Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 18:1-19

இசைத் தலைவனுக்கு கர்த்தருடைய ஊழியனாகிய தாவீது எழுதிய பாடல். சவுலிடமிருந்தும் பிற பகைவர்களிடமிருந்தும் கர்த்தர் அவனைத் தப்புவித்தப்போது இப்பாடலை எழுதினான்.

18 “எனது பெலனாகிய கர்த்தாவே,
    நான் உம்மை நேசிக்கிறேன்!”

கர்த்தர் என் பாறையாகவும், கோட்டையாகவும், எனக்குப் பாதுகாப்பான இடமாகவும் இருக்கிறார்.
    பாதுகாப்பிற்காக ஓடும் பாறையாக என் தேவன் இருக்கிறார்.
தேவன் எனக்குக் கேடகம். அவரது வல்லமை என்னைக் காப்பாற்றும்.
    உயர்ந்த மலைகளில் மறைவிடமாக கர்த்தர் எனக்கு விளங்குகிறார்.
எனது விரோதிகள் என்னை காயப்படுத்த முயன்றனர்.
    ஆனால் நான் கர்த்தருடைய உதவியை நாடினேன், நான் என் பகைவரிடமிருந்து காப்பாற்றப்பட்டேன்.
என் பகைவர்கள் என்னைக் கொல்ல முயன்றுகொண்டிருந்தார்கள்!
மரணத்தின் கயிறுகள் என்னைச் சூழ்ந்திருந்தன.
    மரணத்தின் இடங்களுக்கு என்னைக் கொண்டு செல்லும் பெருவெள்ளத்தில் நான் அகப்பட்டேன்.
கல்லறையின் கயிறுகள் என்னைச் சுற்றிலுமிருந்தன.
    மரணக் கண்ணிகள் என் முன் கிடந்தன.
நெருக்கத்தில் கர்த்தருடைய உதவியை நாடினேன்.
    ஆம், என் தேவனை நான் கூப்பிட்டேன்.
தேவன் அவரது ஆலயத்தில் இருந்தார்.
    என் குரலைக் கேட்டார். என் அபயக் குரல் அவர் காதில் விழுந்தது.

பூமி அதிர்ந்து நடுங்கிற்று. விண்ணின் அஸ்திபாரங்கள் அதிர்ந்தன.
    ஏனெனில் கர்த்தர் கோபமாயிருந்தார்!
தேவனுடைய மூக்கில் புகை கிளம்பிற்று.
    தேவனுடைய வாயில் நெருப்புக்கொழுந்துகள் தோன்றின.
    அவரிடமிருந்து எரியும் ஜூவாலைகள் பறந்தன.
கர்த்தர் வானத்தைக் கிழித்துக் கீழிறங்கினார்!
    திரண்ட காரிருளின் மேல் நின்றார்!
10 கர்த்தர் காற்றின் மேல் எழுந்து
    பறக்கும் கேருபீன்கள் மேலேறிப் பறந்துக்கொண்டிருந்தார்.
11 அவரைச் சுற்றி கூடாரம்போல் சூழ்ந்திருந்த கருமேகங்களுக்குள் கர்த்தர் மறைந்திருந்தார்.
    இடி மேகங்களினுள் அவர் ஒளிந்திருந்தார்.
12 அப்போது தேவனுடைய பிரகாசிக்கும் ஒளி மேகங்களைக் கிழித்து வெளிவந்தது.
    புயலும் மின்னலும் தோன்றின.
13 கர்த்தர் வானத்திலிருந்து இடி இடித்தார்.
    உன்னதமான தேவன் அவரது குரலைக் கேட்கச் செய்தார். கல்மழையும், மின்னல் ஒளியும் தோன்றின.
14 கர்த்தர் அம்புகளைச்[a] செலுத்திப் பகைவரைச் சிதறடித்தார்.
    கர்த்தர் மின்னலை அனுப்பினார் ஜனங்கள் குழப்பத்தில் சிதறடிக்கப்பட்டனர்.
15 கர்த்தாவே, நீர் வல்லமையாகப் பேசினீர்,
    உமது வாயிலிருந்து வல்லமையுள்ள காற்று வீசிற்று, தண்ணீரானது பின்னே தள்ளப்பட்டது.
கடலின் அடிப்பகுதியைப் பார்க்க முடிந்தது.
    பூமியின் அஸ்திபாரங்கள் எங்கள் கண்களுக்குப் புலப்பட்டன.

