Revised Common Lectionary (Complementary)
ஓய்வு நாளின் துதிப்பாடல்.
92 மிக உன்னதமான தேவனாகிய கர்த்தரைத் துதிப்பது நல்லது.
உமது நாமத்தைத் துதிப்பது நல்லது.
2 காலையில் உமது அன்பைப்பற்றியும்
இரவில் உமது நம்பிக்கையைப் பற்றியும் பாடுவது நல்லது.
3 தேவனே பத்து நரம்பு வாத்தியங்களாலும், வீணையினாலும், தம்புருவினாலும்,
இசை மீட்டி உம்மைப் பாடுவது நல்லது.
4 கர்த்தாவே, நீர் செய்த காரியங்களால் எங்களை உண்மையாகவே மகிழ்ச்சிப்படுத்துகிறீர்.
அக்காரியங்களைக் குறித்து நாங்கள் சந்தோஷமாகப் பாடுவோம்.
5 கர்த்தாவே, நீர் மேன்மையான காரியங்களைச் செய்தீர்.
உமது எண்ணங்களை எங்களால் புரிந்துகொள்ள முடியாது.
6 உம்மோடு ஒப்பிடுகையில் ஜனங்கள் மூடமிருகங்களைப்போல் இருக்கிறார்கள்.
நாங்கள் எதையும் புரிந்துகொள்ள முடியாத மூடர்களைப்போல் இருக்கிறோம்.
7 களைகளைப்போல் தீயோர் வாழ்ந்து மறைகிறார்கள்.
அவர்கள் செய்யும் பயனற்ற காரியங்களே என்றென்றும் அழிக்கப்படும்.
8 ஆனால் தேவனே, நீர் என்றென்றும் மகிமைப்படுத்தப்படுவீர்.
9 கர்த்தாவே, உமது பகைவர்கள் எல்லோரும் அழிக்கப்படுவார்கள்.
தீயவை செய்யும் எல்லா ஜனங்களும் அழிக்கப்படுவார்கள்.
10 ஆனால் நீர் என்னைப் பெலனுடையவனாகச் செய்கிறீர்.
பலத்த கொம்புகளையுடைய ஆட்டைப் போலாவேன்.
விசேஷ வேலைக்காக நீர் என்னைத் தேர்ந்தெடுத்தீர்.
உமது புது எண்ணெயை என்மீது ஊற்றினீர்.
11 என் பகைவர்களை என்னைச் சுற்றிலும் காண்கிறேன்.
என்னைத் தாக்க வருகிற பெருங்காளைகளைப் போல அவர்கள் காணப்படுகிறார்கள்.
அவர்கள் என்னைக் குறித்துச் சொல்பவற்றை நான் கேட்கிறேன்.
12-13 செழிப்பாக வளருகின்ற பனைமரத்தைப் போல் நீதிமான் இருப்பான்.
லீபனோனின் கேதுரு மரத்தைப்போல் நல்லவன் இருப்பான்.
கர்த்தருடைய ஆலயத்தில் நடப்பட்ட மரங்களைப்போல் நல்லோர் வலிமையுடன் இருப்பார்கள்.
தேவனுடைய ஆலய முற்றத்தில் அவர்கள் வலிமையோடு வளருவார்கள்.
14 வயது முதிர்ந்தபோதும் அவர்கள் தொடர்ந்து கனிகளைத் தருவார்கள்.
அவர்கள் செழுமையும், பசுமையுமான மரங்களைப்போல் இருப்பார்கள்.
15 கர்த்தர் நல்லவர் என்பதை எல்லோருக்கும் காண்பிப்பார்கள்.
அவர் என் பாறை, அவர் ஒருபோதும் தீமை செய்வதில்லை.
சட்டத்திற்குக் கீழ்ப்படிபவர்களுக்கான ஆசீர்வாதங்கள்
28 “இப்போதும், நான் இன்று உங்களுக்குச் சொன்ன உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையெல்லாம் நீங்கள் கவனமாகக் கடைப்பிடிப்பீர்களேயானால், உங்கள் தேவனாகிய கர்த்தர் பூமியில் உள்ள எல்லா ஜனங்களையும் விட உங்களை உயர்த்தி வைப்பார். 2 நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படிவீர்களேயானால், இந்த எல்லா ஆசீர்வாதங்களும் உங்களுக்கு வரும்:
3 “நகரத்திலும் வயலிலும்
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
4 கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து
உங்களுக்குப் பல குழந்தைகளைக் கொடுப்பார்.
அவர் உங்கள் நிலத்தை ஆசீர்வதிப்பார்.
அவர் உங்களுக்கு நல்ல விளைச்சலைக் கொடுப்பார்.
