Revised Common Lectionary (Complementary)
ஆசாபின் ஒரு மஸ்கீல்.
78 என் ஜனங்களே, என் போதனைகளுக்கு செவிக்கொடுங்கள்.
நான் கூறுவனவற்றைக் கவனித்துக் கேளுங்கள்.
2 நான் உங்களுக்கு இந்தக் கதையைக் கூறுவேன்.
நான் உங்களுக்கு இப்பழங்கதையைக் கூறுவேன்.
3 நாங்கள் இக்கதையைக் கேட்டோம், அதை நன்றாக அறிந்தோம்.
எங்கள் தந்தையர் இக்கதையைக் கூறினார்கள்.
4 நாங்கள் இக்கதையை மறக்கவும்மாட்டோம்.
இறுதி தலைமுறை வரைக்கும் எங்கள் ஜனங்கள் இக்கதையைச் சொல்லிக்கொண்டேயிருப்பார்கள்.
நாம் அனைவரும் கர்த்தரைத் துதிப்போம்.
அவர் செய்த அற்புதமான காரியங்களைக் குறித்துச் சொல்வோம்.
5 கர்த்தர் யாக்கோபோடு ஒரு உடன்படிக்கையைச் செய்தார்.
தேவன் இஸ்ரவேலருக்குச் சட்டத்தை (நீதிமுறையை) கொடுத்தார்.
நம் முற்பிதாக்களுக்கு தேவன் கட்டளைகளை அளித்தார்.
தமது பின் சந்ததியினருக்கு அந்தச் சட்டங்களைப் போதிக்குமாறு அவர் நம் முற்பிதாக்களுக்குக் கூறினார்.
6 புது குழந்தைகள் பிறப்பார்கள், அவர்கள் இனைஞராக வளருவார்கள்.
அவர்கள் அக்கதைகளைத் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்வார்கள்.
இவ்வகையில் கடைசி தலைமுறையினர் வரைக்கும் எல்லோரும் சட்டத்தை அறிந்திருப்பார்கள்.
7 எனவே அந்த ஜனங்கள் எல்லோரும் தேவனை நம்புவார்கள்.
தேவன் செய்தவற்றை அவர்கள் மறக்கமாட்டார்கள்.
அவர்கள் கவனமாக அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவார்கள்.
8 தங்கள் தேவனுடைய கட்டளைகளை ஜனங்கள் அவர்கள் குழந்தைகளுக்குச் சொல்வார்களானால், அந்தக் குழந்தைகள் அவர்களின் முற்பிதாக்களைப்போல் இருக்கமாட்டார்கள்.
அவர்கள் முற்பிதாக்கள் தேவனுக்கு எதிராகத் திரும்பினார்கள்.
அவர்கள் அவருக்குக் கீழ்ப்படிய மறுத்தார்கள்.
அந்த ஜனங்கள் பிடிவாதமாக இருந்தார்கள்.
அவர்கள் தேவ ஆவியானவருக்கு உண்மையாக இருக்கவில்லை.
17 ஆனால் ஜனங்கள் தேவனுக்கெதிராகத் தொடர்ந்து பாவம் செய்தனர்.
பாலைவனத்திலும் அவர்கள் மிக உன்னதமான தேவனுக்கெதிராகத் திரும்பினார்கள்.
18 பின் அந்த ஜனங்கள் தேவனை சோதிக்க விரும்பினார்கள்.
தங்கள் இச்சையை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர்கள் தேவனிடம் உணவைக் கேட்டார்கள்.
19 அவர்கள் தேவனைக்குறித்து முறையிட்டு,
“பாலைவனத்தில் தேவன் நமக்கு உணவைக் கொடுக்கக்கூடுமா?
20 தேவன் பாறையை அடித்தார், பெருவெள்ளம் வெளிப்பட்டது.
நிச்சயமாக, அவர் நமக்கு ரொட்டியும் (அப்பமும்) இறைச்சியும் கொடுக்க முடியும்” என்றார்கள்.
21 அந்த ஜனங்கள் கூறியவற்றை கர்த்தர் கேட்டார்.
யாக்கோபிடம் தேவன் கோபமடைந்தார்.
