Revised Common Lectionary (Complementary)
எஸ்ராகியனாகிய ஏத்தானின் ஒரு மஸ்கீல்.
89 கர்த்தருடைய அன்பைக்குறித்து என்றைக்கும் நான் பாடுவேன்.
என்றென்றுமுள்ள அவரது உண்மையைப்பற்றி நான் பாடுவேன்.
2 கர்த்தாவே, உமது அன்பு என்றென்றும் நிலைக்கும் என்று உண்மையாகவே நான் நம்புகிறேன்.
உமது உண்மை வானத்தைப்போலத் தொடர்கிறது.
3 தேவன், “நான் தேர்ந்தெடுத்த ராஜாவோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டேன்.
4 தாவீதே, உன் குடும்பம் என்றென்றும் நிலைத்திருக்கும்படிச் செய்வேன்.
என்றென்றைக்கும் உமது அரசு தொடருமாறு செய்வேன்” என்றார்.
15 தேவனே, உம்மை நேர்மையாகப் பின்பற்றுவோர் உண்மையிலேயே மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அவர்கள் உமது தயவின் ஒளியில் வாழ்கிறார்கள்.
16 உமது நாமம் அவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக்கும்.
அவர்கள் உமது நன்மையைத் துதிக்கிறார்கள்.
17 நீரே அவர்களின் வியக்கத்தக்க பெலன்.
அவர்களுடைய வல்லமை உம்மிடமிருந்து வரும்.
18 கர்த்தாவே, நீரே எமது பாதுகாவலர்.
இஸ்ரவேலின் பரிசுத்தமானவரே எங்கள் ராஜா.
பொய்த் தீர்க்கதரிசி அனனியா
28 யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவின் ஆட்சியாண்டான நாலாம் வருஷம் ஐந்தாம் மாதம், அனனியா என்னும் தீர்க்கதரிசி என்னிடம் பேசினான். அனனியா அசூர் என்பவனின் குமாரன். அனனியா கிபியோன் என்னும் நகரத்தினன். அனனியா என்னிடம் பேசும்போது, அவன் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்தான். ஆசாரியர்களும் மற்ற ஜனங்களும் அங்கு இருந்தனர். அனனியா சொன்னது இதுதான்: 2 “சர்வ வல்லமையுள்ள கர்த்தர், இஸ்ரவேல் ஜனங்களின் தேவன் சொல்கிறார்: ‘யூதா ஜனங்களின் மேல் பாபிலோன் ராஜாவால் போடப்பட்ட நுகத்தை நான் உடைப்பேன். 3 இரண்டு ஆண்டுகள் முடிவதற்கு முன்னால், பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்து எடுத்துச்சென்ற எல்லாப் பொருட்களையும் திரும்பக் கொண்டுவருவேன். நேபுகாத்நேச்சார் அப்பொருட்களை பாபிலோனுக்கு எடுத்துச் சென்றிருக்கிறான். ஆனால் நான் அப்பொருட்களை இங்கே எருசலேமிற்குக் கொண்டு வருவேன். 4 நான் யூதாவின் ராஜாவாகிய எகொனியாவையும் இந்த இடத்திற்குத் திரும்பக் கொண்டு வருவேன். எகொனியா யோயாக்கீமின் குமாரன், நேபுகாத்நேச்சார் பலவந்தப்படுத்தி வீட்டைவிட்டு அழைத்து பாபிலோனுக்குச் சென்ற ஜனங்கள் அனைவரையும் திரும்பக் கொண்டுவருவேன்’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. ‘எனவே யூதாவின் ஜனங்கள் மீது பாபிலோன் ராஜாவால் போடப்பட்ட நுகத்தை நான் உடைப்பேன்!’”
பாவமும் மன்னிப்பும்
(மத்தேயு 18:6-7,21-22; மாற்கு 9:42)
17 இயேசு தன் சீஷர்களை நோக்கி, “மக்கள் பாவம் செய்யும்படியான காரியங்கள் நிச்சயமாக நடக்கும். ஆனால் இது நடக்கும்படியாகச் செய்கிறவனுக்குத் தீமை விளையும் 2 பலவீனமான மனிதர்கள் பாவம் செய்யும்படியாகச் செய்கிற ஒருவனுக்குத் தீமை விளையும். அவன் கழுத்தில் அரைக்கிற கல்லைக் கட்டி அவனைக் கடலில் அமிழ்த்துவது அவனுக்கு நல்லதாக இருக்கும். 3 எனவே எச்சரிக்கையாக இருங்கள்!”
“உங்கள் சகோதரன் பாவம் செய்தால் அவனைக் கண்டியுங்கள். ஆனால் அவன் வருந்திப் பாவம் செய்வதை விட்டுவிட்டால், அவனை மன்னியுங்கள். 4 ஒரே நாளில் உங்கள் சகோதரன் ஏழுமுறை உங்களிடம் தவறு செய்தும் ஒவ்வொரு முறையும் உங்களிடம் மன்னிப்பு வேண்டினான் என்றால், நீங்கள் அவனை மன்னிக்க வேண்டும்” என்றார்.
2008 by World Bible Translation Center