்
    வழிந்தோடும் வாசனையுள்ள எண்ணெயைப் போன்றது.
எர்மோன் மலையிலிருந்து சீயோன் மலையில் வீழும் மென்மையான மழையைப்போன்றுமிருக்கும்.
    ஏனெனில் சீயோனில் இருந்துதான் நித்திய வாழ்க்கைக்கான ஆசீர்வாதத்தை கர்த்தர் தந்தருளினார்.

ஆதியாகமம் 49:29-50:14

29 பின் இஸ்ரவேல் ஒரு ஆணையிட்டான். “நான் மரிக்கும்போது என் ஜனங்களோடு இருக்க விரும்புகிறேன். என் முற்பிதாக்களோடு நான் அடக்கம் செய்யப்பட வேண்டும். அந்தக் கல்லறை ஏத்தியரிடம் வாங்கிய எப்பெரோனில் உள்ளது. 30 அந்தக் குகை மம்ரேக்கு அருகில் மக்பேலா எனும் இடத்தில் வயலில் உள்ளது. இது கானான் நாட்டில் உள்ளது. இதனை ஆபிரகாம் எப்ரோனிடமிருந்து விலைக்கு வாங்கி கல்லறையாக மாற்றிவிட்டார். 31 ஆபிரகாமும் அவன் மனைவி சாராளும் அதே குகையில் அடக்கம் செய்யப்பட்டனர். ஈசாக்கும் அவர் மனைவி ரெபெக்காளும் அதே குகையில் அடக்கம் செய்யப்பட்டனர். நான் என் மனைவி லேயாளையும் அதே குகையில் அடக்கம் பண்ணினேன். 32 அந்தக் குகை இருக்கும் நிலம் ஏத்தின் குமாரன்களிடமிருந்து வாங்கப்பட்டது” என்றான். 33 யாக்கோபு பேசி முடித்ததும் படுத்தான். கால்களைக் கட்டிலின்மேல் மடக்கியபடியே மரணமடைந்தான்.

யாக்கோபின் இறுதிச் சடங்கு

50 இஸ்ரவேல் மரித்ததும் யோசேப்பு மிகவும் துக்கப்பட்டான். அவன் தன் தந்தையைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுது முத்தமிட்டான். பிறகு யோசேப்பு தன் வேலைக்காரர்களுக்கு அவனது தந்தையின் உடலை அடக்கத்திற்கு தயார் செய்யும்படி ஆணையிட்டான். (அவர்கள் அனைவரும் மருத்துவர்கள்.) அடக்கம் செய்வதற்கு ஏற்ற முறையில் அதனைத் தயார்படுத்தினர். எகிப்திய முறையில் அவ்வாறு செய்தனர். சரியான முறையில் தயார் செய்ய 40 நாட்கள் ஆகும். அந்தபடியே அந்த நாட்கள் நிறைவேறின. எகிப்தியர்கள் அவனுக்காக 70 நாட்கள் துக்கம் கொண்டாடினர்.

70 நாட்கள் ஆனதும் துக்க நாட்கள் முடிந்தன. எனவே யோசேப்பு பார்வோன் மன்னனின் அதிகாரிகளோடு பேசினான். “இதனை பார்வோன் மன்னனுக்குச் சொல்லுங்கள். ‘என் தந்தை மரணத்தை நெருங்கும்போது அவருக்கு நான் ஒரு வாக்குக் கொடுத்தேன். அவரை கானான் நாட்டில் ஓரிடத்தில் அடக்கம் செய்வதாக ஒப்புக்கொண்டேன். அதுவே அவர் விரும்பிய குகை. எனவே, நான் போய் அவரை அடக்கம் செய்ய எனக்கு அனுமதி வேண்டும். பின்னர் நான் உங்களிடம் திரும்பி வருவேன்’” என்றான்.

பார்வோனும், “உன் வாக்கைக் காப்பாற்று. போய் உன் தந்தையை அடக்கம் செய்” என்றான்.

எனவே யோசேப்பு அடக்கம் செய்யக் கிளம்பினான். பார்வோனின் மூப்பர்களும் (தலைவர்களும்) எகிப்திலுள்ள முதியவர்களும் யோசேப்போடு சென்றார்கள். யோசேப்பின் குடும்பத்தினரும், அவனது சகோதரர்களின் குடும்பத்ததினரும் தந்தையின் குடும்பத்தினரும் அவனோடு சென்றார்கள். குழந்தைகளும் மிருகங்களும் மட்டுமே கோசேன் பகுதியில் தங்கினார்கள். அவர்கள் பெருங்கூட்டமாகப் போனார்கள். வீரர்களும் இரதங்களிலும் குதிரைகளிலும் ஏறிப் போனார்கள்.

10 அவர்கள் கோரான் ஆத்தாத் நதியின் கீழ்க்கரையில் உள்ள கோசேன் ஆத்தாதிற்கு வந்தனர். அங்கே இஸ்ரவேலுக்கு இறுதிச் சடங்குகளையெல்லாம் செய்தனர். இது ஏழு நாட்கள் நடந்தது. 11 கானான் நாட்டிலுள்ள ஜனங்களெல்லாம் இந்தச் சடங்கில் கலந்துகொண்டனர். அவர்களோ, “அந்த எகிப்தியர்கள் பெரிய துக்கமான சடங்கைக் கொண்டுள்ளனர்” என்றனர். இப்போது அந்த இடத்திற்கு ஆபேல்மிஸ்ராயீம் என்று பெயர் வழங்குகிறது.