தேவன் இஸ்ரவேலிடம் கோபமடைந்தார்.
22 ஏனெனில் ஜனங்கள் அவரை நம்பவில்லை.
தேவன் அவர்களைக் காக்கக்கூடுமென அவர்கள் நம்பவில்லை.
23-24 ஆனால் தேவன் மேலேயுள்ள மேகங்களைத் திறந்தார்.
உணவுக்கான மன்னா அவர்கள் மீது பொழிந்தது.
வானில் கதவுகள் திறக்கப்பட்டு வானிலுள்ள கிடங்கிலிருந்து
தானியங்கள் கீழே கொட்டினாற்போல காட்சி தந்தது.
25 தேவதூதர்களின் உணவை ஜனங்கள் உண்டார்கள்.
அவர்கள் திருப்தியடையும்வரை தேவன் மிகுதியான உணவை அனுப்பினார்.
26-27 தேவன் கிழக்கிலிருந்து ஒரு பெருங்காற்று வீசுமாறு செய்தார்.
காடைகள் மழையைப்போன்று அவர்கள் மீது வீழ்ந்தன.
தேமானிலிருந்து தேவன் காற்றை வீசச்செய்தார்.
பறவைகள் மிகுதியாக இருந்தமையால் நீல வானம் இருண்டது.
28 பாளையத்தின் நடுவே
கூடாரங்களைச் சுற்றிலும் அப்பறவைகள் வீழ்ந்தன.
29 அவர்களுக்கு உண்பதற்கு மிகுதியான உணவு இருந்தது.
ஆனால் தங்களின் பசியால் தாங்களே பாவம் செய்யும்படி தங்களை அவர்கள் ஆட்படுத்திக்கொண்டார்கள்.
கர்த்தரை நினை
8 நான் இன்று கொடுக்கின்ற எல்லாக் கட்டளைகளையும் நீங்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். ஏனென்றால், அப்போதுதான் நீங்கள் வாழ்ந்து வளர்ந்து உயர்ந்ததொரு சமுதாயமாக வரமுடியும். கர்த்தர் உங்கள் முற்பிதாக்களிடம் சொன்னதுபோல் நீங்கள் சுதந்திரமான தேசத்தைப் பெறமுடியும். 2 இந்தப் பாலைவனத்தில் கடந்துவந்த 40 ஆண்டு காலத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை நடத்தி வந்த எல்லா வழிகளையும் பற்றி நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். கர்த்தர் உங்களை சோதித்துக்கொண்டிருந்தார். உங்களைத் தாழ்மையானவர்களாக்க அவர் விரும்பினார். உங்கள் மனதில் உள்ள எண்ணங்களை அறிய அவர் ஆசைப்பட்டார். அவரது கட்டளைகளை நீங்கள் ஒழுங்காகப் பின்பற்றுகிறீர்களா என்பதை அவர் அறிய விரும்பினார். 3 கர்த்தர் உங்களைத் தாழ்மையாக்கி உங்களைப் பசியால் வருத்தி, பின் நீங்களும் உங்கள் முற்பிதாக்களும் இதுவரை பார்க்காத, “மன்னா” என்னும் உணவை உண்ணச் செய்தார். தேவன் ஏன் இப்படிச் செய்தார்? ஏனென்றால் மனிதன் வெறும் அப்பத்தைத் தின்பதால் மட்டும் உயிர்வாழ்ந்திட முடியாது. அவர்கள் கர்த்தர் கூறியதைக் கேட்பதினாலேயே வாழலாம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என தேவன் விரும்பினார். 4 கடந்த 40 ஆண்டுகளில் உங்களது ஆடைகள் பழைமையடைந்து போகவிடவில்லை. உங்களது கால்கள் வீக்கமடைந்துவிடவில்லை. (ஏனென்றால் கர்த்தர் உங்களைப் பாதுகாத்தார்.) 5 உங்களுக்காக உங்கள் தேவனாகிய கர்த்தர் செய்த எல்லாவற்றையும் நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். ஒரு தந்தை தன் குமாரனுக்கு கற்றுக்கொடுத்து அவனைத் திருத்துவதுபோல் தேவன் உங்களுக்கு விளக்கினார்.
