Revised Common Lectionary (Complementary)
தாவீதின் ஒரு பாடல்.
138 தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன்.
எல்லா தெய்வங்களின் முன்பாகவும் நான் உமது பாடல்களைப் பாடுவேன்.
2 தேவனே, உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் குனிந்து வணங்குவேன்.
நான் உமது நாமத்தையும், உண்மை அன்பையும் நேர்மையையும் துதிப்பேன்.
உமது வார்த்தையின் வல்லமையால் நீர் புகழ்பெற்றவர். இப்போது நீர் அதை இன்னமும் மேன்மையாகச் செய்தீர்.
3 தேவனே, உதவிக்காக நான் உம்மைக் கூப்பிட்டேன்.
நீர் எனக்குப் பதில் தந்தீர்! நீர் எனக்குப் பெலன் அளித்தீர்.
4 கர்த்தாவே, நீர் சொல்கின்றவற்றைக் கேட்கும்போது
பூமியின் எல்லா ராஜாக்களும் உம்மைத் துதிப்பார்கள்.
5 அவர்கள் கர்த்தருடைய வழியைக் குறித்துப் பாடுவார்கள்.
ஏனெனில் கர்த்தருடைய மகிமை மிக மேன்மையானது.
6 தேவன் மிக முக்கியமானவர்.
ஆனால் அவர் தாழ்மையான ஜனங்களுக்காக கவலைப்படுகிறார்.
பெருமைக்காரர்கள் செய்வதை தேவன் அறிகிறார். ஆனால் அவர் அவர்களிடமிருந்து வெகுதூரம் விலகியிருக்கிறார்.
7 தேவனே, நான் தொல்லையில் சிக்குண்டால், என்னை உயிரோடு வாழவிடும்.
என் பகைவர்கள் என்னிடம் கோபமாயிருந்தால், அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
8 கர்த்தாவே, நீர் வாக்களித்தவற்றை எனக்குத் தாரும்.
கர்த்தாவே, உமது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
கர்த்தாவே, நீர் எங்களை உண்டாக்கினீர், எனவே எங்களை விட்டுவிடாதேயும்!
11 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 12 “மனுபுத்திரனே, தீரு ராஜாவைப்பற்றிய சோகப் பாடலை நீ பாடு. அவனிடம் சொல், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
“‘நீ உயர்ந்த (இலட்சிய) மனிதனாக இருந்தாய்.
நீ ஞானம் நிறைந்தவன்.
நீ முழுமையான அழகுள்ளவன்.
13 நீ ஏதேனில் இருந்தாய்.
அது தேவனுடைய தோட்டம்.
உன்னிடம் எல்லா விலையுயர்ந்த கற்களும் பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் ஆகியவற்றை வைத்திருந்தாய்.
இவை அனைத்தும் பொன்னில் வைக்கப்பட்டிருந்தன.
நீ படைக்கப்பட்ட நாளிலேயே இவ்வழகுகள் உனக்குக் கொடுக்கப்பட்டன.
தேவன் உன்னை பலமுள்ளதாகச் செய்தார்.
14 நீ தேர்ந்தெடுக்கப்பட்ட கேரூப்களில் ஒருவன் உனது
சிறகுகள் என் சிங்காசனத்தின்மேல் விரிந்தன.
நான் உன்னை தேவனுடைய பரிசுத்த மலையில் வைத்தேன்.
நீ அந்த இடத்திற்குப் பொறுப்பாளியாயிருந்தாய்.
நீ நெருப்பைப்போன்று ஒளிவீசும் நகைகளின் மத்தியில் நடந்தாய்.
15 நான் உன்னைப் படைக்கும்போது நீ நல்லவனாகவும் நேர்மையானவனாகவும் இருந்தாய்.
ஆனால் பிறகு கெட்டவனானாய்.
16 உனது வியாபாரம் உனக்குப் பெருஞ் செல்வத்தைத் தந்தது.
ஆனால் அவை உனக்குள் கொடூரத்தை வைத்தன. நீ பாவம் செய்தாய்.
எனவே நான் உன்னைச் சுத்தமற்ற ஒன்றாக நடத்தினேன்.
நான் உன்னைத் தேவனுடைய மலையில் இருந்து அப்பால் எறிந்தேன்.
நீ சிறப்புக்குரிய கேருபீன்களில் ஒருவன்.
உனது சிறகுகள் என் சிங்காசனத்தின்மேல் விரிந்தன.
ஆனால் நான் உன்னை நெருப்பைபோன்று ஒளிவீசும்
நகைகளைவிட்டு விலகச் செய்தேன்.
17 உனது அழகு உன்னைப் பெருமைகொள்ளச் செய்தது.
உனது மகிமை உன் ஞானத்தை அழித்தது.
எனவே உன்னைத் தரையில் எறிவேன்.
இப்பொழுது மற்ற ராஜாக்கள் உன்னை முறைத்துப் பார்க்கின்றனர்.
18 நீ பல பாவங்களைச் செய்தாய்.
நீ அநீதியான வியாபாரியாக இருந்தாய்.
இவ்வாறு நீ பரிசுத்தமான இடங்களை அசுத்தமாக்கினாய்.
