Revised Common Lectionary (Complementary)
எ
33 கர்த்தாவே, உமது சட்டங்களை எனக்குப் போதியும்,
நான் அவற்றைப் பின்பற்றுவேன்.
34 நான் புரிந்துகொள்ள உதவும்.
நான் உமது போதனைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
நான் அவற்றிற்கு முற்றிலும் கீழ்ப்படிவேன்.
35 கர்த்தாவே, என்னை உமது கட்டளைகளின் பாதையில் வழிநடத்தும்.
நான் அவ்வாழ்க்கை முறையை உண்மையாகவே நேசிக்கிறேன்.
36 செல்வந்தனாவதைப்பற்றி நினைப்பதைப் பார்க்கிலும் உமது
உடன்படிக்கையைப்பற்றி நினைக்க எனக்கு உதவும்.
37 கர்த்தாவே, பயனற்ற காரியங்களைப் பார்க்கவிடாதேயும்,
உமது வழியில் வாழ எனக்கு உதவும்.
38 ஜனங்கள் உம்மை மதிக்கும்படி உமது
ஊழியனுக்கு உறுதியளித்தபடியே செய்யும்.
39 கர்த்தாவே, நான் அஞ்சும் வெட்கத்தை எடுத்துப்போடும்.
உமது ஞானமுள்ள முடிவுகள் நல்லவை.
40 பாரும், நான் உமது கட்டளைகளை நேசிக்கிறேன்.
எனக்கு நல்லவராக இருந்து, என்னை வாழவிடும்.
எசேக்கியேல் மனைவியின் மரணம்
15 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 16 “மனுபுத்திரனே, நீ உன் மனைவியைப் அதிகமாய் நேசிக்கிறாய். ஆனால் நான் அவளை உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப் போகிறேன். உன் மனைவி திடீரென்று மரிப்பாள். ஆனால் உனது துக்கத்தை நீ காட்டக்கூடாது. நீ உரக்க அழவேண்டாம். நீ அழுவாய். உன் கண்ணீர் கீழே விழும். 17 ஆனால் உனது துயரத்தை அமைதியாக வெளிப்படுத்தவேண்டும். உனது மரித்த மனைவிக்காக நீ உரக்க அழாதே. நீ வழக்கமாக அணிகிற ஆடையையே அணியவேண்டும். உனது தலைப் பாகையையும் பாதரட்சைகளையும் அணியவேண்டும். உனது துயரத்தைக் காட்ட மீசையை மறைக்க வேண்டாம். உறவினர் மரித்துப்போனால் வழக்கமாக மற்றவர்கள் உண்ணும் உணவை நீ உண்ண வேண்டாம்.”
18 மறுநாள் காலையில் ஜனங்களிடம் தேவன் சொன்னதைச் சொன்னேன். அன்று மாலையில் எனது மனைவி மரித்தாள். மறுநாள் காலையில் தேவனுடைய கட்டளைபடி நான் செய்தேன்: 19 பிறகு ஜனங்கள் என்னிடம் சொன்னார்கள்; “ஏன் இவ்வாறு செய்கிறீர்? இதன் பொருள் என்ன?”
20 பிறகு நான் அவர்களிடம் சொன்னேன்: “கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் 21 இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் சொல்லச் சொன்னார். எனது கர்த்தராகிய ஆண்டவர் சொன்னார்: ‘பார், நான் எனது பரிசுத்தமான இடத்தை அழிப்பேன். அந்த இடத்தைப்பற்றி பெருமைப்படுகிறீர்கள். அதைப்பற்றிப் புகழ்ந்து பாடுகிறீர்கள். அந்த இடத்தைப் பார்க்க ஆசைப்படுகிறீர்கள். நீங்கள் உண்மையில் அந்த இடத்தை நேசிக்கிறீர்கள். ஆனால் நான் அந்த இடத்தை அழிப்பேன். நீங்கள் விட்டுச்செல்லும் உங்கள் பிள்ளைகளைப் போரில் கொல்வேன். 22 ஆனால், நான் என் மனைவிக்குச் செய்ததையே நீங்கள் செய்வீர்கள். உங்கள் துக்கத்தைக் காட்ட மீசையை மறைக்கமாட்டீர்கள். ஒருவன் மரித்ததற்காக வழக்கமாக உண்ணும் உணவை நீங்கள் உண்ணமாட்டீர்கள். 23 நீங்கள் உங்கள் தலைப் பாகையையும் பாதரட்சைகளையும் அணிந்து கொள்வீர்கள். நீங்கள் உங்கள் துக்கத்தைக் காட்டமாட்டீர்கள். நீங்கள் அழமாட்டீர்கள். ஆனால் உங்களது பாவங்களால் நீங்கள் வீணாக்கப்படுவீர்கள். நீங்கள் உங்களது துயர ஒலிகளை ஒருவருக்கொருவர் அமைதியாக வெளிப்படுத்திக்கொள்வீர்கள், 24 எனவே எசேக்கியேல் உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு, அவன் செய்ததை எல்லாம் நீங்கள் செய்வீர்கள். அந்தத் தண்டனைக் காலம் வரும். பிறகு நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.’”
