Revised Common Lectionary (Complementary)
செமினீத்தால் நரம்புக் கருவிகளை இசைப்போரின் இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
6 கர்த்தாவே, கோபத்தில் என்னைக் கண்டிக்காதிரும்.
என் மீது கோபமடையாமலும் என்னைத் தண்டியாமலும் இரும்.
2 கர்த்தாவே, என்னிடம் தயவாயிரும். நான் நோயுற்றுத் தளர்ந்தேன்.
என்னைக் குணமாக்கும்!
என் எலும்புகள் நடுங்குகின்றன.
3 என் முழு உடம்பும் நடுங்குகிறது.
கர்த்தாவே, நீர் என்னைக் குணப்படுத்த எவ்வளவு காலம் நீடிக்கும்?
4 கர்த்தாவே, என்னை வலிமையாக்கும்.
நீர் தயவுள்ளவர், என்னைக் காப்பாற்றும்.
5 கல்லறையிலுள்ள மரித்த மனிதர்கள் உம்மை நினையார்கள்.
மரணத்தின் இடத்திலுள்ள ஜனங்கள் உம்மைத் துதிக்கமாட்டார்கள்.
எனவே என்னை நீர் குணமாக்கும்!
6 கர்த்தாவே, இரவு முழுவதும் நான் உம்மிடம் ஜெபம் செய்தேன்.
என் கண்ணீரால் என் படுக்கை நனைந்தது.
என் படுக்கையிலிருந்து கண்ணீர் சிந்துகின்றது.
உம்மை நோக்கி அழுவதால் நான் பெலனற்றுப்போகிறேன்.
7 எனது பகைவர்கள் எனக்குத் துன்பம் பல செய்தனர்.
வருத்தத்தால் என் துயரம் பெருகிற்று.
தொடர்ந்து அழுவதினால் என் கண்கள் சோர்ந்தன.
8 தீயோரே அகன்று போங்கள்!
ஏனெனில் கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்.
9 கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்.
கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்டு பதில் தந்தார்.
10 எனது எதிரிகள் எல்லோரும் மனமுடைந்து கலங்கினார்கள்.
ஏதோ திடீரென நிகழும், அவர்கள் வெட்கமுற்றுத் திரும்பிச் செல்வார்கள்.
மீகா ஜனங்கள் செய்த பாவங்களால் கலக்கமடைந்தான்
7 நான் கலக்கமடைந்தேன்.
ஏனென்றால், நான் சேகரிக்கப்பட்டிருக்கிற பழங்களைப் போன்றவன்.
பறிக்கப்பட்ட திராட்சைப் பழங்களைப் போன்றவன்.
உண்பதற்குத் திராட்சைகள் இல்லாமல் போகும்.
நான் விரும்பும் அத்திப் பழங்கள் இல்லாமல் போகும்.
2 நான் கூறுவது என்னவெனில் நம்பிக்கைக்குரிய ஜனங்கள் எல்லாம் போய்விட்டார்கள்.
நாட்டில் நல்ல ஜனங்கள் எவரும் மீதியாகவில்லை.
ஒவ்வொருவரும் மற்றவர்களைக் கொல்ல காத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஒவ்வொருவரும் தம் சகோதரர்களை வலையில் பிடிக்க விரும்புகின்றனர்.
3 ஜனங்கள் தங்களின் இரண்டு கைகளினால் தீமை செய்ய நல்லவர்களாக இருக்கிறார்கள்.
அதிகாரிகள் லஞ்சத்தைக் கேட்கிறார்கள்.
வழக்கு மன்றத்தில் தீர்ப்பை மாற்ற நீதிபதிகள் பணம் பெறுகிறார்கள்.
“முக்கியமான தலைவர்கள்” நல்லதும் நேர்மையானதுமான முடிவுகளைச் செய்கிறதில்லை. அவர்கள் எதை விரும்புகிறார்களோ அதைச் செய்வார்கள்.
4 அவர்களில் நல்லவர் கூட முட்புதர் போன்றுள்ளனர்.
