Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 17

தாவீதின் ஒரு ஜெபம்.

17 கர்த்தாவே, நியாயத்திற்கான என் ஜெபத்தைக் கேளும்.
    எனது ஜெபப் பாடலுக்குச் செவிகொடுத்தருளும்.
    எனது நேர்மையான ஜெபத்தைக் கேளும்.
என்னைப் பற்றிய சரியான முடிவு எடுப்பீர்.
    உம்மால் உண்மையைக் காணமுடியும்.
நீர் என் இருதயத்தின் ஆழத்தைப் பார்த்தீர்.
    இரவு முழுவதும் என்னோடிருந்தீர்.
என் இருதயத்தை ஆராய்ந்து என்னில் ஒரு குற்றத்தையும் நீர் காணவில்லை.
    நான் எந்தத் தீய செயல்களையும் திட்டமிடவில்லை.
உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கு என்னால் இயன்றமட்டும் முயன்றேன்.
உமது வழிமுறைகளை பின்பற்றினேன்.
    உமது வாழ்க்கை வழிகளிலிருந்து என் பாதங்கள் விலகவில்லை.

தேவனே, உம்மைக் கூப்பிட்டபோதெல்லாம், எனக்குப் பதிலளித்தீர்.
    எனவே, இப்போதும் எனக்குச் செவிகொடும்.
தேவனே, உம்மை நம்புகிற உமது வலது பக்கத்திலிருக்கும் ஜனங்களுக்கு உதவுகிறீர்.
    உம்மைப் பின்பற்றுகிறவனின் இந்த ஜெபத்திற்குச் செவிகொடும்.
கண்ணின் மணியைப்போல என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
    உமது சிறகுகளின் நிழலில் என்னை மறைத்துக்கொள்ளும்.
கர்த்தாவே, என்னை அழிக்க நினைக்கிற தீயோரிடமிருந்து என்னை மீட்டருளும்.
    என்னைத் தாக்க முயல்கிற ஜனங்களிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
10 தங்களைப் பற்றிப் பெருமைபாராட்டுகிற அத்தீயோர் தேவனுக்குச் செவிசாய்க்க முடியாதபடி
    பெருமையுடையோராய் இருக்கிறார்கள்.
11 அந்த ஜனங்கள் என்னைத் துரத்தினார்கள்.
    இப்போது அவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள்.
    என்னைத் தாக்குவதற்குத் தயாராக இருக்கிறார்கள்.
12 பிற விலங்குகளைக் கொன்று சாப்பிடக் காத்திருக்கும் சிங்கத்தைப்போன்று அத்தீயோர் காணப்படுகிறார்கள்.
    தாக்கக் காத்திருக்கும் சிங்கத்தைப்போல் மறைந்திருக்கிறார்கள்.

13 கர்த்தாவே, எழுந்து பகைவரிடம் சென்று, அவர்கள் சரணடையச் செய்யும்.
    உமது வாளால் அத்தீயோரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
14 கர்த்தாவே, உயிருள்ளோர் வாழும் தேசத்திலிருந்து அத்தீயோரை
    உமது வல்லமையால் அப்புறப்படுத்தும்.
கர்த்தாவே, பலர் உம்மிடம் உதவிக்காக வருவார்கள். இவ்வாழ்க்கையில் அதிகம் பலனில்லை.
    அவர்களுக்கு அதிக உணவளியும்.
    வேண்டுவனவற்றை அவர்கள் பிள்ளைகளுக்குக் கொடும்.
    அவர்களின் பிள்ளைகளுக்கும் மிகுந்திருக்கும்படியாக அப்பிள்ளைகளுக்குத் திருப்தியாய் உணவளியும்.

15 நான் நீதிக்காக ஜெபிக்கிறேன்.
    கர்த்தாவே, உமது முகத்தைக் காண்பேன்.
    கர்த்தாவே, உம்மைப் பார்ப்பதால் முழுமையான திருப்திகொள்வேன்.

2 சாமுவேல் 11:2-26

சாயங்காலத்தில் அவன் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனையின் மேல் மாடியில் உலாவிக்கொண்டிருந்தான். அவன் மாடியிலிருந்தபோது குளித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணைப் பார்த்தான். அவள் மிகுந்த அழகியாயிருந்தாள். உடனே தாவீது தனது அதிகாரிகளை அழைத்து அப்பெண் யாரென விசாரித்தான். ஒரு அதிகாரி, “அப்பெண், எலியாமின் குமாரத்தியாகிய பத்சேபாள், அவள் ஏத்தியனாகிய உரியாவின் மனைவி” என்றான்.

