Revised Common Lectionary (Complementary)
5 பிறகு எரேமியா தீர்க்கதரிசி அனனியா தீர்க்கதரிசிக்கு பதில் சொன்னான். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் நின்று கொண்டிருந்தனர். எரேமியாவின் பதிலை ஆசாரியர்களும் அங்குள்ள அனைத்து ஜனங்களும் கேட்க முடிந்தது. 6 எரேமியா அனனியாவிடம் “ஆமென்! கர்த்தர் இவற்றைச் செய்வார் என்று நான் உண்மையில் நம்புகிறேன்! நீ பிரச்சாரம் செய்கிற இச்செய்தியை கர்த்தர் உண்மையாகும்படி செய்வார். பாபிலோனிலிருந்து கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள பொருட்களை எல்லாம் திரும்பக் கொண்டுவருவார் என்று நம்புகிறேன். தங்கள் வீடுகளிலிருந்து பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட அனைத்து ஜனங்களையும் இந்த இடத்திற்குத் திரும்பவும் கர்த்தர் கொண்டுவருவார் என்று நான் நம்புகிறேன்.
7 “ஆனால் நான் சொல்லவேண்டியதை கவனி, அனனியா, ஜனங்கள் அனைவருக்கும் நான் என்ன சொல்கிறேன் என்பதையும் கவனி. 8 நீயும் நானும் தீர்க்கதரிசிகளாக வருவதற்கு வெகுகாலத்திற்கு முன்பு சில தீர்க்கதரிசிகள் இருந்தனர். போர், பசி, பயங்கரமான நோய் ஆகியவை பல நாடுகளுக்கும், பெரும் இராஜ்யங்களுக்கும் ஏற்படும் என்று அவர்கள் பிரச்சாரம் செய்தனர். 9 ஆனால் பிரச்சாரம் செய்கிற தீர்க்கதரிசி நமக்கு சமாதானம் வரும் என்று சொன்னால் அவன் கர்த்தரால் அனுப்பப்பட்டவனா என்பதை நாம் சோதித்து பார்க்க வேண்டும். தீர்க்கதரிசி சொன்ன செய்தி உண்மையானால் பிறகு ஜனங்கள் அவன் உண்மையில் கர்த்தரால் அனுப்பப்பட்டவன் என்பதை அறிவார்கள்.”
எஸ்ராகியனாகிய ஏத்தானின் ஒரு மஸ்கீல்.
89 கர்த்தருடைய அன்பைக்குறித்து என்றைக்கும் நான் பாடுவேன்.
என்றென்றுமுள்ள அவரது உண்மையைப்பற்றி நான் பாடுவேன்.
2 கர்த்தாவே, உமது அன்பு என்றென்றும் நிலைக்கும் என்று உண்மையாகவே நான் நம்புகிறேன்.
உமது உண்மை வானத்தைப்போலத் தொடர்கிறது.
3 தேவன், “நான் தேர்ந்தெடுத்த ராஜாவோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டேன்.
4 தாவீதே, உன் குடும்பம் என்றென்றும் நிலைத்திருக்கும்படிச் செய்வேன்.
என்றென்றைக்கும் உமது அரசு தொடருமாறு செய்வேன்” என்றார்.
15 தேவனே, உம்மை நேர்மையாகப் பின்பற்றுவோர் உண்மையிலேயே மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அவர்கள் உமது தயவின் ஒளியில் வாழ்கிறார்கள்.
16 உமது நாமம் அவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக்கும்.
அவர்கள் உமது நன்மையைத் துதிக்கிறார்கள்.
17 நீரே அவர்களின் வியக்கத்தக்க பெலன்.
அவர்களுடைய வல்லமை உம்மிடமிருந்து வரும்.
18 கர்த்தாவே, நீரே எமது பாதுகாவலர்.
இஸ்ரவேலின் பரிசுத்தமானவரே எங்கள் ராஜா.
12 ஆகையால் நீங்கள் சரீரங்களின் இச்சைப்படி பாவத்திற்குக் கீழ்ப்படிய அனுமதிக்காதீர்கள். சாவுக்கு ஏதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாமல் இருப்பதாக. 13 நீங்கள் உங்கள் சரீரத்தின் பாகங்களை அநீதியின் கருவிகளாகப் பாவத்திற்கு ஒப்புக் கொடுக்காதீர்கள். ஆனால் நீங்கள் உங்களை இறந்தவர்களிடமிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். உங்கள் சரீர உறுப்புகளை நீதிக்குரிய கருவிகளாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள். 14 பாவம் உங்களது எஜமானன் அல்ல. ஏனென்றால் நீங்கள் சட்ட விதிகளின் கீழ்ப்பட்டவர்கள் அல்லர். நீங்கள் இப்போது தேவனுடைய கிருபைக்குக் கீழ்ப்பட்டவர்களே.