அவர்களில் மிகச் சிறந்தவர்கள் கூட பின்னிப் பிணைந்து கிடக்கும் முட்புதரைவிட வஞ்சகர்களாக இருக்கிறார்கள்.
தண்டனை நாள் வருகிறது
இந்த நாள் வரும் என்று உங்களுடைய தீர்க்கதரிசிகள் சொன்னார்கள்.
உங்களது காவற்காரரின் நாள் வந்திருக்கிறது.
இப்பொழுது நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்.
இப்பொழுது நீங்கள் குழம்பிப்போய் இருக்கிறீர்கள்.
5 உங்களது அயலாரை நம்பாதீர்கள். நண்பர்களை நம்பாதீர்கள்.
உங்கள் மனைவியிடமும் உண்மையைப் பேசாதீர்கள்.
6 ஒருவரின் எதிரிகள் அவனது சொந்த வீட்டுக்குள்ளேயே இருப்பார்கள்.
ஒரு குமாரன் அவனது தந்தையை மதிக்கமாட்டான்.
ஒரு குமாரத்தி தன் தாய்க்கு எதிராகத் திரும்புவாள்.
ஒரு மருமகள் தன் மாமியார்க்கு எதிராகத் திரும்புவாள்.
கர்த்தரே இரட்சகர்
7 எனவே, நான் கர்த்தரிடம் உதவிக்காக வேண்டுவேன்.
நான், தேவன் என்னைக் காப்பாற்றுவார் எனக் காத்திருந்தேன்.
என் தேவன் நான் சொல்வதைக் கேட்பார்.
எபேசு சபைக்கு இயேசுவின் நிருபம்
2 “எபேசு சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது: தனது வலதுகையில் ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டு ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவுகிறவர் உனக்கு இதனைக் கூறுகின்றார்.
2 “நீ என்ன செய்கிறாய் என்று எனக்குத் தெரியும். நீ கடினமாக வேலை செய்கிறாய். உன் செயல்களை நீ விட்டுவிடுவதில்லை. கெட்ட மக்களை நீ ஏற்றுக்கொள்வதில்லை என்று எனக்குத் தெரியும். உண்மையில் அப்போஸ்தலர்கள் இல்லாமல் வெளியே தங்களை அப்போஸ்தலர் என்று சொல்லித் திரிபவர்களை நீ சோதனை செய்திருக்கிறாய். அவர்கள் பொய்யர்கள் என்பதைக் கண்டு பிடித்திருக்கிறாய். 3 நீ விலகிப் போகாமல், தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கிறாய். நீ என் நிமித்தம் துன்பங்களைத் தாங்கிக்கொள்கிறாய். நீ இவற்றைச் செய்வதில் சோர்வு இல்லாமலும் இருக்கிறாய்.
4 “ஆனால் சில காரியங்களில் உன்மேல் எனக்குக் குறை உண்டு. நீ துவக்க காலத்தில் கொண்டிருந்த அன்பை இப்போது விட்டு விட்டாய். 5 எனவே விழுவதற்கு முன்பு எங்கிருந்தாய் என்பதை நினைத்துப்பார். உன் மனதை மாற்றிக்கொள். துவக்க காலத்தில் செய்தவைகளை தொடர்ந்து செய். நீ மாறாவிட்டால் நான் உன்னிடம் வந்து உனது விளக்குத்தண்டை அதனிடத்தில் இருந்து நீக்கிவிடுவேன். 6 ஆனால் நீ செய்கிறதில் சரியானவையும் உண்டு. நான் வெறுப்பதைப்போலவே நீ நிக்கொலாய்கள்[a] செய்வதை வெறுக்கிறாய்.
7 “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்வதைக் கேட்கிற யாவரும் கவனிக்க வேண்டும். வெற்றி பெறுகிறவனுக்கு தேவனுடைய தோட்டத்திலுள்ள ஜீவவிருட்சத்தின் கனியைச் சாப்பிடும் உரிமையை நான் கொடுப்பேன்.”
2008 by World Bible Translation Center