Revised Common Lectionary (Complementary)
தாவீதின் ஒரு ஜெபம்.
17 கர்த்தாவே, நியாயத்திற்கான என் ஜெபத்தைக் கேளும்.
எனது ஜெபப் பாடலுக்குச் செவிகொடுத்தருளும்.
எனது நேர்மையான ஜெபத்தைக் கேளும்.
2 என்னைப் பற்றிய சரியான முடிவு எடுப்பீர்.
உம்மால் உண்மையைக் காணமுடியும்.
3 நீர் என் இருதயத்தின் ஆழத்தைப் பார்த்தீர்.
இரவு முழுவதும் என்னோடிருந்தீர்.
என் இருதயத்தை ஆராய்ந்து என்னில் ஒரு குற்றத்தையும் நீர் காணவில்லை.
நான் எந்தத் தீய செயல்களையும் திட்டமிடவில்லை.
4 உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கு என்னால் இயன்றமட்டும் முயன்றேன்.
5 உமது வழிமுறைகளை பின்பற்றினேன்.
உமது வாழ்க்கை வழிகளிலிருந்து என் பாதங்கள் விலகவில்லை.
6 தேவனே, உம்மைக் கூப்பிட்டபோதெல்லாம், எனக்குப் பதிலளித்தீர்.
எனவே, இப்போதும் எனக்குச் செவிகொடும்.
7 தேவனே, உம்மை நம்புகிற உமது வலது பக்கத்திலிருக்கும் ஜனங்களுக்கு உதவுகிறீர்.
உம்மைப் பின்பற்றுகிறவனின் இந்த ஜெபத்திற்குச் செவிகொடும்.
8 கண்ணின் மணியைப்போல என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
உமது சிறகுகளின் நிழலில் என்னை மறைத்துக்கொள்ளும்.
9 கர்த்தாவே, என்னை அழிக்க நினைக்கிற தீயோரிடமிருந்து என்னை மீட்டருளும்.
என்னைத் தாக்க முயல்கிற ஜனங்களிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
10 தங்களைப் பற்றிப் பெருமைபாராட்டுகிற அத்தீயோர் தேவனுக்குச் செவிசாய்க்க முடியாதபடி
பெருமையுடையோராய் இருக்கிறார்கள்.
11 அந்த ஜனங்கள் என்னைத் துரத்தினார்கள்.
இப்போது அவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள்.
என்னைத் தாக்குவதற்குத் தயாராக இருக்கிறார்கள்.
12 பிற விலங்குகளைக் கொன்று சாப்பிடக் காத்திருக்கும் சிங்கத்தைப்போன்று அத்தீயோர் காணப்படுகிறார்கள்.
தாக்கக் காத்திருக்கும் சிங்கத்தைப்போல் மறைந்திருக்கிறார்கள்.
13 கர்த்தாவே, எழுந்து பகைவரிடம் சென்று, அவர்கள் சரணடையச் செய்யும்.
உமது வாளால் அத்தீயோரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
14 கர்த்தாவே, உயிருள்ளோர் வாழும் தேசத்திலிருந்து அத்தீயோரை
உமது வல்லமையால் அப்புறப்படுத்தும்.
கர்த்தாவே, பலர் உம்மிடம் உதவிக்காக வருவார்கள். இவ்வாழ்க்கையில் அதிகம் பலனில்லை.
அவர்களுக்கு அதிக உணவளியும்.
வேண்டுவனவற்றை அவர்கள் பிள்ளைகளுக்குக் கொடும்.
அவர்களின் பிள்ளைகளுக்கும் மிகுந்திருக்கும்படியாக அப்பிள்ளைகளுக்குத் திருப்தியாய் உணவளியும்.
15 நான் நீதிக்காக ஜெபிக்கிறேன்.
கர்த்தாவே, உமது முகத்தைக் காண்பேன்.
கர்த்தாவே, உம்மைப் பார்ப்பதால் முழுமையான திருப்திகொள்வேன்.
27 அவளது துக்க காலம் முடிந்தபிறகு, தாவீது அவளைத் தனது வீட்டிற்கு அழைத்து வரும்படியாக ஆட்களை அனுப்பினான். அவள் தாவீதின் மனைவியானாள். அவள் தாவீதுக்கு ஒரு குமாரனைப் பெற்றெடுத்தாள். ஆனால் தாவீது செய்த இந்த தீமையை கர்த்தர் விரும்பவில்லை.
