Revised Common Lectionary (Complementary)
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த ஒரு துதிப் பாடல்.
65 சீயோனின் தேவனே, நான் உம்மைத் துதிக்கிறேன்.
நான் வாக்குறுதி பண்ணினவற்றை உமக்குத் தருவேன்.
2 நீர் செய்த காரியங்களைக் குறித்து நாங்கள் கூறுவோம்.
நீர் எங்கள் ஜெபங்களைக் கேட்கிறீர்.
உம்மிடம் வருகிற ஒவ்வொருவரின் ஜெபத்தையும் நீர் கேட்கிறீர்.
3 எங்கள் பாவங்கள் மிகுந்த பாரமாயிருக்கையில்
அப்பாவங்களை நீர் மன்னித்தருளும்.
4 தேவனே, நீர் உம் ஜனங்களைத் தேர்ந்தெடுத்தீர்.
நாங்கள் உமது ஆலயத்தில் வந்து தொழுதுகொள்ளுமாறு நீர் எங்களைத் தேர்ந்தெடுத்தீர்.
நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்!
உமது பரிசுத்த இடமாகிய உமது ஆயலயத்தில் எல்லா அதிசயக் காரியங்களையும் நாங்கள் பெற்றோம்.
5 தேவனே, நீர் எங்களைக் காப்பாற்றும்.
நல்லோர் உம்மிடம் ஜெபம் செய்வார்கள், நீர் அவர்கள் ஜெபத்திற்குப் பதிலளிப்பீர்.
அவர்களுக்குப் பல அதிசயமான காரியங்களைச் செய்வீர்.
உலகத்தின் பல பாகங்களில் வாழ்வோர் உம்மை நம்புவார்கள்.
6 தேவன் தமது வல்லமையால் மலைகளை உண்டாக்கினார்.
அவரது வல்லமையை நம்மை சுற்றிலும் நாம் காண்கிறோம்.
7 சீறும் கடலை தேவன் அமைதியாக்கினார்.
“சமுத்திரம்” போல ஜனங்களை தேவன் பூமியில் உண்டாக்கினார்.
8 நீர் செய்யும் அதிசயமான காரியங்களைக் கண்டு உலகமெங்கும் வாழும் ஜனங்கள் வியப்படைவார்கள்.
சூரிய உதயமும், சூரியன் மறைவும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியூட்டும்.
9 நீர் நிலத்தைப் பாதுகாக்கிறீர்.
நீருற்றி, தாவரங்கள் வளர வகைசெய்கிறீர்.
தேவனே, நீர் நீருற்றுகளில் தண்ணீரை நிரப்பி, பயிர்களை வளரச்செய்கிறீர்.
இவ்வாறு நீர் இதனைச் செய்கிறீர்:
10 உழுத நிலங்களில் மழை தண்ணீரை ஊற்றுகிறீர்.
வயல்களை தண்ணீரால் நனையப் பண்ணுகிறீர்.
நிலத்தை மழையால் மிருதுவாக்குகிறீர்.
இளம்பயிர்கள் வளர்ந்தோங்கச் செய்கிறீர்.
11 நல்ல அறுவடையால் புத்தாண்டை ஆரம்பிக்கிறீர்.
பயிர்களால் வண்டிகளில் பாரமேற்றுகிறீர்.
12 பாலைவனங்களும் மலைகளும் புற்களால் நிரம்பின.
13 புல்வெளிகளில் ஆட்டு மந்தைகள் நிரம்பின.
பள்ளத்தாக்குகளில் தானியங்கள் நிரம்பின.
ஒவ்வொருவரும் மகிழ்ச்சியால் ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர்.
இஸ்ரவேல் காப்பாற்றப்படும்
52 எழும்பு, சீயோனே எழும்பு,
மகிமையான ஆடைகளை அணிந்துகொள்!
பலத்தை எடுத்துக்கொள்! பரிசுத்தமான எருசலேமே எழுந்து நில்!
தேவனைப் பின்பற்ற ஒப்புக்கொள்ளாத ஜனங்கள் மீண்டும் உனக்குள் நுழைய முடியாது!