16 கர்த்தர் மேலிருந்து கீழிறங்கி என்னைக் காப்பாற்றினார்.
    கர்த்தர் என்னைப் பிடித்து ஆழமான தண்ணீரிலிருந்து வெளியே எடுத்தார்.
17 எனது பகைவர்கள் என்னிலும் பலவான்கள்.
    அவர்கள் என்னைப் பகைத்தார்கள்.
என்னைக் காட்டிலும் என் பகைவர்கள் பலசாலிகள்.
    எனவே தேவன் என்னைக் காப்பாற்றினார்.
18 நான் தொல்லையில் சிக்குண்டபோது என் பகைவர்கள் என்னைத் தாக்கினார்கள்.
    ஆனால் கர்த்தரோ எனக்கு ஆதரவளித்தார்.
19 கர்த்தர் என்னை நேசிக்கிறார், எனவே என்னைக் காப்பாற்றினார்.
    என்னைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

ஆதியாகமம் 19:1-29

லோத்தின் பார்வையாளர்கள்

19 1-2 அன்று மாலையில் இரண்டு தேவ தூதர்கள் சோதோம் நகரத்திற்கு வந்தனர். நகர வாசலில் இருந்துகொண்டு லோத்து தேவதூதர்களைப் பார்த்தான். அவர்கள் நகரத்துக்குப் போகும் பயணிகள் என்று நினைத்தான். அவன் எழுந்து அவர்களிடம் சென்று தரையில் குனிந்து வணங்கினான். லோத்து அவர்களிடம், “ஐயா, எனது வீட்டிற்கு வாருங்கள். நான் உங்களுக்குச் சேவை செய்வேன். உங்கள் பாதங்களைக் கழுவிக்கொண்டு இரவில் அங்கே தங்கி, நாளை உங்கள் பயணத்தைத் தொடரலாம்” என்றான்.

அதற்கு தேவதூதர்கள், “இல்லை, நாங்கள் இரவில் வெட்டவெளியில் தங்குவோம்” என்றனர்.

ஆனால் லோத்து தொடர்ந்து தன் வீட்டிற்கு வருமாறு அவர்களை வற்புறுத்தினான். அவர்களும் ஒப்புக்கொண்டு அவனது வீட்டிற்குப் போனார்கள். அவர்களுக்காக அவன் ஆயத்தம் செய்த ரொட்டியை அவர்கள் சாப்பிட்டார்கள்.

அன்று மாலை தூங்குவதற்கு முன்னால், லோத்தின் வீட்டிற்கு நகரின் பலபாகங்களில் இருந்தும் இளைஞர், முதியோர்கள் எனப் பலரும் கூடிவந்து வீட்டைச் சுற்றிலும் நின்றுகொண்டு அவனை அழைத்தனர். அவர்கள், “இன்று இரவு உன் வீட்டிற்கு வந்த இருவரும் எங்கே? அவர்களை வெளியே அழைத்து வா, நாங்கள் அவர்களோடு பாலின உறவு கொள்ள வேண்டும்” என்றனர்.

லோத்து வெளியே வந்து வீட்டின் கதவை அடைத்துக்கொண்டான். லோத்து அவர்களிடம், “நண்பர்களே வேண்டாம். உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கெட்டச் செயல்களைச் செய்ய வேண்டாம். எனக்கு இரண்டு குமாரத்திகள் இருக்கிறார்கள். அவர்கள் இதுவரை எந்த ஆணையும் அறியாதவர்கள். நான் அவர்களை உங்களுக்குத் தருகிறேன். நீங்கள் அவர்களோடு என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். ஆனால் இந்த மனிதர்களை எதுவும் செய்து விடாதீர்கள். இவர்கள் என் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். நான் அவர்களைப் பாதுகாக்க வேண்டும்” என்றான்.

