Revised Common Lectionary (Complementary)
எ
33 கர்த்தாவே, உமது சட்டங்களை எனக்குப் போதியும்,
நான் அவற்றைப் பின்பற்றுவேன்.
34 நான் புரிந்துகொள்ள உதவும்.
நான் உமது போதனைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
நான் அவற்றிற்கு முற்றிலும் கீழ்ப்படிவேன்.
35 கர்த்தாவே, என்னை உமது கட்டளைகளின் பாதையில் வழிநடத்தும்.
நான் அவ்வாழ்க்கை முறையை உண்மையாகவே நேசிக்கிறேன்.
36 செல்வந்தனாவதைப்பற்றி நினைப்பதைப் பார்க்கிலும் உமது
உடன்படிக்கையைப்பற்றி நினைக்க எனக்கு உதவும்.
37 கர்த்தாவே, பயனற்ற காரியங்களைப் பார்க்கவிடாதேயும்,
உமது வழியில் வாழ எனக்கு உதவும்.
38 ஜனங்கள் உம்மை மதிக்கும்படி உமது
ஊழியனுக்கு உறுதியளித்தபடியே செய்யும்.
39 கர்த்தாவே, நான் அஞ்சும் வெட்கத்தை எடுத்துப்போடும்.
உமது ஞானமுள்ள முடிவுகள் நல்லவை.
40 பாரும், நான் உமது கட்டளைகளை நேசிக்கிறேன்.
எனக்கு நல்லவராக இருந்து, என்னை வாழவிடும்.
பானையும் இறைச்சியும்
24 எனது கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தை என்னிடம் வந்தது. இது சிறைப்பட்ட ஒன்பதாம் ஆண்டின் பத்தாம் மாதத்தின் (டிசம்பர்) பத்தாம் நாளில் நடந்தது, அவர் சொன்னார்: 2 “மனுபுத்திரனே, இந்த நாளின் தேதியையும் இந்தக் குறிப்பையும் நீ எழுதிவை. ‘இந்த நாளில் பாபிலோன் ராஜாவின் படை எருசலேமை முற்றுகையிட்டது.’ 3 இந்தக் கதையைக் கீழ்ப்படிய மறுக்கும் குடும்பத்தாரிடம் (இஸ்ரவேல்) கூறு. அவர்களிடம் இவற்றைக் கூறு, ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இதனைக் கூறுகிறார்:
“‘பாத்திரத்தை அடுப்பிலே வை,
பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீரை ஊற்று.
4 அதில் இறைச்சித் துண்டுகளைப் போடு.
தொடை மற்றும் தோள்களில் உள்ள நல்ல கறிகளைப் போடு,
நல்ல எலும்புகளாலும் பாத்திரத்தை நிரப்பு.
5 மந்தையில் நல்ல ஆடுகளை பயன்படுத்து,
பாத்திரத்திற்குக் கீழே விறகுகளை அடுக்கு,
இறைச்சித் துண்டுகளைக் கொதிக்க வை.
எலும்புகளும் வேகும்வரை பொங்கக் காய்ச்சு!
6 “‘எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
இது எருசலேமிற்குக் கேடாகும்.
கொலைக்காரர்களின் நகரத்திற்கு இது கேடாகும்.
எருசலேம் துரு ஏறிய ஒரு பாத்திரத்தைப் போன்றது.
அத்துரு நீக்க முடியாதது!
அப்பாத்திரம் சுத்தமானதாக இல்லை,
எனவே நீ அப்பாத்திரத்திலுள்ள எல்லாக் கறித் துண்டுகளையும் வெளியே எடுத்துப் போடவேண்டும்!
அக்கெட்டுப்போன இறைச்சியில் ஆசாரியர்கள் எதையும் தேர்ந்தெடுக்க, தின்ன அனுமதிக்கவேண்டாம்.
7 எருசலேம் துருவோடுள்ள பாத்திரத்தைப் போன்றது.
