Revised Common Lectionary (Complementary)
ஆசாபின் ஒரு மஸ்கீல்.
78 என் ஜனங்களே, என் போதனைகளுக்கு செவிக்கொடுங்கள்.
நான் கூறுவனவற்றைக் கவனித்துக் கேளுங்கள்.
2 நான் உங்களுக்கு இந்தக் கதையைக் கூறுவேன்.
நான் உங்களுக்கு இப்பழங்கதையைக் கூறுவேன்.
3 நாங்கள் இக்கதையைக் கேட்டோம், அதை நன்றாக அறிந்தோம்.
எங்கள் தந்தையர் இக்கதையைக் கூறினார்கள்.
4 நாங்கள் இக்கதையை மறக்கவும்மாட்டோம்.
இறுதி தலைமுறை வரைக்கும் எங்கள் ஜனங்கள் இக்கதையைச் சொல்லிக்கொண்டேயிருப்பார்கள்.
நாம் அனைவரும் கர்த்தரைத் துதிப்போம்.
அவர் செய்த அற்புதமான காரியங்களைக் குறித்துச் சொல்வோம்.
5 கர்த்தர் யாக்கோபோடு ஒரு உடன்படிக்கையைச் செய்தார்.
தேவன் இஸ்ரவேலருக்குச் சட்டத்தை (நீதிமுறையை) கொடுத்தார்.
நம் முற்பிதாக்களுக்கு தேவன் கட்டளைகளை அளித்தார்.
தமது பின் சந்ததியினருக்கு அந்தச் சட்டங்களைப் போதிக்குமாறு அவர் நம் முற்பிதாக்களுக்குக் கூறினார்.
6 புது குழந்தைகள் பிறப்பார்கள், அவர்கள் இனைஞராக வளருவார்கள்.
அவர்கள் அக்கதைகளைத் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்வார்கள்.
இவ்வகையில் கடைசி தலைமுறையினர் வரைக்கும் எல்லோரும் சட்டத்தை அறிந்திருப்பார்கள்.
7 எனவே அந்த ஜனங்கள் எல்லோரும் தேவனை நம்புவார்கள்.
தேவன் செய்தவற்றை அவர்கள் மறக்கமாட்டார்கள்.
அவர்கள் கவனமாக அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவார்கள்.
8 தங்கள் தேவனுடைய கட்டளைகளை ஜனங்கள் அவர்கள் குழந்தைகளுக்குச் சொல்வார்களானால், அந்தக் குழந்தைகள் அவர்களின் முற்பிதாக்களைப்போல் இருக்கமாட்டார்கள்.
அவர்கள் முற்பிதாக்கள் தேவனுக்கு எதிராகத் திரும்பினார்கள்.
அவர்கள் அவருக்குக் கீழ்ப்படிய மறுத்தார்கள்.
அந்த ஜனங்கள் பிடிவாதமாக இருந்தார்கள்.
அவர்கள் தேவ ஆவியானவருக்கு உண்மையாக இருக்கவில்லை.
17 ஆனால் ஜனங்கள் தேவனுக்கெதிராகத் தொடர்ந்து பாவம் செய்தனர்.
பாலைவனத்திலும் அவர்கள் மிக உன்னதமான தேவனுக்கெதிராகத் திரும்பினார்கள்.
18 பின் அந்த ஜனங்கள் தேவனை சோதிக்க விரும்பினார்கள்.
தங்கள் இச்சையை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர்கள் தேவனிடம் உணவைக் கேட்டார்கள்.
19 அவர்கள் தேவனைக்குறித்து முறையிட்டு,
“பாலைவனத்தில் தேவன் நமக்கு உணவைக் கொடுக்கக்கூடுமா?
20 தேவன் பாறையை அடித்தார், பெருவெள்ளம் வெளிப்பட்டது.
நிச்சயமாக, அவர் நமக்கு ரொட்டியும் (அப்பமும்) இறைச்சியும் கொடுக்க முடியும்” என்றார்கள்.
21 அந்த ஜனங்கள் கூறியவற்றை கர்த்தர் கேட்டார்.