வீட்டைச் சுற்றி நின்றவர்கள், “எங்கள் வழியில் குறுக்கிடாதே” என்று சத்தமிட்டார்கள். பிறகு அவர்கள் தங்களுக்குள்ளேயே, “லோத்து நமது நகரத்திற்கு விருந்தாளியாக வந்தான். இப்போது நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று நமக்கே கூறுகிறான்” என்றனர். பிறகு அவர்கள் லோத்திடம், “நாங்கள் அந்த மனிதர்களை விட உனக்கே அதிகக் கொடுமையைச் செய்வோம்” என்று கூறி லோத்தை நெருங்கி வந்து, கதவை உடைப்பதற்கு முயன்றனர்.

10 ஆனால் லோத்தின் வீட்டிற்குள் இருந்த இருவரும் கதவைத் திறந்து லோத்தை வீட்டிற்குள் இழுத்து கதவை மூடிக்கொண்டனர். 11 பிறகு அவர்கள் கதவுக்கு வெளியே இருந்த இளைஞர்களும் முதியவர்களும் தங்கள் பார்வையை இழக்கும்படி செய்தனர். எனவே, அவர்களால் கதவு இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

சோதோமிலிருந்து தப்பித்தல்

12 அந்த இருவரும் லோத்திடம், “உன் குடும்பத்திலுள்ளவர்களில் யாராவது இந்த நகரத்தில் இருக்கிறார்களா? உனக்கு மருமகன்களோ, குமாரர்களோ, குமாரத்திகளோ அல்லது வேறு யாராவது இந்நகரத்தில் இருந்தால் அவர்களை உடனே இந்நகரத்தைவிட்டு விலகச் சொல்ல வேண்டும். 13 நாங்கள் இந்த நகரத்தை அழிக்கப் போகிறோம். இந்த நகரம் எவ்வளவு மோசமானது என்பதைப்பற்றி கர்த்தர் அறிந்தபடியால் இதனை அழிக்க எங்களை அனுப்பினார்” என்றார்கள்.

14 ஆகவே, லோத்து வெளியே போய், தனது குமாரத்திகளை மணந்துகொள்வதாயிருந்த மருமகன்களிடம், “வேகமாக இந்த நகரத்தை விட்டு வெளியேறுங்கள். விரைவில் கர்த்தர் இந்த நகரத்தை அழிக்கப் போகிறார்” என்றான். அவர்களோ அவன் வேடிக்கையாகப் பேசுவதாய் எண்ணினார்கள்.

15 அடுத்த நாள் காலையில் தேவதூதர்கள் லோத்தை வெளியேற விரைவுபடுத்தினார்கள். அவர்கள், “இந்நகரம் தண்டிக்கப்படும். எனவே, உனது மனைவியையும், இரண்டு பெண்களையும், இன்னும் உன்னோடு வருகிறவர்களையும், அழைத்துக்கொண்டு இந்த இடத்தைவிட்டு விலகிப் போ. அவ்வாறு செய்தால் நீ இந்நகரத்தோடு அழியாமல் இருப்பாய்” என்றனர்.

16 லோத்து குழப்பத்துடன் வேகமாகப் புறப்படாமல் இருந்தான், எனவே அந்த இரண்டு தேவதூதர்கள் அவன், அவனது மனைவி, குமாரத்திகள் ஆகியோரின் கையைப் பிடித்து அவர்களைப் பாதுகாப்பாக நகரத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்றனர். லோத்தோடும் அவனது குடும்பத்தோடும் கர்த்தர் மிகவும் கருணை உடையவராக இருந்தார். 17 எனவே, இரு தேவதூதர்களும் லோத்தையும் அவன் குடும்பத்தையும் பாதுகாப்பாக நகரத்திற்கு வெளியே கொண்டு வந்தபின்னர் தூதர்களில் ஒருவன், “இப்போது உங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிப் போங்கள். இந்நகரத்தைத் திரும்பிப் பார்க்காதீர்கள். இந்தச் சமவெளியில் எங்கும் நிற்காதீர்கள். மலைக்குப் போய்ச் சேரும்வரை ஓடுங்கள். இடையில் நின்றால் நகரத்தோடு நீங்களும் அழிந்துபோவீர்கள்” என்றான்.

