Revised Common Lectionary (Complementary)
இசைத் தலைவனுக்கு கர்த்தருடைய ஊழியனாகிய தாவீது எழுதிய பாடல். சவுலிடமிருந்தும் பிற பகைவர்களிடமிருந்தும் கர்த்தர் அவனைத் தப்புவித்தப்போது இப்பாடலை எழுதினான்.
18 “எனது பெலனாகிய கர்த்தாவே,
நான் உம்மை நேசிக்கிறேன்!”
2 கர்த்தர் என் பாறையாகவும், கோட்டையாகவும், எனக்குப் பாதுகாப்பான இடமாகவும் இருக்கிறார்.
பாதுகாப்பிற்காக ஓடும் பாறையாக என் தேவன் இருக்கிறார்.
தேவன் எனக்குக் கேடகம். அவரது வல்லமை என்னைக் காப்பாற்றும்.
உயர்ந்த மலைகளில் மறைவிடமாக கர்த்தர் எனக்கு விளங்குகிறார்.
3 எனது விரோதிகள் என்னை காயப்படுத்த முயன்றனர்.
ஆனால் நான் கர்த்தருடைய உதவியை நாடினேன், நான் என் பகைவரிடமிருந்து காப்பாற்றப்பட்டேன்.
4 என் பகைவர்கள் என்னைக் கொல்ல முயன்றுகொண்டிருந்தார்கள்!
மரணத்தின் கயிறுகள் என்னைச் சூழ்ந்திருந்தன.
மரணத்தின் இடங்களுக்கு என்னைக் கொண்டு செல்லும் பெருவெள்ளத்தில் நான் அகப்பட்டேன்.
5 கல்லறையின் கயிறுகள் என்னைச் சுற்றிலுமிருந்தன.
மரணக் கண்ணிகள் என் முன் கிடந்தன.
6 நெருக்கத்தில் கர்த்தருடைய உதவியை நாடினேன்.
ஆம், என் தேவனை நான் கூப்பிட்டேன்.
தேவன் அவரது ஆலயத்தில் இருந்தார்.
என் குரலைக் கேட்டார். என் அபயக் குரல் அவர் காதில் விழுந்தது.
7 பூமி அதிர்ந்து நடுங்கிற்று. விண்ணின் அஸ்திபாரங்கள் அதிர்ந்தன.
ஏனெனில் கர்த்தர் கோபமாயிருந்தார்!
8 தேவனுடைய மூக்கில் புகை கிளம்பிற்று.
தேவனுடைய வாயில் நெருப்புக்கொழுந்துகள் தோன்றின.
அவரிடமிருந்து எரியும் ஜூவாலைகள் பறந்தன.
9 கர்த்தர் வானத்தைக் கிழித்துக் கீழிறங்கினார்!
திரண்ட காரிருளின் மேல் நின்றார்!
10 கர்த்தர் காற்றின் மேல் எழுந்து
பறக்கும் கேருபீன்கள் மேலேறிப் பறந்துக்கொண்டிருந்தார்.
11 அவரைச் சுற்றி கூடாரம்போல் சூழ்ந்திருந்த கருமேகங்களுக்குள் கர்த்தர் மறைந்திருந்தார்.
இடி மேகங்களினுள் அவர் ஒளிந்திருந்தார்.
12 அப்போது தேவனுடைய பிரகாசிக்கும் ஒளி மேகங்களைக் கிழித்து வெளிவந்தது.
புயலும் மின்னலும் தோன்றின.
13 கர்த்தர் வானத்திலிருந்து இடி இடித்தார்.
உன்னதமான தேவன் அவரது குரலைக் கேட்கச் செய்தார். கல்மழையும், மின்னல் ஒளியும் தோன்றின.
14 கர்த்தர் அம்புகளைச்[a] செலுத்திப் பகைவரைச் சிதறடித்தார்.
கர்த்தர் மின்னலை அனுப்பினார் ஜனங்கள் குழப்பத்தில் சிதறடிக்கப்பட்டனர்.
