Revised Common Lectionary (Complementary)
செமினீத்தால் நரம்புக் கருவிகளை இசைப்போரின் இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
6 கர்த்தாவே, கோபத்தில் என்னைக் கண்டிக்காதிரும்.
என் மீது கோபமடையாமலும் என்னைத் தண்டியாமலும் இரும்.
2 கர்த்தாவே, என்னிடம் தயவாயிரும். நான் நோயுற்றுத் தளர்ந்தேன்.
என்னைக் குணமாக்கும்!
என் எலும்புகள் நடுங்குகின்றன.
3 என் முழு உடம்பும் நடுங்குகிறது.
கர்த்தாவே, நீர் என்னைக் குணப்படுத்த எவ்வளவு காலம் நீடிக்கும்?
4 கர்த்தாவே, என்னை வலிமையாக்கும்.
நீர் தயவுள்ளவர், என்னைக் காப்பாற்றும்.
5 கல்லறையிலுள்ள மரித்த மனிதர்கள் உம்மை நினையார்கள்.
மரணத்தின் இடத்திலுள்ள ஜனங்கள் உம்மைத் துதிக்கமாட்டார்கள்.
எனவே என்னை நீர் குணமாக்கும்!
6 கர்த்தாவே, இரவு முழுவதும் நான் உம்மிடம் ஜெபம் செய்தேன்.
என் கண்ணீரால் என் படுக்கை நனைந்தது.
என் படுக்கையிலிருந்து கண்ணீர் சிந்துகின்றது.
உம்மை நோக்கி அழுவதால் நான் பெலனற்றுப்போகிறேன்.
7 எனது பகைவர்கள் எனக்குத் துன்பம் பல செய்தனர்.
வருத்தத்தால் என் துயரம் பெருகிற்று.
தொடர்ந்து அழுவதினால் என் கண்கள் சோர்ந்தன.
8 தீயோரே அகன்று போங்கள்!
ஏனெனில் கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்.
9 கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்.
கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்டு பதில் தந்தார்.
10 எனது எதிரிகள் எல்லோரும் மனமுடைந்து கலங்கினார்கள்.
ஏதோ திடீரென நிகழும், அவர்கள் வெட்கமுற்றுத் திரும்பிச் செல்வார்கள்.
எரேமியா தண்ணீர்க்குழியிலே போடப்படுகிறான்
38 அரச அதிகாரிகளில் சிலர் எரேமியாவின் பிரசங்கத்தை கேட்டனர். அவர்கள், மாத்தானின் குமாரனாகிய செப்பத்தியா, பஸ்கூரின் குமாரனாகிய கெதலியா, செலேமியாவின் குமாரனாகிய யூகால், மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூரும் ஆவார்கள். எரேமியா இச்செய்தியை அனைத்து ஜனங்களுக்கும் சொன்னான். 2 “இதுதான் கர்த்தர் சொல்கிறது: ‘எருசலேமில் வாழ்கிற ஒவ்வொருவரும் வாள் அல்லது பசி அல்லது பயங்கரமான நோயால் மரிப்பார்கள். ஆனால் பாபிலோனியப் படையிடம் சரண் அடைபவர்கள் பிழைத்துக்கொள்வார்கள். அந்த ஜனங்கள் தாம் உயிரோடு தப்பித்துக்கொள்வார்கள்.’ 3 இதுதான் கர்த்தர் சொல்கிறது: ‘இந்த எருசலேம் நகரமானது பாபிலோன் ராஜாவின் படையிடம் உறுதியாகக் கொடுக்கப்படும். அவன் இந்நகரத்தைக் கைப்பற்றுவான்.’”
4 பிறகு அந்த அரச அதிகாரிகள் ஜனங்களுக்கு எரேமியா சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்டு விட்டு சிதேக்கியா ராஜாவிடம் சென்றனர். அவர்கள் ராஜாவிடம், “எரேமியா சாகடிக்கப்பட வேண்டும். இந்த நகரத்தில் இன்னும் இருக்கிற வீரர்களை அவன் அதைரியப்படுத்திக் கொண்டிருக்கிறான். எரேமியா தான் சொல்லிக்கொண்டிருப்பவற்றால் ஒவ்வொருவரையும் அதைரியப்படுத்திக்கொண்டிருக்கிறான். எரேமியா நமக்கு நன்மை நிகழ்வதை விரும்பவில்லை. அவன் எருசலேம் ஜனங்களை அழித்து விட விரும்புகிறான்” என்றனர்.
5 எனவே, சிதேக்கியா ராஜா அந்த அதிகாரிகளிடம், “எரேமியா உங்கள் கட்டுபாட்டுக்குள் இருக்கிறான். உங்களைத் தடுக்க என்னால் எதுவும் செய்ய முடியாது” என்றான்.