18 ஆனால் லோத்து அந்த இருவரிடமும், “ஐயா, அவ்வளவு தூரத்துக்கு ஓடும்படி என்னைக் கட்டாயப்படுத்தாதீர்கள். 19 உங்கள் சேவகனாகிய என் மீது நீங்கள் மிகவும் இரக்கம் வைத்திருக்கிறீர்கள். என்னைக் காப்பாற்ற கருணையுடன் இருக்கிறீர்கள். ஆனால் மலைவரை என்னால் ஓட முடியாது. நான் மரித்துப்போய்விட வாய்ப்புண்டு. 20 அருகில் ஒரு சிறிய நகரம் உள்ளது. என்னை அந்நகரத்திற்கு ஓடிப்போகவிடுங்கள். அந்த அளவுக்கு என்னால் ஓடி என்னை பாதுகாத்துக்கொள்ள முடியும்” என்றான்.

21 அதற்கு தேவதூதன், “நல்லது, அவ்வாறு செய்ய உன்னை அனுமதிக்கிறேன். நான் அந்நகரத்தை அழிக்கமாட்டேன். 22 ஆனால் அங்கு வேகமாக ஓடு. அங்கு நீ பாதுகாப்பாகப் போய்ச் சேரும்வரை சோதோம் நகரத்தை அழிக்கமாட்டேன்” என்றான். (அந்நகரின் பெயர் சோவார். ஏனெனில் அது மிகச் சிறிய நகரம்)

சோதோமும் கொமோராவும் அழிக்கப்படுதல்

23 சூரியன் உதயமானபோது லோத்து சோவார் நகரத்திற்குள் நுழைந்தான். 24 அதே நேரத்தில் கர்த்தர் சோதோமையும் கோமோராவை அழிக்க ஆரம்பித்தார். கர்த்தர் வானத்திலிருந்து நெருப்பையும் கந்தகத்தையும் அந்நகரின் மேல் விழுமாறு செய்து, 25 அந்த நகரங்களையும் அதன் முழு சமவெளியையும், அங்கிருந்த செடிகளையும், ஜனங்களையும் அழித்துவிட்டார்.

26 அவர்கள் ஓடிப்போகும்போது லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்தாள். அதனால் அவள் உப்புத்தூண் ஆனாள்.

27 அதே நாள் அதிகாலையில், ஆபிரகாம் எழுந்து கர்த்தரை தொழுதுகொள்ளும் இடத்துக்குச் சென்றான். 28 அவன் அங்கிருந்து சோதோம், கொமோரா நகரங்கள் இருக்கும் திசையையும், அதன் சமவெளியையும் பார்த்தபோது அங்கிருந்து புகை எழும்புவதைக் கண்டான். அது பெரிய நெருப்பினால் ஏற்படும் புகைபோல் தோன்றியது.

29 தேவன் பள்ளத்தாக்கில் உள்ள நகரங்களை அழித்துவிட்டார். அப்போது அவர் ஆபிரகாமை நினைத்து, ஆபிரகாமின் உறவினனான லோத்தை அழிக்காமல் விட்டார். பள்ளத்தாக்கில் இருக்கும் நகரங்களுக்குள் லோத்து வாழ்ந்துகொண்டிருந்த அவ்விடங்களை அழிக்கும் முன்பு லோத்தை தேவன் வெளியேற்றினார்.

ரோமர் 9:14-29

14 எனவே இதைப்பற்றி நாம் என்ன சொல்ல முடியும்? தேவன் அநீதியாய் இருக்கிறார் என்று சொல்ல முடியுமா? முடியாதே. 15 “நான் யாரிடம் இரக்கம் காட்டவேண்டும் என்று விரும்புகிறேனோ அவனிடம் இரக்கம் காட்டுவேன்.”(A) என்று தேவன் மோசேயிடம் சொல்லி இருக்கிறார். 16 எனவே கருணை காட்டப்படத் தகுதியான ஒருவனை தேவன் தேர்ந்தெடுக்கிறார். அவரது தேர்ந்தெடுப்பு மனித விருப்பங்களுக்கும் முயற்சிகளுக்கும் அப்பாற்பட்டது. 17 “நான் உன்னை ராஜாவாக்கினேன். நீ எனக்காக இதைச் செய். எனது பலத்தை நான் உனக்குக் காட்டும்படியாக எனது பெயர் உலகமெங்கும் அறிவிக்கப்பட வேண்டும் என்று விரும்பினேன்”(B) என தேவன் பார்வோனிடம் கூறியதாக எழுதப்பட்டிருக்கிறது. 18 எனவே, தேவன் இரக்கத்துக்குரியவர்களாகத் தேர்ந்தெடுத்தவர்களிடம் இரக்கமாய் இருக்கிறார். கடினமாக இருக்கத் தேர்ந்தெடுத்தவர்களிடத்தில் கடினமாக இருக்கிறார்.