யாக்கோபிடம் தேவன் கோபமடைந்தார்.
தேவன் இஸ்ரவேலிடம் கோபமடைந்தார்.
22 ஏனெனில் ஜனங்கள் அவரை நம்பவில்லை.
தேவன் அவர்களைக் காக்கக்கூடுமென அவர்கள் நம்பவில்லை.
23-24 ஆனால் தேவன் மேலேயுள்ள மேகங்களைத் திறந்தார்.
உணவுக்கான மன்னா அவர்கள் மீது பொழிந்தது.
வானில் கதவுகள் திறக்கப்பட்டு வானிலுள்ள கிடங்கிலிருந்து
தானியங்கள் கீழே கொட்டினாற்போல காட்சி தந்தது.
25 தேவதூதர்களின் உணவை ஜனங்கள் உண்டார்கள்.
அவர்கள் திருப்தியடையும்வரை தேவன் மிகுதியான உணவை அனுப்பினார்.
26-27 தேவன் கிழக்கிலிருந்து ஒரு பெருங்காற்று வீசுமாறு செய்தார்.
காடைகள் மழையைப்போன்று அவர்கள் மீது வீழ்ந்தன.
தேமானிலிருந்து தேவன் காற்றை வீசச்செய்தார்.
பறவைகள் மிகுதியாக இருந்தமையால் நீல வானம் இருண்டது.
28 பாளையத்தின் நடுவே
கூடாரங்களைச் சுற்றிலும் அப்பறவைகள் வீழ்ந்தன.
29 அவர்களுக்கு உண்பதற்கு மிகுதியான உணவு இருந்தது.
ஆனால் தங்களின் பசியால் தாங்களே பாவம் செய்யும்படி தங்களை அவர்கள் ஆட்படுத்திக்கொண்டார்கள்.
முதல் அறுவடை
26 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீங்கள் விரைவில் நுழையப் போகிறீர்கள். நீங்கள் அந்த நிலத்தில் குடிகொண்டு சுதந்திரமாய் வாழப் போகிறீர்கள். 2 கர்த்தர் உங்களுக்கு வழங்கிய நிலத்தில் விளைந்தவற்றை நீங்கள் அறுவடை செய்யும்போது, உங்களின் விளைச்சலின் முதல் பலனை கூடைகளில் எடுத்து வைத்துவிட வேண்டும். பின் நீங்கள் அறுவடை செய்ததின் முதல் பங்கை எடுத்துக்கொண்டு உங்கள் தேவனாகிய கர்த்தர் சிறப்பாகத் தேர்ந்தெடுத்த அவரது ஆலயத்திற்கு கொண்டுசென்று, 3 அங்கே ஆலய சேவையில் இருக்கின்ற ஆசாரியரிடம்: ‘கர்த்தர் நமது முற்பிதாக்களுக்கு ஒரு தேசத்தைக் கொடுப்பேன் என்று ஆணையிட்டார். இன்று தேவனாகிய கர்த்தரிடத்தில், நான் அந்தத் தேசத்திற்கு வந்து விட்டேன் என்று அறிக்கையிடுகிறேன்’ என்று கூறு.
