Revised Common Lectionary (Complementary)
6 கர்த்தர் இஸ்ரவேலின் ராஜா. சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இஸ்ரவேலைக் காப்பாற்றுகிறார். கர்த்தர் கூறுகிறார், “நான் ஒருவரே தேவன்! வேறு எந்தத் தெய்வமும் இல்லை. நானே தொடக்கமும் முடிவுமாக இருக்கிறேன்! 7 என்னைப்போன்ற தேவன் வேறு யாருமில்லை. அவ்வாறு இருந்தால், அந்த தெய்வம் இப்போது பேசட்டும். அந்த தெய்வம் வந்து என்னைப்போன்றவன் என்று நிரூபிக்கட்டும். இந்த ஜனங்களை நான் என்றென்றும் நிலைத்திருக்கும்படி செய்தேனே. இதுவரை என்ன நடந்தது என்று அந்த தெய்வம் எனக்குச் சொல்லட்டும். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அவன் அறிந்திருந்தால் அந்த தெய்வம் எனக்கு அடையாளம் காட்டட்டும். 8 அஞ்சாதே! கவலைப்படாதே! என்ன நடக்கபோகிறது என்பதை ஏற்கெனவே நான் கூறியிருக்கிறேன். நீங்களே எனது சாட்சிகள். வேறு தேவன் இல்லை. நான் ஒருவரே அந்த ஒருவர். வேறு ஒரு கன்மலை இல்லை. நானே அந்த ஒருவர் என்பதை நான் அறிவேன்.”
11 கர்த்தாவே, உமது வழிகளை எனக்குப் போதியும்.
நான் வாழ்ந்து உமது சத்தியங்களுக்குக் கீழ்ப்படிவேன்.
உமது நாமத்தைத் தொழுது கொள்வதையே
என் வாழ்க்கையின் மிக முக்கியமான காரியமாகக்கொள்ள எனக்கு உதவும்.
12 என் ஆண்டவராகிய தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன்.
உமது நாமத்தை என்றென்றும் துதிப்பேன்.
13 தேவனே, என்னிடம் மிகுந்த அன்பு காட்டுகிறீர்.
கீழே மரணத்தின் இடத்திலிருந்து என்னைக் காப்பாற்றும்.
14 தேவனே, பெருமைமிக்க மனிதர்கள் என்னைத் தாக்குகிறார்கள்.
கொடிய மனிதர்களின் கூட்டம் என்னைக் கொல்லமுயல்கிறது.
அம்மனிதர்கள் உம்மை மதிப்பதில்லை.
15 ஆண்டவரே, நீர் தயவும் இரக்கமும் உள்ள தேவன்.
நீர் பொறுமையுடையவர், உண்மையும் அன்பும் நிறைந்தவர்.
16 தேவனே, நீர் எனக்குச் செவிகொடுப்பதை எனக்குக் காண்பித்து, என்மீது தயவாயிரும்.
நான் உமது பணியாள்.
எனக்குப் பெலனைத் தாரும்.
நான் உமது பணியாள்.
என்னைக் காப்பாற்றும்.
17 தேவனே, நீர் எனக்கு உதவுவீர் என்பதற்கு ஒரு அடையாளத்தைத் தாரும்.
என் பகைவர்கள் அந்த அடையாளத்தைக் கண்டு, ஏமாற்றம்கொள்வார்கள்.
நீர் என் ஜெபத்தைக் கேட்டு எனக்கு உதவுவீர் என்பதை அது காட்டும்.
12 சகோதர சகோதரிகளே, நாம் நமது மாம்சங்களால் ஆளப்படக் கூடாது. நமது மாம்சங்களின் விருப்பப்படியும் இருக்கக் கூடாது. 13 பாவம் தூண்டும் தவறான செயல்களைச் செய்ய உங்கள் வாழ்வு பயன்படுமானால் நீங்கள் ஆவிக்குரிய நிலையில் இறந்தவர்களாவீர்கள். ஆனால் நீங்கள் ஆவியின் உதவியோடு தீமை செய்வதை நிறுத்தினால் உண்மையான வாழ்வைப் பெறுவீர்கள்.
