Revised Common Lectionary (Complementary)
தாவீதின் ஒரு பாடல்.
103 என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
என் ஒவ்வொரு அவயவங்களே அவரது பரிசுத்த நாமத்தைத் துதியங்கள்.
2 என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
அவர் உண்மையிலேயே தயவுள்ளவர் என்பதை மறக்காதே.
3 நாம் செய்யும் பாவங்களையெல்லாம் தேவன் மன்னிக்கிறார்.
அவர் நமது நோய்களையெல்லாம் குணமாக்குகிறார்.
4 தேவன் கல்லறையிலிருந்து நம் உயிரை மீட்கிறார்.
அவர் நமக்கு அன்பையும் தயவையும் தருகிறார்.
5 தேவன் நமக்கு மிகுதியான நல்ல பொருட்களைத் தருகிறார்.
அவர் நம்மைக் கழுகைப் போன்று இளமையாக்குகிறார்.
6 கர்த்தர் நியாயமானவர்.
பிறரால் புண்படுத்தப் பட்டிருக்கிறவர்களுக்கு தேவன் நியாயத்தைக் கொண்டு வருகிறார்.
7 தேவன் அவரது சட்டங்களை மோசேக்குக் கற்பித்தார்.
அவர் செய்யத்தக்க வல்லமையுள்ள காரியங்களை இஸ்ரவேல் காணுமாறு தேவன் செய்தார்.
8 கர்த்தர் தயவும் இரக்கமும் உள்ளவர்.
தேவன் பொறுமையும் மிகுந்த அன்பும் உடையவர்.
9 கர்த்தர் எப்போதும் குற்றங்காண்பதில்லை.
கர்த்தர் என்றென்றும் நம்மிடம் கோபங்கொண்டிருப்பதில்லை.
10 நாங்கள் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தோம்,
ஆனால், நமக்குரிய தண்டனையை தேவன் வழங்கவில்லை.
11 வானம் பூமிக்கு எவ்வளவு உயரத்தில் உள்ளதோ,
அதைப்போன்று தம்மைப் பின்பற்றுவோரிடம் தேவன் காட்டும் அன்பும் மிக மேலானது.
12 மேற்கிலிருந்து கிழக்கு எவ்வளவு தூரமோ
அந்த அளவு தேவன் நமது பாவங்களை நம்மை விட்டு வெகுதூரத்திற்கு விலக்கிவிட்டார்.
13 தந்தை தனது பிள்ளைகளிடம் இருப்பதைப் போன்று
கர்த்தரும், அவரைப் பின் பற்றுவோரிடம் இரக்கமாக இருக்கிறார்.
தான் யாரென்று யோசேப்பு சொல்கிறான்
45 யோசேப்பு அதிக நேரம் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அங்கிருந்தவர்களின் முன்னால் அவன் உள்ளம் உடைந்து கண்ணீர் சிந்தினான். யோசேப்பு “எல்லோரையும் வெளியே போகச்சொல்” என்று கட்டளையிட்டான். அனைவரும் வெளியேறினர். அச்சகோதரர்கள் மட்டுமே அங்கிருந்தார்கள். பிறகு அவன் தன்னை யாரென்று சொன்னான். 2 யோசேப்பு தொடர்ந்து அழுதான். அந்த வீட்டில் உள்ள எகிப்தியர்கள் அனைவரும் அதைக் கேட்டனர். 3 யோசேப்பு தனது சகோதரர்களிடம், “நான் உங்களின் சகோதரன் யோசேப்பு. என் தந்தை உயிரோடு நலமாக இருக்கிறாரா?” என்று கேட்டான். சகோதரர்கள் அவனுக்குப் பதில் சொல்லவில்லை. அவர்கள் குழப்பமும் பயமும் கொண்டனர்.
4 யோசேப்பு மீண்டும், “என்னருகே வாருங்கள். கெஞ்சி கேட்கிறேன், வாருங்கள்” என்றான். சகோதரர்கள் அவனருகே வந்தனர். அவர்களிடம், “நான் உங்கள் சகோதரன் யோசேப்பு. எகிப்திய வியாபாரிகளிடம் உங்களால் விற்கப்பட்டவன். 5 இப்போது அதற்காக வருத்தப்படாதீர்கள். நீங்கள் செய்தவற்றுக்காக உங்களையே கோபித்துக்கொள்ளாதீர்கள். இங்கே நான் வரவேண்டும் என்பது தேவனின் திட்டம். உங்கள் வாழ்க்கையைக் காப்பாற்றவே இங்கே இருக்கிறேன். 6 இந்தப் பஞ்சம் இரண்டு ஆண்டுகளாக இருக்கின்றன. இன்னும் ஐந்து ஆண்டுகள் இருக்கும். 7 ஆகவே தேவன் என்னை உங்களுக்கு முன்னதாக அனுப்பி இருக்கிறார். அதனால் உங்களை காப்பாற்றமுடியும். 8 என்னை இங்கே அனுப்பியது உங்களது தவறு அல்ல. இது தேவனின் திட்டம். பார்வோன் மன்னருக்கே தந்தை போன்று நான் இங்கே இருக்கிறேன். நான் அரண்மனைக்கும் இந்த நாட்டிற்கும் ஆளுநராக இருக்கிறேன்” என்றான்.