12 யாக்கோபின் குமாரர்கள் தந்தை சொன்னபடியே செய்தனர். 13 அவர்கள் அவனது உடலை கானானுக்குள் எடுத்துச் சென்று மக்பேலாவில் அடக்கம் செய்தனர். இந்தக் குகை ஆபிரகாம் ஏத்தின் ஜனங்களிடமிருந்து வாங்கிய நிலத்தில் மம்ரேக்கு அருகில் இருந்தது. ஆபிரகாம் இதனைக் கல்லறைக்காகவே வாங்கியிருந்தான். 14 யோசேப்பு தன் தந்தையை அடக்கம் செய்த பிறகு, அவனோடு அனைவரும் எகிப்துக்குத் திரும்பிப் போனார்கள்.

ரோமர் 14:13-15:2

இடறலற்றவர்களாயிருங்கள்

13 நாம் ஒருவருக்கொருவர் நியாயம் தீர்த்துக்கொள்வதை நிறுத்தவேண்டும். நமது சகோதரனோ சகோதரியோ பலவீனமுறவும், அல்லது பாவத்தில் விழும் வகையிலும் நாம் எதுவும் செய்யக்கூடாது என்று தீர்மானித்துக்கொள்ள வேண்டும். 14 நான் இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன். எந்த உணவையும் உண்ணத் தகாதது என்று கூற முடியாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் எவராவது ஒரு உணவை உண்ணத்தகாதது என்று நம்பினால் அந்த உணவும் உண்ணமுடியாதபடி தீட்டுள்ளதாகும்.

15 நீ சாப்பிடும் ஒன்றின் பொருட்டு, உன் சகோதரனின் விசுவாசத்தைப் புண்படுத்தினால், நீ உண்மையிலேயே அன்பு வழியைப் பின்பற்றவில்லை என்பதே அதன் பொருள். தவறு என்று ஒருவன் கருதும் உணவை உண்டு ஒருவனது நம்பிக்கையை அழித்து விடாதே. கிறிஸ்து அவனுக்காகவும் தன் உயிரை கொடுத்தார். 16 நல்லவை என நீங்கள் நம்பும் விஷயங்கள் தீமை என மற்றவர்களால் பழிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 17 தேவனுடைய இராஜ்யத்தில் குடிப்பதும் உண்பதும் முக்கியமல்ல. தேவனுக்கேற்ற நீதிமானாக இருப்பதும், பரிசுத்த ஆவியானவருக்குள் சமாதானமும் சந்தோஷமும் அடைவதுமே முக்கியம். 18 இவ்வழியில் கிறிஸ்துவுக்கு சேவை செய்கிறவன் தேவனுக்கு ஏற்றவனாக இருப்பான். அவன் மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படுபவனுமாயிருப்பான்.

19 அதனால் சமாதானத்துக்கேற்றவற்றை சிரமப்பட்டாவது செய்ய முயற்சி செய்வோம். ஒருவருக்கொருவர் உதவியானவற்றைச் செய்ய முயல்வோம். 20 உணவு உண்ணுவதால் தேவனுடைய வேலையை அழிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அனைத்து உணவும் உண்பதற்கு ஏற்றதே. ஆனால் நாம் உண்ணும் உணவு மற்றவர்கள் பாவத்தில் விழுவதற்கு ஏதுவாக இருந்தால் அது தவறாகும். 21 நீ மாமிசம் உண்பதும், மது குடிப்பதும், உனது சகோதரனையோ சகோதரியையோ பாவத்தில் விழச் செய்யுமானால் அவற்றைச் செய்யாமல் இருப்பது நல்லது. உன் சகோதரனையோ சகோதரியையோ பாவத்தில் விழச் செய்யும் எதனையும் செய்யாமல் இருப்பாயாக.

22 இவை பற்றிய உன் நம்பிக்கைகள் எல்லாம் உனக்கும் தேவனுக்கும் இடையில் இரகசியமாய் வைக்கப்பட வேண்டும். நல்லதென்று ஒருவன் நினைக்கும் காரியங்களில் ஒருவன் குற்றவளியாக இல்லாமல் இருப்பது பெரும் பாக்கியமாகும். 23 சரியானதுதான் என்ற நிச்சயமில்லாமல் ஒருவன் ஒரு உணவை உண்பானேயானால் அவன் தனக்குத் தானே தப்பானவனாகிறான். ஏனென்றால் அவனுக்கு அவனது செயலில் நம்பிக்கை இல்லை. எனவே நம்பிக்கை இல்லாமல் செய்யும் எச்செயலும் பாவமானதே.

15 விசுவாசத்தில் உறுதியாய் இருக்கிற நாம் பல வீனமானவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். நாம் நமது திருப்திக்காக மட்டுமே வாழ்தல் கூடாது. நம்மில் ஒவ்வொருவரும் மற்றவர்களையும் மகிழ்ச்சியுறச் செய்தல் வேண்டும். இதனை மற்றவர்களுக்கு உதவியாகச் செய்ய வேண்டும். அவர்கள் விசுவாசத்தில் பலமுடையவர்களாக உதவி செய்யவேண்டும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center