ஏனென்றால் கொலைகளினால் ஏற்பட்ட இரத்தம் இன்னும் உள்ளது!
அவள் வெறும் பாறையில் இரத்தத்தைப் போட்டாள்!
அவள் இரத்தத்தை நிலத்தில் ஊற்றி அதைப் புழுதியினால் மூடவில்லை.
8 நான் அவள் இரத்தத்தை வெறும் பாறையில் வைத்தேன்.
எனவே இது மறைக்கப்படாது.
நான் இதனைச் செய்தேன், எனவே ஜனங்கள் கோபப்படுவார்கள்,
அப்பாவி ஜனங்களைக் கொன்றதற்காக அவளைத் தண்டிப்பார்கள்.’”
9 “‘எனவே, எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
கொலைக்காரர்கள் நிறைந்த இந்நகரத்துக்கு இது கேடாகும்!
நான் நெருப்புக்காக நிறைய விறகுகளை அடுக்குவேன்.
10 பாத்திரத்திற்குக் கீழே நிறைய விறகுகளை அடுக்கு.
நெருப்பு வை,
இறைச்சியை நன்றாக வேகவை!
மசாலாவைக் கலந்து வை.
எலும்புகளையும் எரித்துவிடு!
11 பிறகு பாத்திரத்தைக் காலியாக்கி நெருப்பின் மேல் வை.
அதன் கறைகள் உருகத் தொடங்கும் வரை சூடாக்கு.
அதன் கறைகள் உருகிவிடும்,
துருவும் அழிக்கப்படும்.
12 “‘எருசலேம், அழுக்கினை போக்க
கடுமையாக வேலை செய்யவேண்டும்.
ஆனாலும் “துரு” போகாது!
நெருப்பு (தண்டனை) மட்டுமே துருவை அகற்றும்!
13 “‘நீ எனக்கு எதிராகப் பாவம் செய்தாய்.
அதனால் பாவக்கறையோடு உள்ளாய்.
நான் உன்னைக் கழுவிச் சுத்தமாக்க விரும்பினேன்.
ஆனால் அழுக்கு வெளியேறவில்லை.
எனது கோபநெருப்பு தணியும்வரை
நான் மீண்டும் உன்னைக் கழுவ முயற்சி செய்யமாட்டேன்!
14 “‘நானே கர்த்தர், உனது தண்டனை வரும் என்று நான் சொன்னேன். நான் அது வரும்படிச் செய்வேன். நான் தண்டனையை நிறுத்தி வைப்பதில்லை. நான் உனக்காக வருத்தப்படுவதில்லை. நீ செய்த பாவங்களுக்காக நான் உன்னைத் தண்டிப்பேன்.’” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைச் சொன்னார்.
கொரிந்து கிறிஸ்தவர்கள் மேல் பவுலின் அன்பு
11 நான் முட்டாளைப் போன்று பேசிக்கொண்டிருந்திருக்கிறேன். இவ்வாறு நீங்களே என்னைச் செய்தீர்கள். நீங்களெல்லாம் என்னைப் பாராட்டியிருக்கலாம். நான் அதற்குத் தகுதியுடையவன் அல்லன். எனினும் என்னை “அந்த மகா பிரதான அப்போஸ்தலர்களோடு” ஒப்பிடும்போது நான் குறைந்தவன் அல்லன். 12 நான் உங்களோடு இருந்த போது, நான் அப்போஸ்தலன் என்பதை நிரூபிக்கும் வகையில் பலவற்றைச் செய்தேன். நான் அடையாளங்களையும், அதிசயங்களையும், அற்புதங்களையும் பொறுமையோடு செய்தேன். 13 எனவே ஏனைய சபைகளைப் போன்று நீங்களும் எல்லாவற்றையும் பெற்றீர்கள். உங்களுக்கு எதிலும் குறைவில்லை. ஆனால் ஒரு வேறுபாடு, நான் எவ்வகையிலும் உங்களுக்குப் பாரமாக இருக்கவில்லை. இது தான் குறை. இதற்காக என்னை மன்னியுங்கள்.