அவர் உங்கள் மிருகங்களை ஆசீர்வதிப்பார்.
அவற்றுக்கு நிறைய குட்டிகளைப் பெருகச்செய்வார்.
அவர் உங்களது அனைத்து கன்றுகளையும் மற்றும் ஆட்டுக் குட்டிகளையும் ஆசீர்வதிப்பார்.
5 கர்த்தர் உங்களது கூடைகளையும்,
பாத்திரங்களையும் ஆசீர்வதித்து அவற்றில் உணவை நிரப்புவார்.
6 கர்த்தர் உங்களை எல்லா நேரங்களிலும் நீங்கள் செய்கிற அனைத்திலும் ஆசீர்வதிப்பார்.
7 “உங்களுக்கு எதிராகச் சண்டைச் செய்ய வருகிற உங்கள் பகைவர்களைத் தோற்கடிக்க கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார். உங்கள் பகைவர்கள் உங்களுக்கு எதிராக ஒரு வழியாக வருவார்கள், ஆனால் அவர்கள் வேறுபட்ட ஏழு வழிகளில் ஓடுவார்கள்.
8 “கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் களஞ்சியங்களை நிரப்புவார். நீங்கள் செய்கிற அனைத்தையும் அவர் ஆசீர்வதிப்பார். உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர் உங்களுக்குக் கொடுத்த நாட்டை ஆசீர்வதிப்பார். 9 கர்த்தர் உங்களைத் தமக்கென்று சிறந்த பரிசுத்த ஜனங்களாக, தாம் வாக்குறுதி அளித்தபடி ஆக்குவார். நீங்கள் உங்களது தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் கர்த்தர் இதனைச் செய்வார். 10 பிறகு எல்லா நாட்டினரும் கர்த்தருடைய பெயரால் நீங்கள் அழைக்கப்படுவதைக் கேட்பார்கள். அவர்கள் உங்களுக்குப் பயப்படுவார்கள்.
11 “கர்த்தர் உங்களுக்கு அநேக நன்மைகளைச் செய்வார். அவர் உங்களுக்குப் பல பிள்ளைகளைத் தருவார். உங்களது பசுக்களுக்குப் பல கன்றுகளை அவர் தருவார். உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்த நிலத்தில் அவர் உங்களுக்கு நல்ல விளைச்சலைத் தருவார். 12 கர்த்தர், தமது வளமான ஆசீர்வாதங்களை வைத்துள்ள சேமிப்பு அறையினைத் திறப்பார். உங்கள் நிலத்திற்குத் தேவையான மழையைச் சரியான காலத்தில் அனுப்புவார். நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார். நீங்கள் பல நாடுகளுக்குக் கடன்கொடுக்கிற அளவிற்குப் பணம் பெறுவீர்கள். அவர்களிடமிருந்து எதையும் கடனாகப் பெறுகிற தேவை உங்களுக்கு நேரிடாது. 13 கர்த்தர் உங்களை வாலாக இல்லாமல் தலையாக ஆக்குவார். நீங்கள் கீழாக இல்லாமல் மேலாவீர்கள். இன்று நான் சொல்கிறபடி உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளைக் கேட்டால், இது நிகழும். நீங்கள் கவனமாக இக்கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். 14 நான் இன்று உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளிலிருந்து நீங்கள் விலகிப் போகாமல் இருக்க வேண்டும். நீங்கள் வலது புறமாகவோ, இடது புறமாகவோ திரும்பவேண்டாம். நீங்கள் மற்ற பொய்த் தெய்வங்களைப் பின்பற்றி அவற்றுக்கு சேவை செய்யக்கூடாது.