4 “பின் அந்த ஆசாரியன் உன்னிடமிருந்து அந்தக் கூடையை எடுத்து கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்பு வைப்பான். 5 பின் அவ்விடத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் முன்பு நீங்கள்: ‘அலைந்து திரிந்த அரேமியரான எனது முற்பிதாக்கள் எகிப்துக்குச் சென்று அங்கு தங்கினார்கள். செல்லும்போது கொஞ்சம் ஜனங்களே அவன் குடும்பத்தினராய் இருந்தனர். ஆனால் எகிப்தில் அவர்கள் பெரிய ஜனமாக பெருகினார்கள். வலிமை வாய்ந்த ஜனமாக அதிக ஜனங்களை கொண்டவர்களாக இருந்தனர். 6 எகிப்தியர்கள் எங்களைச் சிறுமைப்படுத்தி, எங்களை அடிமைகளாக்கினார்கள். எங்களை வேதனைப்படுத்தி மிகவும் கடினமான வேலைகளைச் செய்யும்படி கட்டாயப்படுத்தினார்கள். 7 பின் நாங்கள் எங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபித்தோம். அவர்களைப்பற்றி முறையீடு செய்தோம். கர்த்தர் நாங்கள் கூறியவற்றைக் கேட்டார். எங்களது இன்னல்களையும், கடின உழைப்பையும், நாங்கள் அடைந்த வருத்தங்களையும் கர்த்தர் பார்த்தார். 8 பின் கர்த்தர் எகிப்திலிருந்து எங்களைத் தனது மிகுந்த ஆற்றலாலும், பலத்தினாலும் மீட்டுக்கொண்டு வந்தார். அவர் மிகுந்த அற்புதங்களையும், அதிசயங்களையும் பயன்படுத்தினார். வியக்கத்தக்க நிகழ்ச்சிகளைச் செய்தார். 9 அதனால் எங்களை இந்த தேசத்திற்கு மீட்டுக் கொண்டு வந்தார். பாலும், தேனும் ஓடக் கூடிய இந்த வளமான தேசத்தை எங்களுக்குத் தந்தார். 10 இப்போதும் இதோ கர்த்தாவே நீர் எங்களுக்குத் தந்த தேசத்திலிருந்து நாங்கள் பெற்ற முதல் அறுவடையின் பலனைக் கொண்டு வந்துள்ளோம்’ என்று சொல்ல வேண்டும்.
“பின் நீங்கள் அந்த அறுவடையின் பலனை உங்கள் தேவனாகிய கர்த்தர் முன்பு வைத்து தாழ்ந்து பணிந்து அவரை ஆராதிக்க வேண்டும். 11 பின் நீங்கள் சேர்ந்து உண்டு மகிழ்ந்து உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் கொடுத்த எல்லா நன்மைகளினிமித்தமும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். நீங்கள் அந்த நன்மைகளில் எல்லாம் லேவியர்களுக்கும் மற்றும் உங்களைச் சார்ந்து வாழ்கின்ற அந்நியர்களுக்கும் பங்களிக்க வேண்டும்.
12 “ஒவ்வொரு மூன்றாவது ஆண்டும் பத்தில் ஒரு பங்கைச் செலுத்தும் ஆண்டாக இருக்கவேண்டும். இந்த வருடத்தில் நீங்கள் உங்கள் அறுவடைப் பலனில் பத்திலொரு பங்கை லேவியருக்கும், உங்கள் நாட்டில் வாழும் அயல்நாட்டு குடிகளுக்கும், விதவைகளுக்கும், அநாதைகளுக்கும் கொடுக்க வேண்டும். பின் ஒவ்வொரு நகரத்திலும் அந்த ஜனங்கள் தாராளமாக, திருப்தியாக உண்டு மகிழ்வார்கள். 13 நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடம், ‘கர்த்தாவே, நான் எனது வீட்டிலிருந்து எனது அறுவடைப் பலனின் பரிசுத்த பங்கு ஒன்றை வெளியே எடுத்துவந்து லேவியருக்கும், அயல் நாட்டு குடிகளுக்கும், அநாதைகளுக்கும், விதவைகளுக்கும் கொடுத்துள்ளேன். நீர் எனக்குத் தந்த எல்லா கட்டளைகளையும் நான் பின்பற்றியுள்ளேன். நான் உமது எந்த கட்டளைக்கும் கீழ்ப்படிய மறுத்ததில்லை. அவற்றை மறந்ததுமில்லை. 14 நான் துக்கமாயிருந்தபோது அதில் எதையும் உண்ணவில்லை. நான் சுத்தமில்லாதவனாக இருந்தபோது அவற்றை சேகரிக்கவில்லை. நான் மரித்தவர்களுக்காக அதிலிருந்து எந்த உணவையும் செலுத்தவில்லை. நான் உமக்குக் கீழ்ப்படிந்து இருந்தேன். என் தேவனாகிய கர்த்தாவே நீர் எனக்குக் கட்டளையிட்டபடியே நான் எல்லா செயல்களையும் செய்துள்ளேன். 15 தேவனே பரலோகத்தில் உமது பரிசுத்த ஆலயத்திலிருந்து என்னைப் பாரும். உமது இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதியும். நீர் எங்களுக்குக் கொடுத்த தேசத்தை ஆசீர்வதிப்பீராக. எங்கள் முற்பிதாக்களிடம் ஆணையிட்டபடி எல்லா வளங்களும் கொண்ட பாலும், தேனும் ஓடக் கூடிய நீர் தந்த இந்த தேசத்தை ஆசீர்வதியும்’ என்று கூறுவீர்களாக.