15 கர்த்தாவே, நீர் வல்லமையாகப் பேசினீர்,
உமது வாயிலிருந்து வல்லமையுள்ள காற்று வீசிற்று, தண்ணீரானது பின்னே தள்ளப்பட்டது.
கடலின் அடிப்பகுதியைப் பார்க்க முடிந்தது.
பூமியின் அஸ்திபாரங்கள் எங்கள் கண்களுக்குப் புலப்பட்டன.
16 கர்த்தர் மேலிருந்து கீழிறங்கி என்னைக் காப்பாற்றினார்.
கர்த்தர் என்னைப் பிடித்து ஆழமான தண்ணீரிலிருந்து வெளியே எடுத்தார்.
17 எனது பகைவர்கள் என்னிலும் பலவான்கள்.
அவர்கள் என்னைப் பகைத்தார்கள்.
என்னைக் காட்டிலும் என் பகைவர்கள் பலசாலிகள்.
எனவே தேவன் என்னைக் காப்பாற்றினார்.
18 நான் தொல்லையில் சிக்குண்டபோது என் பகைவர்கள் என்னைத் தாக்கினார்கள்.
ஆனால் கர்த்தரோ எனக்கு ஆதரவளித்தார்.
19 கர்த்தர் என்னை நேசிக்கிறார், எனவே என்னைக் காப்பாற்றினார்.
என்னைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
24 தேவன் செய்த காரியங்களுக்காக அவரைத் துதிக்க வேண்டுமென நினைவுகூருங்கள்.
தேவனைத் துதிக்கும் பல பாடல்களை ஜனங்கள் எழுதியிருக்கிறார்கள்.
25 தேவன் செய்தவற்றை ஒவ்வொருவனும் காண முடியும்.
தூரத்து நாடுகளின் ஜனங்களும் அவற்றைப் பார்க்க இயலும்.
26 ஆம், தேவன் மேன்னைமயானவர்.
ஆனால் அவரது மேன்மையை நாம் புரிந்து கொள்ள முடியாது, எத்தனை காலமாக தேவன் வாழ்ந்திருக்கிறார் என்பதையும் நாம் அறியமுடியாது.
27 “தேவன் பூமியிலிருந்து தண்ணீரை, மேலே எடுத்து,
அதைப் பனியாகவும் மழையாகவும் மாற்றுகிறார்.
28 ஆகையால் மேகங்கள் தண்ணீரைப் பொழிகின்றன.
மழை பலர் மீது பெய்கிறது.
29 தேவன் மேகங்களை எவ்வாறு பரப்புகிறார் என்பதையும்
வானத்தில் இடி முழக்கம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதையும் ஒருவனும் புரிந்து கொள்ள முடியாது.
30 பாரும்! தேவன் பூமியின் மீது மின்னலைப் பரப்பி,
சமுத்திரங்களின் ஆழமான பகுதிகளை மூடினார்.
31 தேசங்களை அடக்கியாள்வதற்கும்
அங்கு மிகுதியான உணவுப் பொருட்களைக் கொடுப்பதற்கும், தேவன் அவற்றைப் பயன்படுத்துகிறார்.
32 தேவன் அவரது கைகளால் மின்னலைப் பிடிக்கிறார்,
அவருக்கு விருப்பமான இடங்களில் தாக்குமாறு அதற்குக் கட்டளையிடுகிறார்.
33 புயல் வந்துகொண்டிருப்பதை இடி எச்சரிக்கிறது.
அது வந்துகொண்டிருப்பதை ஆடு, மாடுகள் கூட அறிகின்றன” என்றான்.
14 “யோபுவே, ஒரு நிமிடம் நின்று கவனித்துக்கேள்.
தேவன் செய்கிற அற்புதமான காரியங்களைக் குறித்துச் சற்று நின்று எண்ணிப்பார்.
15 யோபுவே, தேவன் எவ்வாறு மேகங்களை அடக்கியாள்கிறார் என்பது உனக்குத் தெரியுமா?
அவரது மின்னலை எவ்வாறு தேவன் ஒளிவிட வைக்கிறார் என்பது உனக்குத் தெரியுமா?
16 மேகங்கள் வானில் எவ்வாறு தொங்குகின்றன என்பது உனக்குத் தெரியுமா?