நீங்கள் வாழ வேண்டிய வழி
17 கர்த்தருக்காக நான் உங்களுக்கு இதைச் சொல்கிறேன். நான் எச்சரிப்பதாவது: நம்பிக்கை அற்றவர்களைப் போன்று நீங்களும் தொடர்ந்து வாழக் கூடாது. அவர்களது சிந்தனைகள் பயனற்றவை. 18 அந்த மக்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். அவர்களின் மனம் மூடியது, இதயம் கடினமானது, அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. எனவே தேவன் கொடுக்கிற வாழ்க்கை அவர்களுக்கு இல்லை. 19 அவர்கள் தங்கள் வெட்க உணர்வை இழந்துவிட்டனர். தீயவற்றைச் செய்வதற்காகவே தங்கள் வாழ்க்கையைப் பயன்படுத்துகிறார்கள். எல்லா வகையான கெட்ட செயல்களையும் செய்ய அவர்கள் மேலும், மேலும் விரும்புகிறார்கள். 20 ஆனால் நீங்கள் கிறிஸ்துவின் மூலமாகக் கற்றுக் கொண்டவை அந்தக் கெட்டவற்றைப் போன்றதல்ல. 21 அவரைப் பற்றி உங்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது எது என்பது எனக்குத் தெரியும். நீங்கள் அவருக்குள் இருக்கிறீர்கள். எனவே உங்களுக்கு உண்மையானது கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆமாம், அந்த உண்மை இயேசுவிடம் உள்ளது. 22 உங்கள் பழைய வாழ்க்கை முறைகளை விட்டுவிடவும், எப்போதும் தீமையைத் தருகிற பழைய குணங்களை ஒதுக்கவும் உங்களுக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. அது மேலும் மோசமாகிவிட்டது. ஏனென்றால் அவர்கள் தீயவற்றால் முட்டாளாக்கப்பட்டு அவற்றையே புதுப்பிக்க விரும்புகிறார்கள். 23 ஆனால் நீங்கள் உங்கள் இதயத்தில் புதியவர்களாகும்படி கற்பிக்கப்பட்டிருக்கிறீர்கள். 24 நீங்கள் புதிய மனிதனாக இருக்கக் கற்பிக்கப்பட்டிருக்கிறீர்கள். அந்தப் புதிய மனிதன் தேவனைப்போன்று செய்யப்படுகிறான். உண்மையான நீதியிலும், பரிசுத்தத்திலும் இருக்கிறான்.
25 எனவே நீங்கள் பொய் சொல்வதை நிறுத்துங்கள். ஒருவருக்கொருவர் எப்பொழுதும் உண்மையையே பேசுங்கள். ஏனென்றால் நாம் அனைவரும் ஒரே சரீரத்தின் பல்வேறு உறுப்புகளாகச் சேர்ந்திருக்கிறோம். 26 உங்கள் கோபம் உங்களைப் பாவம் செய்யக் கொண்டுசெல்லுமளவு அனுமதிக்காதீர்கள். நாள் முழுவதும் கோபம் உடையவர்களாக இருக்காதீர்கள். 27 உங்களை வீழ்த்துவதற்குரிய வழியைப் பிசாசுக்குக் கொடுக்க வேண்டாம். 28 ஒருவன் திருடுகின்றவனாக இருந்தால் தன் திருட்டை நிறுத்துவானாக. அவன் வேலை செய்யத் தொடங்கட்டும். அவன் தனது கைகளை நல்ல செயல்களைச் செய்வதற்குப் பயன்படுத்தட்டும். பிறகு ஏழைகளோடு பகிர்ந்துகொள்ள அவனுக்கென்று சில இருக்கும்.
29 நீங்கள் பேசும்போது தீயவற்றைச் சொல்லாதீர்கள். ஆனால் மற்றவர்களுக்குப் பயன் தரத்தக்கதும், மற்றவர்களைப் பலமுள்ளதாக்குகிறவைகளை மட்டும் பேசுங்கள். அதனால் உங்கள் பேச்சைக் கேட்பவர்களுக்கு உங்கள் பேச்சு ஆசீர்வாதங்களைக் கொண்டு வரும். 30 பரிசுத்த ஆவியானவரைச் சோகப்படுத்தாதீர்கள். நீங்கள் தேவனுக்குரியவராக இருக்கிறீர்கள் என்பதற்கு ஆவியானவரே சான்றாக உள்ளார். தேவன் உங்களுக்குச் சரியான நேரத்தில் விடுதலை தருவார் என்பதைக் காட்டவே தேவன் பரிசுத்த ஆவியானவரை உங்களுக்குத் தந்துள்ளார். 31 கசப்பும், கோபமும், மூர்க்கமும் அடையாதீர்கள். கோபத்தில் சத்தம் இடாதீர்கள். கடுஞ்சொற்களைச் சொல்லாதீர்கள். பாவங்களை செய்யாதீர்கள். 32 ஒருவருக்கொருவர் தயவாயும், மனஉருக்கமாயும் இருங்கள். கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களை மன்னித்துவிடுவதைப்போல நீங்களும் மற்றவர்களை மன்னித்துவிடுங்கள்.
5 நீங்கள் தேவனால் நேசிக்கப்படுகிற அவரது பிள்ளைகள். எனவே தேவனைப் போல ஆக முயலுங்கள். 2 அன்புக்குரிய ஒரு வாழ்க்கையை வாழுங்கள். கிறிஸ்து நம்மை நேசித்தது போலவே மற்றவர்களை நேசியுங்கள். கிறிஸ்து தம்மையே நமக்கு ஒப்புக்கொடுத்துவிட்டார். இனிய நறுமணம் உடைய காணிக்கையாகவும், பலியாகவும் தேவனுக்குத் தம்மைத் தந்தார்.
2008 by World Bible Translation Center