19 “நமது செயல்களையெல்லாம் தேவனால் கட்டுப்படுத்த முடியுமானால் பிறகு ஏன் அவர் நமது பாவங்களுக்காக நம்மைக் குற்றம் சாட்டுகிறார்” என்று உங்களில் ஒருவர் கேட்கலாம். 20 அதைக் கேட்காதீர்கள். நீங்கள் மானிடர். மானிடர்களுக்கு தேவனைக் கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லை. ஒரு மண்ஜாடி தன்னைச் செய்தவனிடம் கேள்வி எதுவும் கேட்கக்கூடாது. “என்னை ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று மண்ஜாடி கேட்கலாமா? 21 ஜாடியைச் செய்கிறவன் தன் விருப்பம் போல் எதை வேண்டுமானாலும் செய்யலாம். அதே களிமண்ணால் அவன் வேறு எந்தப் பொருளை வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஒரு பொருளை அவன் சிறப்பான பயனுக்காகவும், மற்றொன்றை அவன் அன்றாட பயனுக்காகவும் செய்யலாம்.

22 இதைப் போன்றுதான் தேவனும் செய்கின்றார். அவர் தமது கோபத்தை வெளிக்காட்டவும் தனது வல்லமையை வெளிப்படுத்தவும் விரும்பினார். தன் கோபத்தைத் தூண்டிய மக்களை அழிக்கத் தயாராய் இருந்த நிலையில் தேவன் அவர்களை மிகப் பொறுமையுடன் சகித்துக்கொண்டார். 23 தன் உயர்வும் சிறப்பும் வெளிப்படும் காலம் வரைக்கும் தேவன் பொறுமையோடு காத்திருந்தார். அவரது இரக்கத்தைப் பெறுவோரிடம் அவர் தனது மகிமையைக் கொடுத்தார். அவர் அதற்குரியவர்களாக அவர்களைத் தயார்படுத்தினார். 24 நாங்களே தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள். நாங்களே தேவனால் அழைக்கப்பட்டவர்கள். அவர் எங்களை யூதர்களிடமிருந்தும் யூதர் அல்லாதவர்களிடமிருந்தும் தேர்ந்தெடுத்தார்.

25 “எனக்கு உரியவர்கள் அல்ல என்னும் மக்களையும்
    ‘என் மக்களே’ என்றும்,
நேசிக்கப்படாது இருந்தவர்களையும்,
    ‘என்னால் நேசிக்கப்படும் மக்கள்’
    என்று நான் அழைப்பேன்.(C)

26 “நீங்கள் என்னுடைய மக்கள் அல்லவென்று
    அவர்களுக்குச் சொல்லப்பட்ட அதே இடத்திலே
    அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள்”(D)

என்று ஓசியாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது.

27 ஏசாயா இஸ்ரவேலைப்பற்றிக் கதறினார்.

“இஸ்ரவேல் மக்களின் எண்ணிக்கை கடற்கரையில் உள்ள மணலைப் போன்றிருக்கிறது.
    எனினும் சிலரே இரட்சிக்கப்படுவார்கள்.
28 ஆமாம். மண்ணில் வாழும் மக்களை தேவன் விரைவாக நியாயம்தீர்த்து முடிப்பார்.”(E)

29 “கர்த்தருக்கு அனைத்து வல்லமையும் உண்டு.
    எங்களுக்காக அவர் சிலரைக் காப்பாற்றினார்.
அவர் அதனைச் செய்திருக்காவிட்டால்
    இப்போது நாங்கள் சோதோமைப் போலாகி கொமோராவுக்கு ஒத்தவராய் இருப்போம்.”(F)

என்று ஏசாயா சொன்னார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center