14 எவரெல்லாம் தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறார்களோ அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறார்கள். 15 நம்மை மீண்டும் அடிமைப்படுத்தி அச்சமூட்டுகிற ஆவியைப் நாம் பெறவில்லை. தேவனுடைய பிள்ளைகளாக நம்மை உருவாக்கும் ஆவியைப் பெறுகிறோம். அப்படிப் பெற்றால் “என் அன்பான பிதாவே” என்று அழைக்கும் உரிமையைப் பெறுவோம். 16 ஆவியானவர் நம்முடைய ஆவியோடு சேர்ந்துகொண்டு நாம் தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறோம் என்று சாட்சி கொடுக்கிறார். 17 நாம் தேவனுடைய பிள்ளைகளானால், தேவன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருக்கிற மகிமையை நாம் பெறுவோம். நாம் அவற்றை தேவனிடமிருந்து பெறுவோம். கிறிஸ்துவிடம் உள்ள அதே மகிமையும் நமக்குக் கிடைக்கும். ஆனால் கிறிஸ்து துன்பப்பட்டது போன்று நாமும் படவேண்டியதிருக்கும்.
எதிர்காலச் சிறப்பு
18 இப்பொழுது துன்பப்படுகிறோம். ஆனால் நமக்குக் கொடுக்கப்படப் போகும் சிறப்பை நிகழ்காலத் துன்பத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இத்துன்பம் ஒன்றுமில்லாமல் போகும். 19 தேவனால் உருவாக்கப்பட்ட அனைத்தும் தேவன் தன் பிள்ளைகள் யாரென்பதை வெளிப்படுத்தப் போகும் நாளுக்காக ஆவலோடு காத்திருக்கின்றன. அவை அதனைப் பெரிதும் விரும்புகின்றன. 20 தேவனால் படைக்கப்பட்ட அனைத்தும் பயனற்றவையாக மாற்றப்பட்டுள்ளன. அவை மாற்றமடைய விரும்பாவிட்டாலும் தேவன் அவற்றை மாற்றிவிட முடிவு செய்துள்ளார். 21 ஆனாலும் “தேவனால் படைக்கப்பட்டவையெல்லாம் அழிவிலிருந்து விடுதலை பெறும்” என்ற நம்பிக்கையுண்டு. தேவன் படைத்த எல்லாம், தேவனுடைய பிள்ளைகளுக்குரிய விடுதலையையும், மகிமையையும் பெறும் என்ற நம்பிக்கையும் உண்டு.
22 ஒரு பெண், குழந்தை பெறுவதற்கான நேரத்தை வலியோடு எதிர்ப்பார்த்துக்கொண்டிருப்பது போன்று தேவனால் படைக்கப்பட்டவையெல்லாம் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கின்றன. 23 உலகம் மட்டுமல்ல. நாமும் உள்ளுக்குள் வேதனையோடு காத்துக்கொண்டிருக்கிறோம். தேவனுடைய வாக்குறுதியினுடைய முதல் பாகம் போல் நாம் ஆவியின் முதல் பலனைப் பெற்றிருக்கிறோம். நம்மை தேவன் தமது பிள்ளைகளாக்குவார் என்று நாமும் எதிர்பார்க்கிறோம். அதாவது நாம் நமது சரீரத்தின் விடுதலைக்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். 24 அந்த நம்பிக்கையால்தான் நாம் பாதுகாக்கப்பட்டுள்ளோம். கண்ணால் காண முடிவதை நம்புவது என்பது உண்மையில் நம்பிக்கையன்று, நம்மிடம் ஏற்கெனவே இருப்பதை மக்கள் நம்பவேண்டியதில்லை. 25 இதுவரை நாம் பெறாததைப் பெறுவதற்குப் பொறுமையோடு காத்திருப்போம்.
