Revised Common Lectionary (Complementary)
இசைக்கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்கு ஒரு துதிப் பாடல்.
67 தேவனே, என்னிடம் இரக்கம் காட்டி என்னை ஆசீர்வதியும்.
தயவாய் எங்களை ஏற்றுக்கொள்ளும்!
2 தேவனே, பூமியிலுள்ள ஒவ்வொருவனும் உம்மைக் குறித்துத் தெரிந்துக்கொள்கிறான் என நம்புகிறேன்.
நீர் எவ்வாறு ஜனங்களை மீட்கிறீரென்று ஒவ்வொரு தேசமும் பார்க்கட்டும்.
3 தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிக்கட்டும்!
எல்லா ஜனங்களும் உம்மைத் துதிக்கட்டும்.
4 எல்லா தேசங்களும் களிக்கூர்ந்து மகிழட்டும்!
ஏனெனில் நீர் ஜனங்களைத் தகுதியாக நியாயந்தீர்க்கிறீர்.
நீர் ஒவ்வொரு தேசத்தையும் அரசாளுகிறீர்.
5 தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிக்கட்டும்.
எல்லா ஜனங்களும் உம்மைத் துதிக்கட்டும்.
6 தேவனே, எங்கள் தேவனே, எங்களை ஆசீர்வதியும்.
எங்கள் தேசம் நல்ல அறுவடையை எங்களுக்குக் கொடுக்கட்டும்.
7 தேவன் நம்மை ஆசீர்வதிக்கட்டும்.
பூமியிலுள்ள எல்லா மனிதரும் தேவனுக்குப் பயந்து அவரை மதிக்கட்டும்.
கர்த்தர் தாம் ஒருவரே தேவன் என்று நிரூபிக்கிறார்
20 “மற்ற நாடுகளில் இருந்து நீங்கள் தப்பித்திருக்கிறீர்கள். எனவே அனைவரும் ஒன்று சேர்ந்து என் முன்பு வாருங்கள். (இந்த ஜனங்கள் பொய்த் தெய்வங்களின் சிலைகளைத் தூக்கி வந்தனர். இந்த ஜனங்கள் அந்தப் பயனற்ற தெய்வங்களிடம் ஜெபம் செய்கின்றனர். ஆனால் அந்த ஜனங்களுக்குத் தாங்கள் என்ன செய்கிறோம் என்பது தெரியவில்லை. 21 என்னிடம் வருமாறு அந்த ஜனங்களிடம் கூறுங்கள். அவர்கள் இதைப்பற்றி கூடிப்பேசட்டும்).
“நீண்ட காலத்திற்கு முன்பு நடந்த இவற்றைப்பற்றி உன்னிடம் யார் கூறியது? மிக நீண்ட காலத்திற்கு முன்னரே நான் இவற்றைத் தொடர்ந்து கூறிவருகிறேன். கர்த்தராகிய நானே, இவற்றையெல்லாம் சொன்னவர். நான் ஒருவரே தேவன். என்னைப்போன்று வேறே தேவன் உண்டா? என்னைப்போன்று வேறே மீட்பரும், நீதியுள்ள தேவனும் உண்டோ? இல்லை! வேறு தேவன் இல்லை. 22 வெகு தொலைவில் வாழுகின்ற ஜனங்களே, நீங்கள் பொய்த் தெய்வங்களைப் பின்பற்றுவதை நிறுத்துங்கள். என்னைப் பின்பற்றுவீர்களானால் காப்பாற்றப்படுவீர்கள். நானே தேவன்! நான் ஒருவரே தேவன்.
23 “எனது சொந்த வல்லமையால் நான் ஒரு வாக்குறுதி செய்கிறேன். நான் எதையாவது செய்வதாக வாக்களித்தால், அது உண்மையாக இருக்கும். நான் ஏதாவது நடக்கக் கட்டளையிட்டால், அது நடக்கும். ஒவ்வொருவரும் எனக்கு (தேவன்) முன்பு அடிபணிவதாக வாக்களிக்க வேண்டும். ஒவ்வொருவரும் என்னைப் பின்பற்றுவதாக வாக்களிக்க வேண்டும். 24 ‘நன்மையும் வல்லமையும் கர்த்தரிடமிருந்து மட்டும்தான் வரும்’ என்று ஜனங்கள் கூறுவார்கள்.”
சில ஜனங்கள் கர்த்தர்மேல் கோபமாயிருக்கிறார்கள். ஆனால் கர்த்தருடைய சாட்சிகள் வந்து அவருடைய செயல்களைப்பற்றிக் கூறுவார்கள். அப்போது கோபமாயிருந்த ஜனங்கள் அவமானமடைவார்கள். 25 நன்மையானதைச் செய்கிற இஸ்ரவேல் ஜனங்களுக்கு கர்த்தர் உதவிசெய்வார், அவர்கள் தங்கள் தேவனைப்பற்றி பெரும்மிதம்கொள்வார்கள்.
இறுதி வாதைகள்
15 பரலோகத்தில் நான் இன்னொரு அற்புதத்தைப் பார்த்தேன். அது பெரிதும் ஆச்சரியமுமானது. ஏழு தேவ தூதர்கள் ஏழு துன்பங்களைக் கொண்டு வந்தார்கள். இவை தான் இறுதியான துன்பங்கள். ஏனென்றால் இதற்குப் பிறகு தேவனுடைய கோபம் முடிந்துவிடுகிறது.
2 நெருப்பு கலந்த கண்ணாடிக் கடல் போன்ற ஒன்றைக் கண்டேன். மிருகத்தையும், அதன் உருவத்தையும் அதன் எண்ணையும் வென்ற மக்கள் அனைவரும் கடலருகே நின்றுகொண்டிருந்தனர். அவர்களிடம் தேவன் கொடுத்த இசைக் கருவிகள் இருந்தன. 3 அவர்கள் தேவனுடைய ஊழியராகிய மோசேயின் பாடலையும், ஆட்டுக்குட்டியானவரின் பாடலையும் பாடினர்:
“சர்வ வல்லமையுள்ள தேவனே!
நீர் செய்தவை எல்லாம் பெரியவை,
அற்புதமானவை. நாடுகளின் ராஜாவே!
உமது வழிகளெல்லாம் நீதியும் உண்மையுமானவை.
4 கர்த்தாவே! மக்கள் அனைவரும் உமக்கு அஞ்சுவார்கள்.
எல்லாரும் உம் பெயரைப் போற்றுவார்கள்.
நீர் ஒருவரே பரிசுத்தமானவர்
எல்லா மக்களும் உம் முன் வந்து உம்மை வழிபடுவார்கள்.
ஏனெனில் நீர் நீதியானவற்றையே செய்கிறீர் என்பது தெளிவு.”
2008 by World Bible Translation Center