Revised Common Lectionary (Complementary)
பே
129 கர்த்தாவே, உமது உடன்படிக்கை அற்புதமானது.
அதனால் நான் அதைப் பின்பற்றுகிறேன்.
130 ஜனங்கள் உமது வார்த்தையைப் புரிந்துகொள்ளத் தொடங்கும்போது அது சரியானபடி வாழ்வதற்கு வழிகாட்டும் ஒளியைப் போன்றிருக்கிறது.
உமது வார்த்தை சாதாரண ஜனங்களையும் ஞானமுள்ளோராக்கும்.
131 கர்த்தாவே, நான் உண்மையாகவே உமது கட்டளைகளைக் கற்க விரும்புகிறேன்.
நான் சிரமமாய் மூச்சுவிட்டுக்கொண்டு பொறுமையின்றிக் காத்திருக்கும் மனிதனைப் போல் இருக்கிறேன்.
132 தேவனே, என்னைப் பாரும், என்னிடம் தயவாயிரும்.
உமது நாமத்தை நேசிக்கும் ஜனங்களுக்குத் தகுந்தவையான காரியங்களைச் செய்யும்.
133 கர்த்தாவே, நீர் வாக்குறுதி அளித்தபடி என்னை வழிநடத்தும்.
தீமையேதும் எனக்கு நிகழாதபடி பார்த்துக்கொள்ளும்.
134 கர்த்தாவே, என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
135 கர்த்தாவே, உமது ஊழியனை ஏற்றுக் கொள்ளும்.
உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
136 ஜனங்கள் உமது போதனைகளுக்குக் கீழ்ப்படியாததால்
என் கண்ணீர் ஆற்றைப்போல பெருக்கெடுத்து ஓடுகிறது.
28 பிறகு ராஜாவாகிய தாவீது, “பத்சேபாளை உள்ளே வரச்சொல்!” என்றான். எனவே பத்சேபாளும் உள்ளே வந்தாள்.
29 பின்னர் ராஜா, ஒரு வாக்குக்கொடுத்தான்: “தேவனாகிய கர்த்தர்தாமே என்னை அனைத்து ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றி இருக்கிறார். கர்த்தர் உயிருடன் இருப்பதைப் போலவே, இவ்வாக்குறுதியும் உறுதியானது. 30 நான் முன்பு உனக்கு ஆணையிட்டபடியே இன்று செயலாற்றுவேன், இதனை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய வல்லமையால் வாக்குறுதியளிக்கிறேன். எனக்குப் பின் உன் குமாரனான சாலொமோனே ராஜாவாவான். எனது இடத்தையும் அவன் பிடித்துக்கொள்வான். நான் எனது வாக்குறுதியை நிறைவேற்றுவேன்!” என்றான்.
31 பிறகு பத்சேபாள் தரையில் குனிந்து ராஜாவை வணங்கினாள். அவள், “தாவீது ராஜா நீண்டகாலம் வாழ்வாராக!” என்று வாழ்த்தினாள்.
சாலொமோன் புதிய ராஜாவாக தேர்ந்தெடுக்கப்படுதல்
32 பிறகு தாவீது ராஜா, “ஆசாரியனான சாதோக், தீர்க்கதரிசியான நாத்தான், யோய்தாவின் குமாரனான பெனாயா ஆகியோரை உள்ளே வரச்சொல்” என்றான். எனவே மூன்று பேரும் உள்ளே வந்து ராஜா முன்பு நின்றனர். 33 அவன் அவர்களிடம், “எனது அதிகாரிகளை உங்களோடு அழைத்துக்கொள்ளுங்கள். என் குமாரனாகிய சாலொமோனை என் கோவேறு கழுதையின்மேல் ஏற்றுங்கள். அவனைக் கீகோனுக்கு அழைத்துக்கொண்டுப் போங்கள். 34 அங்கே, ஆசாரியனாகிய சாதோக்கும் தீர்க்கதரிசியாகிய நாத்தானும் அவனை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்யட்டும். பின் எக்காளத்தை ஊதி, ‘புதிய ராஜாவாகிய சாலொமோன் வாழ்க!’ என்று வாழ்த்துங்கள். 35 பிறகு அவனை நகர்வலம் செய்து என் சிங்காசனத்தில் வீற்றிருக்கக் கூட்டிக்கொண்டு வாருங்கள். அவனே எனது இடத்தில் ராஜாவாக இருப்பான். இஸ்ரவேலின் மேலும் யூதாவின் மேலும் தலைவனாக இருக்கும்படி அவனைத் தேர்ந்தெடுத்தேன்” என்றான்.
36 யோய்தாவின் குமாரனான பெனாயா, “எனது ராஜாவும் ஆண்டவனுமானவரே, தேவனாகிய கர்த்தரும் இவ்வாறே சொன்னார். 37 என் ராஜாவும் ஆண்டவனுமானவரே! கர்த்தர் உங்களோடு இருக்கிறார். இனி சாலொமோனோடும் கர்த்தர் இருப்பார் என்று நம்புவோமாக! அவனது அரசாங்கம் வளர்ந்து உங்களுடையதைவிட அதிக வலிமையுள்ளதாகும் என்று நம்புகிறேன்” என்றான்.
14 நீங்கள் வெட்கமடையுமாறு செய்ய நான் முயலவில்லை. உங்களை எனது சொந்தக் குழந்தைகளெனக் கருதி இவற்றையெல்லாம் உங்களுக்கு முன் எச்சரிக்கையாய் எழுதுகிறேன். 15 கிறிஸ்துவில் பதினாயிரம் போதகர்களை நீங்கள் பெற்றிருக்கலாம். ஆனால் உங்களுக்குப் பல தந்தையர் இல்லை. நற்செய்தியின் மூலமாகக் கிறிஸ்து இயேசுவில் நான் உங்களுக்குத் தந்தையானேன். 16 நீங்களும் என்னைப் போலவே இருக்கும்படி நான் உங்களை வேண்டுகிறேன். 17 அதனாலேயே நான் தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்புகிறேன். கர்த்தருக்குள் அவன் என் குமாரன் ஆவான். நான் தீமோத்தேயுவை நேசிக்கிறேன். அவன் உண்மையுள்ளவன். கிறிஸ்து இயேசுவில் என் வாழ்வின் நெறியை நீங்கள் நினைவுகூருவதற்கு அவன் உதவி செய்வான். எல்லா சபைகளிலும் அந்த வாழ்க்கை நெறியையே நான் போதிக்கிறேன்.
18 நான் உங்களிடம் மீண்டும் வரமாட்டேன் என எண்ணி உங்களில் சிலர் தற்பெருமையால் நிரம்பி இருக்கிறீர்கள். 19 ஆனால் மிக விரைவில் உங்களிடம் வருவேன். தேவன் நான் வரவேண்டுமென விரும்பினால் நான் வருவேன். அப்போது தற் பெருமை பாராட்டுவோர் சொல்வதை அல்ல, செயலில் காட்டுவதைக் காண்பேன். 20 தேவனுடைய இராஜ்யம் பேச்சல்ல, பெலத்திலே என்பதால் இதைக் காண விரும்புகிறேன்.
2008 by World Bible Translation Center