Revised Common Lectionary (Complementary)
15 கர்த்தாவே! நீர் என்னை அறிவீர்.
என்னை நினைவில் வைத்துள்ளீர்.
என்னை கவனித்துக்கொள்வீர்.
ஜனங்கள் என்னைப் புண்படுத்துகிறார்கள்.
அந்த ஜனங்களுக்கு ஏற்ற தண்டனையை அவர்களுக்கு கொடும்.
நீர் ஜனங்களோடு பொறுமையாக இருக்கிறீர்.
நீர் அவர்களுடன் பொறுமையாக இருப்பதால்
என்னை அழித்து விடாதேயும்.
என்னை நினைத்துப் பாரும்.
கர்த்தாவே நான் உமக்காக அடைந்த வலியை எண்ணிப் பாரும்.
16 உமது செய்தி எனக்கு வந்தது.
நான் உமது வார்த்தைகளை உண்டேன்.
உமது செய்தி என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கிற்று.
நான் உமது நாமத்தால் அழைக்கப்படுவதில் மகிழ்ந்தேன்.
உமது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர்.
17 நான் சிரிப்பும் வேடிக்கையும் செய்கிற கூட்டத்தில்
ஒருபோதும் இருந்ததில்லை.
உமது நோக்கம் என்மேல் இருப்பதால் நான் எப்போதும் தனியாகவே இருக்கிறேன்.
என்னைச் சுற்றிலும் தீமை நடக்கும்போது, நீர் என்னைக் கோபத்தால் நிரப்பினீர்.
18 நான் ஏன் இன்னும் காயப்படுத்தப்படுகிறேன்?
என்று எனக்குப் புரியவில்லை.
எனது காயங்கள் ஏன் இன்னும் குணமாகவில்லை?
அல்லது குணப்படுத்த முடியவில்லை?
என்பது எனக்குப் புரியவில்லை.
கர்த்தாவே! நீர் மாறியிருக்கிறீர் என நினைக்கிறேன்.
நீர், ஊற்று வறண்டு போனதுபோல இருக்கிறீர்.
நீர், ஊற்று ஒன்று நின்றுவிட்டது போல இருக்கிறீர்.
19 பிறகு, கர்த்தர், “எரேமியா, நீ மாறி என்னிடம் திரும்பிவந்தால், பிறகு நான் உன்னைத் தண்டிக்கமாட்டேன்.
நீ மாறி என்னிடம் திரும்பிவந்தால்,
நீ எனக்கு சேவை செய்யலாம்.
நீ பயனற்ற வார்த்தைகளைப் பேசாமல்,
முக்கியமானவற்றைப்பற்றி பேசினால் பின் நீ எனக்காகப் பேசமுடியும்.
யூதாவின் ஜனங்கள் மாறி உன்னிடம் திரும்பி வருவார்கள்.
ஆனால் நீ மாறி அவர்களைப்போல் இருக்க வேண்டாம்.
20 நான் உன்னைப் பலமுள்ளவனாகச் செய்வேன்.
அந்த ஜனங்கள் உன்னை பலமுடையவர்களாக,
வெண்கலத்தாலான சுவரைப்போன்று எண்ணுவார்கள்.
யூதாவின் ஜனங்கள் உனக்கு எதிராகப் போரிடுவார்கள்.
ஆனால் அவர்கள் உன்னைத் தோற்கடிக்கமாட்டார்கள்.
ஏனென்றால், நான் உன்னோடு இருக்கிறேன்.
நான் உனக்கு உதவுவேன்.
நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
21 “நான் உன்னை அத்தீய ஜனங்களிடமிருந்து காப்பாற்றுவேன்.
அந்த ஜனங்கள் உன்னை பயப்படுத்துவார்கள்.
ஆனால் நான் உன்னை அவர்களிடமிருந்து காப்பேன்.”
தாவீதின் பாடல்.
26 கர்த்தாவே, என்னை நியாயந்தீரும்.
நான் தூய வாழ்க்கை வாழ்ந்ததை நிரூபியும்.
கர்த்தரை நம்புவதை என்றும் நான் நிறுத்தியதில்லை.
