Revised Common Lectionary (Complementary)
தேத்
65 கர்த்தாவே, நீர் உமது பணியாளாகிய எனக்கு நல்லவற்றைச் செய்தீர்.
நீர் செய்வதாக எனக்கு உறுதியளித்தபடியே செய்தீர்.
66 கர்த்தாவே, ஞானமுள்ள முடிவுகளை எடுப்பதற்குரிய அறிவை எனக்குத் தாரும்.
உமது கட்டளைகளை நான் நம்புகிறேன்.
67 நான் துன்புறும்முன்பு, பல தவறுகளைச் செய்தேன்.
ஆனால் இப்போது, நான் உமது கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிகிறேன்.
68 தேவனே, நீர் நல்லவர், நீர் நல்ல காரியங்களைச் செய்கிறீர்.
உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
69 என்னைக் காட்டிலும் உயர்ந்தோரெனத் தங்களைக் கருதியவர்கள் என்னைப் பற்றித் தீய பொய்களைக் கூறினார்கள்.
ஆனால் கர்த்தாவே, நான் என் முழு இருதயத்தோடும் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதைத் தொடர்ந்தேன்.
70 அந்த ஜனங்கள் மூடர்கள், ஆனால் நானோ
உமது போதனைகளைக் கற்பதில் களிப்படைகிறேன்.
71 துன்புறுவது எனக்கு நல்லது.
நான் உமது சட்டங்களைக் கற்றிருக்கிறேன்.
72 கர்த்தாவே, உமது போதனைகள் எனக்கு நல்லவை.
ஆயிரம் பொன்னையும் வெள்ளியையும் பார்க்கிலும் அவை நல்லவை.
27 “பொது ஜனங்களில் ஒருவன் அசம்பாவிதமாக பாவம் செய்துவிடலாம். இப்படி அவன் கர்த்தர் சொன்னதை மீறி செய்யத் தகாததைச் செய்துவிடுகிறான். 28 அவன் தான் செய்தது பாவம் என்பதைத் தெரிந்துகொண்டவுடனே அவன் பழுதற்ற பெண் ஆட்டைக் கொண்டு வர வேண்டும். அதுவே அவனுடைய பாவப்பரிகாரப் பலி ஆகும். அவன் செய்த பாவத்திற்காக அவன் அதைக் கொண்டுவர வேண்டும். 29 அவன் தன் கையை அதன் தலைமீது வைத்து, தகன பலிக்குரிய இடத்தில் அதனைக் கொல்ல வேண்டும். 30 பிறகு ஆசாரியன் தன் விரல்களில் அதன் இரத்தத்தை எடுத்து தகன பலிபீடத்தின் கொம்புகளில் பூச வேண்டும். பின் அவன் மிச்சமுள்ள இரத்தத்தை பலிபீடத்தின் அடியில் ஊற்ற வேண்டும். 31 சமாதானப் பலியில் செய்தது போன்று ஆட்டின் கொழுப்பு முழுவதையும் பலிபீடத்தில் எரித்துவிட வேண்டும். கர்த்தருக்கு இனிய நறுமணம் தரும்படி ஆசாரியன் அதனைப் பலிபீடத்தில் எரிக்கவேண்டும். இம்முறையில் ஆசாரியன் அம்மனிதனைச் சுத்தப்படுத்தலாம். தேவன் அவனை மன்னித்துவிடுவார்.
14 மேலும் கர்த்தர் மோசேயிடம், 15 “கர்த்தருக்குரிய பரிசுத்தமானவற்றில் ஒருவன் அசம்பாவிதமாக தவறு செய்துவிட்டால் அவன் ஒரு குறையற்ற ஆட்டுக்குட்டியைக் கொண்டு வரவேண்டும். அது கர்த்தருக்கு அவன் கொடுக்கும் குற்ற நிவாரண பலியாகும். அதிகாரப் பூர்வமான அளவைப் பயன்படுத்தி ஆட்டின் விலையை நிர்ணயிக்க வேண்டும். 16 அந்த மனிதன் தான் செய்த பாவத்திற்குரிய விலையைச் செலுத்த வேண்டும். வாக்குறுதியளித்த தொகையோடு, அதன் மதிப்பில் ஐந்தில் ஒரு பகுதியையும் கூட்டி, மொத்தப் பணத்தை ஆசாரியன் கையில் கொடுக்க வேண்டும். இம்முறையில் குற்ற நிவாரண பலியின் மூலம் அம்மனிதனை ஆசாரியன் சுத்தமாக்குகிறான். தேவனும் அம்மனிதனை மன்னிப்பார்.
தேவனுக்காக வாழுங்கள்
11 அன்பான நண்பர்களே, நீங்கள் இந்த சமூகத்தில் வாழ்கிற அந்நியர்கள் போலவும் புதிய விருந்தாளிகள் போலவும் இருக்கிறீர்கள். உங்கள் சரீரங்கள் செய்ய விழையும் தீய காரியங்களை விட்டு விலகுமாறு நான் உங்களைக் கேட்கிறேன். இவை உங்கள் ஆன்மாவுக்கு எதிராகப் போராடுகின்றன. 12 தேவனிடம் நம்பிக்கையற்ற மக்கள் உங்களைச் சுற்றிலும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று இம்மக்கள் கூறக்கூடும். எனவே நல்வாழ்க்கை வாழுங்கள். அப்போது அவர்கள் உங்கள் நற்செய்கைகளைக் காண்பார்கள். அவர் வரும் நாளில் அவர்கள் தேவனுக்கு மகிமையைக் கொடுப்பார்கள்.
ஒவ்வொரு மனித அதிகாரத்திற்கும் கீழ்ப்படியுங்கள்
13 இவ்வுலகில் அதிகாரமுள்ள மக்களுக்குக் கீழ்ப்படியுங்கள். இதனைக் கர்த்தருக்காகச் செய்யுங்கள். உயர்ந்த அளவில் அதிகாரம் செலுத்தும் ராஜாவுக்குக் கீழ்ப்படியுங்கள். 14 ராஜாவால் அனுப்பப்பட்ட ஆளுநர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். அவர்கள் தவறு செய்பவர்களைத் தண்டிப்பதற்கும் நல்லவற்றைச் செய்பவர்களைப் புகழ்வதற்கும் அனுப்பப்பட்டுள்ளார்கள். 15 எனவே புண்படுத்தும் வார்த்தைகளைப் பேசும் முட்டாள் மனிதர்களின் வாயை அடைக்கும் பொருட்டு நற்செயல்களைச் செய்யுங்கள். இதையே தேவன் விரும்புகிறார். 16 சுதந்திரமான மனிதரைப்போன்று வாழுங்கள். தீயன செய்வதற்கு ஒரு காரணமாக உங்கள் விடுதலையைப் பயன்படுத்தாதீர்கள். நீங்கள் தேவனுக்கு சேவை செய்பவர்களாகவே வாழுங்கள். 17 எல்லாருக்கும் மரியாதை செலுத்துங்கள். தேவனுடைய குடும்பத்தில் எல்லா சகோதரர்களையும் சகோதரிகளையும் நேசியுங்கள். தேவனுக்கு அஞ்சுங்கள். ராஜாவை மதியுங்கள்.
2008 by World Bible Translation Center