Revised Common Lectionary (Complementary)
ஷீன்
161 எக்காரணமுமின்றி வல்லமையுள்ள தலைவர்கள் என்னைத் தாக்கினார்கள்.
ஆனால் நான் உமது சட்டத்திற்கு மட்டுமே பயந்து, அதை மதிக்கிறேன்.
162 கர்த்தாவே, மிகுந்த பொக்கிஷத்தைக் கண்டெடுத்த மனிதன் பெறும்
சந்தோஷத்தைப்போல உமது வார்த்தைகள் என்னை மகிழ்விக்கின்றன.
163 நான் பொய்களை வெறுக்கிறேன்!
நான் அவற்றை அருவருக்கிறேன்!
ஆனால் கர்த்தாவே, நான் உமது போதனைகளை நேசிக்கிறேன்.
164 உமது நல்ல சட்டங்களுக்காக
ஒரு நாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன்.
165 உமது போதனைகளை நேசிக்கும் ஜனங்கள் உண்மையான சமாதானத்தைக் காண்பார்கள்.
அந்த ஜனங்களை வீழ்த்த எதனாலும் முடியாது.
166 கர்த்தாவே, நீர் என்னைக் காப்பாற்றுவீரெனக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தேன்.
167 நான் உமது உடன்படிக்கையைப் பின்பற்றினேன்.
கர்த்தாவே, நான் உமது சட்டங்களை மிகவும் நேசிக்கிறேன்.
168 நான் உமது உடன்படிக்கைக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிகிறேன்.
கர்த்தாவே, நான் செய்தவற்றையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.
நாபோத்தின் திராட்சை தோட்டம்
21 சமாரியாவில் ஆகாப்பின் அரண்மனை இருந்தது. அதனருகில் ஒரு திராட்சை தோட்டமும் இருந்தது. அதன் உரிமையாளன் யெஸ்ரயேலியனாகிய நாபோத். 2 ஒரு நாள் ராஜா அவனிடம், “உனது வயலை எனக்குக்கொடு. அதனைக் காய்கறி தோட்டமாக்க வேண்டும். இது என் அரண்மனைக்கருகில் உள்ளது. உனக்கு அந்த இடத்தில் வேறு திராட்சைத் தோட்டத்தைத் தருவேன் அல்லது நீ விரும்பினால் பணம் தருவேன்” என்றான்.
3 அதற்கு நாபோத், “நான் தரமாட்டேன். இது என் குடும்பத்திற்கு உரியது” என்றான்.
4 எனவே ஆகாப் அரண்மனைக்குப்போய் நாபோத் மீது கோபம் கொண்டான். அவன் சொன்னதை ராஜா விரும்பவில்லை. நாபோத், “என் குடும்பத் தோட்டத்தைத் தரமாட்டேன்” எனக்கூறியது எரிச்சலைத் தந்தது. படுக்கையில் படுத்துக் கொண்டு உண்ண மறுத்தான்.
5 ஆகாபின் மனைவி யேசபேல் அவனிடம், “ஏன் நீங்கள் குலைந்து போனீர்கள்? ஏன் நீங்கள் உண்ண மறுக்கிறீர்கள்?” என்று கேட்டாள்.
6 அதற்கு அவன், “நான் நாபோத்திடம் திராட்சைத் தோட்டத்தைக் கேட்டேன். அதற்குரிய முழு விலையோ, அல்லது வேறு வயலோ தருவதாகச் சொன்னேன். ஆனால் அவன் மறுத்துவிட்டான்” என்றான்.
7 அவளோ, “நீங்கள் இஸ்ரவேலின் ராஜா! எழுந்திருங்கள். சாப்பிடுங்கள். நான் அந்த வயலை வாங்கித்தருவேன்” என்றாள்.
8 பிறகு அவள் சில கடிதங்களை எழுதி ராஜாவின் கையெழுத்திட்டு முத்திரையும் அடித்தாள். பின் அவற்றை மூப்பர்களிடமும் நாபோத்தைப்போன்று அதே பட்டணத்தில் இருந்த முக்கிய மனிதர்களிடமும் அனுப்பினாள். 9 அக்கடிதத்தில்,
“நீங்கள் உபவாசம் பற்றி அறிவியுங்கள். பின் அனைவரையும் அழையுங்கள். அதில் நாபோத்தைப்பற்றி பேச வேண்டும். 10 அவன் மீது பொய்க்குற்றம் சாட்ட இரண்டு ஏமாற்றுக்காரர்கள் வேண்டும். அவன் ராஜாவுக்கும் தேவனுக்கும் எதிராகப் பேசினான் என்று கூறவேண்டும். பின் அவனை ஊருக்கு வெளியே கல்லெறிந்த கொல்லவேண்டும்” என்று எழுதியிருந்தது.
11 எனவே, மூப்பர்களும் முக்கியமானவர்களும் இக்கட்டளைக்கு அடிபணிந்தனர். 12 தலைவர்கள் உண்ணாநோன்பு நாளை அறிவித்தனர். அன்று ஒரு கூட்டத்திற்கு அழைத்தனர். நாபோத்தைத் தனியாக நிறுத்தினர். 13 பின் இரு ஏமாற்றுக்காரர்கள் ஜனங்களிடம் நாபோத் தேவனுக்கு எதிராகவும் ராஜாவுக்கு எதிராகவும் பேசினான் என்றனர். எனவே, அவனை ஊருக்கு வெளியே கொண்டுபோய் கல்லெறிந்து கொன்றனர். 14 அவர்கள் பிறகு யேசபேலுக்கு, “நாபோத் கொல்லப்பட்டான்” என்ற செய்தியை அனுப்பி வைத்தனர்.
15 அவள் இதனை அறிந்ததும் ஆகாபிடம், “நாபோத் மரித்துப்போனான். இப்போது உங்களுக்கு விருப்பமான தோட்டத்தை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றாள். 16 அவனும் அதனைச் சொந்தமாக்கிக் கொண்டான்.
9 கிறிஸ்துவுக்குள், உங்கள் சகோதர சகோதரிகளுடன் அன்பாய் இருங்கள் என்று உங்களுக்கு எழுதவேண்டியதில்லை. ஒருவரை ஒருவர் நேசிக்க தேவன் ஏற்கெனவே உங்களுக்குப் போதித்திருக்கிறார். 10 மக்கதோனியாவில் உள்ள எல்லா சகோதரர்களிடமும், சகோதரிகளிடமும் அன்பு செலுத்துகிறீர்கள். மேலும், மேலும் அன்பு செய்யுமாறு உங்களை ஊக்கப்படுத்துகிறோம்.
11 சமாதானத்துக்குரிய வாழ்க்கையை வாழ நீங்கள் எல்லா செயல்களையும் செய்யுங்கள். உங்கள் சொந்தக் காரியங்களில் கவனமாய் இருங்கள், சொந்த வேலைகளைச் செய்யுங்கள். இவற்றையெல்லாம் செய்யுமாறு ஏற்கெனவே சொல்லி இருக்கிறோம். 12 இவற்றை எல்லாம் நீங்கள் செய்யும்போது விசுவாசமற்ற மக்கள் உங்கள் வாழ்வு முறையை மதிப்பார்கள். உங்கள் தேவைக்கு வேறு எவரையும் சார்ந்திருக்கவேண்டிய அவசியம் இல்லாதிருக்கும்.
2008 by World Bible Translation Center