2 கர்த்தாவே, என்னை சோதித்துப்பாரும்.
என் இருதயத்தையும், மனதையும் கவனமாகப் பாரும்.
3 நான் எப்போதும் உமது மென்மையான அன்பைக் காண்கிறேன்.
உமது உண்மைகளால் நான் வாழ்கிறேன்.
4 நான் பொய்யரோடும் மோசடிக்காரரோடும் ஒருபோதும் சேர்ந்ததில்லை.
அவ்வகையான பயனற்ற ஜனங்களோடு ஒருபோதும் சேர்ந்ததில்லை.
5 அத்தீய கூட்டத்தாரை நான் வெறுக்கிறேன்.
தீங்கு செய்யும் அக்கூட்டத்தாரோடு நான் சேரமாட்டேன்.
6 கர்த்தாவே, நான் தூய்மையானவன் என்று காண்பிக்க
என் கைகளைக் கழுவிக்கொண்டு உமது பலிபீடத்திற்கு வருகிறேன்.
7 கர்த்தாவே, உம்மைத் துதித்துப் பாடல்களைப் பாடுகிறேன்.
நீர் செய்த அற்புதமான காரியங்களைப்பற்றிப் பாடுகிறேன்.
8 கர்த்தாவே, உமது ஆலயத்தை நேசிக்கிறேன்.
மகிமைபொருந்திய உமது கூடாரத்தை நேசிக்கிறேன்.
9 உங்கள் அன்பு உண்மையானதாக இருக்க வேண்டும். பாவத்துக்குரியவற்றை வெறுத்து ஒதுக்குங்கள். நல்லவற்றை மட்டும் செய்யுங்கள். 10 சகோதர சகோதரிகளைப் போன்று ஒருவருக்கொருவர் இதமாக அன்பு செலுத்துங்கள். மரியாதை செய்வதில் ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளங்கள். 11 நீங்கள் கர்த்தருக்காக உழைக்க வேண்டிய காலத்தில் சோம்பேறியாக இராதீர்கள். அவருக்குச் சேவை செய்வதிலே ஆவிப் பூர்வமாக இருங்கள். 12 உங்களுக்கு விசுவாசம் இருப்பதால் மகிழ்ச்சியாய் இருங்கள். எப்பொழுதும் பிரார்த்தனை செய்யுங்கள். 13 தேவனுடைய மக்களுக்குத் தேவை ஏற்படும்போது உதவி செய்யுங்கள். அம்மக்களுக்கு உங்கள் வீடுகளில் அடைக்கலம் கொடுங்கள்.
14 உங்களுக்குத் தீமை செய்கிறவர்களுக்கும் நல்லதையே செய்யுங்கள். அவர்களுக்கு நல்லதைக் கூறுங்கள். அவர்களை சபிக்காதீர்கள். 15 மற்றவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கும்போது நீங்களும் அவர்களோடு மகிழ்ச்சியோடு இருங்கள். மற்றவர்கள் துக்கமாய் இருக்கும்போது நீங்கள் அவர்களோடு துக்கமாய் இருங்கள். 16 ஒருவரோடு ஒருவர் சமாதானமாக வாழுங்கள். எவ்வளவு ஞானம் எனக்கு உண்டு என்று மமதை கொள்ளாதீர்கள். மற்றவர்களுக்கு முக்கியமாய்த் தோன்றாதவர்களோடும் கூட நட்புடன் இருங்கள். சுய பெருமை பாராட்டாதீர்கள்.
17 யாரேனும் உங்களுக்குத் தீமை செய்தால் அவர்களுக்குத் தீமையையே திரும்பிச் செய்யாதீர்கள். எல்லாராலும் நல்லவை என்று எண்ணப்படுவதையே நீங்களும் எவ்வளவு செய்ய முடியும் என்று பாருங்கள். 18 முடிந்தளவு எல்லா மக்களோடும் சமாதானமாய் இருங்கள். 19 என் அன்பு நண்பர்களே, எவரேனும் உங்களுக்குத் தீமை செய்தால் அவர்களைத் தண்டிக்க முயலாதீர்கள். தேவன் தன் கோபத்தால் அவர்களைத் தண்டிக்கும் வரையில் பொறுத்திருங்கள்.