6 எனவே, அந்த அதிகாரிகள் எரேமியாவைக் கொண்டுப்போய் மல்கியாவின் தண்ணீர்க்குழியில் அடைத்தனர். (மல்கியா ராஜாவின் குமாரன்). அந்த தண்ணீர்க்குழி ஆலயப் பிரகாரத்தில் ராஜாவின் காவலர்கள் தங்கும் இடத்தில் இருந்தது. அந்த அதிகாரிகள் எரேமியாவைக் கயிற்றில் கட்டி தண்ணீர்க்குழியில் இறக்கினார்கள். அந்த தண்ணீர்க்குழியில் தண்ணீர் எதுவுமில்லை. ஆனால் சேறு மட்டுமே இருந்தது. எரேமியா சேற்றுக்குள் புதைந்தான்.
7 ஆனால், எபெத்மெலேக் என்ற பெயருடையவன் எரேமியாவை தண்ணீர்க்குழியில் அடைத்ததைப்பற்றி கேள்விப்பட்டான். எபெத்மெலேக் எத்தியோப்பியாவிலிருந்து வந்தவன். அவன் ராஜாவின் வீட்டில் பிரதானியாக இருந்தான். சிதேக்கியா ராஜா பென்யமீன் வாசலில் இருந்தான். எனவே எபெத்மெலேக் ராஜாவின் வீட்டை விட்டுப் போய் வாசலில் உள்ள ராஜாவிடம் பேசப் போனான். 8-9 எபெத்மெலேக், “எனது பிரபுவே, ராஜாவே, அந்த அதிகாரிகள் கெட்ட வழியில் நடந்திருக்கிறார்கள். அவர்கள் தீர்க்கதரிசி எரேமியாவை மோசமாக நடத்துகிறார்கள். அவர்கள் அவனை தண்ணீர்க் குழியில் எறிந்துவிட்டனர். அங்கேயே பட்டினியால் மரிக்கவிடுவார்கள்” என்றான்.
10 பிறகு சிதேக்கியா ராஜா எத்திதோப்பியனான எபெத்மெலேக்கிற்கு ஒரு கட்டளை கொடுத்தான். இதுதான் கட்டளை: “எபெத்மெலேக், ராஜாவின் வீட்டிலிருந்து மூன்று பேரை உன்னோடு அழைத்துக்கொள். போய் எரேமியாவை அவன் மரிப்பதற்கு முன்பு தண்ணீர்க்குழியிலிருந்து வெளியே எடு.”
11 எனவே, எபெத்மெலேக் ஆட்களைத் தன்னோடு அழைத்தான். ஆனால் முதலில் அவன் ராஜாவின் வீட்டிலுள்ள சாமான் அறைக்குக் கீழுள்ள அறைக்குச் சென்றான். அவன் கிழிந்த பழைய புடவைகளையும், கந்தைத் துணிகளையும் எடுத்தான். பின்னர் தண்ணீர்க் குழியில் அத்துணிகளையும் கயிறுகளையும் இறக்கினான். 12 எத்திதோப்பியனான எபெத்மெலேக் எரேமியாவிடம், “இப்பழையத் துணிகளையும் கந்தைத்துணிகளையும் உன் கைகளுக்குக் கீழே கட்டிக் கொள். நாங்கள் உன்னை இழுக்கும்போது இந்தத் துணிகளை கைகளுக்கு இடையில் அடங்க வைத்துக்கொள். பிறகு, இந்தக் கயிறுகள் உன்னை சேதப்படுத்தாது” எனவே, எரேமியா எபெத்மெலேக் சொன்னபடிச் செய்தான். 13 அம்மனிதர்கள் எரேமியாவை வெளியே எடுத்தனர். எரேமியா ஆலயப் பிரகாரத்தில் காவல் சாலையின் முற்றத்தில் தங்கினான்.
5 இயேசு இந்தத் தமது பன்னிரண்டு சீஷர்களுக்கும் சில கட்டளைகளைப் பிறப்பித்தார். பின் அவர்களை மக்களுக்குப் பரலோக இராஜ்யத்தைப்பற்றிக் கூறுவதற்கு அனுப்பினார். இயேசு அவர்களிடம், “யூதர்களல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். 6 ஆனால் இஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) செல்லுங்கள். அவர்கள் காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள். 7 நீங்கள் சென்று, ‘பரலோக இராஜ்யம் விரைவில் வர இருக்கிறது’ என்று போதியுங்கள். 8 நோயுற்றவர்களைக் குணமாக்குங்கள். இறந்தவர்களுக்கு மீண்டும் உயிர் கொடுங்கள். தொழு நோயாளிகளைக் குணப்படுத்துங்கள். பிசாசு பிடித்தவர்களிடமிருந்து பிசாசுகளை விரட்டுங்கள். இவ்வல்லமைகளை உங்களுக்குத் தாராளமாய் வழங்குகிறேன். எனவே, மற்றவர்களுக்குத் தாராளமாய் உதவுங்கள். 9 உங்களுடன் தங்கம், வெள்ளி அல்லது செம்பு நாணயங்களை எடுத்துச் செல்லாதீர்கள். 10 பைகளைக் கொண்டு போகாதீர்கள். உங்கள் பயணத்திற்கு நீங்கள் அணிந்திருக்கும் உடையையும் காலணிகளையும் மட்டுமே எடுத்துச் செல்லுங்கள். ஊன்றுகோலை எடுத்துச் செல்லாதீர்கள். பணியாளனுக்குத் தேவையானவை கொடுக்கப்படவேண்டும்.