தேவன் செய்த அற்புதமான காரியங்களுக்கு மேகங்கள் ஒரு எடுத்து காட்டு மட்டுமேயாகும்!
அவற்றைப்பற்றிய யாவும் தேவனுக்குத் தெரியும்.
17 ஆனால் யோபுவே, உனக்கு இக்காரியங்கள் தெரியாது.
நீ வியர்க்கிறாய் என்பதும், உன் ஆடைகள் உடம்பில் ஒட்டிக்கொள்கின்றன என்பதும், தெற்கிலிருந்து வெப்பமான காற்று வீசும்போது, எல்லாம் அசையாமல் இருக்கின்றன என்பது மட்டுமே உனக்குத் தெரியும்.
18 யோபுவே, வானைப் பரப்புவதற்கு நீ தேவனுக்கு உதவமுடியுமா?
தேய்த்த பளபளப்பான கண்ணாடியைப்போல அது ஒளிரும்படி செய்யக் கூடுமா?
19 “யோபுவே, நாங்கள் தேவனுக்கு என்ன சொல்லவேண்டும் என்று கூறு!
எங்களுக்குச் சரிவரத் தெரியாததால் சொல்வது குறித்து எண்ண இயலாமலிருக்கிறோம்.
20 நான் அவரிடம் பேசவேண்டும் என்று தேவனிடம் கூறமாட்டேன்.
அழிவு வேண்டும் என்று கேட்கமாட்டேன்.
21 ஒரு மனிதன் சூரியனை ஏறெடுத்துப் பார்க்க முடியாது.
காற்று மேகங்களை அடித்துச் சென்றபின் அது வானில் மிகப் பிரகாசமாக ஒளி தருகிறது.
22 தேவனும் அவ்வாறே இருக்கிறார்!
பரிசுத்த மலையிலிருந்து தேவனுடைய பொன்னான மகிமை பிரகாசிக்கிறது. தேவனைச் சுற்றிலும் பிரகாசமான ஒளி இருக்கிறது.
23 சர்வ வல்லமையுள்ள தேவன் மேன்மையானவர்!
நாம் தேவனைப் புரிந்துகொள்ள முடியாது!
தேவன் மிகுந்த வல்லமை உள்ளவர்.
ஆனால் அவர் நமக்கு நல்லவரும் நியாயமானவரும் ஆவார்.
தேவன் நம்மைத் துன்புறுத்த விரும்பமாட்டார்.
24 ஆகவேதான் ஜனங்கள் தேவனை மதிக்கிறார்கள்.
ஆனால் தங்களை ஞானிகளாக நினைக்கிற அகங்காரம் உள்ளவர்களை தேவன் மதிக்கமாட்டார்” என்றான்.
இயேசு ஒரு புயலை நிறுத்துதல்
(மாற்கு 4:35-41; லூக்கா 8:22-25)
23 இயேசு ஒரு படகில் ஏறினார். அவரது சீஷர்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். 24 படகு கரையை விட்டுப் புறப்பட்ட பின்னர், கடலில் மிகப் பலமான புயல் உருவானது. படகை அலைகள் சூழ்ந்தன. ஆனால், இயேசு அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தார். 25 அவரது சீஷர்கள் அவரிடம் சென்று அவரை எழுப்பினார்கள். அவர்கள், “ஆண்டவரே! எங்களைக் காப்பாற்றும். இல்லையேல் நாங்கள் மூழ்கிவிடுவோம்!” என்று சொன்னார்கள்.
26 இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள். உங்களுக்குப் போதிய விசுவாசம் இல்லை” என்று கூறினார். பின்பு, இயேசு எழுந்து நின்று காற்றுக்கும் அலைகளுக்கும் ஒரு கட்டளை பிறப்பித்தார். காற்று நின்றது. கடல் மிகவும் அமைதியானது.
27 படகிலிருந்தவர்கள் வியப்புற்று, “எப்படிப்பட்ட மனிதர் இவர்? காற்றும் கடலும் கூட இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!” என்று கூறி வியப்படைந்தனர்.
2008 by World Bible Translation Center