25-26 “மனுபுத்திரனே, நான் ஜனங்களிடமிருந்து அப்பாதுகாப்பான இடத்தை (எருசலேம்) எடுத்துக்கொள்வேன். அந்த அழகிய இடம் அவர்களை மகிழ்ச்சியடையச் செய்கிறது. அவர்கள் அந்த இடத்தைப் பார்க்க அதிகமாக விரும்புகின்றனர். அவர்கள் உண்மையில் அந்த இடத்தை நேசிக்கிறார்கள். ஆனால் அந்த நேரத்தில் நான் அந்த நகரத்தையும் அவர்களது பிள்ளைகளையும் எடுத்துக்கொள்வேன். தப்பிப் பிழைத்த ஒருவன் எருசலேம் பற்றிய கெட்ட செய்தியைச் சொல்வதற்கு வருவான். 27 அப்பொழுது அவனோடு பேச உன்னால் முடியும். நீ இனிமேலும் மௌனமாய் இருக்கமாட்டாய். இதுபோலவே நீ அவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பாய். பிறகு அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்.”
15 ஒருவன் சென்று அவர்களிடம் செய்தியைப் பரப்புவதற்கு முன்பு, அவன் அனுப்பப்பட வேண்டும். “நற்செய்தியைச் சொல்ல வருகின்றவர்களின் பாதங்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன”(A) என்று எழுதப்பட்டிருக்கிறது.
16 நற்செய்தியை யூதர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதைப்பற்றி ஏசாயா, “ஆண்டவரே, அவர்களுக்கு நாங்கள் சொன்னதையெல்லாம் யார் விசுவாசிக்கிறார்கள்?”(B) என்று கேட்கிறார். 17 எனவே நற்செய்தியைக் கேட்பதன் மூலமே விசுவாசம் பிறக்கிறது. ஒருவன் கிறிஸ்துவைப் பற்றிக் கூறும்போது மக்கள் நற்செய்தியைக் கேட்கிறார்கள்.
18 ஆனால் “மக்கள் நற்செய்தியைக் கேட்டதில்லையா?” என்று நான் கேட்கிறேன். ஆமாம்.
“அவர்களின் சப்தங்கள் உலகம் முழுவதும் சென்றன.
அவர்களின் வார்த்தைகள் உலகின் கடைசிவரை பரவின”(C)
என்று எழுதப்பட்டது போல் அவர்கள் கேட்டார்கள்.
19 “இஸ்ரவேல் மக்கள் அதனைப் புரிந்துகொள்ளவில்லையா?” என்று மீண்டும் நான் கேட்கிறேன். ஆமாம். அவர்கள் புரிந்துகொண்டனர். முதலில் மோசே இதனைச் சொன்னார்.
“நீங்கள் பொறாமைப்படும் வகையில் அந்நாட்டுக்குரிமை இல்லாத மக்களைப் பயன்படுத்துவேன்.
உங்களுக்குக் கோபம் வரும் வகையில் புரிந்துகொள்ள இயலாத நாட்டு மக்களை உபயோகப்படுத்துவேன்.”(D)
20 ஏசாயாவும் தைரியத்தோடு தேவனுக்காக இதைச் சொன்னார்.
“என்னைத் தேடியலையாத மக்களால் கண்டு பிடிக்கப்பட்டேன்.
என்னை விசாரித்து வராதவர்களுக்கு என்னை வெளிப்படுத்தினேன்.(E)
21 இவ்வளவு நாட்களும்
“நான் அவர்களுக்காகக் காத்திருந்தேன்.
அவர்களோ எனக்குக் கீழ்ப்படிய மறுத்து விட்டார்கள்.
என்னைப் பின்பற்றவும் மறுத்துவிட்டனர்.”(F)
என்று யூத மக்களைப் பற்றி ஏசாயா வழியாக தேவன் கூறுகிறார்.
2008 by World Bible Translation Center