எனவே உனக்குள்ளிருந்து நெருப்பை நான் கொண்டுவந்தேன்.
இது உன்னை எரித்தது!
நீ தரையில் எரிந்து சாம்பலானாய்.
இப்பொழுது ஒவ்வொருவரும் உன் அவமானத்தைப் பார்க்கமுடியும்.
19 “‘மற்ற நாடுகளில் உள்ள ஜனங்கள் அனைவரும் உனக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து திகைத்தார்கள்.
உனக்கு நடந்தது ஜனங்களை அஞ்சும்படிச் செய்யும்.
நீ முடிவடைந்தாய்!’”
பிரச்சனைகளைத் தீர்த்தல்
6 உங்களில் ஒருவனுக்கு இன்னொருவனுக்கு எதிராக ஏதேனும் பிரச்சனை உருவாகும்போது நீதிமன்றத்திலுள்ள நியாயாதிபதிகளிடம் நீங்கள் போவதென்ன? தேவனோடு சரியானவராக அந்த மனிதர்கள் இருப்பதில்லை. ஆகவே அந்த மனிதர்கள் உங்களுக்கு நீதி வழங்க நீங்கள் அனுமதிப்பதேன்? தேவனுடைய மனிதர்கள் அதனைத் தீர்மானிக்க நீங்கள் சம்மதிக்காதது ஏன்? 2 தேவனுடைய மனிதர்கள் உலகத்திற்கு நீதி வழங்குவர் என்பது கண்டிப்பாக உங்களுக்குத் தெரியும். நீங்கள் உலகத்திற்கு நீதி வழங்கக் கூடுமாயின் இத்தகைய சிறு பிரச்சனைகளையும் நியாயம் தீர்க்கமுடியும். 3 எதிர்காலத்தில் நீங்கள் தேவ தூதர்களையே நியாயம் தீர்ப்பீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, இந்த வாழ்க்கையின் காரியங்களை நாம் நியாயம் தீர்க்க முடியும். 4 எனவே நியாயம் தீர்க்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் உங்களிடையே இருக்குமானால், ஏன் அப்பிரச்சனைகளைச் சபையின் அங்கத்தினரல்லாத மனிதர்களிடம் எடுத்துச் செல்கிறீர்கள்? அந்த மனிதர்கள் சபையைப் பொறுத்த அளவில் பொறுப்பற்றவர்கள். 5 நீங்கள் வெட்கப்படும்படியாக இதனைக் கூறுகிறேன். நிச்சயமாய் உங்கள் மத்தியிலேயே இரு சகோதரர்களுக்கு இடையே உருவாகும் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கக் கூடிய ஞானமுள்ள சிலர் இருக்கிறார்கள். 6 ஆனால் இப்போதோ ஒரு சகோதரன் மற்றொரு சகோதரனுக்கு எதிராக நீதிமன்றத்துக்குப் போகிறான். இயேசுவை நம்பாதவர்களான மனிதர்கள் அவர்கள் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும்படியாக எதற்காக அனுமதிக்கிறீர்கள்?
7 உங்களிடையே வழக்குகள் இருக்கிறது என்னும் உண்மை தோல்வியின் ஒரு குறியீடு ஆகும். அதைவிட மற்றொருவன் செய்யும் தவறுகளையும் ஏமாற்றுவதையும் பொறுத்துக்கொள்வதுமே மேலானதாகும். 8 ஆனால் நீங்களே உங்களுக்குள் தவறிழைத்து ஏமாற்றுகிறீர்கள். கிறிஸ்துவுக்குள் உங்கள் சொந்த சகோதரர்களுக்கே இதைச் செய்கிறீர்கள்.
9-10 தவறிழைக்கும் மக்களுக்கு தேவனுடைய இராஜ்யத்தில் பங்கு இல்லை என்பது உங்களுக்கு நிச்சயமாய்த் தெரியும். ஏமாற்றப்படாதீர்கள். பாலுறவில் பாவம் செய்யும் மக்களும், உருவங்களை வழிபடும் மக்களும், பிற பெண்களை நாடும் மனிதர்களும் மற்ற மனிதர்கள் தம்மை பாலுறவுக்காப் பயன்படுத்த அனுமதிக்கும் மனிதர்களும், பிற மனிதர்களோடு பாலுறவு கொள்ளும் மனிதர்களும், களவு செய்வோரும், தன்னலம் உடையோரும், குடிப்பழக்கம் உள்ளவர்களும், தீயவற்றை பிறருக்குச் சொல்லும் மனிதர்களும், ஏமாற்றுவோர்களுமாகிய மனிதர்களும் தேவனுடைய இராஜ்யத்தை அடையமாட்டார்கள். 11 முன்னர் உங்களில் சிலரும் அவ்வாறு வாழ்ந்தீர்கள். ஆனால் நீங்கள் தூய்மையாய்க் கழுவப்பட்டீர்கள். நீங்கள் பரிசுத்தமாக்கப்பட்டீர்கள். கர்த்தரின் பெயரால் தேவனோடு சரியானவர்களாக நீங்கள் உருவாக்கப்பட்டீர்கள்.
2008 by World Bible Translation Center