தாவீதிடம் நாத்தான் பேசுகிறான்
12 கர்த்தர் நாத்தானை தாவீதிடம் அனுப்பினார். நாத்தான் தாவீதிடம் சென்றான். நாத்தான், “ஒரு நகரத்தில் இரண்டு பேர் இருந்தார்கள். ஒருவன் செல்வந்தன், மற்றவன் ஏழை. 2 செல்வந்தனிடம் ஏராளமான ஆடுகளும் கால்நடைகளும் இருந்தன. 3 ஆனால், ஏழையிடம் அவன் வாங்கிய ஒரு (பெண்) ஆட்டுக்குட்டி மாத்திரம் இருந்தது. அது அந்த ஏழையோடும் அவனது பிள்ளைகளோடும் வளர்ந்து, உணவை உண்டது, ஏழையின் கோப்பையில் அது குடித்தது. ஏழையின் மார்பில் அது தூங்கிற்று. அந்த ஏழைக்கு அது ஒரு குமாரத்தியைப் போல இருந்தது.
4 “அந்த வழியாய் வந்த ஒரு பயணி செல்வந்தனைச் சந்திப்பதற்காக இறங்கினான். செல்வந்தன் அவனுக்கு ஒரு விருந்து தர ஏற்பாடு செய்தான். அதற்கென்று அச்செல்வந்தன் தனது ஆடுமாடுகளில் எதையும் தொடாமல் ஏழையின் ஒரே ஆட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டான். அதைக் கொன்று விருந்தாளிக்கு உணவாகச் சமைத்தான்” என்றான்.
5 தாவீது அச்செல்வந்தன் மீது கோபங்கொண்டான். அவன் நாத்தானை நோக்கி, “கர்த்தர் உயிரோடிருப்பது நிச்சயமானால், அம்மனிதன் மரிக்க வேண்டும் என்பதும் நிச்சயம்! 6 அவன் ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு பணம் செலுத்த வேண்டும். ஏனெனில் அவன் இக்கொடிய தீமையைச் செய்தான். ஏனெனில் அவனிடம் இரக்க குணம் எள்ளளவும் இருக்கவில்லை” என்றான்.
நாத்தான் தாவீதிடம் அவன் பாவத்தை கூறுதல்
7 அப்போது நாத்தான் தாவீதை நோக்கி, “நீயே அந்த செல்வந்தன்! இதுவே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுவது: ‘நான் உன்னை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்தேன். நான் உன்னை சவுலிடமிருந்து மீட்டேன். 8 நீ அவனது குடும்பத்தையும் அவனது மனைவியரையும் எடுத்துக்கொள்ளுமாறு நான் செய்தேன். நான் உன்னை இஸ்ரவேல், யூதா ஜனங்களுக்கு ராஜாவாக்கினேன். அது போதாதென்று உனக்கு இன்னும் அதிகமதிகமாகக் கொடுத்தேன். 9 ஏன் நீ கர்த்தருடைய கட்டளையை அசட்டை செய்தாய்? அவர் தவறெனக் கூறிய காரியத்தை நீ ஏன் செய்தாய்? உரியாவின் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண்டாய். நீ, அம்மோனியரின் வாளால் ஏத்தியனாகிய உரியாவைக் கொன்றாய். இந்த விதமாக ஏத்தியானாகிய உரியாவை ஒரு வாளால் கொன்றாய். 10 எனவே வாள் உன் குடும்பத்தை விட்டு அகலாது. நீ ஏத்தியானாகிய உரியாவின் மனைவியை எடுத்துக்கொண்டாய். இப்படி செய்ததினால் நீ என்னைப் பொருட்படுத்தவில்லை என்பதைக் காட்டினாய்.’
11 “கர்த்தர் சொல்வது: ‘நான் உனக்கு எதிராகத் தொல்லையைத் தர ஆரம்பிப்பேன். இந்தத் தொல்லை உனது குடும்பத்திலிருந்தே உருவாகும். உன் மனைவியரை நான் உன்னிடமிருந்து பிரித்து உனக்கு மிக நெருக்கமான ஒருவனுக்குக் கொடுப்பேன். அம்மனிதன் உன் மனைவியரோடுப் படுப்பான். அதை எல்லோரும் காண்பார்கள்! 12 நீ இரகசியமாக பத்சேபாளோடு படுத்தாய். இஸ்ரவேலர் எல்லோரும் பார்க்கும்படியாக[a] பகிரங்கமாக நான் இக்காரியத்தைச் செய்வேன்’ என்றார்” என்றான்.