14 மூன்றாவது முறையாக இப்பொழுது உங்களிடம் வர நான் தயாராக உள்ளேன். நான் உங்களுக்குப் பாரமாக இருக்கமாட்டேன். உங்களுக்கு உரிய எந்தப் பொருளையும் நான் சொந்தம் கொண்டாடமாட்டேன். நான் உங்களை மட்டுமே விரும்புகிறேன். பெற்றோருக்குப் பொருட்களைச் சேர்த்து வைக்க வேண்டியவர்கள் பிள்ளைகள் அல்ல. பெற்றோர்களே பிள்ளைகளுக்குப் பொருட்களைச் சேர்த்து வைக்கவேண்டும். 15 எனவே, நான் எனக்குரியவற்றையெல்லாம் உங்களுக்காகச் செலவு செய்வதில் மகிழ்ச்சியாக உள்ளேன். நான் என்னையும் உங்களுக்காகத் தருவேன். நான் உங்களை மிகுதியாக நேசித்தால் நீங்கள் என்னைக் குறைவாக நேசிப்பீர்களா?
16 நான் உங்களுக்குப் பாரமாக இல்லை என்பது தெளிவாயிற்று. ஆனால் என்னைத் தந்திரமானவன் என்றும், பொய் சொல்லி உங்களை வசப்படுத்திவிட்டேன் என்றும் எண்ணுகிறீர்கள். 17 நான் யாரையாவது அனுப்பி உங்களை ஏமாற்றி இருக்கிறேனா? இல்லையே. நீங்களும் அதை அறிவீர்கள். 18 உங்களிடம் செல்லுமாறு நான் தீத்துவை அனுப்பினேன். எங்கள் சகோதரனையும் அவனோடு சேர்த்து அனுப்பினேன். தீத்து உங்களை ஏமாற்றவில்லை. அல்லவா? தீத்துவும் நானும் ஒரே ஆவியால் வழி நடத்தப்பட்டு ஒரேவிதமான வாழ்வை நடத்தினோம்.
19 காலமெல்லாம் எங்களின் பாதுகாப்புக்காகப் பேசுகிறோம் என்று நினைக்கிறீர்களா? தேவனுக்கு முன்பாக கிறிஸ்துவுக்குள் பேசுகிறோம். நீங்கள் எமது பிரியமான நண்பர்கள். நாங்கள் செய்வது எல்லாம் உங்களைப் பலப்படுத்துவதற்காகத்தான். 20 நான் இவற்றையெல்லாம் ஏன் செய்கிறேன்? உங்களிடம் நான் வரும்போது, நீங்கள் எதிர்பார்க்கிறபடி நானும், நான் எதிர்பார்க்கிறபடி நீங்களும் இல்லாமல் போகக்கூடாது என்று அஞ்சுகிறேன். விரோதம், பொறாமை, கோபம், சுயநலம், தீய பேச்சு, மோசமான பெருமிதம், குழப்பம் போன்றவற்றால் நீங்கள் அழியக்கூடாது என்று அஞ்சுகிறேன். 21 மீண்டும் நான் உங்களிடம் வரும்போது தேவன் என்னை உங்கள் முன் தாழ்த்தி விடுவாரோ என்று அஞ்சுகிறேன். பலர் தாங்கள் செய்த அசுத்தம், வேசித்தனம், பாலியல் குற்றங்கள் போன்ற பாவங்களைத் தொடக்கத்தில் செய்து, பிறகு மாறாமலும் அதற்காக மனம் வருந்தாமலும் இருப்பதைப் பற்றியும் நான் துக்கப்பட வேண்டியிருக்குமோ என்று அஞ்சுகிறேன்.
2008 by World Bible Translation Center