தாவீது பத்சேபாளைத் தன்னிடம் அழைத்து வருவதற்காக ஆட்களை அனுப்பினான். அவள் தாவீதிடம் வந்தபோது தாவீது அவளோடு பாலின உறவுகொண்டான். அவள் தன் தீட்டுக்கழிய குளித்தப் பின்பு தன்னுடைய வீட்டிற்குச் சென்றாள். ஆனால் பத்சேபாள் கருவுற்றாள். அதனை தாவீதுக்குச் சொல்லியனுப்பி, “நான் கருவுற்றிருக்கிறேன்” எனத் தெரிவித்தாள்.

தாவீது தன் பாவத்தை மறைக்க முயலுவது

தாவீது யோவாபுக்கு, “ஏத்தியனாகிய உரியாவை என்னிடம் அனுப்பு” என்று சொல்லியனுப்பினான்.

எனவே யோவாப் உரியாவை தாவீதிடம் அனுப்பினான். உரியா தாவீதிடம் வந்தான். தாவீது உரியாவிடம், “யோவாப் நலமா, வீரர்கள் நலமா, யுத்தம் எப்படி நடக்கிறது?” என்று விசாரித்தான். பின்பு தாவீது உரியாவை நோக்கி, “நீ வீட்டிற்குப் போய் ஓய்வெடுத்துக்கொள்” என்றான்.

ராஜாவின் அரண்மனையிலிருந்து உரியா புறப்பட்டான். ராஜாவும் அவனுக்கு பரிசுக் கொடுத்து அனுப்பினான். ஆனால் உரியா தன் வீட்டிற்குப் போகவில்லை. வாசலுக்கு வெளியே ராஜாவின் பிற பணியாட்கள் செய்ததைப் போலவே அவனும் அங்குத் தூங்கினான். 10 காவலர்கள் தாவீதை நோக்கி, “உரியா வீட்டிற்குப் போகவில்லை” என்றனர்.

தாவீது உரியாவிடம், “நீ நீண்ட பயணம் செய்து வந்திருக்கிறாய் அல்லவா? ஏன் வீட்டிற்குப் போகவில்லை?” என்று கேட்டான்.

11 உரியா தாவீதை நோக்கி, “பரிசுத்தப் பெட்டியும், இஸ்ரவேல் யூதாவின் வீரர்களும் கூடாரங்களில் தங்கியுள்ளனர். எனது ஆண்டவனாகிய யோவாபும், என் ஆண்டவருடைய (தாவீதின்) அதிகாரிகளும் வெளியே முகாமிட்டுத் தங்கி இருக்கின்றனர். எனவே வீட்டிற்குச் சென்று உண்டு குடித்து மனைவியோடு உறவு கொள்வது எனக்கு முறையன்று” என்றான்.

12 தாவீது உரியாவிடம், “நீ இன்று இங்கே தங்கியிரு. நாளை உன்னைப் போருக்கு அனுப்புகிறேன்” என்றான்.

உரியா மறுநாள் காலைவரை எருசலேமில் தங்கியிருந்தான். 13 அப்போது தாவீது தன்னை வந்து பார்க்கும்படி உரியாவுக்குச் சொல்லியனுப்பினான். உரியா தாவீதுடன் உண்டு குடித்தான். தாவீது உரியாவைக் குடிபோதையில் மூழ்கும்படிச் செய்தான். அப்போதும் உரியா வீட்டிற்குப் போகவில்லை. பதிலாக ராஜாவின் பணியாட்களோடு வீட்டிற்கு வெளியே உரியா தூங்கச் சென்றான்.

தாவீது உரியாவின் மரணத்திற்கு திட்டமிடுகிறான்

14 மறுநாள், காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு கடிதம் எழுதினான். அதை உரியாவிடம் கொடுத்து அனுப்பினான். 15 கடிதத்தில் தாவீது, “உரியாவைக் கடும் போர் நடக்கும் யுத்தமுனையில் தனித்து நிறுத்து. போரில் அவன் கொல்லப்படட்டும்” என்றான்.

16 யோவாப் பலசாலிகளான அம்மோனியர் இருக்கும் இடத்தைக் கவனித்தான். உரியாவை அங்கு அனுப்பினான். 17 ரப்பா நகரத்தின் ஆட்கள் யோவாபை எதிர்த்து போரிட வந்தனர். அப்போது தாவீதின் ஆட்களில் சிலர் கொல்லப்பட்டனர். ஏத்தியனாகிய உரியாவும் அவர்களில் ஒருவன்.