13 அப்போது தாவீது நாத்தனை நோக்கி, “நான் கர்த்தருக்கு எதிராக பாவம் செய்தேன்” என்றான்.
நாத்தான் தாவீதை நோக்கி, “கர்த்தர் இந்த பாவத்தை மன்னிப்பார். நீ மரிக்கமாட்டாய். 14 ஆனால் நீ செய்த இந்த பாவத்தின் மூலம் கர்த்தருடைய எதிரிகளும் அவரை வெறுத்தொதுக்க நீ வழிவகுத்துவிட்டாய்! ஆதலால் உனக்குப் பிறக்கும் குமாரன் மரிப்பான்” என்றான்.
தாவீதுக்கும் பத்சேபாளுக்கும் பிறந்த குமாரனின் மரணம்
15 பின்பு நாத்தான் வீட்டிற்குத் திரும்பினான். தாவீதுக்கும் உரியாவின் மனைவிக்கும் பிறந்த ஆண் குழந்தையை கர்த்தர் பெரும் நோய்க்குள்ளாக்கினார்.
பிலதெல்பியா சபைக்கு இயேசுவின் நிருபம்
7 “பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது:
“உண்மையுள்ளவரும் பரிசுத்தமுள்ளவரும் இவைகளை உனக்குக் கூறுகிறார். அவர் தாவீதின் திறவுகோலை உடையவராக இருக்கின்றார். அவர் ஒரு கதவைத் திறந்தால், அதை யாராலும் மூட முடியாது. மேலும் அவர் கதவை மூடினால் யாராலும் அதைத் திறக்க முடியாது.
8 “நீ செய்பவற்றை நான் அறிவேன். நான் உங்களுக்கு முன்னால் திறந்த வாசலை வைக்கிறேன். அதனை எவராலும் அடைக்க முடியாது. நீங்கள் பலவீனமானவர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் உபதேசத்தை நீங்கள் பின்பற்றினீர்கள். என் பெயரைச் சொல்ல நீங்கள் பயப்படவில்லை. 9 கவனியுங்கள். சாத்தானைச் சேர்ந்த கூட்டம் ஒன்று உள்ளது. அவர்கள் தம்மை யூதர்கள் எனக் கூறுகிறார்கள். உண்மையில் அவர்கள் பொய்யர்களே! அவர்கள் உண்மையான யூதர்கள் அல்லர். அவர்களை உங்கள் முன் அடிபணிந்து வணங்கச்செய்வேன். என்னால் நேசிக்கப்படுகிற மக்கள் நீங்கள் என்பதை அவர்கள் அறிவர். 10 எனது கட்டளைகளை நீங்கள் பின்பற்றிப் பொறுமையாக இருந்தீர்கள். அதனால் துன்ப காலத்தில் உங்களைப் பாதுகாப்பேன். முழு உலகமும் துன்பப்படும்போது நீங்கள் தப்பித்துக்கொள்வீர்கள். அத்துன்பம் உலகில் வாழும் மக்களைச் சோதிக்கும்.
11 “நான் விரைவில் வருகிறேன். இப்பொழுது உள்ள வழியில் தொடர்ந்து செல்லுங்கள். அப்பொழுது எவராலும் உங்கள் கிரீடத்தை எடுத்துக்கொள்ள முடியாது. 12 இதில் வெற்றி பெறுகிறவன் என் தேவனின் ஆலயத்தில், சிறந்த தூணாக விளங்குவான். இதில் வெற்றி பெறுகிறவனுக்காக நான் இதனைச் செய்வேன். அவன் எப்போதும் தேவனின் ஆலயத்தை விட்டு விலகமாட்டான். அவன் மேல் எனது தேவனின் பெயரை எழுதுவேன். அவன் மேல் எனது தேவனுடயை நகரத்தின் பெயரையும் எழுதுவேன். அந்த நகரத்தின் பெயர் புதிய எருசலேம். பரலோகத்திலிருக்கின்ற என் தேவனிடமிருந்து இந்நகரம் இறங்கி வந்துகொண்டிருக்கின்றது. நான் எனது புதிய பெயரையும் அவன் மீது எழுதுவேன்.” 13 சபைகளுக்கு ஆவியானவர் கூறுவதைக் கேட்கின்ற யாவரும் கவனிக்க வேண்டும்.
2008 by World Bible Translation Center