Revised Common Lectionary (Complementary)
11 கர்த்தாவே, உமது வழிகளை எனக்குப் போதியும்.
நான் வாழ்ந்து உமது சத்தியங்களுக்குக் கீழ்ப்படிவேன்.
உமது நாமத்தைத் தொழுது கொள்வதையே
என் வாழ்க்கையின் மிக முக்கியமான காரியமாகக்கொள்ள எனக்கு உதவும்.
12 என் ஆண்டவராகிய தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன்.
உமது நாமத்தை என்றென்றும் துதிப்பேன்.
13 தேவனே, என்னிடம் மிகுந்த அன்பு காட்டுகிறீர்.
கீழே மரணத்தின் இடத்திலிருந்து என்னைக் காப்பாற்றும்.
14 தேவனே, பெருமைமிக்க மனிதர்கள் என்னைத் தாக்குகிறார்கள்.
கொடிய மனிதர்களின் கூட்டம் என்னைக் கொல்லமுயல்கிறது.
அம்மனிதர்கள் உம்மை மதிப்பதில்லை.
15 ஆண்டவரே, நீர் தயவும் இரக்கமும் உள்ள தேவன்.
நீர் பொறுமையுடையவர், உண்மையும் அன்பும் நிறைந்தவர்.
16 தேவனே, நீர் எனக்குச் செவிகொடுப்பதை எனக்குக் காண்பித்து, என்மீது தயவாயிரும்.
நான் உமது பணியாள்.
எனக்குப் பெலனைத் தாரும்.
நான் உமது பணியாள்.
என்னைக் காப்பாற்றும்.
17 தேவனே, நீர் எனக்கு உதவுவீர் என்பதற்கு ஒரு அடையாளத்தைத் தாரும்.
என் பகைவர்கள் அந்த அடையாளத்தைக் கண்டு, ஏமாற்றம்கொள்வார்கள்.
நீர் என் ஜெபத்தைக் கேட்டு எனக்கு உதவுவீர் என்பதை அது காட்டும்.
பொய்த் தெய்வங்கள் பயனற்றவைகள்
9 சில ஜனங்கள் சிலைகளைச் (பொய்த் தெய்வங்களை) செய்கிறார்கள். அவை வீணானவை. ஜனங்கள் அந்தச் சிலைகளை நேசிக்கிறார்கள். ஆனால் அந்தச் சிலைகள் பயனற்றவை. அந்த ஜனங்களே சிலைகளுக்குச் சாட்சிகளாக இருக்கிறார்கள். ஆனால் அவைகளால் பார்க்கமுடியாது. அவைகளுக்கு எதுவும் தெரியாது. அவர்கள் தம் செய்கைக்கு வெட்கப்படும் அளவிற்குத் தெரியாமல் இருக்கிறார்கள்.
10 இந்தப் பொய்த் தெய்வங்களை யார் செய்தது? பயனற்ற இந்தச் சிலைகளைச் செய்தது யார்? 11 வேலைக்காரர்கள் இந்தச் தெய்வங்களைச் செய்தனர். அந்த வேலைக்காரர்கள் எல்லாம் மனிதர்கள், தெய்வங்கள் அல்ல. அவர்கள் அனைவரும் கூடி இதைப்பற்றி விவாதித்தால் இதற்காக அவர்கள் வெட்கமும் அச்சமும் அடைவார்கள்.
12 ஒரு வேலைக்காரன் கருவிகளைப் பயன்படுத்தி சூடான உலையிலே இரும்பைக் காய வைத்தான். அவன் தன் சுத்தியைப் பயன்படுத்தி உலோகத்தை அடித்ததால் அது சிலையானது. இந்த மனிதன் தனது வல்லமை வாய்ந்த கைகளைப் பயன்படுத்தினான். ஆனால், அவனுக்குப் பசி வரும்போது தனது வல்லமையை இழக்கிறான். அவன் தண்ணீர் குடிக்காவிட்டால் பலவீனன் ஆகிறான்.
13 இன்னொரு வேலைக்காரன் தனது நூலைப் பிடித்து மட்டப்பலகையால் மரத்தில் குறியிடுகிறான். எங்கே வெட்டவேண்டும் என்பதை இது அவனுக்குக் காட்டுகிறது. அவன், தனது உளியைப் பயன்படுத்தி அந்த மரத்திலிருந்து சிலையைச் செதுக்குகிறான். அவன் தனது அளவு கருவியால் அச்சிலையை அளக்கிறான். இவ்வழியில், வேலைக்காரன் சரியாக மனிதனைப்போன்றே தோன்றும்படிச் சிலையைச் செய்கிறான். மனிதனின் இந்தச் சிலை வீட்டில் இருப்பதைத் தவிர வேறு எதுவும் செய்வதில்லை.