கோதுமை, களையின் உவமை
24 பிறகு, இயேசு மற்றொரு உவமையின் மூலம் போதனை செய்தார், “பரலோக இராஜ்யம் தனது வயலில் நல்ல விதையை விதைத்த மனிதனைப் போன்றது. 25 அன்றைக்கு இரவில், அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தனர். அவனது பகைவன் வந்து கோதுமை விதைகளுக்கிடையில் களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான். 26 பிறகு, கோதுமை விதைகள் முளைவிட்டன. செடிகள் முளைத்தன. ஆனால், அதே சமயம் களைகளும் முளைத்தன. 27 அவனது வேலைக்காரர்கள் அவனிடம் சென்று, ‘நல்ல விதைகளையே நீங்கள் உங்கள் வயலில் விதைத்தீர்கள். ஆனால், களைகள் எங்கிருந்து வந்தன?’ என்று கேட்டார்கள்.
28 “அதற்கு அவன், ‘ஒரு பகைவன் களைகளை விதைத்துவிட்டான்’ என்றான்.
“வேலைக்காரர்கள், ‘நாங்கள் களைகளை நீக்க வேண்டுமா?’ என்று கேட்டார்கள்.
29 “அதற்கு அந்த விவசாயி, ‘தேவையில்லை. ஏனென்றால், நீங்கள் களையெடுக்கும்பொழுது கோதுமை செடிகளையும் பிடுங்குவீர்கள். 30 களைகளும் கோதுமையும் அறுவடைக் காலம்வரையிலும் ஒன்றாக வளரட்டும். அறுவடையின்பொழுது அறுவடை செய்பவர்களிடம் நான், முதலில் களைகளைத் தீயிலிடுவதற்காகச் சேர்த்துக் கட்டுங்கள், பின்னர் கோதுமையைச் சேகரித்து என் களஞ்சியத்திற்குக் கொண்டு வாருங்கள் என்று சொல்வேன்’ எனப் பதில் சொன்னான்” என்று இயேசு கூறினார்.
கடினமான உவமையை விளக்குதல்
36 இயேசு மக்களை விட்டு வீட்டிற்குள் சென்றார். அவரது சீஷர்கள் அவரிடம் வந்து, “வயலில் முளைத்த களையின் உவமை கூறும் உண்மைப் பொருளை எங்களுக்கு விளக்கும்” என்று கேட்டனர்.
37 இயேசு மறுமொழியாக, “நல்ல விதைகளை வயலில் விதைத்தவன் மனித குமாரன் தான். 38 இவ்வுலகமே வயல். நல்ல விதைகள் பரலோகத்திற்குரிய நல்ல பிள்ளைகள். களைகள் பிசாசின் பிள்ளைகள். 39 பிசாசே களைகளை விதைத்தப் பகைவன். உலகின்[a] முடிவுக் காலமே அறுவடைக் காலம். தேவதூதர்களே அறுவடை செய்பவர்கள்.
40 “களைகள் பிடுங்கப்பட்டு தீயிலிடப்படுகின்றன. உலகின் முடிவுக் காலத்திலும் அப்படியே இருக்கும். 41 மனித குமாரன் தனது தேவதூதர்களை அனுப்புவார். அவரது தூதர்கள் பாவம் செய்கிறவர்களைக் கண்டு பிடிப்பார்கள். அத்தூதர்கள் அவர்களை மனிதகுமாரனின் இராஜ்யத்திலிருந்து வெளியேற்றுவார்கள். 42 அவர்களை அத்தேவ தூதர்கள் சூளையின் நெருப்பில் தள்ளுவார்கள். அங்கு அவர்கள் வேதனையால் கூக்குரலிடுவார்கள்; தங்கள் பற்களைக் கடிப்பார்கள். 43 நல்ல மனிதர்கள் சூரியனைப்போல ஒளி வீசுவார்கள். அவர்கள் பிதாவின் அரசாட்சியில் இருப்பார்கள். என் வார்த்தைகளைக் கேட்பவர்களே, இதை கவனித்துக்கொள்ளுங்கள்.
2008 by World Bible Translation Center