“நானே தண்டிக்கிறேன்.
நானே பதிலுக்குப் பதில் செய்வேன்”(A)
என்று கர்த்தர் கூறுகிறார் என்று எழுதப்பட்டுள்ளது.
20 “உங்கள் பகைவன் பசியாய் இருந்தால்
அவனுக்கு உணவைக் கொடுங்கள்.
அவன் தாகமாய் இருந்தால் அவன்
குடிக்க ஏதாவது கொடுங்கள்.
இதன் மூலம் அவனை வெட்கம்கொள்ளச் செய்யலாம்.”(B)
21 பாவத்திடம் தோல்வி அடைந்துவிடாதீர்கள். நன்மை செய்வதின் மூலம் தீமையை நீங்கள் தோற்கடித்து விடுங்கள்.
இயேசு தம் மரணத்தைக் குறித்துக் கூறுதல்
(மாற்கு 8:31–9:1; லூக்கா 9:22-27)
21 அப்பொழுதிலிருந்து இயேசு தம் சீஷர்களிடம் தாம் எருசலேம் செல்லவேண்டுமென சொல்லத் தொடங்கினார். மூத்த யூதத் தலைவர்களாலும், தலைமை ஆசாரியர்களாலும் நியாயப் பிரமாண போதகர்களாலும் தமக்குப் பல இன்னல்கள் வரப்போவதை இயேசு விளக்கினார். மேலும், தம் சீஷர்களிடம் தாம் கொல்லப்படவிருப்பதையும் இயேசு கூறினார். பின்னர், மூன்றாம் நாள் தாம் உயிர்த்தெழவிருப்பதையும் கூறினார்.
22 இயேசுவுடன் தனிமையில் பேசிய பேதுரு அவரை விமர்சிக்கத் தொடங்கினான். பேதுரு, “தேவன் உம்மை அவற்றிலிருந்து காப்பாற்றட்டும். ஆண்டவரே! அவை உமக்கு ஒருபோதும் நிகழக்கூடாது!” என்று கூறினான்.
23 இயேசு அதற்குப் பேதுருவிடம், “என்னை விட்டு விலகிச் செல், சாத்தானே! நீ எனக்கு உதவி செய்யவில்லை! தேவனின் செயல்களைக் குறித்து உனக்குக் கவலையில்லை. மக்கள் முக்கியமெனக் கருதுகின்றவைகளையே நீ பொருட்படுத்துகிறாய்” என்று கூறினார்.
24 பின்பு இயேசு தமது சீஷர்களிடம், “என்னைப் பின்தொடர விரும்பும் யாரும் தன் சுயவிருப்பங்களைத் துறக்க வேண்டும். தனக்கு ஏற்படும் துன்பங்களை ஏற்றுக்கொண்டு என்னைப் பின்தொடர வேண்டும். 25 தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவன் எவனும் அதை இழப்பான். எனக்காகத் தன் உயிரைக் கொடுக்கிறவன், தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வான். 26 தன் ஆத்துமாவை இழந்தவனுக்கு, இவ்வுலகம் முழுவதும் கிடைத்தாலும் ஒரு பயனும் இல்லை. என்ன விலை கொடுத்தாலும் இழந்த ஆத்துமாவை மீட்க இயலாது. 27 தமது தந்தையின் மகிமையுடனும் தேவதூதர்களுடனும் மீண்டும் தேவகுமாரன் வருவார். அப்பொழுது, ஒவ்வொருவருக்கும் அவர்கள் செய்த செயல்களுக்குத் தக்கபடி தேவ குமாரன் வெகுமதியளிப்பார். 28 நான் உண்மையைச் சொல்கிறேன். இங்குள்ள சிலர் தாங்கள் இறப்பதற்கு முன்பு மனித குமாரன் தன் இராஜ்யத்தின் ஆட்சியுடன் வருவதைக் காண்பார்கள்.” என்றார்.
2008 by World Bible Translation Center