14 ஒருவன் கேதுரு, மருதமரம் அல்லது கர்வாலி மரத்தை வெட்டுகிறான். (அந்த மனிதன் மரங்களை வளரச் செய்வதில்லை. அந்த மரங்கள் காட்டில் தன் சொந்த பலத்தாலேயே வளர்கிறது. ஒருவன் அசோக மரத்தை நட்டால் மழை அதை வளரச்செய்யும்).
15 பிறகு, அந்த மனிதன் எரிப்பதற்காக அந்த மரங்களை வெட்டுகிறான். அவன் அந்த மரத்தைச் சிறு, சிறு துண்டுகளாக வெட்டுகிறான். அவன் அதனைச் சமைக்கவும், வெப்பப்படுத்திக்கொள்ளவும் பயன்படுத்திக்கொள்கிறான். அவன் சில மரத் துண்டுகளை எரித்து தனக்காக அப்பத்தைச் சுடுகிறான். ஆனால், அவன் சில துண்டுகளில் தெய்வத்தின் சிலை செய்து அதனைத் தொழுதுகொள்கிறான். அந்த தெய்வம் மனிதனால் செய்யப்பட்ட ஒரு சிலையாகும். ஆனால், அந்த சிலைகளுக்கு முன்னால் பணிந்து வணங்குகிறான். 16 மனிதன் பாதி மரத்துண்டுகளை நெருப்பில் எரித்தான். மனிதன் அந்த நெருப்பை இறைச்சியை சமைக்கப் பயன்படுத்தினான். அதனை வயிறு நிரம்பும்வரை சாப்பிடுகிறான். மனிதன் தன்னை வெப்பப்படுத்திக்கொள்ள மரத்துண்டுகளை எரிக்கிறான். மனிதன் கூறுகிறான், “நல்லது நான் இப்போது வெப்பமாக இருக்கிறேன். என்னால் பார்க்கமுடியும் ஏனென்றால், நெருப்பிலிருந்து ஒளி வருகிறது.” 17 ஆனால், சிறு மரத்துண்டு மீதியுள்ளது எனவே மனிதன் அந்த மரத்திலிருந்து சிலை செய்து அதனை தெய்வம் என்று அழைக்கிறான். அந்த தெய்வத்திற்கு முன்பு அவன் அடிபணிந்து வணங்குகிறான். அவன் அந்த தெய்வத்தினிடம் ஜெபம் செய்து சொல்கிறான், “நீயே எனது தெய்வம். என்னைக் காப்பாற்று.”
13 தேவன் ஆபிரகாமிடம் ஒரு ஆணையிட்டார். மேலும் ஆணையிட்டுச் சொல்ல தேவனைவிட மிகப் பெரியவர் யாரும் இல்லாததால், 14 “நான் உன்மையாகவே உன்னை ஆசீர்வதிக்கிறேன். நான் உனக்கு ஏராளமான சந்ததிகளைக் கொடுப்பேன்”(A) என்று தன் பெயரிலேயே ஆணையிட்டுச் சொன்னார். 15 இது நிகழும் வரை ஆபிரகாம் பொறுமையாகக் காத்திருந்தான். இறுதியில் அவன் தேவனுடைய வாக்குறுதியின்படியே பெற்றுக்கொண்டான்.
16 மக்கள் தங்களைவிடப் பெரியவர்கள் பேரில் ஆணையிடுவார்கள். அவர்கள் சொல்வது உண்மை என்பதை இந்த ஆணை நிரூபித்து, மேலும் விவாதத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறது. 17 தேவன் தன் வாக்குறுதியை உண்மையென்று நிரூபிக்க விரும்பினார். தன் ஆணையால் அதனை உறுதிப்படுத்தினார். தனது நோக்கம் மாறாதது என்று காண்பிக்க தேவன் விரும்பினார். அதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினார். 18 அந்த இரண்டும் எப்பொழுதும் மாறாதவை. தேவன் பொய் சொல்லமாட்டார்.
ஆணையிட்ட பிறகு அது பொய்க்காது. அது நமக்கு ஆறுதலாய் இருக்கும். நமது நம்பிக்கையைப் பலப்படுத்தும். 19 நமக்கு இந்த நம்பிக்கை இருக்கிறது. இது நங்கூரம் போன்றது. அது உறுதியும் வலிமையும் உடையது. அது நமது ஆன்மாவைக் காப்பாற்றும். மிகவும் பரிசுத்தமான இடங்களுக்கு அது போகிறது. பரலோகத்து ஆலயத்தின் திரைக்குப் பின்னாலும் போகிறது. 20 இயேசு ஏற்கெனவே அங்கே நுழைந்திருக்கிறார். நமக்காக அங்கே வழியைத் திறந்திருக்கிறார். இயேசு பிரதான ஆசாரியராகி மெல்கிசேதேக்கைப்போல் நிலைத்திருக்கிறார்.
2008 by World Bible Translation Center