18 யுத்தத்தில் நிகழ்ந்தவற்றைக் குறித்து யோவாப் ஒரு குறிப்பு எழுதி தாவீதுக்கு அனுப்பினான். 19 போரில் நடந்தவற்றை தாவீது ராஜாவுக்குச் சொல்லும்படி தூதுவர்களிடம் யோவாப் கூறினான். 20 “ராஜா கோபமடையக்கூடும், ‘யோவாபின் படை போரிடுவதற்கு நகரை மிகவும் நெருங்கியதேன்?’ என்று ராஜா கேட்கக் கூடும். அம்புகளை எய்யக்கூடிய ஆட்கள் நகர மதில்களில் அமர்ந்திருப்பார்கள் என்பது அவனுக்கு நிச்சயமாகத் தெரியும். 21 எருப்சேத்தின் குமாரனாகிய அபிமெலேக்கை ஒரு பெண் கொன்றாள் என்பதை அவன் நிச்சயமாக அறிவான். அது தேபேசில் நடந்தது. அப்பெண் நகர மதிலில் அமர்ந்திருந்து அரைக்கிற கல்லின் மேல்பாகத்தை அபிமெலேக்கின் மேல் எறிந்தாள். எனவே, ‘ஏன் யோவாப் மதிலுக்கு மிக அருகே சென்றான்?’ என்றும் கேட்கக் கூடும். தாவீது ராஜா இவ்வாறு கூறினால் அவனிடம் இச்செய்தியைக் கூறவேண்டும்: ‘உங்கள் அதிகாரிகளில் ஏத்தியனான உரியாவும் மரித்துவிட்டான்’” என்றான்.

22 செய்தியாளன் தாவீதிடம் சென்று யோவாப் கூறியவற்றையெல்லாம் சொன்னான். 23 அவன் தாவீதிடம், “அம்மோனியர் களத்தில் எங்களை எதிர்த்தார்கள். நாங்கள் போரிட்டு அவர்களை நகரவாயில் வரைக்கும் துரத்தினோம். 24 அப்போது நகரமதிலிலிருந்த ஆட்கள் உங்கள் அதிகாரிகள் மேல் அம்புகளை எய்தார்கள். உமது சில அதிகாரிகள் அதில் மரித்தனர். அவர்களில் ஏத்தியனாகிய உரியாவும் மரித்தான்” என்றான்.

25 தாவீது அத்தூதுவனிடம், “யோவாபுக்கு இச்செய்தியைத் தெரிவி: ‘இதைக் குறித்து மிகவும் கலங்காதே, ஒரு வாள் ஒருவனை மட்டுமல்ல, அடுத்தவனையும் கொல்லக் கூடும். ரப்பாவின் மீது தாக்குதலைப் பலப்படுத்து. நீ வெற்றி பெறுவாய்’ இந்த வார்த்தைகளால் யோவாபுக்கு உற்சாகமூட்டு” என்று சொல்லியனுப்பினான்.

தாவீது பத்சேபாளை மணந்துகொள்கிறான்

26 தனது கணவன் உரியா மரித்ததை பத்சேபாள் கேள்விப்பட்டாள். அவளது கணவனுக்காக அழுதாள்,

வெளி 3:1-6

சர்தை சபைக்கு இயேசுவின் நிருபம்

“சர்தை சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது: ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் கொண்டிருக்கிறவர் இவைகளை உனக்கு கூறுகிறார்.

“நீங்கள் செய்பவற்றை நான் அறிவேன். நீங்கள் உயிர் வாழ்வதாக மக்கள் கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் நீங்கள் செத்துப் போனவர்களே. எழும்புங்கள். செத்துப்போகிற நிலையில் உள்ளவற்றை வலிமையுள்ளதாய் ஆக்குங்கள். முழுமையாய் சாகும் முன் பலப்படுத்திக்கொள்ளுங்கள். தேவனுக்கு நீ செய்ததெல்லாம் போதுமானதாக இல்லை என நான் காண்கின்றேன். எனவே நீங்கள் பெற்றவற்றையும், கேள்விப்பட்டவற்றையும் மறவாதீர்கள். அவற்றுக்கு அடிபணியுங்கள். உங்கள் மனதையும், வாழ்வையும் மாற்றுங்கள். நீங்கள் விழித்தெழுங்கள். அல்லது நான் திருடனைப்போல வந்து உங்களை ஆச்சரியப்படுத்துவேன். எப்பொழுது நான் வருவேன் என உங்களுக்குத் தெரியாது.

“ஆனால் உங்கள் குழுவில் சிலர் பரிசுத்தமானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் என்னோடு நடப்பார்கள். அவர்கள் வெள்ளை ஆடைகளை அணிவார்கள். ஏனென்றால் அதற்கு அவர்கள் தகுதியானவர்கள். வெற்றிபெறுகிற ஒவ்வொருவரும் இவர்களைப்போல் வெண்ணிற ஆடைகளை அணிந்துகொள்வார்கள். நான் அவர்களது பெயர்களை ஜீவப் புத்தகத்திலிருந்து எடுத்துப்போட மாட்டேன். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள். இதனை நான் என் பிதாவின் முன்பும், தூதர்களுக்கு முன்பும் சொல்வேன்.” சபைகளுக்கு ஆவியானவர் சொல்வதை கேட்கிற யாவரும் கவனிக்க வேண்டும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center