37 மக்கள் இதைக் கேட்டபோது அவர்கள் தங்கள் இதயத்தில் மிகவும் வருத்தம் அடைந்தார்கள். அவர்கள் பேதுருவையும் பிற அப்போஸ்தலரையும் நோக்கி, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள்.
38 பேதுரு அவர்களை நோக்கி, “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இருதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றி, இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்போது தேவன் உங்கள் பாவங்களை மன்னிப்பார். நீங்களும் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். 39 இந்த வாக்குறுதி உங்களுக்குரியது. அது உங்கள் பிள்ளைகளுக்கும் தொலைவில் வாழ்கின்ற எல்லா மக்களுக்கும் கூட உரியது. ஆண்டவராகிய நமது தேவன் தன்னிடம் அழைக்கிற ஒவ்வொரு மனிதனுக்கும் அது உரியது” என்று கூறினான்.
40 வேறு பல வார்த்தைகளையும் கூறி பேதுரு அவர்களை எச்சரித்தான். அவன் அவர்களை, “இன்று வாழ்கின்ற மக்களின் தீமைகளிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்” என்று வேண்டினான். 41 பேதுரு கூறியவற்றை ஏற்றுக்கொண்ட அந்த மக்கள் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டனர். அந்த நாளில் விசுவாசிகளின் கூட்டத்தில் சுமார் 3,000 மக்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
விசுவாசிகளின் ஒருமனம்
42 விசுவாசிகள் தொடர்ந்து ஒன்றாக சந்தித்தனர். அப்போஸ்தலரின் போதனையைக் கற்பதற்குத் தங்கள் நேரத்தைச் செலவிட்டனர். விசுவாசிகள் ஒருவரோடொருவர் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் ஒருமித்து உண்டு, ஒருமித்து பிரார்த்தனை செய்தார்கள். 43 பல வல்லமை மிக்க, வியப்பான காரியங்களை அப்போஸ்தலர்கள் செய்துகொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் தேவனை மிகவும் மரியாதையாக உணர்ந்தனர். 44 எல்லா விசுவாசிகளும் ஒருமித்து வசித்தனர். அவர்கள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டனர். 45 விசுவாசிகள் அவர்களது நிலங்களையும் அவர்களுக்குச் சொந்தமான பொருட்களையும் விற்றனர். பின்னர் பணத்தைப் பங்கிட்டு, தேவைப்பட்ட ஒவ்வொருவருக்கும் அவர்களது தேவைக்கேற்பக் கொடுத்தனர். 46 ஒவ்வொரு நாளும் விசுவாசிகள் தேவாலயத்தில் சந்தித்தனர். அவர்களது குறிக்கோள் ஒன்றாகவே இருந்தது. அவர்களுடைய வீடுகளில் ஒருமித்து உண்டனர். அவர்கள் உணவைப் பங்கிட்டுக்கொள்வதிலும் களிப்புமிக்க உள்ளங்களோடு உண்பதிலும் மகிழ்ச்சியடைந்தனர். 47 விசுவாசிகள் தேவனை வாழ்த்தினர். எல்லா மக்களும் அவர்களை விரும்பினர். ஒவ்வொரு நாளும் அதிகமதிகமான மக்கள் இரட்சிக்கப்பட்டனர். விசுவாசிகளின் கூட்டத்தில் கர்த்தர் அம்மக்களைச் சேர்த்துக்கொண்டிருந்தார்.
2008 by World Bible Translation Center