அந்த ஜனங்கள் சுத்தமும் பரிசுத்தமும் இல்லாதவர்கள்.
2 தூசியை உதறுங்கள்!
உங்கள் அற்புதமான ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள்!
எருசலேமே, சீயோனின் மகளே, நீங்கள் சிறையில் இருந்தீர்கள்.
ஆனால் இப்பொழுது, உங்கள் கழுத்தில் சுற்றிக்கிடந்த சங்கிலிகளில் இருந்து விடுதலை அடைந்தீர்கள்!
3 கர்த்தர் கூறுகிறார், “நீங்கள் காசுக்காக விற்கப்படவில்லை.
எனவே, நான் உன்னை விடுதலை செய்ய பணத்தைப் பயன்படுத்தமாட்டேன்.”
4 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார் “என் ஜனங்கள் முதலில் எகிப்துக்கு வாழச் சென்றனர். பிறகு, அவர்கள் அடிமைகளானார்கள். பின்னர், அசீரியா அவர்களை அடிமைப்படுத்தினான். 5 இப்போது என்ன நடந்தது என்று பார்! இன்னொரு நாடு எனது ஜனங்களை எடுத்துக்கொண்டது. என் ஜனங்களை எடுத்துக்கொள்ள அவர்கள் எதையும் கொடுக்கவில்லை. இந்த நாடு என் ஜனங்களை ஆளுகின்றனர், அவர்களைப் பார்த்து நகைக்கின்றனர். அந்த ஜனங்கள் எப்பொழுதும் என்னையும் என் நாமத்தையும் ஏளனம் செய்கிறார்கள்.”
6 கர்த்தர் கூறுகிறார், “இது நடந்திருக்கிறது. எனவே, என் ஜனங்கள் என்னைப்பற்றி கற்றுக்கொள்வார்கள். நான் யாரென்று என் ஜனங்கள் அறிவார்கள். என் ஜனங்கள் என் நாமத்தை அறிவார்கள். பிறகு அவர்கள் இதைச் சொல்கிறவர் நானே அவரென்று அறிவார்கள்.”
தீர்ப்பளிக்கும் வசனங்கள்
44 பிறகு இயேசு உரத்த குரலில், “என்னில் விசுவாசம் வைக்கிறவன் எவனோ அவன், என்னை அனுப்பிய தேவனிடமும் விசுவாசம் வைப்பான். 45 என்னைப் பார்க்கிறவன் எவனோ, அவனே, என்னை அனுப்பிய தேவனையும் பார்க்கிறவனாகிறான். 46 நானே ஒளி, நான் இந்த உலகத்துக்கு வந்திருக்கிறேன். ஆகவே, என்னில் நம்பிக்கை வைக்கிற ஒவ்வொருவனும் இருளில் தங்கமாட்டான்.
47 “நான் மக்களுக்குத் தீர்ப்பளிப்பதற்காக இந்த உலகத்துக்கு வரவில்லை. உலகத்தில் உள்ள மக்களைப் பாதுகாக்கவே வந்திருக்கிறேன். எனவே, என் வார்த்தைகளைக் கேட்டும் என்னை நம்பாமல் போகிறவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை. 48 என்னை நம்ப மறுக்கிறவர்களையும் நான் சொல்பவற்றை ஏற்றுக்கொள்ளாதவர்களையும் நியாயந்தீர்க்க ஒரு நீதிபதி உண்டு. அதுதான் நான் சொன்ன உபதேசங்கள். அவை இறுதி நாளில் அவர்களை நியாயம்தீர்க்கும். 49 ஏனென்றால் நான் சொன்ன உபதேசங்கள் என்னிடமிருந்து வந்தவையல்ல. நான் சொன்னவையும் உபதேசித்தவையும் என்னை அனுப்பிய என் பிதாவாகிய தேவன் எனக்குச் சொன்னவையாகும். 50 என் பிதாவின் கட்டளைகள் நித்திய ஜீவனுக்குரியவை என்பதை அறிவேன். ஆகையால் நான் சொல்கிறவைகளை என் பிதா எனக்குச் சொன்னபடியே சொல்கிறேன்” என்றார்.
2008 by World Bible Translation Center