11 “நீங்கள் ஒரு நகரத்திலோ ஊரிலோ நுழையும்பொழுது, தகுதிவாய்ந்த மனிதரைக் கண்டு நீங்கள் அவ்விடத்தை விட்டு விலகிச் செல்லும்வரை அவருடன் தங்கி இருங்கள். 12 நீஙகள் அவர் வீட்டினுள் நுழையும்பொழுது ‘உங்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும்’ என்று சொல்லுங்கள். 13 அவ்வீட்டில் உள்ளவர்கள் உங்களை வரவேற்றால், உங்கள் சமாதானத்திற்கு அவர்கள் தகுதியுள்ளவர்கள். நீங்கள் அவர்களுக்கு விரும்பிய சமாதானம் அவர்களுக்குக் கிடைக்கட்டும். வீட்டிலுள்ளவர்கள் உங்களை வரவேற்காவிட்டால், உங்கள் சமாதானத்திற்கு அவர்கள் தகுதியுள்ளவர்களல்ல. அவர்களுக்கு நீங்கள் விரும்பிய சமாதானத்தைத் திரும்பப் பெறுங்கள். 14 ஒரு வீட்டிலுள்ளவர்களோ அல்லது நகரத்திலுள்ளவர்களோ உங்களை வரவேற்கவோ அல்லது உங்கள் பேச்சைக் கேட்கவோ மறுத்தால், அவ்விடத்தை விட்டு விலகுங்கள். உங்கள் கால்களில் படிந்த தூசியைத் தட்டிவிடுங்கள். 15 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். நியாயத்தீர்ப்பு நாளிலே சோதாம் மற்றும் கொமோரா ஆகிய ஊர்களுக்கு நேர்ந்ததைக் காட்டிலும் மோசமானது அவ்வூருக்கு நடக்கும்.
பிரச்சனைகளைப் பற்றிய எச்சரிக்கை
(மாற்கு 13:9-13; லூக்கா 21:12-17)
16 “கவனியுங்கள்! நான் உங்களை அனுப்புகிறேன். நீங்கள் ஓநாய்களுக்கிடையில் அகப்பட்ட வெள்ளாட்டினைப் போல இருப்பீர்கள். எனவே, பாம்புகளைப்போல சாதுரியமாய் இருங்கள். ஆனால் புறாவைப்போல கபடற்றவர்களாயிருங்கள். 17 மக்களிடம் எச்சரிக்கையாயிருங்கள். அவர்கள் உங்களைக் கைது செய்து கொண்டு போய் நீதிமன்றத்தில் ஒப்படைத்து விடுவார்கள். உங்களை (அவர்களது) ஜெப ஆலயங்களில் வைத்து சாட்டையால் அடிப்பார்கள். 18 ஆளுநர்களுக்கும் மன்னர்களுக்கும் யூதர் அல்லாதவர்களுக்கும் முன்னால் நிறுத்தப்படுவீர்கள். என்னிமித்தம் உங்களுக்கு மக்கள் இதைச் செய்வார்கள். அப்போது நீங்கள் என்னைப் பற்றி அம்மன்னர்களுக்கும் ஆளுநர்களுக்கும் யூதரல்லாத மக்களுக்கும் எடுத்துச் சொல்வீர்கள். 19 நீங்கள் கைது செய்யப்படும்பொழுது, எதைச் சொல்வது எப்படிச் சொல்வது என்று கவலைகொள்ளாதீர்கள். அந்தச் சமயத்தில் நீங்கள் பேச வேண்டியவை அருளப்படும். 20 அப்பொழுது உண்மையில் பேசுவது நீங்களாயிருக்கமாட்டீர்கள். உங்கள் பிதாவின் ஆவியானவர் உங்கள் மூலமாகப் பேசுவார்.
21 “சகோதரர்களே தமது சகோதரர்களுக்கு எதிராகத் திரும்பி அவர்களை மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள். தந்தையரே தம் பிள்ளைகளுக்கு எதிராகத் திரும்பி அவர்களை மரணத்துக்கு ஒப்புக் கொடுப்பார்கள். பிள்ளைகளே தமது பெற்றோர்களுக்கு எதிராகச் சண்டையிட்டு அவர்களை மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள். 22 நீங்கள் என்னைப் பின்பற்றுவதனிமித்தம் எல்லா மக்களும் உங்களை வெறுப்பார்கள். ஆனால், இறுதிவரை உறுதியாயிருக்கிறவன் இரட்சிக்கப்படுவான். 23 ஒரு நகரத்தில் நீங்கள் மோசமான முறையில் நடத்தப்பட்டால், வேறொரு நகரத்திற்குச் சென்றுவிடுங்கள். உங்களுக்கு நான் உண்மையைச் சொல்லுகிறேன், மனிதகுமாரன் வருகிறவரைக்கும், நீங்கள் எல்லா யூதர்களின் நகரங்களுக்கும் செல்ல முடியாது.
2008 by World Bible Translation Center