இஸ்ரவேல் எகிப்திற்கு அழைக்கப்படுதல்
9 யோசேப்பு அவர்களிடம், “வேகமாக என் தந்தையிடம் போங்கள். அவரது குமாரன் யோசேப்பு இந்தச் செய்தியை அனுப்பியதாகக் கூறுங்கள்: ‘தேவன் என்னை எகிப்தின் ஆளுநராக ஆக்கினார். எனவே என்னிடம் வாருங்கள். காத்திருக்க வேண்டாம். இப்போதே வாருங்கள். 10 என்னருகில் கோசேன் நிலப்பகுதியில் வாழலாம். நீங்களும், உங்கள் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும், மிருகங்களும் இங்கே வரவேற்கப்படுகிறீர்கள். 11 இனிவரும் ஐந்தாண்டு பஞ்சத்திலும் உங்கள் அனைவரையும் பாதுகாத்துக்கொள்வேன். எனவே, நீங்களும் உங்கள் குடும்பமும் உங்களுக்குரிய எதையும் இழக்கமாட்டீர்கள்’ என்று கூறுங்கள்” என்றான்.
12 யோசேப்பு தன் சகோதரர்களிடம், “நன்றாக உறுதி செய்துகொள்ளுங்கள். நான் தான் யோசேப்பு. உங்கள் சகோதரனாகிய எனது வாய்தான் பேசுகிறது என்பதை நீங்களும் பென்யமீனும் கண்களால் காண்கிறீர்கள். 13 எகிப்திலே எனக்குள்ள மரியாதையையும் இங்கே நீங்கள் பார்க்கின்றவற்றையும் தந்தையிடம் சொல்லுங்கள். வேகமாகப் போய் தந்தையை அழைத்து வாருங்கள்” என்று சொன்னான். 14 பிறகு தன் தம்பி பென்யமீனை அணைத்துக்கொண்டான். இருவரும் அழுதார்கள். 15 பிறகு அவன் சகோதரர்கள் அனைவரையும் முத்தமிட்டான். அவர்களுக்காக அழுதான். இதற்குப் பிறகு அவர்கள் அவனோடு பேசத் தொடங்கினார்கள்.
16 யோசேப்பின் சகோதரர்கள் வந்த செய்தியை பார்வோன் அறிந்துகொண்டான். பார்வோன் அரண்மனை முழுக்க அச்செய்தி பரவியது. ராஜாவும் அவனது வேலைக்காரர்களும் மகிழ்ச்சியடைந்தனர். 17 ராஜா யோசேப்பிடம் வந்து, “உங்கள் சகோதரர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டு கானான் பகுதிக்குப் போகட்டும். 18 உனது குடும்பத்தையும் தந்தையையும் என்னிடம் அழைத்து வருமாறு கூறு. உங்களுக்கு வாழ நல்ல நிலத்தைக் கொடுக்கிறேன். இங்குள்ள சிறந்த உணவை அவர்கள் உண்ணலாம்” என்றான். 19 “அதோடு இங்குள்ள சிறந்த வண்டிகளை உன் சகோதரர்களுக்கு கொடு. அவர்கள் கானான் பகுதிக்குச் சென்று உன் தந்தையையும், பெண்களையும், குழந்தைகளையும் ஏற்றிக்கொண்டு வரட்டும். 20 அங்கிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வருவதைக் குறித்துக் கவலைகொள்ள வேண்டாம். எகிப்திலுள்ளவற்றில் சிறந்தவற்றை அவர்களுக்குக் கொடுக்கலாம்” என்றான்.
7 “நீங்கள் பிரார்த்திக்கும்பொழுது, தேவனை அறியாதவர்களைப் போல நடந்து கொள்ளாதீர்கள். பொருளற்ற வார்த்தைகளை அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள். அவ்வாறு பிரார்த்திக்காதீர்கள். பலவற்றையும் அவர்கள் சொல்வதனால் தேவன் அவர்களைக் கவனிப்பார் என்று அவர்கள் நினைக்கிறார்கள். 8 அவர்களைப் போல இருக்காதீர்கள். உங்கள் பிதா நீங்கள் கேட்பதற்கு முன்னரே உங்களின் தேவைகளை அறிவார். 9 நீங்கள் பிரார்த்திக்கும்பொழுது கீழ்க்கண்டவாறு பிரார்த்திக்க வேண்டும்:
“‘பரலோகத்திலிருக்கும் எங்கள் பிதாவே,
உமது பெயர் என்றென்றும் புனிதமாயிருக்கப் பிரார்த்திக்கிறோம்.
10 உமது இராஜ்யம் வரவும் பரலோகத்தில் உள்ளது போலவே
பூமியிலும் நீர் விரும்பியவை செய்யப்படவும் பிரார்த்திக்கிறோம்.
11 ஒவ்வொரு நாளும் எங்களுக்குத் தேவையான உணவை எங்களுக்கு அளிப்பீராக.
12 மற்றவர் செய்த தீமைகளை நாங்கள் மன்னித்தது போலவே
எங்கள் குற்றங்களையும் மன்னியும்.
13 எங்களைச் சோதனைக்கு உட்படப் பண்ணாமல்
பிசாசினிடமிருந்து காப்பாற்றும்.’[a]
14 நீங்கள் மற்றவர் செய்யும் தீயவைகளை மன்னித்தால், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவானவரும் உங்கள் தீயசெயல்களையும் மன்னிப்பார். 15 ஆனால், மற்றவர்கள் உங்களுக்குச் செய்யும் தீமைகளை நீங்கள் மன்னிக்காவிட்டால் பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவும் நீங்கள் மற்றவர்களுக்குச் செய்யும் தீமைகளை மன்னிக்கமாட்டார்.
2008 by World Bible Translation Center