நீதிக்கு அடிமைகள்
15 அதனால் இப்போது என்ன செய்யலாம்? நாம் சட்டவிதிக்குக் கீழ்ப்படாமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருப்பதால் பாவம் செய்யலாமா? 16 கூடாது. ஒருவனுக்குக் கீழ்ப்படிய உங்களை நீங்கள் ஒப்படைப்பீர்கள். எனவே நிஜமாகவே அவனுக்கு அடிமையாவீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். நீங்கள் கீழ்ப்படியும் அவனே எஜமானன் ஆவான். உங்களால் பாவத்தைப் பின்பற்றலாம் அல்லது தேவனுக்குக் கீழ்ப்படியலாம். ஆத்துமாவின் இறப்புக்கே பாவம் வழிவகுக்கிறது. ஆனால் தேவனுக்குக் கீழ்ப்படிவதால் அவருக்கேற்ற நீதிமான்களாகிறீர்கள். 17 கடந்த காலத்தில் நீங்கள் பாவத்துக்கு அடிமைகளாக இருந்தீர்கள். பாவம் உங்களைக் கட்டுப்படுத்தியது. இப்பொழுது நீங்கள் உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேசத்திற்கு முழுமனதோடு கீழ்ப்படிகிறீர்கள். இதற்காக தேவனுக்கு நன்றி சொல்லுங்கள். 18 நீங்கள் பாவத்திலிருந்து விடுதலை ஆனீர்கள். இப்போது நீங்கள் நன்மைக்கே அடிமையானீர்கள். 19 இதை நான் மக்களுக்குத் தெரிந்த ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன். ஏனென்றால் இதனைப் புரிந்துகொள்வது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கும். முன்பு நீங்கள் உங்கள் சரீரத்தின் உறுப்புகளை அசுத்தத்திற்கும், அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்தீர்கள். அதைப் போலவே இப்போது நீங்கள் உங்கள் உடலுறுப்புகளை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்.
20 முந்தைய காலத்தில் நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாக இருந்தீர்கள். அப்போது நல் வாழ்வு உங்களைக் கட்டுப்படுத்த இயலவில்லை. 21 நீங்கள் பாவம் செய்தீர்கள். இப்போது அவற்றுக்காக வெட்கப்படுகின்றீர்கள். அதனால் உங்களுக்கு என்ன பலன்? அதனால் மரணமே கிடைத்தது. 22 ஆனால் இப்போது பாவத்தில் இருந்து விலகியிருக்கிறீர்கள். தேவனுடைய அடிமையாய் இருக்கிறீர்கள். இதனால் தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை உருவாக்குகிறீர்கள். இது இறுதியில் நித்திய வாழ்வைத் தரும். 23 பாவத்தின் சம்பளம் மரணம். பாவம் செய்தவர்களுக்கு அதுவே பலன். ஆனால் தேவன் தம் மக்களுக்கு இலவசமான வரத்தைக் கொடுக்கிறார். அது நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள்ளான நித்திய வாழ்வே ஆகும்.
உங்களை ஏற்றுக்கொள்பவர்களை தேவன் ஆசீர்வதிப்பார்
(மாற்கு 9:41)
40 “உங்களை ஏற்றுக்கொள்கிறவன் என்னையும் ஏற்றுக்கொண்டவன். என்னை ஏற்றுக்கொள்கிறவன், என்னை அனுப்பியவரையும் (தேவனையும்) ஏற்றுக்கொண்டவன். 41 தீர்க்கதரிசியைக் கண்டு அவரை ஒப்புக்கொள்கிறவன், தீர்க்கதரிசி பெறும் வெகுமதியைப் பெறுவான். நல்லவரை அவர்கள் நல்லவர்கள் என்பதற்காக ஏற்றுக்கொள்கிறவன், நல்லவர்களுக்குக் கிடைக்கும் வெகுமதியைப் பெறுவான். 42 யாரேனும் என்னைப் பின்பற்றுகிறவர்களுக்குச் சிறிய அளவேனும் உதவினால், அவன் தக்க வெகுமதியை நிச்சயம் பெறுவான். என்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு ஒரு குவளைத் தண்ணீர் கொடுத்திருந்தாலும், அவனுக்குத் தக்க வெகுமதி நிச்சயம் கொடுக்கப்படும்.”
2008 by World Bible Translation Center