6 “அத்தகைய உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். அவற்றைப் பின்பற்றி அவரை மதிக்கவேண்டும். 7 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை ஒரு நல்ல தேசத்திலே வசிக்க அழைத்துக்கொண்டு வருகிறார். அங்கு பள்ளத்தாக்குகளிலிருந்தும் மலைகளிலிருந்தும் புறப்படுகின்ற ஆறுகளும், ஊற்றுகளும், ஏரிகளும் தண்ணீர்வளம் நிறைந்தது. 8 அந்த நிலம் கோதுமையையும், பார்லியையும், திராட்சைக் கொடிகளையும், அத்தி மரங்களையும், மாதுளஞ் செடிகளையும் விளைவிக்கும் வளமான நிலம். அது ஒலிவ மரங்களையும், எண்ணெய், தேன் ஆகியவற்றையும் கொடுக்கவல்ல நிலமாகும். 9 அங்கே நீங்கள் தாராளமாக உண்டு வாழலாம். உங்களுக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் கிடைக்கும். அது, பாறைகள் இரும்பாக இருக்கும் தேசமாக உள்ளது. அங்குள்ள மலைகளிலிருந்து செம்பு உலோகத்தை நீங்கள் வெட்டி எடுக்கலாம், 10 அங்கு நீங்கள் உண்ண விரும்புகின்ற எல்லாம் உங்களுக்குக் கிடைக்கும். இத்தகைய வளம் நிறைந்த, நீங்கள் திருப்தியுடன் மகிழ்வாய் வாழக் கூடிய இந்த நிலத்தை உங்களுக்குத் தந்த உங்கள் தேவனாகிய கர்த்தரை நீங்கள் பாராட்டிப் போற்றுவீர்கள்.
நன்றியின் பிரார்த்தனை
8 முதலில் நான் உங்களுக்காக இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் உலகின் பல பகுதிகளிலுள்ள மக்களும் உங்களது பெரிய விசுவாசத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். 9-10 ஒவ்வொரு முறையும் பிரார்த்தனை செய்யும்போதெல்லாம் உங்களை நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். இது உண்மை என தேவனுக்குத் தெரியும். மக்களிடம் தேவனுடைய குமாரனைப் பற்றிய நற்செய்தியைக் கூறுவதன் மூலம் தேவன் ஒருவருக்கே நான் எனது ஆவியின் வழியே சேவை செய்கிறேன். உங்களிடம் வர அனுமதிக்குமாறு தேவனிடம் பிரார்த்திக்கிறேன். தேவன் விரும்பினால் இது நிகழும். 11 நான் உங்களைப் பார்க்க மிகவும் விரும்புகிறேன். உங்களைப் பலப்படுத்தும் ஆவிக்குரிய வரங்களை உங்களுக்குத் தர நான் விரும்புகிறேன். 12 நம்மிடம் உள்ள விசுவாசத்தின் மூலம் நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். எனது விசுவாசம் உங்களுக்கும், உங்கள் விசுவாசம் எனக்கும் உதவியாக இருக்கும்.
13 சகோதர, சகோதரிகளே, உங்களிடம் வருவதற்காக நான் பலமுறை திட்டமிட்டேன். ஆனால் இப்போதுவரை நான் வரத் தடைசெய்யப்பட்டேன். நீங்கள் ஆத்தும வளர்ச்சியைப் பெறுவதற்காக நான் அங்கே வர விரும்புகிறேன். யூதர் அல்லாத மக்களுக்கு நான் உதவியது போலவே நான் உங்களுக்கும் உதவ விரும்புகிறேன்.
14 கிரேக்கர்களுக்கும், கிரேக்கர் அல்லாதவர்களுக்கும், அறிவுள்ளவர்களுக்கும், அறிவற்றோருக்கும் நான் சேவை செய்யக் கடனாளியாயிருக்கிறேன். 15 அதனால் தான் நான் ரோமிலுள்ள உங்களுக்கும் நற்செய்தியைப் போதிக்க விரும்புகிறேன்.
2008 by World Bible Translation Center